DAEIOU - தயவு
இன்று இவரைப் பற்றி .. காரைக்கால் திரு குமரேசன்.....

இன்று இவரைப் பற்றி ..
அன்பர் திரு. R. K. குமரேசன். காரைக்கால்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வள்ளலார் ஸ்பேஸ் இணைய தளத்தில், ஒருவர் ‘உண்மையான குரு’ என்பவர் யார் என்ற வினாவினை எழுப்பி அதற்கு விளக்கமும் சந்தேகத் தெளிவும் கேட்டிருந்தார். பலரிடமிருந்து பல பதில்கள் இணைய தளத்தில் வரப்பெற்றன. அவருக்கு அந்த பதில்கள் திருப்தி அளிக்கவில்லை.
சுவாமி சரவணானந்தா அவர்கள் அளித்திருந்த விளக்கத்தை அவருக்குத் தெரிவித்து, இணைய தளத்தில் பதில் தரப்பட்டிருந்தது. புற குருக்கள் காண்பிக்கும் வழியினைக் கடைப்பிடித்து ஆண்டவரின் நிலை என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அதனைக் கடைப்பிடித்து அவரவர்கள், உள்ளே இருக்கும் அக குருவினை நாடி, வள்ளற் பெருமான் காட்டிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும், பரோபகாரப் பணியினையும் இடையறாது கடைப்பிடித்து வரல் வேண்டும்.
நெறி சொல்லித் தந்த புற குருக்கள் எல்லாம் ஒரு கால எல்லையில் மறைந்து விடுவார்கள். அக குருவான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை சதா காலமும், மனதில் நினைத்துக் கொண்டு உலகியற் காரியப்பாடுகளைப் பார்த்துவரல் வேண்டும். அப்படி வாழ்ந்து வந்தால், அவரவர் பரி பக்குவ நிலைக்குத் தக அக குருவாக விளங்கக் கூடிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பக்குவ காலத்தே, அருள் வல்லபம் தருவார்.
இந்த பதிலினைப் பார்த்ததும், அவருக்கு ஆச்சரியம். எனது கனவில் ஒரு பதில் தோன்றியது. வந்து இணைய தளத்தைப் பார்த்தால், அதே தெளிவுரை இங்கே தரப்பட்டுள்ளதே என்றார். பின்னர் தீவிர சன்மார்க்கம் கடைப்பிடிப்பவராக அவர் மாறி விட்டார்.
சமீபத்தில், 2009 தைப்பூச விழாவிற்கு, தனது மனைவியார், கைக் குழந்தை, தந்தையார், உடன் பணிபுரியும் நண்பர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் சகிதம் வடலூருக்கு வந்து சத்திய ஞான சபையில் அருட்பெருஞ் ஜோதி தரிசனம் செய்தார்.
பின் வடலூரில் உள்ள இராமநாதபுரம் மாவட்ட சன்மார்க்க சங்கத்திற்கு வருகை புரிந்தார். அன்பர்கள் வழங்கிய சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்டி திரு ராஜவீரை சந்தித்தார். வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டியையும் சந்தித்து சில விபரங்களையும் தெரிந்து கொண்டார். இதுவே தாம் வடலூருக்கு வருவது முதல் முறை எனத் தெரிவித்தார்.
திரு அருட்பா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய புத்தகங்கள் வாங்கிச் சென்றார்.
அவர், காரைக்காலை அடுத்த திருவேட்டகுடி என்ற இடத்தில் அமைந்துள்ள பாரதியார் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்லூரியில் உதவி ப்ளேஸ்மெண்ட் ஆபீசராகப் பணி புரிந்து வருகின்றார்.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியே, இதுவரை வரப்பெற்ற நெறிகளில் எல்லாம் தலையாயது என்பதை தமது வாழ்வில் உணர்ந்து கொண்ட அவர், இந் நெறியினைத் தம்மைப் போன்று கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் அவர்களும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரர் ஆக வேண்டும் என்ற உந்துதலினால், கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்ட மாணாக்கர்களின் இ.மெயில் முகவரியினை சேகரித்து, www. Vallalarspace.com இணைய தளத்தின் டீம் மெம்பர்களுக்கு அனுப்பி வைத்து, இந்த 450 மாணவ மாணவியருக்கும், வள்ளல் பெருமானின் நெறிகளை அனுப்புங்கள் என தற்போது கேட்டுக் கொண்டுள்ளார்..
தான் பெற்ற இன்பம் பெறுக வையகம் .. என்ற முறையில் இவர், தாம் பணி புரியும் கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களுக்கும் வள்ளல் பெருமானின் நெறியைக் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்தில் செய்த செயலை என்னவென்று சொல்வது.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், அவருக்கும் அவரைச் சார்ந்த அன்பர்கள், மாணாக்கர்கள், உற்றார், உறவினர் அனைவருக்கும் தனது கருணை மழையினைப் பொழிவிப்பார்..செய்யும் செயலுக்குத் தகுந்தவாறு அருளினை அளிப்பார்.. என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.