DAEIOU - தயவு
அம்பது ரூபாய்க்கு ஆறாந்திருமுறையா…உண்மைதான்.

அம்பது ரூபாய்க்கு ஆறாந்திருமுறையா…
இந்த தைப்பூச விழா மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்தது. ஒரு நல்ல உள்ளம், தெய்வ நிலையங்களில் உள்ள திரு அருட்பா 6ந் திருமுறை திரு அருட்பாக்களை, மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கினால், வள்ளற் பெருமான் சொல்லிச் சென்ற ஞான வழியினை அதிகமான சன்மார்க்க அன்பர்கள் படித்து, புரிந்து வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பயன் பெற்று இன்புறுவார்களே.. என எண்ணியது தான்.
அந்த உள்ளம் .. நாகப்பட்டினம் சிவசக்தி குழுமத்திலிருந்து வந்தது.
அதன் தாக்கம்தான் தெய்வ நிலையம் வெளியிட்ட தைப் பூச விழா அழைப்பிதழில், 5-ம் பக்கத்தில், ரூ.50/- விலையில் தைப்பூச நாளான 8.2.2009 அன்று, திரு அருட்பா 6ந் திருமுறை 1,000 வழங்கப்படும் என்பது.
அதன்படியே, 8.2.2009ந் தேதி அன்று காலை சுமார் 9.00 மணி இருக்கும், , தர்மசாலை அருகில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையத்தில் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அன்பர்கள் திரு அருட்பா 6ந் திருமுறையினை ரூ.50/- விலையில் வாங்கிச் சென்றனர்.
இந்திய நாட்டின் தலைநகரான டில்லியில் இந்திய தூதுவர் அலுவலகத்தில் பணி புரியும், சன்மார்க்க அன்பர் (திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்த) திரு ராஜேந்திரன் இந்த முறையும், தைப் பூச விழா ஜோதி தரிசனம் காண வடலூர் வந்திருந்தார்.
அவர், கடந்த ஆண்டு, ஜாம்பியாவில் இந்தியன் ஹை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, வடலூர் வந்திருந்தார். வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளில், மாறாக் காதல் கொண்டவர். ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வாழ்க்கையாகவே கடைப் பிடித்து வாழ்பவர்.
தான் கற்ற சுத்த சன்மார்க்க நெறியினை ஜாம்பியா நாட்டிலும் பரப்ப வேண்டும் என்ற ஆதங்கத்தில், தனது சொந்த முயற்சியில், அங்கு உள்ள கிட்டத்தட்ட 20 நபர்களை, சுத்த சன்மார்க்க வழிக்குக் கொண்டு வந்த ஒரு நல்ல காரியம் .. அங்கு இவர் பணிபுரிந்தபோது செய்தது.
பணி மாறுதலில், 2008ம் ஆண்டு துவக்கத்தில், இந்தியா வந்து, தற்போது டில்லியில் பணி புரிகின்றார்.
அவர்தான் 8.2.2009ந் தேதி காலையில், 2 ஆறாந்திருமுறை அருட்பாக்களை, ராமநாதபுரம் மாவட்ட சன்மார்க்க சங்கத்துக்குக் கொண்டு வந்தார். கேட்டபோது, அழைப்பிதழில் குறிப்பிட்டபடியே, அங்கே ரூ.50/- விலையில் 6ந்திருமுறை விற்பனை செய்யப்படுகின்றது என்றார்.
அதனைக் கேட்டு, அங்கிருந்த மதுரை நாராயணபுரம் அன்பரும் புத்தக விற்பனை நிலையத்திற்குப் போய் 2 திரு அருட்பா 6ந் திரு முறைப் புத்தகங்களை ரூ.50 விலையில் வாங்கினார்.
சொற்பொழிவு மேடையின் பின்புறத்தில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையத்தில், போட்டி போட்டுக் கொண்டு அன்பர்கள் 6ந் திருமுறையினை ரூ.50/-க்கு வாங்கிக் கொண்டிருந்தனர்.
திரும்பிய திசை எல்லாம், அன்பர்கள் கையிலும், முதியவர்கள், இளையோர் ஆகியோர் அனைவரின் கைகளிலும் 6ந் திருமுறை திரு அருட்பாதான் மிளிர்ந்தது. ஆர்வத்துடன் அனைவரும், அங்கேயே படிக்க ஆரம்பித்ததும், இதன் சிறப்பு அம்சமாகும்.
