வடலூர் தைப்பூச திருவிழாவில் ஜோதி தரிசனம்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர், பிப்.9 –
தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. லட்சக் கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
தைப்பூச விழா
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரத்தன்று ஜோதி தரிசன விழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு 138-வது தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சத்திய ஞான சபை தொடர்ந்து சத்திய தரும சாலை, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக் குப்பம், வள்ளலார் அவதரித்த மருதூர், வள்ளலார் வாழ்ந்த கருங்குழி ஆகிய இடங்களிலும் சன்மார்க்க கொடியேற்றப் பட்டது.
ஜோதி தரிசனம்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் நேற்று நடைபெற்றது. முதல் தரிசனம் காலை 6 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து வந்த பக்தர்கள் நேற்று அதிகாலையில் சத்திய ஞான சபையின் அருகில் உள்ள திருக்குளத்தில் குளித்துவிட்டு ஜோதி தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் நின்றனர்.
ஞான சபையின் சதுர பீடத்தில் நிலைக்கண்ணாடிக்கு முன் கருப்பு, செம்மை என 7 நிறங்களில் ஏழு திரைகள் உண்டு. சரியாக 6 மணி ஆனதும் நிலக்க் கண்ணாடிக்கு முன் காணப்பட்ட அந்த 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது.
அப்போது நிலைக் கண்ணாடிக்கு பின் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாகக் காட்சி தந்தது. அங்கே வந்திருந்த பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற அகவலை, பக்தி பரவசத்துடன் ஓதி ஜோதி தரிசனம் செய்த காட்சி அருட்பிரகாச வள்ளலாரை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
அமைச்சர் பன்னீர் செல்வம்.
காலை 10 மணிக்கு நடந்த ஜோதி தரிசனத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம், கலெக்டர் ராஜேந்திர ரத்னு உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் தரிசிப்பதற்காக 15 நிமிடம் ஜோதி காண்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் திரை போடப்பட்டது.
இதை தொடர்ந்து பகல் 1 மணி. மாலை 6 மணி இரவு 10 மணி ஆகிய நேரங்களிலும் ஜோதி தரிசனம் நடைபெற்றன. தொடர்ந்து இன்று (திங்கட் கிழமை) காலை 6 மணிக்கும் ஜோதி தரிசனம் நடக்கிறது. வடலூர் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஜோதி தரிசனத்தை காண வந்திருந்தனர். இதனால் வடலூர் விழாக் கோலம் பூண்டு இருந்தது.
நன்றி – தினத்தந்தி நாளிதழ் – சென்னைப் பதிப்பு நாள் 9.2.2009.
Write a comment