DAEIOU - தயவு
1.5.09 கோயம்புத்தூர் விளாங்குறிச்சியில் சன்மார்க்க முறையில் திருமணம்.

1.5.2009 கோயம்புத்தூர் விளாங்குறிச்சி
அருட்பெருஞ்ஜோதி நடராஜர் ஆலயத்தில் சன்மார்க்க முறையில் திருமணம்.
கோயம்புத்தூர் நகரை அடுத்த மசக்காளி பாளையத்தில் ஸ்ரீ அம்மன் இஞ்சினியரிங் இண்டஸ்ட்ரீஸ் நடத்துபவர் திரு பிரபாகரன். இள வயதிலேயே வள்ளல் பெருமான் அருளிய திரு அருட்பாவில் நாட்டம் வந்தது. பின்னர், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் உபதேசங்களை படித்து தமது வாழ்வில், “தயவு நெறியினைக்” கடைப்பிடித்து வாழ்ந்தார்.
வீட்டில் கீழ்த்தளத்தில் இஞ்ஜினியரிங் தொழில் நடந்தாலும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை முதல் மாடியில் ஏற்றி வைத்து தீப முன்னிலையில் திரு அருளை வேண்டி தினமும் பிரார்த்தனை செய்து வந்தார்.
வள்ளலார் வகுத்த நெறியினை, அருகில் உள்ள சிறு குடியிருப்புப் பகுதியிலும் பரப்பினார். அங்கிருந்து இவர் வீட்டிற்கு குழந்தைகள் எல்லோரும், வந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், தயவுப் பாக்கள் முதலான அருள் சார்ந்த நூல்களைக் கற்றன. ஏழை எளிய மக்களின் வயிறார, கஞ்சி வார்த்தார். பெற்றோர் உடன் இருந்ததால், திரு பிரபாகரன் வெளியில் செல்லும் நேரங்களில், தொழிலை, அவரது தந்தையார் பார்த்துக் கொண்டார்.
மாதந்தோறும் வடலூரில் ஜோதி தரிசனமும், இந்த மாநிலத்தில் எங்கு நடந்தாலும், சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி பங்கேற்கும் வழக்கத்தினை மேற்கொண்டு, நன்கு பயின்று, சன்மார்க்கக் கல்வியில் தேறி வந்தார்.
வள்ளல் பெருமான் அகவலிலே சொல்லுவார் –
“உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர்நலம் பரவுகென்று உரைத்த மெய்ச் சிவமே” என்பதாகும்.
கோயம்புத்தூர் ஏரியாவில், People for Animals (PFA) என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகின்றது. அதன் ட்ரஸ்டியாக திருமதி கல்பனா வாசுதேவன் அவர்கள் உள்ளார். பிராணிகள் எதற்கும் யாரும் தீங்கு விளைவித்தால், அதனை எதிர்த்துக் குரல் கொடுப்பதே அந்த அமைப்பின் குறிக்கோளாகும்.
கோயம்புத்தூர் ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனர் திரு ராம்தாஸ் வள்ளல் பெருமானின் தயா ஒளி இயக்கத்தை, சரவணம்பட்டியில் பரப்பி வருகின்றார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் – இது வள்ளலார் வாக்கு. அதனை தமது வேத வாக்காகக் கொண்டவர் திரு ராம்தாஸ். ஏழை எளிய மக்களுக்கு தினசரி அன்னம் பாலிக்கும் பொறுப்பினை, திரு சிவக்குமாரின் மூலம் மேற்கொண்டு வருகின்றார்.
அவர், People for Animals இயக்கத்தில் திருமதி கல்பனா வாசுதேவனுடன் இணைந்து செயல்படுகின்றார். திரு பிரபாகரனும், தம்மையும், அவ் வியக்கத்தில் இணைத்து, அல்லலுறும் பல கால்நடைகளை, அனைவரும் சேர்ந்து, தக்க தருணத்தில் உடனடியாகச் செயல்பட்டு, மீட்டிருக்கின்றனர்.