மேடையில் யாரோ சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். 6ந் திருமுறை வாங்கியபின் அதிலெல்லாம் அவர்கள் கவனம் செல்லவில்லை. 6ந் திருமுறை வாங்கிய அன்பர்கள் அனைவரும் உடனே படிக்க ஆரம்பித்த காட்சி, வடலூரில் கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது. நாம் ஏதோ நூலகத்திற்கு வந்து விட்டோமா என வியப்புக் கொள்ள வைத்தது, அந்தக் காட்சி…
இந்த இணைய தளத்தில் வடலூர் தைப்பூச நிகழ்ச்சி, காட்சிகள், ராமநாதபுரம் மாவட்ட சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், அன்னதானம், மற்றும் ஞான சபை முதலான காட்சிகளுடன், 6ந் திருமுறை ரூ.50/-க்கு விற்கப்பட்ட காட்சியையும், வாங்கிய அன்பர்கள் கையில் வைத்திருப்பதையும் படம் பிடித்துப் போட்டு விட்டார்கள். (English articles-Vadalur Poosam Photos)
4 படங்கள் அவற்றைக் காட்டும் காட்சியாக அமைந்துள்ளன.
படம் எண். 2980, 2981, 2982, 2983 ஆகியவை.
அதில், முதல் படம் விற்பனை நிலையத்தில், விற்பனை சூடு பிடித்து ஒரு பக்கம் திரு அருட்பா அன்பர்களுக்கு வழங்கப்படும் காட்சி..(படம் எண் 2980.)
அடுத்த படம் .. அன்பர்கள் போட்டி போட்டு 6ந் திருமுறை வாங்கிய காட்சி…மொய்த்து விட்டனர் போங்கள் ….(படம் எண்.2981)
அடுத்த படத்தில்..ரூ.50/- விலையில் 6ந்திருமுறையைக் கைப்பற்றி விட்டோம் என்ற வெற்றிப் பெருமிதத்தில், இரண்டு மதுரை சன்மார்க்க அன்பர்கள் மத்தியில், டில்லியில் பணிபுரியும் திரு ராஜேந்திரன்.
அனைவர் கையிலும், திரு அருட்பா 6ந் திருமுறையே .. .. (படம் எண்.2982)
அடுத்ததாக, கூட்டத்தில் உள்ளவர்கள் எல்லாம், மேடைச் சொற்பொழிவினைக் கேட்டுக் கொண்டிருக்க .. ஒரு பெரியவர் மட்டும், 6ந் திருமுறையைப் படிக்கும் காட்சி (படம் எண். 2983).
நாகப்பட்டினம் அன்பர்கள் பல்வேறு சிறப்பான பணிகளை, வடலூரில் செய்து வருகின்றனர்.
தர்மசாலையில், வள்ளற் பெருமானின் திரு உருவச் சிலையை நிறுவி, அருட்பெருஞ் ஜோதி ஒரு பக்கமும், வள்ளற் பெருமான் கைப்பட எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் ஒருபுறமும், நடுவில், ஆண்டவர் எழுந்தருளி உள்ள ஞான சிம்மாதனத்தையும் அமைத்தனர்.
அடுத்ததாக, தைப்பூசப் பெருவிழா நடைபெறும் போது, தர்மச்சலையில் விசேடம் நடைபெறும் நாட்கள் அனைத்திலும், வரும் அன்பர்களுக்கும், ஏழை எளியோர்க்கும், உண்டி வழங்கும் பெரும் பொறுப்பினை நாகப்பட்டினம் அன்பர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது, பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதை, சன்மார்க்க உலகம் நன்கு அறியும்.
ஆருயிர்க் களித்தல் அரும் வழிபாடாகக் கொள்ள வேண்டியவையாக கீழ்க்கண்ட பணிகள் ஆற்றப் பட வேண்டும் என திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் சொல்லி வைத்தார்கள்.
ஆருயிர்க் களித்தல் அரும் வழிபாடு.
ஜீவர்களுக்குத் தயை புரிந்து உயிர் விளக்கமும், அறிவு விளக்கமும் உண்டு பண்ணுதலே மேலான வழிபாடாகும்.
