22.2.2009 காஞ்சீபுரத்தில் தைப் பூச விழா.
கடந்த 22.2.2009 அன்று காஞ்சீபுரத்தில் அசோக் நகரில் அமைந்துள்ள திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில், தைப் பூச விழா மிகச் சீரோடும், சிறப்போடும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை, மேற்படி தெய்வ நிலையத்தின் செயலாளர் திரு வெங்கடேசன். திரு பழனி, திரு ஜெயவேல், திரு பாலாஜி, திரு கோதண்டம் ஆகியோர் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
22.2.2009 அன்று காலை 5.00 மணி அளவில், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், சென்னையை அடுத்த படப்பை சன்மார்க்க சங்க நிர்வாகி திரு பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், அந்தச் சன்மார்க்க சங்கத்தில் பயிலும், மாணவ மாணவியர் சகிதம் பாடப்பட்டது.
சன்மார்க்கப் புத்தகங்கள் மற்றும் ஜோதிக் கூண்டு, ஆடியோ சி.டி.கள், ஸ்டிக்கர் விற்பனை செய்யும் மதுரை சன்மார்க்க அன்பர் திரு மருது பாண்டியன், வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் திரு ராமானுஜம், மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சித்தூர் பாலாஜி காலனி சன்மார்க்க அன்பர்கள் மற்றும் சர்ச் தெருவில் இயங்கி வரும் ஜீவகாருண்ய சங்கத்தைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள் ஆகியோர் 10 பேர் வந்து கலந்து கொண்டனர்.
பின்னர் காலை சுமார் 8.30 மணி அளவில், சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.
அன்பர்கள் அனைவரும் சிற்சக்தி துதியினை மெல்லென இசைத்தார்கள்.
சன்மார்க்கக் கொடி சிறிது சிறிதாக உயர்ந்தது. உலகு கட்டி ஆளும் கொடியே என அனைவரும் கொடி வணக்கம் பாடினார்கள்.
அதன் பின்னர் காலை 10.00 மணி அளவில், சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
அந் நிகழ்ச்சிக்கு சென்னை ஆழ்வார் சன்மார்க்க மூத்த உறுப்பினர் திரு நகர் திரு மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.
அவர் சொற்பொழிவின் சாராம்சம் வருமாறு.
வள்ளற் பெருமான் சொல்லிச் சென்றவாறு, தைப்பூச நாள் மிகச் சிறப்பான நாள் ஆகும். வள்ளலார் அவர்கள், இறைவனுடன் 30.1.1874 அன்று கலந்தார். அதனை அன்றைய நாளில், யாருமே நம்பவில்லை. தாம் இறை நிலை அடைந்ததை வள்ளற் பெருமான் திரு அருட்பாவில் பல பாடல்களில் இதனை உணர்த்தியுள்ளார். இந்த மல உடம்பை ஐந்தொழிற் காரியப்பாடுகள் இயற்றும் வண்ணம் மாற்றலாம் என்றார். நித்தியமாக வாழும் வகையினை அவர் எடுத்துரைத்தார். பலர் இன்னும் சந்தேகக் கண்ணோடேயே இறவா நிலை சாத்தியமா எனக் கேட்கின்றனர். வள்ளற் பெருமான் சொன்ன நெறிப்படி ஒழுகினால், வாழ்க்கை நடத்தினால், அது கண்டிப்பாக சாத்தியம் ஆகும் என்பதே உண்மை.