மனிதர்கள் போல் பேசும் சக்தி மட்டும் இருந்திருந்தால், மீட்கப்பட்ட அந்த ஐந்தறிவு ஜீவன்கள், இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துப் பாக்கள் பாடி இருக்கும். கோயம்புத்தூர் ஏரியாவில், இந்த இயக்கத்தினை இவர்கள் அனைவரும் திறம்பட நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் விளாங்குறிச்சி என்ற ஊர் உள்ளது. அந்த ஊரில், 1827 ஆம் ஆண்டு,. பிறந்த ஸ்ரீமத் வேங்கடரமண மஹரிஷி அவர்கள், 1911ஆம் ஆண்டு, இப் பூவுலகை நீத்துள்ளார்கள். அவர்கள், வள்ளல் பெருமான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். வள்ளல் பெருமான் கட்டிவைத்த சத்திய ஞான சபை போன்ற அமைப்பில், அந்த விளாங்குறிச்சியில் எண்கோண வடிவிலான சபை கட்டி வைத்துள்ளார். அந்த ஆலயம், தற்போது அருட்பெருஞ்ஜோதி நடராஜர் ஆலயம் என அப் பகுதியில் அனைவராலும் அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆலயம் சிதிலமடைந்து இருந்தாலும், தற்போது, புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆலயத்தின் டிரஸ்டி பூஜகராக பரமசிவானந்த அடிகளார் உள்ளார். (செல். 99947 01117 / 99521 68232)
இந்த நடராஜர் ஆலயம் நிர். 3/3, சிவானந்தா மில் சாலை, என்ற இடத்தில் உள்ளது. உக்கடத்திலிருந்து விளாங்குறிச்சிக்கும், காந்திபுரத்திலிருந்து சேரன் மாநகர் செல்லும் டவுன் பஸ்களும், இந்த விளாங்குறிச்சிக்கு வருகின்றன.
வள்ளற் பெருமானின் சுத்தசன்மார்க்கம் மற்றும் திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகளின் தயவுப் பெரு நெறியினை தீவிரமாகக் கடைப்பிடித்த திரு பிரபாகரனுக்கு, 1.5.2009 அன்று (சனிக்கிழமை) இந்த விளாங்குறிச்சி நடராஜர் ஆலயத்தில் காலை திருமணம் நடைபெற்றது. மணப்பெண் பெயர் மீரா. அதி காலையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. வலங்கைமான் சக்திவேல், மேட்டுக்குப்பம் சேதுராமன், நாராயணபுரம் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி, திரு சிவகுமார், அவர் மனைவி திருமதி தமிழரசி, விஜயராமன், S. ராமச்சந்திரன், அன்பு, சொக்கலிங்கம் அய்யா, T. ராமச் சந்திரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர், வலங்கைமான் திரு அருட்பா முற்றோதல் அன்பர் திரு சக்திவேல் அவர்களால், திரு அருட்பா பாடப்பட்டு, மங்கல நாண் எடுத்துக் கொடுக்கப்பட்டு, இந்த திருமணம் சான்றோர்கள் முன்னிலையில், மிகச் சிறப்புற நடைபெற்றது.
இவ் வைபவத்தில், சன்மார்க்கப் பெரியோர்கள் அனைவரும் வந்து மனமாற வாழ்த்திச் சென்றனர்.
ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனர் திரு ராம்தாஸ் அவர்கள், தாமே முன்னின்று, தமது குடும்பம், தமது நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் ஆகியோருடன் இந்தத் திருமணத்தைச் சிறப்புற நடத்தி வைத்தார். அத்துடன் நில்லாது, தம்மிடம் உள்ள இசைக் குழுவினை பகல் 11.45 மணி அளவில் திரு அருட்பாப் பாடல்களைப் பாட வைத்துச் சிறப்புச் சேர்த்தார். தாமும் திரு அருட்பாக்களை பாடினார். திருமதி கல்பனா வாசுதேவன் வாழ்த்திச் சென்றார்.
சுத்த சன்மார்க்க நெறி நின்று வாழ்வில் அதனைக் கடைப்பிடித்த அன்பர் திரு பிரபாகரனுக்கு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையும், வள்ளற் பெருமானின் அருளும், திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகளின் அருளும் இத் திருமணத்தினை சிறந்த முறையில் நடத்துவதற்கு உறுதுணை புரிந்தன. அதிலும் சிறப்பு, வள்ளற் பெருமான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஞானி அருட்குரு ஸ்ரீ மத் வேங்கட ரமண மஹரிஷி கட்டி வைத்த நடராஜர் ஆலயத்தில்
திரு பிரபாகரனுக்கு, திருமணம் நடைபெற்றது, சிறப்பிலும் சிறப்பு என வந்திருந்தவர்கள் பாராட்டிச் சென்றனர்.