இதனை நன்கு உணர்ந்த நாகப்பட்டினம் அன்பர்கள், தர்மச்சாலையில், உயிர் விளக்கத்திற்கு, உண்டி விளங்கும் பணியினையும், அறிவு விளக்கத்திற்கு….திரு அருட்பா…6ந் திருமுறையினை…தெய்வ நிலையம் குறைந்த விலையில் வழங்கினாலும், அதிலும், இன்னும் குறைத்து வழங்க வேண்டும் என்ற உயரிய கொள்கையினைக் கைக் கொண்டு, இந்த தைப் பூச நாளிலே திரு அருட்பா 6ந் திருமுறையினை, ரூ.50/-க்கு 1,000 அன்பர்களுக்கு வழங்குவதற்கு உதவி செய்துள்ளனர் (sponsorship).
வள்ளற் பெருமானின் உள்ளக் கிடக்கையை .. ,, தமது உள்ளத்தால் புரிந்து கொண்டு .. ,, செயலாக்கத்தில் இறங்கிய நாகப்பட்டினம் சிவசக்தி குழுமத்தின் உண்மைத் தொண்டினை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.
வளரட்டும் அவர்களது அருட் தொண்டு. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண ஆசிக்குப் பாத்தியப் பட்ட பல அன்பர்களிலே முதல் வரிசைக்கு முன்னேறிக் கொண்டிருக்கும், நாகப்பட்டினம் சிவசக்தி குழுமத்திற்கு நன்றி. அம் மாவட்டத்தின் சிறப்பான பணிகளுக்கும் நன்றி.
தயவுக் குழு. மதுரை.
Ramanujam jam
அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சி.
வடலூரில் ராமநாதபுரம் மாவட்டத் தங்கல் மனையில், மதுரை நாராயணபுரம் அன்பர் காலையில் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு, காஞ்சீபுரம் - திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தின் செயலாளர், திரு வெங்கடேசன் வந்தார்.
தமது ஊரில் சன்மார்க்க சபையில், வரும் 22.2.2009 அன்று தைப் பூச விழா கொண்டாடப்பட இருப்பதைத் தெரிவித்து அழைப்பிதழ் கொடுத்து, வருமாறு கூறினார்.
ரூ.50/-க்கு வாங்கிய 2 ஆறாந்திருமுறைகள் உள்ளன. நீங்கள் வாங்கிக் கொள்கின்றீர்களா ? எனக் கேட்டபோது,.இல்லை.. நீங்கள் வாங்கி உள்ளீர்கள்..மதுரைக்குக் கொண்டு செல்லுங்கள் என்றார்.
இல்லை இல்லை.. நீங்கள் 22.2.2009 அன்று காஞ்சீபுரத்தில் பூச விழா நடத்த உள்ளீர்கள். (அவர் வரும் நேரம் மலிவுப் பதிப்பு விற்பனை முடிந்திருந்தது)
எனவே இந்த 2 ஆறாந்திருமுறைகளை அங்கு கொண்டு சென்று தேவைப்படும் அன்பர்களுக்குக் கொடுங்கள் என்று வலியுறுத்திச் சொன்னதன் பேரில் திரு வெங்கடேசன் (விற்பனை விலையைக் கொடுத்துப்) பெற்றுச் சென்றார்.
திரும்பிய திசை எல்லாம் கோவில்கள் உள்ள ஊர் காஞ்சீபுரம். பல்வேறு மதம், மடாலயம் என்று உள்ள ஊரில் சுத்த சன்மார்க்க நெறி பரப்புவதென்றால் சாதாரணமா ? .. இல்லவே இல்லை ..
அங்கு, சன்மார்க்கம் கால் ஊன்றுவதற்கு இந்த அன்பர் மிகுந்த தொண்டு புரிந்துள்ளார். சுத்த சன்மார்க்கத்தின் மூலம்தான் ஞான சித்தி அடைய முடியும், என்பதற்கு இவர் மற்றும், இவரைச் சார்ந்த அன்பர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு "திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்" என்ற நிறுவனத்தை ஸ்தாபித்து நல்ல முறையில் நடத்தி வருகின்றனர்.
சிறப்புக்குச் சிறப்புச் சேர்த்த இந்த அன்பரிடம் கொடுத்து விட்டால், அங்கு பலருக்கு திரு அருட்பா 6ந் திருமுறை மூலம் சுத்த சன்மார்க்க நெறி கற்பிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதே அவர் மூலம் அதனைக் கொடுத்து விட்ட நோக்கமாகும்.
தயவுக் குழு.
Monday, February 16, 2009 at 08:20 am by Ramanujam jam