DAEIOU - தயவு
ரஷ்யாவிலிருந்து வடலூருக்கு துறவிகள் வருகை.


ரஷ்யாவிலிருந்து குருமார்கள் குழுவினருடன்
29-1-2009, 30-1-2009 வடலூர் வருகை.
ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற இடத்தில் துறவிகள் தங்குமிடம், மடாலயம் ஒன்று உள்ளது. இந்த மடாலயத்தின் செயல்பாடுகள் குறித்து spb@advayta.org என்ற ஒரு இணைய தளமும் செயல்பட்டு வருகின்றது. இங்கு “Laya-Yoga Monestery Academy Guhya Samajda” 1995-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது.
அந்த தங்குமிடத்திலிருந்து, சுவாமி விஷ்ணு தேவ் என்ற துறவியும் மற்றும் சிலரும் 2 ஆண்டுகளுக்கு முன் வடலூர் வந்து இங்கிருந்து வள்ளலார் இயற்றிய திரு அருட்பாக்கள் முதலானவற்றை வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர். வள்ளற் பெருமானின் நெறியின் பால் அவர்களுக்கு நல்ல பிடிப்பு ஏற்பட்டு விட்டது.
அடுத்தாற்போல், கடந்த 29.1.2009 மற்றும் 30.1.2009 ஆகிய இரு நாட்களில் அந்த மடாலயத்திலிருந்து கீழ்க்காணும் துறவியும் அவருடன் 3 அன்பர்களும், வடலூருக்கு வருகை புரிந்தனர்.
(1) Ayshvarya Nandana (Monk)
(2) Maksim Kijelevski, Member.
(3) Yana Dubovikova (woman) Member
(4) Roman Dommator, Member
(5)
சிங்கப்பூரில் உள்ள சன்மார்க்க அன்பர் திரு சிவகுமார் அவர்களிடம், தமது வருகை பற்றி 3 நாட்களுக்கு முன்னர் தெரிவித்த அவர்கள், 29.1.2009 (வியாழக்கிழமை) அன்று பகல் 11.30 மணிக்கு, வடலூருக்கு வந்துவிட்டனர். தர்மச்சாலை செல்லும் ரோடில் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டத் தங்கல் மனையில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் வந்த நேரம் பகல் தரிசன நேரமாக இருந்ததால், சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் செய்து வந்தனர். அதன் பின்னர் அன்று பிற்பகல் அவர்கள், மேட்டுக் குப்பத்திற்குச் சென்று தரிசனம் செய்தனர்.
வள்ளல் பெருமான் சித்தி நிலையை அடைந்த அந்த இடத்தில் அவர்கள் (realized the spiritual vibration) ஒரு தெய்வீக உணர்வினை உணர்ந்தனர். பின்னர் அவர்கள், வடலூர் திரும்பியதும், சன்மார்க்க அன்பர் மேட்டுக் குப்பம் அருள்திரு ஞான சம்பந்தம் அவர்கள், வடலூரின் முக்கியத்துவம், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கம் குறித்த விளக்கத்தினைத் தெரிவித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மடாலயத்தில் அவர்கள் எந்த விதத்தில் இசைக் கருவிகளைக் கொண்டு, இறை வழிபாடு செய்வார்களோ, அதே போன்று, வடலூரில், இராமநாதபுரம் மாவட்டத் தங்கல் மனையில் அன்று இரவு நெடு நேரம் ஆலாபனைகள் செய்தனர்.
