DAEIOU - தயவு
15.2.09 மதுரை நாராயணபுரத்தில் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் தைப் பூச விழா.

வள்ளலார்ஆர்க் பெளண்டேஷனில் தைப் பூச நாள் விழா.
VallalarOrg Foundation -Thai Poosam Festival, 2009.
8வது வாராந்திர வழிபாடு.
8th weekly meeting.
இடம் – மதுரை – நகர் அருகே உள்ள நாராயணபுரம்.
Narayanapuram, Madurai.14
நேரம் மாலை 5.00 மணி.
ஒவ்வொரு ஆண்டும், தைப் பூச நன்னாளில், தைப் பூசப் பெரு விழா வடலூரில் நடைபெறுகின்றது. 2009ஆம் ஆண்டு, 7.2.2009 அன்று துவங்கிய தைப் பூச விழா, வடலூரில், 10.2.2009ந் தேதி வரை நடைபெற்றது.
தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளிலும் இருந்தும், இந்த பெரு விழாவிற்கு அன்பர்கள் அனைவரும், வடலூர் சென்று, ஜீவகாருண்யப் பணி மேற்கொண்டு, ஏழு திரைகள் நீக்கப் பட்ட அருட்பெருஞ் ஜோதிக் காட்சியினைக் கண்டு அருள் நலம் பெற்று வருவதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.
அதற்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு ஊரிலும், இந்த தைப்பூச விழா, அந்தந்த சங்கங்களுக்கு வாய்ப்பு உள்ள ஒரு நாளில், நடைபெறுகின்றது.
அந்த விதத்தில், இந்த தைப் பூச நன்னாள் விழா, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மூலம், மதுரையை அடுத்த நாராயணபுரத்தில் 15.2.2009ந் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் துவங்கியது.
5.00 மணி அளவில், சன்மார்க்கக் கொடியினை ஏற்றி. சன்மார்க்க மூத்த அன்பர்கள் தலைமையில், சிற்சக்தி துதி பாடப்பட்டது.
முக்கியமாக, இந் நிகழ்ச்சியில், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் அணுக்கத் தொண்டர் திரு விஸ்வநாதனும் மதுரையை அடுத்த ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த அன்பர் திரு சந்திர சேகரனும் நாராயணபுரம் தயவுக் குழு அன்பரும் பங்கேற்றுத் துதி பாடினர். ஏனைய அன்பர்களும் தொடர்ந்து சிற்சக்தி துதியைப் பாடிப் பணிந்தேத்தினர்.
திரு அருட்பா பாடல்களை அருட்பெருஞ்ஜோதியின் முன் அமர்ந்து கீழ்க்காணும் அன்பர்கள், மனமுருகப் பாடினர்.
1) திரு சந்திரமோஹன். ஊமச்சிகுளம். மதுரை வடக்கு தாலுகா.
2) திரு விஸ்வநாதன், திண்டுக்கல்.
3) திருமதி ராமலட்சுமி, (ஓய்வு பெற்ற ஆசிரியை), நாராயணபுரம்.
4) திரு ஏ.ராமானுஜம், நாராயணபுரம்.
5) திருமதி பாக்கிய சந்தான லக்ஷ்மி, நாராயணபுரம்.
6) தாமோதரன், நாராயணபுரம்
7) ராஜ், நாராயணபுரம்
8) அஜீத், நாராயணபுரம்
9) (மற்றொரு) ராஜ் (S/O) மாயா, நாராயணபுரம்.
10) அஜீத், நாராயணபுரம்
11) மணி, நாராயணபுரம்.
12) திருமதி செல்வி, நாராயணபுரம்.
13) திருமதி சித்ரா, நாராயணபுரம்,
14) லேகாஷ்ரீ (குழந்தை) நாராயணபுரம்
15) அனிதா, நாராயணபுரம்.
16) சத்தியா, நாராயணபுரம்.
மற்றும் அந்த ஏரியா அன்பர்கள்.
இந்த தைப் பூச விழாவில் கலந்து கொள்ள நாராயணபுரத்தை சேர்ந்த அன்பர்கள் தவிர, வெளி இடங்களிலுமிருந்தும் கீழ்க்கண்ட அன்பர்கள் வருகை புரிந்தனர்.
17) மதுரை ரயில்வே காலனியில் வசிக்கும் திருமதி மீனாம்பாள்,
18) அவர்களது மகள் ரயில்வேயில் பணியாற்றும் செல்வி. லலிதா மணி,
19) திரு ஏ. சொக்கலிங்கம், பி.எஸ்.ஸி., மதுரை நகர்.