இதனை ஞான சரியைப் பாடல்களில் சொல்கின்றார். மேட்டுக்குப்பத்தில் தாம் சித்தி வளாகத் திருமாளிகையின் கதவைச் சாத்திக்கொள்வதற்கு முன் தீபத்தை அன்பர்களிடம் கொடுத்து பாடச் சொன்னார். இந்த உடம்புக்கு பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலானவை வந்து தேக நஷ்டம் உண்டுபண்ணுகின்றன. பெருமான் அவர்கள் உரை நடைப் பகுதியில், இந்த உடம்பைப் பாதுகாப்பதற்கு..மல ஜலம் கழிப்பதிலிருந்து உணவு வகை முதலானவற்றை அறுதியிட்டுச் சொல்லியுள்ளார். அவர் சொன்ன வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
வள்ளலார் சொன்னதாக உரை நடைப் பகுதியில் குறிப்பிடப்பட்ட “அப்போது எனக்கு அற்ப அறிவாக இருந்தது” என்பதை வைத்துக் கொண்டு, பலரும் பலவிதமாக கருதி வருகின்றனர். அதேபோல் சில திருமுறைகளை பயில வேண்டாம் எனவும் சிலர் சொல்லி வருகின்றனர். இது மிகவும் தவறானதான கருத்தாகும். எல்லா தெய்வங்களையும் அருட்பெருஞ்ஜோதியாகவே காண வேண்டும்.
தனுகரணாதிகள் தாங்கடந்தறியுமோர் அனுபவம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி எனப் பாடியுள்ளார். பெருமான் பாடியவற்றில், எதையும் யாருமே ஒதுக்கக் கூடாது என்பது எனது கருத்து.
மதுரை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் திரு ராமானுஜம்.
தற்போது திரு அருட்பிரகாச வள்ளலாரின் கொள்கைகள், www.vallalarspace.com, www.vallalar.org முதலான இணைய தளங்களின் மூலம் உலகெலாம் வலம் வருகின்றன. இதனை உருவாக்கிய இராமநாதபுரம் ஜோதிமுருகன் ஐயா, சிங்கப்பூர் சிவக்குமார், அமெரிக்காவில் வாழும் திரு செந்தில் மருதையப்பன் ஆகியோர், இவ்விரு இணைய தளங்களின் மூலம், திரு அருட்பாக்களையும், உபதேசப் பகுதிகளையும், உரைநடைப் பகுதிகளையும் உலகெல்லாம் அன்பர்களுக்கு, இலவசமாகக் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளனர் என்றார்.
அதன் பேரில், இவ்வுலகத்தின் பல்வேறு நாடுகளிலும் இருந்து அன்பர்கள், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு, தினந்தோறும் வடலூருக்கு தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளனர் என்றார்.
சமீபத்தில் நடந்த 2009ஆம் ஆண்டுத் தைப் பூச பெருவிழாவிற்கு, பல்வேறு வெளி நாட்டவர்கள் சுமார் 60 பேர் வந்து ஜோதி தரிசனம் பார்த்து, மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தனர் என்றார்.
வள்ளலார்ஸ்பேஸின் மூலம் ஆற்றும் பணிகளை அவர் விரிவாக விவரித்தார். 25 மொழிகளில் உலகெங்கும் செய்திகளை இந்த இணைய தளம் பரப்பி வருகின்றது என்றார்.
திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ஆடியோ ப்ரொஜெக்ட் மூலம், சிங்கப்பூர் சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார், திரு அருட்பா முழுமைக்கும் இசை வடிவம் கொடுக்கும் சிறப்பான பணியில் ஈடுபட்டிருப்பதையும், அதன் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடியோ சி.டி.கள் குறைவான விற்பனைக்கு இந்த நிகழ்ச்சியில் அன்பர் திரு மருதுபாண்டியன் மூலம் விற்கப்படுவதையும் அவர் தெரிவித்தார். அதனை பெற்று அனைவரும் பயன் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த பூச விழாவிற்கு, வேலூர் மாவட்டத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலர் திரு கண்ணப்பன், தன்னுடன் மேலும் அண்ணாமலை, ஜோதீஸ்வரன், ராமு, ஆர்.ஏ.ஷண்முகம் ஆகிய 4 அன்பர்களையும் அழைத்து வந்திருந்தார்.
