DAEIOU - தயவு
வடலூரில் உழவாரப்பணி - மாவட்டந்தோறும் சன்மார்க்க கல்வி போதனை.-சக்தி ராஜா

வடலூரில் உழவாரப்பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் மூத்த சன்மார்க்க அன்பர்கள், சன்மார்க்கக் கல்வி புகட்ட வேண்டும்-ஒரு கோரிக்கை.
கடந்த மாதம் ஒரு நாள் (14.2.2009) சென்னையில் ஸ்பிக் நிறுவனத்தில் பணி புரியும் ஒரு அன்பர் தொலைபேசியில் ஒரு செய்தியினை தமது ஆதங்கமாகத் தெரிவித்தார்.
தமது பெயர் சக்தி ராஜா என்றார். சன்மார்க்கம் கடைப்பிடிப்பவர் என்றார். www.vallalarspace.com, www.vallalar.org முதலான இணைய தளங்களைத் தொடர்ந்து படிப்பதாக கூறினார்.
வடலூரில் மாதா மாதம் பூச நாட்களில், ஜோதி தரிசனம் காண பொதுமக்களும், சன்மார்க்க அன்பர்களும் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து வருகை புரிகின்றனர்.
குடும்பத்தினருடன் பல அன்பர்களும் வடலூர் பூச நாள் ஜோதி தரிசனத்திற்கு வருகை தருகின்றனர். ஆனால், அவ்வாறு வருகை தரும் அன்பர்கள், வடலூர், ஞான சபை, தர்மச்சாலையைச் சுற்றிலும், மேட்டுக் குப்பம், கருங்குழி, முதலான இடங்களில் சுத்தம் பராமரிப்பதைப் பற்றி கவலை கொள்வதே இல்லை.
அவற்றைச் சுற்றிலும் அசுத்தம் செய்து, வள்ளல் பெருமான் காலத்தில் கட்டப்பட்ட அந்த அற்புதத் திருக்கோவிலான சத்திய ஞான சபையையும் அதன் சுற்றுப் புறம், தருமச்சாலை, மேட்டுக் குப்பம், கருங்குழி, மருதூர் ஆகிய இடங்களின் சுற்றுப் புறங்கள் ஆகியவற்றில் சுகாதாரக் கேட்டினை உண்டு செய்கின்றனர். இதனால் பல நோய்களும் உருவாகின்றன.
ஒரு சில அன்பர்கள், தாம் சார்ந்த மாவட்டச் சன்மார்க்க சங்கங்களில் கழிப்பிட இட வசதிகளுடன் கூடிய இடங்களில் தங்கி, தரிசனம் பார்த்துச் செல்கின்றனர். அவர்களால் எவ்வித பிரச்சினையும் ஏற்படுவதில்லை
அரசுத் துறையில் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டும், அதிக அளவிலான அன்பர்கள் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வந்து செல்லுகின்ற படியால், சுற்றுப் புறச் சுகாதாரம் என்பதை அவர்கள் மறந்தே விடுகின்றனர். ஜோதி தரிசனம் பார்த்தோமா .. சென்றோமா .. என்ற நிலைதான் அன்பர்கள் மத்தியில் ஏற்படுகின்றது.
இது தவிர்க்கப் பட வேண்டும். அங்கு வருகின்ற அன்பர்கள் சுற்றுப் புறம் சுகாதாரம் பராமரிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக மாற வேண்டும்.
இதற்கு மாற்று ஏற்பாடாக, பிரதி மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டச் சன்மார்க்க சங்கமும், இந்த விசேட நாட்களில், முன்கூட்டியே 10 சன்மார்க்க அன்பர்களை அனுப்பி, இந்தப் பணிகளை மேற்கொள்ளச் செய்யலாம். பேட்ஜ் அணிந்து அவர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு, சுற்றுப் புறத்தை மிகத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். இதனை தெய்வ நிலையங்களின் செயல் அலுவலருக்கும் தெரிவித்தே இந்தப் பணிகளை அன்பர்கள் மேற்கொள்ளலாம்.
ஏனைய கோவில்களுக்கு, வடலூர் ஒரு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
சுத்த சன்மார்க்கம் பயின்ற மூத்த சன்மார்க்க அன்பர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளனர்.
அவர்களின் மூலம், இன்றைய சமுதாய மாணவ, மாணவியருக்கும் மற்றும், சுத்த சன்மார்க்கம் தெரியாத அன்பர்களுக்கும், சுத்த சன்மார்க்கக் கல்வியினைப் பயிற்றுவிக்க வேண்டும்.
ஞான சித்தர்களின் காலமாகிய, இந்தக் காலத்தில், வள்ளல் பெருமானின் நெறிதான் மிகச் சிறந்த நெறி என உலகின் பல பாகங்களிலும் இருந்து பல நாட்டினரும், வடலூருக்கு, சுத்த சன்மார்க்க நெறி பயில வந்து செல்கின்றனர்.
உள்ளூரில் உள்ளோர் என்று இதனைப் பயில்வது ?
எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூத்த சன்மார்க்க அன்பர்கள், இதனை செயல் படுத்தி சன்மார்க்கக் கல்வி கற்பித்தால், இளைய சமுதாய மக்களிடம், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி நன்கு பரவி, அவர்கள், பிற்காலத்தில், சன்மார்க்க நெறியாளர்களாகத் திகழ்வார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.
இங்ஙனம்,
சக்தி ராஜா, கிண்டி, சென்னை.