20) அவரது மனைவி திருமதி புவனேஸ்வரி. மதுரை நகர்.
21) மற்றுமொரு ஓய்வு பெற்ற ஆசிரியை.
மற்றும் பலர்.
மாலை 6.00 மணி.
இந்த நிகழ்ச்சியில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக சிறப்பு அழைப்பாளராக, திண்டுக்கல் சேர்ந்த சுவாமி சரவணானந்தா அவர்களின் அணுக்கத் தொண்டர் திரு விஸ்வநாதன் அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் தனது சொற்பொழிவில் திரு அருட்பிரகாச வள்ளலார் இந்தப் பூ உலகில் வருவிக்க உற்ற காரணத்தையும், அவரது வருகை, வாழ்க்கை முறை, வாழ்ந்த விதம், ஆகியவற்றின் மூலம், இந்த மனித குலம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கருத்துக்களையும் சுத்த சன்மார்க்க நெறியின் மேன்மையையும், தமது உரையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த மாபிரபஞ்ச மையமாக அமைந்துள்ளது சிதம்பரம் (சித்+அம்பரம்) ஆகும். ஆகாச வெளியாக இது உள்ளது. அருவமாக, இறைவன் உள்ளார். இது பூர்வ ஞான சிதம்பரம்.
இதன் வடமேற்கு மூலையில் வடலூர்ப் பதி அமைந்துள்ளது. பார்வதிபுரம் என்றிருந்த அதன் பெயர், வள்ளல் பெருமானால் உத்தர ஞான சிதம்பரம் என அழைக்கப்படலாயிற்று.
மதுரை என்ற பெயரில், ம்+த்+ர் என்ற முறையில் தமிழில் உள்ள மெல்லினம், வல்லினம், இடையினம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை 3 தேகங்களான சுத்த பிரணவ ஞான தேகங்களைக் குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளன.
அதேபோன்று திண்டுக்கல் என்ற பெயரிலும் ண்+க்+ல் என்ற முறையில் தமிழில் உள்ள மெல்லினம், வல்லினம், இடையினம் ஆகியவை அமைந்து, அவையும் முத் தேகங்களான சுத்த பிரணவ ஞான தேகங்களைக் குறிப்பதாக அமைந்துள்ளன.
அருள் நடனத்தை நாம் சிதம்பரத்தில் காணலாம். அங்கே இடது காலைத் தூக்கி ஆடினார்.
மதுரையில் அருள் நடனத்தை சிவபெருமான் வலது காலைத் தூக்கி ஆடியுள்ளார். இது ஆன்ம நடனத்தைக் குறிப்பதாகும். ஆன்ம நடனம் என்பது உடல் நிலை+உயிர் நிலையில் தோய்வது ஆகும்.
சிதம்பரத்தில் திருமூலர் அடங்கியுள்ளார்.
அதேபோல் மதுரையம்பதியில் சுந்தரானந்தர் அடங்கியுள்ளார்.
தமிழ் ஞானச் சித்தர்கள், அரிய பெரிய தத்துவங்களை உள்ளடக்கி, இந்தக் கோவில்களை எல்லாம் கட்டி வைத்துள்ளனர். அதன் உண்மைப் பொருளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது போன்று, புறத்தில், ஆலயங்களைக் கட்டி வைத்து, மூர்த்தி தல தீர்த்தலங்களை ஏற்படுத்தினர். ஆனால், உண்மையான விளக்கத்தை மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளாததினால் வாழ்வில் அல்லலுற்று வருகின்றனர். கோவில்களின் அமைப்பின் உண்மைகளை நன்கு அறிந்து உணர்ந்து, வாழ்வில் ஆன்ம லாபம் அடையும் விதத்தில் நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
வள்ளற் பெருமான், வாழ்ந்த 51 ஆண்டுகளில்..மனித குலத்திற்கும், இந்த உலகிற்கும் என்ன வெளிப்படுத்திச் சென்றார் என்பதை உற்றுக் கவனிக்க வேண்டும். தற்போது உலகெங்கிலும் வள்ளற் பெருமான் ஏற்படுத்திச் சென்ற சுத்த சன்மார்க்கம் வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. ஆன்மநேய ஒருமைப்பாட்டினை (Universal Brotherhood) ஜாதி, மதம், நாடு, இனம் மொழி தாண்டி அனைவரும் தெரிந்து வருகின்றனர்.