தமது ஊரிலும், இது போன்றே சன்மார்க்க சங்கம் நடைபெற்றுவருவதையும் அவர் தெரிவித்தார். சமீபத்தில் அவரது ஊருக்கு வருகை தந்த தாசில்தார் திரு கே.உமாபதி, 7.3.2009 அன்று பொதட்டூர் பேட்டையில் நடைபெறும் அன்னதானத்திற்கு தாம் பொருள் உதவி அளிப்பதாகத் தெரிவித்ததையும் அவர் கூறினார்.
தமது ஊரில் சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்புவதற்கு, திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் பலவற்றை, நேரிடையாக, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ஏ.ராமானுஜம் அவர்களிடமிருந்தே அந்த கிராம நிர்வாக அலுவலர் பெற்றுச் சென்றார்.
மிகவும் குறைந்த விலைக்கு தற்போதெல்லாம் திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்த சிங்கப்பூர் திரு சிவக்குமார் அவர்களுக்குத் தன்னுடைய நன்றியினை அவர் தெரிவித்துக் கொண்டார்.
படப்பை சன்மார்க்க சங்கத்தின் செயலாளர் திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் தவத்தால் வரும் இன்பத்தைப் பற்றி சொற்பொழிவு நிகழ்த்தினார்.
சென்னை திருவொற்றியூர் சன்மார்க்க அன்பர் வைத்தியர் திரு வேதாச்சலம் அவர்கள் உடலைப் பேணி உயிரைக் காப்பது எப்படி என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
வள்ளல் பெருமானின் திரு அருட்பாவிலும், உபதேசக் குறிப்புக்களிலும், மருத்துவக் குறிப்புக்களிலும் இருந்து அவர் பல மேற்கோள்களைக் காட்டினார்.
அனைவரும், உடம்பின் அருமையை நன்கு அறிந்து, வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறி பயின்று, சத்துவ ஆகாரத்தை தேவையான அளவு உண்டு, உடலைப் பொன்போலப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார். காலமறிந்து உணவுண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தவிர்க்க வேண்டிய ஆகாரத்தைத் தவறாமல் தவிர்த்தால்தான் உடல் நல்ல நிலையில், நோயற்று இருக்கும் என அவர் விளக்கினார். உணவுக்கும் உணர்வுக்கும் மிகுந்த சம்பந்தம் உள்ளது என்றார். ஆடு மாடுகள் கூட, குழந்தைப் பிராயத்தைத் தவிர, அது கடந்த காலங்களில், புல் பூண்டுகளையே உண்ணுகின்றன. ஆனால், உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாத, பால் முதலானவற்றை, மனிதன் உண்ணுகின்றான். இதைத் தவிர்க்கும்படி கூறினார். நாக்குதான் சீக்குக்கு அறிகுறி என்றார்.
கரிசாலையின் சிறப்பு குறித்து, வள்ளற் பெருமான் சொல்லியதனை அவர் நினைவு கூர்ந்து, அனைவரும் தினந்தோறும் கரிசாலையினை உட்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அனைவருக்கும் முயற்சிதான் மிகவும் அவசியம் என்றார்.
சென்னை மகாதேவன் அவர்கள், திரு அருட்பாவில், திருவடிப் புகழ்ச்சிக்கு உரை தெரிவித்து முக்கிய கருத்துக்களை அனைவரும் எளிய முறையில் அறியும் வண்ணம் தெரிவித்தார்.
ஆந்திரா மாநிலம் சித்தூரிலிருந்து (1) பாலாஜி காலனி மற்றும், (2) ஜீவகாருண்ய சங்கம் சர்ச் தெரு, சித்தூர் ஆகிய இரு சங்கங்களையும் சேர்ந்த கீழ்க்கண்ட அன்பர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
1. ஆர். குப்புசாமி
2. பி. ராமலிங்கம்.
3. எஸ். சுந்தரம்
4. தனபாக்கியம்
5. எம். பழனி.
6. எம். கிருஷ்ணன்
7. சி. பழனி
8. பி. சந்திரசேகர்
9. பி. மணி
10. பத்மாவதி.
