1.2.2009-மதுரை உத்தங்குடி பூம்புகார் நகரில் கருணை சபை சாலை திறப்பு விழா நிகழ்ச்சிகள்.
கடந்த 1.2.2009 அன்று மதுரை மாநகரை அடுத்த மேலூர் ரோட்டில் அமைந்துள்ள உத்தங்குடி அருகே உள்ள பூம்புகார் நகரில் மனை எண்.34ல், மதுரையில் வசிக்கும் திரு APJ. அருள் என்ற சன்மார்க்க அன்பர் மற்றும் அவரது மனைவியார் திருமதி ராமலக்ஷ்மி ஆகியோரின் பெரு முயற்சியால், கருணை சபை சாலை திறப்பு விழா கண்டன.
காலையில் சுமார் 8.30 மணி அளவில் துவங்கிய துதி, திருக்குறள் மற்றும் திரு அருட்பாக்களைக் கொண்டிருந்தது. சன்மார்க்க அன்பர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதலில், அருட் குழந்தைகளால், நன்முயற்சி வாயில் திறக்கப்பட்டு, பின்னர், கருணைச் சபை, காலை 9.30 மணி அளவில், கருணை மிகு அன்னை எத்திராஜம்மாள் நாராயணசுவாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மனித குலம் ஒழுக்க நெறியில் வாழ வேண்டும் என்ற வகையில் திருக்குறள் யாத்துச் சென்ற தெய்வப் புலவர், திருவள்ளுவப் பெருந்தகையின் திரு உருவப்படத்தை, மதுரை உயர்நீதிக் கிளை வழக்கறிஞர் உயர்திரு தயவு P. சுப்பாராஜ் அவர்கள், திறந்து வைத்தார்.
இச் சபையின், நிறுவனரான. APJ அருள் - திருமதி இ. இராமலட்சுமி அவர்களால் அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றப்பட்டது.
திரு அருட்பிரகாச வள்ளலார் திரு உருவப் படம் திருப்பூர் இயற்கை வாழ்வகம் உயர்திரு அய்யா க. இரா. முத்துச்சாமி அவர்களால், திறந்து வைக்கப்பட்டது.
முத்தேக சித்தி பெற்ற வள்ளற் பெருமானை யாரும் படம் பிடிக்க இயல வில்லை. அதன் பின் அன்பர்களின் அறிவுக்கு எட்டிய படி, வள்ளற் பெருமான் இப்படித்தான் இருந்திருப்பார் என்ற விதத்தில் அனுமானித்து வரையப்பட்ட இந்தப் படத்தின் கீழ் இத்தகைய குறிப்புக் கண்டுள்ளது.
கருணைச் சாலை திருவேங்காடு மருத்துவர் & தலைவர், வள்ளலார் தமிழ் மன்றத் தலைவர், வள்ளல் நேசன் திரு ஜெய. இராஜமூர்த்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சன்மார்க்கக் கொடியினை அருள் டிரஸ்ட் நிறுவனரும் ஞான தீபம் பத்திரிக்கை ஆசிரியருமான, சன்மார்க்க அன்பர் திரு முரளீதரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
சபையில் முதல் வாசிப்பாக, வள்ளற் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம் குறிஞ்சிப்பாடி கருணைமிகு திரு சுப்பிரமணியம் அவர்களால் வாசிக்கப்பட்டது.
பின்னர், நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டபடி,
கீழ்க்காணும் அன்பர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள்.
உயர்திரு சந்திர மோகன் .. சுத்த சன்மார்க்கம்.
உயர்திரு பெ. சிற்றம்பலம் .. சுத்த சன்மார்க்கக் கடவுள்.
திருமதி இரா. சிவகாமி அம்மாள் .. சுத்த சன்மார்க்கத்தின் சாதனம்.
உயர்திரு அ. சொக்கலிங்கம் .. சுத்த சன்மார்க்கத்தில் வழிபாடு.
உயர்திரு அ.செங்கான் .. சுத்த சன்மார்க்கத்தில் நன் முயற்சி-பயிற்சி
உயர்திரு சிவ. அன்பானந்தம் – சுத்த சன்மார்க்கத்தில் பசி நிவர்த்தி.
உயர்திரு மு. விஜயராமன் – சுத்த சன்மார்க்க லட்சியம் & வேண்டுதல்.
உயர்திரு கொ.சி. சகாதேவராஜா – கடவுளின் அருள்.
இந்த ஏரியாவில் உள்ள மக்கள் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வகுத்தளித்த உயர் ஒழுக்க நெறியான சுத்த சன்மார்க்க நெறியினைக் கற்று, ஜீவ காருண்ய ஒழுக்கத்தைத் தம் வாழ்வில் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கருணை-சாலை-சபை இங்கே கட்டி திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது என்பதை அனைத்து அன்பர்களும் தமது உரையில் வலியுறுத்திப் பேசினர்.
மதுரையிலிருந்து சற்றுத் தூரத்தில் கட்டப்பட்டிருந்தாலும், சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள், சுத்த சன்மார்க்க நெறியினைக் கற்க வேண்டும் என்ற வகையில் இந்த கருணை சாலை சபை கட்டப்பட்டிருப்பதற்கு, அனைவரும் இதன் நிறுவனர் திரு APJ அருள் மற்றும் அவரது துணைவியார் திருமதி ராமலக்ஷ்மி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
நிறுவனரின் சார்பில் பேசிய திரு APJ அருள், இந்த கருணை சாலை சபையில் இனி வாராந்திர வழிபாடு நடைபெற உள்ளதாகவும், இங்கு, நடத்தப்படும் அவ்வித வழிபாடு, மதம், மொழி, இனம், நாடு, நிறம் அனைத்தையும் கடந்ததென்றும் தெரிவித்தார்.
சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கத்தினை வள்ளற் பெருமானார் துவக்கியதால், அந்த வழியில், எம் மதத்தினரும் மத, இன வேறுபாடின்றி, இந்த சபைக்கு வந்து வழிபாடு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
பின்னர், திரு அருட்பா சுத்த சன்மார்க்க பாடல்களை, அருள் தாய் திருமதி பி. மீனாம்பாள் அவர்கள் தலைமையில், கருணைச் செல்வி பி. லலிதா மணி மற்றும் தயவு திருமதி சொ. புவனேஸ்வரி ஆகியோர் மிகவும் உருக்கத்துடன் பாடினர்.
இறுதியில் வழக்கறிஞரும், சட்ட ஆலோசகருமான திரு மோ. சரவணக் குமார் அவர்கள் நன்றி நவில, திறப்பு விழா நிகழ்ச்சிகள் இனிதே முடிந்தன.
அதன் பின்னர், ஏழை எளிய மக்கள், விழாவில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றியவர்கள் ஆகியோருக்கு உணவளிக்கும் பணி நிறைவேற்றப் பட்டது.
Write a comment