அவர் ஏற்படுத்திச் சென்ற சுத்த சன்மார்க்க நெறியின் தாக்கத்தினால், இந்த முறை வடலூரில், தைப் பூச விழாவில், லட்சோப லட்சம் மக்கள், 7 திரை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தைக் காண வந்தனர். வழக்கமாக, எல்லா மாவட்ட சன்மார்க்க சங்கங்களில், உணவு தட்டுப்பாடு இன்றி இதற்கு முந்தைய வருடங்களில் கிடைத்து வந்தது. இந்த முறையும் கிடைத்தது. ஆனால், நிற்க வைத்து .. ஒரு பந்தி முடிந்ததும் .. மறு பந்தி,அன்பர்கள் வெளியில் தாளிட்ட கதவிற்கு பின்னர்..நின்று பின்னர் இடம் கிடைத்து பசியாறிச் சென்றனர். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அளவுக்கு அதிகமாக அன்பர்கள் இந்த முறை தைப்பூச விழாக் காண வந்திருந்தனர் என்பதுதான்.
வள்ளலார் 5.10.1823 அன்று மாலை, பிறை தோன்ற இப் பூ உலகில் வருவிக்க உற்றார். புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை..அதற்கடுத்த 3வது நாள்..அதாவது 2 ½ நிலை கடந்து வந்துதித்தார். அன்று சிறு கோடு போன்ற பிறை தோன்றும். வானத்தில் அனைவரும் இதனைக் காணலாம். சிவபெருமானுக்கு மற்றொரு பெயர் சந்திர சேகரன் என்பதாகும். பகர வடிவக் குழியில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிராதார நிலையில் எழுந்தருளி உள்ளார்.
வள்ளலார் வடலூரை அடுத்த மருதூரில் உதித்தார். அவரது தந்தையார் பெயர் ராமையா பிள்ளை என்பதாகும். தாயார் திருமதி சின்னம்மை. அவர் ராமையா பிள்ளைக்கு, 6வது மனைவியாவார்.
திருமூலர், திருமந்திரத்தில்,
என்னை இறைவன் நன்றாகப் படைத்தனன்,
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’ என்றார்.
அதேபோல் வள்ளற் பெருமான் இறைமொழியாம் தமிழை ஓதாதே உணர்ந்தவர். இறைவனே அவருக்கு ஞானக் கல்வி புகட்டினார்.
அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த சகத்தீரனைவரையும் (திரு அருட்பா)
சன்மார்க்கக் கல்விக்கு வரவேண்டும். அதன்மூலம் இகத்தே பரத்தைப் பெற வேண்டும் என்பதை அவ்விதத்தில் பாடி வைத்தார்.
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை உள்ளத்தில் வைத்து, சிர நடுச் சிற்சபையில் எழுந்தருளியுள்ளதை நினைத்துக் கொண்டே உலகியற் காரியப்பாடுகளைச் செய்து.வந்தால், அந்தந்த ஆன்மாக்களின்.பரி பக்குவ நிலைக்குத் தக்கபடி, அருட்பெருஞ்ஜோதி மயமாகவே ஆவது உறுதி.
வள்ளற் பெருமான், 5 மாதக் குழந்தையாக இருக்கும்போதே சிதம்பரம் நடராஜர் கோவிலில் திரை தூக்கிய போதே..கலகலவெனச் சிரித்தார். அர்ச்சகர் இதனைக் கண்டு, அருட்குழவி..இது என உணர்த்தினார்.
இதனை திரு அருட்பாவில் வள்ளற் பெருமான் கீழ்க்கண்ட பாடலில் பாடியுள்ளார்.
தாய்முதலா ரொடுசிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
(அருள் விளக்கமாலைப் பாடல் எண்.44.)
வேய்வகை காட்டாதே .. என்பதன் பொருள் எவ்வித மறைப்புமின்றி என்பதாகும்.
சிதம்பர நடராஜர் ஆலயத்தில் வெட்ட வெளி தரிசனம் கண்டார்.
பூர்வ ஞான சிதம்பரத்திலிருந்து ..உத்தர ஞான சிதம்பரமான வடலூருக்கு வந்தார்.
குழந்தையாக, 5 மாதங்களில் சிதம்பரத்தில் திரை தூக்கத் தரிசனம் செய்த இவர்..