அங்கு 35 குடும்பங்களைச் சேர்ந்த 150 அங்கத்தினர்கள், இந்த சன்மார்க்க சங்கங்களில், சுத்த சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடித்து வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். தாம் இந்த பூச விழாவில் காஞ்சீபுரத்தில் வந்து கலந்து கொள்வதில் பெருமை கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
உயிர் உறவு திரு சங்கரய்யா, சென்னை.
எனக்கு தாயுமானவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும். வள்ளலாரின் பாடல்கள் அருள் நிறைந்தவை. நான் அரசுப் பணி புரிந்த போது கிராமப் பகுதியில் சுத்த சன்மார்க்கம் பரவுவதற்கு, தீவிர முயற்சி மேற்கொண்டேன். அங்குதான் படிக்காதவர்கள், விவசாயிகள் அதிகம். அவர்களுக்குத் தான் வள்ளல் பெருமானின் கருத்துக்கள் கண்டிப்பாக சென்றடையவேண்டும் என்ற முறையில். இம் முயற்சியினை என் வாழ்நாளில் நான் மேற்கொண்டேன். அஞ்சேல் நீ ஒரு சிறிதும் மகனே .. துஞ்சிய மாந்தரை எழுப்புக என அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், வள்ளலாரைப் பணித்துள்ளார். பிணம் எழுப்புதல் என்றால், நடமாடுற பிணங்களாகத் திரியும் மனிதர்களை எழுப்பச் சொன்னார். மனிதன் வாழும் காலம் மிகவும் குறுகியதாகும். அக் காலத்திற்குள், இறைவனைப் பற்றி அறிந்து, இறவாமை குறித்தும் அறிந்து, அதனை அடைவதற்கு, தீவிர முயற்சியினை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். சன்மார்க்கத்தவர்க்கு முகமதே பீடமாகும் என திருமூலர் சொல்லியுள்ளார். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்றெல்லாம் அவர் சொல்லியுள்ளார்.
வள்ளலார் அவரது 12 வயதில், சென்னை திருவொற்றியூரில் அமைந்த கோவிலுக்கு சென்று வழிபடும்போது அந்த கோவில் பட்டர் கேட்டார். எல்லோரும் வர்றாங்க..சுவாமியிடம் வேண்டியதைக் கேட்டுப்பெற்றுச் செல்கின்றனர். நீ ஏன் ஏதும் வேண்டிப் பெறவில்லை என்றார். வள்ளலார் தனக்கு இறைவனின் அருள் மட்டுமே வேண்டும் என்றார். சிறு கணங்கூட இடைவெளி இன்றி இறைவனை சதா நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
மாலை சுமார் 2.30 மணி அளவில், திரு அருட்பா இசைப் பாடகர் மழையூர் திரு சதாசிவம் அவர்கள், தமது இசைக் குழுவினருடன் திரு அருட்பா பாடல்களை மிகவும் உருக்கமாகப் பாடினர். அன்பர்கள் அனைவரும் அவரது பாடல்களின் மூலம் சுத்த சன்மார்க்க கருத்துக்களை எளிதில் புரிந்து கொண்டனர். அவர் பாட ஆரம்பித்த தகவல் அறிந்து, செங்கல்பட்டு மற்றும் பிற ஊர்களிலும் இருந்து சன்மார்க்க அன்பர்கள் வந்து கேட்டு இன்புற்றனர். அவரது இசைக் கச்சேரி மாலை 5.30 மணி வரையிலும் நடைபெற்றது
அதன் பின்னர், தைப் பூச விழா இனிதே முடிந்தது.
இந் நிகழ்ச்சிகளை, உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் வந்து செய்திகளை படம்பிடித்துச் சென்று, உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளி பரப்பினர்.
இந்தத் தைப்பூச சிறப்பு விழாவில், சுமார் 600 அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து, அருள் நலம் பெற்றனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும், அப்பகுதி வாழ் ஏழை எளிய மக்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Write a comment