49வது வயதில் வடலூர் சத்திய ஞான சபையில். 7 திரைகளை அமைத்து
சிரநடுச் சிற்றலம்பத்தில் நடம்புரியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்
சொரூபத்தை புறத்தில் பார்ப்பதற்கு உபாயச் சின்னமாக ஏற்படுத்தி வைத்தார்.
இறைவனை ஆசிரியராகக் கொண்டதல், ஓதாது உணரும் பேறு பெற்றார்.
த்மது 9-வது வயதில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். ஒவ்வொன்றுக்கும் அகச் சான்றாக, திரு அருட்பாவில் பாடல்கள் மூலம் இவற்றைப் பதிவு செய்துள்ளார். தமது 12வது வயதில் முறையான ஞான வாழ்வு தொடங்கியுள்ளார்.
சென்னை வாழ்க்கை . 1823 12 ஆண்டுகள் 1835 வரை
திருவொற்றியூர் வாழ்க்கை 1835 23 ஆண்டுகள் 1858 வரை
வடலூர் வாழ்க்கை 1858 16 ஆண்டுகள்.
(கருங்குழி,7 ஆண்டுகள் வடலூரில் 9 ஆண்டுகள்)
முன்னர் 12-ம் பின்னர்-16ம் சூரியகலை பன்னிரண்டு மற்றும் சந்திர கலல 16 ஐ உணர்த்துகின்றன.
சந்திரகலை 16 ஆண்டுகளில், வடலூர் சார்ந்த ஊர்களில் பெருமான் வாழ்ந்துள்ளார்.
இடைப்பட்ட 23 ஆண்டுகள் திருவொற்றியூரில் வசித்துள்ளார்.
இது ஒரு முப்பாற்புள்ளிக்கு ஒத்ததாகும். தேங்காயில் முக்கண்கள் உள்ளது போல..சத்திய ஞான சபையில் சிற்சபை, பொற்சபை, அருட்பெருஞ்ஜோதி தரிசனம் ஆகிய 3 நிலைகள் போல. உள்ளன.
சென்னையில் ஏழு கிணறு வீராச்சாமி பிள்ளை தெருவில் வசித்துள்ளார். அச் சமயம், திருவொற்றியூரில் எழுத்தறியும் பெருமானையும், வடிவுடை அம்மனை இடைவிடாது தொழுதேத்தியுள்ளார். சென்னையில் ..ஆடம்பர வாழ்க்கையில் தமது ஞான வாழ்வினை தொடர முடியவில்லை. எனவே, சிதம்பரம் சென்றார். ரெட்டியார் வீட்டில் தங்கி அருட் பணி செய்து வந்தார். கருங்குழியில் அக் காலத்தில் பயன் படுத்திய தியான மண்டபத்தில் அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கத் தங்கி,தண்ணீர் விளக்கெரித்தார். அருட்பிரகாச மாலை 100 பாடல்களில் இவற்றை விவரித்துள்ளார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தமக்கு செஞ்சுடர்ப் பூ கொடுத்ததாக அம்மாலையில் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.
1823லிருந்து 2009 வரை 186 ஆண்டுகள் ஆகிவிட்டன. பெருமான் வாழ்ந்த காலத்தில் எல்லா இடங்களிலும் மின்சாரமே இல்லை. அவர் திருக்குறள் வகுப்பு நடத்தினார். தமிழ், ஆங்கிலம் சம்ஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளைக் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
இதுவரை இல்லாத தனி நெறியாக சுத்த சன்மார்க்க நெறியினை போதித்தார். அந் நெறி போதிப்பதற்காகவும், மனித குலம் முழுமைக்கும் ஒரு அடையாளமாக, சாலை, சங்கம், சபை ஆகியவற்றை ஸ்தாபித்தார். சன்மார்க்கக் கலாசாலை மட்டும் வள்ளற் பெருமான் விரும்பிய படி அமையவில்லை., ஏனைய நிறுவனங்கள், இன்றளவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
அவரது கருணைச் செயலினைப் பார்த்த ஆண்டவர் அவருக்கு அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தைத் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூருக்கு வந்து குருவிடம் பயின்று, ராமானுஜர் ஓம் நமோ நாராயணா என்ற மகா மந்திரத்தினைத் தெரிந்து கொண்டு, தமது குரு சொன்ன மந்திரத்தை, உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்கு வழிவகுத்தார்.
அதேபோல் வள்ளற் பெருமானுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தைச் சொல்லிச் சென்றார். பெருமான் சுத்த சன்மார்க்கத்திற்கென்றே தனிக் கொடி கட்டிக் கொண்டார்.
நமது ஆலயங்களில் கொடி மரம் துவஜஸ்தம்பம் உள்ளது. கொடியில் ரிஷபம் என்றால் அது சிவன் கோவில் ஆகும். கொடியில் மயில் இருந்தால், அது முருகன் கோவிலாகும்.
நமது வள்ளற் பெருமானார், மேற்புறம் மஞ்சளும் (1/4 பங்கு) கீழ்ப்புறம் வெண்மை (3/4 பங்கு) கொண்டதாக சன்மார்க்கக் கொடியினைக் கட்டினார். சங்கம் அமைத்தார். மற்றையோர் போல மடம் எனவோ, வேறு பெயரோ வைக்கவில்லை. சங்கம் என அமைத்ததால், அந்தச் சன்மார்க்கச் சங்கங்கள், நம் நாட்டிலும், உலகெங்கிலும் தற்போது பரவி விட்டது.
திரு அருட்பாவில் சங்கம் அமைத்தது குறித்து அருட்பாவினைப் பாடியுள்ளார்.
தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில் கண்டிடசும்
துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.
(திரு அருட்பா .. பிள்ளைச் சிறு விண்ணப்பம்)
சங்கம் என்றால் ஆன்மாக்கள் எல்லாம் சங்கமம் ஆவது என்பது பொருள். சங்கு ஒளியைக் குறிக்கும். இங்கே..மதுரையின் சிறப்பு என்னவென்றால், இங்கே தமிழ்ச் சங்கம் இருந்து செயல் பட்டுக் கொண்டிருந்தது. அருந்தமிழை வளர்ப்பதற்கு பண்டைய மன்னர்கள் சிறந்த தொண்டாற்றினர்.
வள்ளற் பெருமான், இரக்கமே, அன்பே, அருளே, கருணையே வடிவானவர். உயிர் இரக்கம் ஒருவில் என் உயிர் ஒருவும் என திரு அருட்பாவில் பாடியுள்ளார்.
ஜீவ தேகங்களே கடவுளது ஆலயங்கள் என்று சொன்னார். ஜீவகருணையே, ஜீவ தயவே கடவுள் வழிபாடு என்றார். கொல்லாதீர் புலால் உண்ணாதீர் என்றார்.
மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை .. .. என உயிர்கள் வருந்துவதைக் குறித்து திரு அருட்பா பாடினார்.
சுத்த சன்மார்க்க நெறி சார்ந்தோர்,ஜீவகாருண்ய ஒழுக்க நிலை நின்று நால்வகை ஒழுக்கங்களைத் தமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இயற்கை வடிவினராக மனித குலத்துக்கு, பரிபக்குவ நிலை அறிந்து, கடவுள் பூரண இன்பம் வழங்குவதற்கு தயாராக உள்ளார். அதனைப் பெற்று ஒப்பற்ற பெரு வாழ்வினை வழங்குவதுதான் சுத்த சன்மார்க்கம்.
இறைவனது அருளினைப் பெறுவது என்பது, ஜீவகாருண்ய ஒழுக்கத்தினைக் கடைப்பிடித்தால் மட்டுமே கூடும் என்றார். ஜீவகாருண்யம் அல்லாது வேறு எதனாலும், சிறிதும், இறைவனது அருளைப் பெறுதல் கூடாது என்றியம்பினார்.
பசியினால் வரும் அவத்தையினைப் பட்டியலிட்டார். பசியை ஆகாரம் கொடுத்து அவிக்கின்றவர், இறைவனின் அருளுக்குப் பாத்திரர் ஆவார் என ஆணித்தரமாக சொன்னார். இது குறித்து, இதற்கு முன் வந்த ஞானிகள், யோகிகள் யாரும் இவ்வளவு அழுத்தந் திருத்தமாக சொல்லவில்லை.
வடலூரில் ஏழை எளிய மக்கள் உணவருந்தி பசிப் பிணியினைப் போக்குவதற்கென்றே, சத்திய தருமச்சாலையினை நிறுவினார். அதன்பின்னர் சத்திய ஞான சபையினை நிறுவினார்.
தம்மை மேலேற்றியது தயவுதான் என்றார். தயவு என்னும் சொல் பேராற்றல் கொண்டது. தர்மசாலை துவக்கவிழாப் பத்திரிக்கையில் ஒரு குறிப்பு உள்ளது.
பூர்வஞான சிதம்பரத்திலிருந்து .. அப்போது. வடலூர்.உத்தர ஞான சிதம்பரம் ஆகியது. தமது தந்தையார் என திருச்சிற்றம்பலமுடையானுக்கு.. என்றுதான் வள்ளற் பெருமமான குறிப்பிட்டுள்ளார்.
சத்திய தருமச் சாலை திறந்து எளியோர்க்கு பசியாற்றுவித்தலின் பலனை அவர் கீழ்க்கண்டபடி திரு அருட்பாவில் பாடியுள்ளார்.
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும்பொருளே
களிப்பேஎன் கருத்தகத்தே களித்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலை அணிந்தாடும்
மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
(திரு அருட்பா .. அருள் விளக்க மாலை)
அவருக்கு ஒரு பகலிலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பூரண அருளை வழங்கிவிட்டார்.
சத்திய ஞான சபையினைத் தோற்றுவித்து, தத்துவ விளக்கம் அளித்தார். இந்த ஆண்டு 138வது பூச நாள் விழாவாக கொண்டாடப்பட்டதை அன்பர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
அருட்ஜோதி கண்டேனே ஆனந்தத் தெள்ளமுதம் உண்டேனே..
சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தி நான் பெற்றுக் கொண்டேன்
என்றெல்லாம், தான் அடைந்த நிலைகளை விளக்குகிறார்.
திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள் 1938 ஆம் ஆண்டில் வடலூர் மேட்டுக் குப்பம் ஆகிய இடங்கள் எல்லாம் சென்று, வள்ளற் பெருமான் சத்திய ஞான சபை அமைத்ததன் உண்மையினை “சத்திய ஞான சபைத் தத்துவ விளக்கம்” என்ற உரைநூலினை வெளியிட்டார்கள்.
சபை எனதுளமெனத் தானமர்ந்தெனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி
.என்றெல்லாம் அருட்பெருஞ்ஜோதி அகவலில் தான் அடைந்த நிலையினை விரிவாக விளக்கி உள்ளார்.
நமது ஆன்மாதான் சத்திய ஞான சபை ஆகும். ஒரு முறை வடலூர் சென்று வந்தால், உலகளாவிய அளவிலே சென்று வந்த பலன் உண்டு.
தற்போதைய மேட்டுக் குப்பத்திலே உள்ள சித்திவளாகத் திருமாளிகை ஒரு காலத்தில் வைணவத் தலமாக இருந்துள்ளது. அந்தணர்கள், அங்கு தீட்சை கொடுப்பார்கள். அது ஒரு மடமாகவும் இருந்துள்ளது.
சித்தி வளாகம் என்று பெயர் வள்ளற் பெருமான் காலத்திலேதான் அதற்கு வந்தது. அது சித்தி வளர் அகமாகும். ஒவ்வொரு வீட்டிலும் சத்திய ஞான சபை ஒளிர்ந்து, தயவு இல்லமாக மாற வேண்டும்.
வடலூர் உடலூராக மாற வேண்டும்.
பெருமான். ஒரே நாள் இரவிலேயே அருட்பெருஞ்ஜோதி அகவல் 1596 அடிகளையும் எழுதினார்.
ஆன்மா சிரநடுச் சிற்சபையில் விளங்குகின்றது. நெற்றிக் கண் திறப்பதற்கு, சத் விசாரம், பரோபகாரம் தொடர்ந்து செய்து வரல் வேண்டும். நால்வகை ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வள்ளற் பெருமான் 51-வது ஆண்டில் சன்மார்க்கக் கொடியினை ஏற்றி, மனித குலம் உய்வதற்கென விரிவாக பேருபதேசத்தை மொழிந்தார்.
புறத்திருந்து சொன்னதால் தாம் சொன்ன எதனையும் இம் மனித குலம் கேட்கவில்லை. இனிமேல் எல்லா ஆன்மாக்களிலும் புகுந்து கொண்டு, சுத்த சன்மார்க்க நெறியினைக் காரியப்படுத்த வேண்டுமென பெருமான் நினைத்து,. திருமாளிகையினைத் திறந்து விளக்கினைக் கொடுத்து. ஆண்டவர் தீப முன்னிலையில் விளங்குவதாக பாவித்து ஞான சரியை 28 பாடல்களைப் பாடும்படி சொல்லிவிட்டு, அறையினுட் சென்றார்.
பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்
இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.
(திரு அருட்பா..சத்திய வார்த்தை)
30.1.1874ம் நாளிலிருந்து புனர்பூசம், பூசம், ஆயில்யம், முதலான 6 நாட்களுக்குப் பின் அருட்பெருஞ்ஜோதியும் வள்ளற் பெருமானும் ஒன்றாகி விட்டனர். அருட்பிரகாசர் ஆகி இறவா நிலை பெற்றுவிட்டார். ஒளி நிலையைப் பெற்றுவிட்டார். பூசம் என்பது ஆன்மா ஆகும். உத்திரம் என்பது உடம்பு ஆகும்.
அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு..
என்று தாம் அடைந்த நிலையினை திரு அருட்பாவாகப் பாடி வைத்தார்.
மேயினை மெப்பொருள் ஆயினை
அருட்பெருஞ்ஜோதி அகவலிலும் பாடியுள்ளார்.
அஞலை நீ ஒரு சிறிதும் மகனே .. என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தமக்குச் சொன்னதாகவும் பாடியுள்ளார்.
உலகுயிர்த்திரள் எல்லாம் ஒளி நெறிஆகிட
இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை
.என்று அருட்பெருஞ்ஜோதி அகவலிலும் பாடியுள்ளார்.
ஐந்தொழில் செய்யும் திறன் கொடுத்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை பிரம்மா, சிவன், விஷ்ணு என .. ஒவ்வொரு கடவுளரும் ஒவ்வொரு தொழிலைப் பார்த்து வந்தனர். வள்ளற் பெருமான், இறைவன் அருளினால் திரு அருட்பிரகாசர் ஆகியதால் ஐந்தொழிற் காரியப் பாடுகளளயும் இவர் ஒருவரே நடத்துகின்றார்.
இனி எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வேன் என்றார். அவர் சொல்லியபடியே ஒவ்வொருவர் ஆன்மாவிலும் ஊடுருவிப் புகுந்து கொண்டுள்ளார். தற்போதைய சுத்த சன்மார்க்க காலத்தில் உலகம் முழுவதும் வள்ளலார் வகுத்த நெறி பரவி வருவதே இதற்குச் சான்று ஆகும்.
பக்குவப் பட்ட ஆன்மாக்களின் உயிர் உடல் உணர்வு ஆகியவற்றில் அவர் புகுந்து கொண்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.
சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் என்ற மூவகை இனத்தில், ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, நால்வகை ஒழுக்க நெறி நின்றோரில், விஞ்ஞானகலராகித் தகுதி படைத்த பக்குவ ஆன்மாக்களுக்குள் திரு அருட்பிரகாசர் புகுந்து கொண்டு காரியப்படுகின்றார்.
வள்ளற் பெருமான் (1874ல்) சித்தி நிலை அடைந்து 69 ஆண்டுகளுக்குப் பின் 1.8.1943ம் அமாவாசை நாளன்று குரு சூரியன் சந்திரன் ஆகியோர் ஒரே நேர்க் கோட்டில் வந்த நாளில் பக்குவப்பட்ட ஆன்மாவான திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவ்ர்களுள் புகுந்து திரு அருட்பாக்களுக்கு அருளுரைகளை வெளிப்படுத்தினார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற மகா மந்திரத்தின் சாரத்தை ஒருங்கே உள்ளடக்கிய “தயவு” என்னும் சொல்லினை அவர்களுக்கு வழங்கினார். அதன் பின்னார், சுவாமி சரவணானந்தா அவ்ர்கள் மூலம், தயா விளக்க மாலை, தயவுப் பெரு நெறி, தயவுப்பாக்கள் என்று கிட்டத்தட்ட 6.000 பாடல்கள் வெளியாயின.
வள்ளற் பெருமான் சொல்லிச் சென்ற சுத்த சன்மார்க்க நெறியும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவ்ர்கள் சொல்லிய தயவுப் பெரு நெறியும் மனித குலம் அனைத்தையும் இறை நிலைக்கு உயர்த்துவன ஆகும்.
ஆகவே, இங்கே வந்து இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் அனைவரும் இந் நெறிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்
மதுரை நாராயணபுரத்திலிருந்து www.vallalarspace.com, மற்றும் vallalarOrg foundation ஆகியவை வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினையும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவு நெறியினை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. உலகமெலாம் எடுத்துச் செல்லப்படத்தக்க சிறப்பான இந் நெறிகளை இங்கேயே வசிக்கும் நீங்கள் எல்லாம், தவறாமல் கற்று வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் தமது உரையினை முடித்தார்.
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி தமது உரையில், இந்த ஏரியா காவலர்கள் வாழும் பகுதியாக இருப்பினும், சுத்த சன்மார்க்க நெறி பயின்று, அவர்களும் வாழ்வில் வள்ளற் பெருமான் சொன்ன இறை நிலை அடைய வேண்டும்.
இங்கு நடைபெறும் சுத்த சன்மார்க்க விளக்க உரைகள் குறித்த விபரங்களை, வந்திருக்கும் .. நாராயணபுரத்தைச் சேர்ந்த அன்பர்கள், ஏனையோரிடமும் தெரிவித்து, வரும் நிகழ்வுகள் நடக்கும் நாட்களில் பெருவாரியாகக் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அடுத்தாற்போல் வரும் நாட்களில், அருட்பெருஞ் ஜோதி என்ற திரைப்படம் போட்டுக் காண்பிக்க உள்ளதாகத் தெரிவித்தவுடன், இளையோர் அனைவரின் முகத்திலும் ஒரு பிரகாசம் ஒளிர்ந்ததைக் காண முடிந்தது.
பள்ளி உள்ள நாளில் காண்பித்தால் பார்க்க முடியாது எனவே பள்ளி விடுமுறை நாளில், திரைப் படம் காண்பிக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர். அண்டை அயலில் உள்ள கோவில்களில் சென்று வழிபடும் அன்பர்கள், அங்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளி இருப்பதாகப் பாவித்து அங்கு உள்ள ஆண்டவரை வழிபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இவ் விழாவில் பங்கு கொள்ள வந்திருந்த திரு சொக்கலிங்கம் என்ற அன்பர், வரும் 7.3.2009 மற்றும் 8.3.2009 ஆகிய நாட்களில், விக்கிரமங்கலம் அருகே தென்கரை கிராமத்தில் பூச நாள் விழா எடுக்க இருப்பதைத் தெரிவித்து, அவ் விழாவில், முடிந்த அன்பர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இவ் விழாவினைக் கடந்த பல ஆண்டுகளாக, அன்பர் திரு சொக்கலிங்கம்-புவனேஸ்வரி தம்பதியர் குடும்பத்தினர் நடத்தி வருவதன் சிறப்பினை அவர் எடுத்துரைத்தார்.
அதேபோல், திருமதி மீனாம்பாள் மகள் செல்வி லலிதா மணி அவர்கள் ரயில்வே காலனியில் பெண்களுக்கென்று தனி சன்மார்க்க வகுப்பு நடத்துவது குறித்து தெரிவித்து, இஷ்டப்படும் பெண்கள் அங்கும் சென்று கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
திரு அருட்பா ஆடியோ சி.டி.கள். மற்றும் சுத்த சன்மார்க்கம் சார்ந்த திரு அருட்பா திருமுறைகளும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவு நூல்களும் விற்பனைக்குக் கிடைக்கும் எனவும் தெரிவித்து, தேவைப்படுபவர்கள் வாங்கி படித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்தார்.
2009-ஆம் ஆண்டில் தைப்பூச பெரு விழா அன்று (8.2.2009) வடலூர் உலக மையத்திலும், அங்கு, ராமநாதபுரம் தங்கல் மனையிலும் சுத்த சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்திய திண்டுக்கல் சுவாமிகளிடம் அணுக்கத் தொண்டரான திரு விஸ்வநாதன் அவர்கள், மதுரையில் நாராயணபுரத்தில் இயங்கி வரும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று, வந்து, அருமையான சுத்த சன்மார்க்க உண்மைகளை அன்பர்களுக்கு விரிவாகவும், எளிமையாகவும், தெளிவாகவும் சொற்பொழிவு நிகழ்த்தியமைக்கு அதன் மேனேஜிங் ட்ரஸ்டி தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
அதன் பின்னர், ஜோதி பாடல் பாடப்பட்டு, விண்ணப்பம் வாசிக்கப்பட்டு, விழா நிறைவுற்றது.
ஏழை எளியோருக்கும் வந்து கலந்து கொண்ட அன்பர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.