அவர்களின் வரவினைக் கேட்டு, மதுரையிலிருந்து வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ஏ.ராமானுஜம், வடலூருக்கு, அன்றிரவு சென்றார். 29.1.2009 அன்று இரவு 10.10 மணி முதல் 30.1.2009 அதிகாலை 02.15 மணி வரை, அவர்களுக்கு வள்ளற் பெருமானின் வாழ்க்கை வரலாற்று விபரத்தையும், சுத்த சன்மார்க்க நெறியின் உயர் மாண்பினையும் அவர் விரிவாக விளக்கினார். தாம் ஏற்கனவே தெரிந்து கொண்ட பல்வேறு ஞானிகளுக்கும், வள்ளற் பெருமானுக்கும் எந்தெந்த வகையில் வேறுபாடு உள்ளது என்பதை அவர்கள், பல கேள்விகள் மூலம் கேட்டனர். இதுவரை வந்த மகான்கள், , அவர்கள் தாம் வேறு, இறைவன் புறத்தே இருப்பதாகச் சென்றடைந்ததையும், அவர்கள் அனைவரும்: அடைந்தது முத்தி நிலை என்பதுவும், வள்ளற் பெருமான் தான் அந் நிலையிலிருந்து வேறுபட்டு, தனக்குள்ளே ஆன்ம சிற்சபையில் சத்திய ஞான சபையினைக் கண்டு, இறைவனை வணங்கி, இறை நிலையினை அடைந்ததையும், தமது தேகத்தை, சுத்த பிரணவ ஞான தேகமாக்கிக் கொண்டதையும் தெரிவித்து, ஐந் தொழிற் காரியப்பாடுகள் செய்யும் வல்லமை பெற்றதையும் எடுத்தியம்பி, வள்ளல் பெருமான் அடைந்த நிலை சித்தி நிலை என்பதையும் அவர்களுக்கு விளக்கினார்.
இதுபோன்று கேரளாவில் ஒரு மகான் கடந்த 1989ல் ஒளி நிலை அடைந்துள்ளாரே என அவர்கள் வினவினர். ஒளி நிலை அடைவது வேறு, சித்தி பெற்று, ஐந் தொழில் காரியப்பாடுகளையும் செய்யும் இறை நிலை அடைவது வேறு என அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
எந்நேரமும் இறைவனை சிரநடு சிற்சபையில் இருப்பதாகப் பாவித்து, உலகியற் காரியப்பாடுகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும், சத்துவ ஆகாரம் உட்கொண்டு, சத் விசாரம் ¼ பங்கும், , ஜீவகாருண்யம் ¾ பங்கும் நால்வகை ஒழுக்கத்தினையும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பரி பக்குவ காலத்தே, ஒவ்வொரு ஆன்மாவுக்கும், வள்ளற் பெருமான் அடைந்த நிலை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால், வள்ளற் பெருமானுக்குப் பின் யாரேனும் இந் நிலை அடைந்துள்ளனரா என அவர்கள் கேட்டனர். சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் அத்தகைய நிலையினை அடைய தீவிர முயற்சி செய்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யாவில், தமது மடாலயத்திலிருந்து, வள்ளலாரின் பாடங்கள், சிறு சிறு நூல்களாகத் தொகுக்கப்பட்டு, சுற்றிலும் உள்ள நகரங்களில் வினியோகிக்கப்பட்டதாகவும் மேலும், மாஸ்கோவினைச் சுற்றிலும், ஏன், ரஷ்யா பூராவிலுமே வள்ளலாரின் நெறியினை புத்தகங்கள் வடிவில் தாம் பரப்புவதற்கு முயற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அங்கு வள்ளல் பெருமானின் கொள்கைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களுக்கு, திரு வன்மீக நாதன் அவர்கள் எழுதிய ராமலிங்க அடிகளாரின் சரித்திரமும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய Saint Ramalingam என்ற நூலும், மற்றும் தெய்வ நிலையத்திலிருந்து பெறப்பட்ட அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் 5 ஸ்டிக்கர்களும், வள்ளல் பெருமான் தம் கைப்பட எழுதிய பெரிய சைஸ் அருட்பெருஞ்ஜோதி அகவல் (ரூ.25/- பிரதி) ஒரு பிரதியும் கொடுக்கப்பட்டது. அகவல் ஒரே இரவில் 1,596 அடிகள் வள்ளற் பெருமானாரால் கடுக்காய் மை கொண்டு எழுதப்பட்டதையும், அதன் சிறப்பையும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. வள்ளல் பெருமானின் கையெழுத்தினை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தமிழில் உள்ளதா எனக் கேட்டு, அதனைப் பெற்றுக் கொண்டனர்.
தமது மடாலயத்தில், ஜூடோ, தியானம், யோகா முதலியன கற்பிக்கப் படுவதாகவும், ராமாயண நாடகங்களை, தமது மடாலயத்தில் நடத்தியதையும் போட்டோ ரூபத்தில் அவர்கள் காண்பித்தனர்.
மேலும் மகான் தத்தாத்ரேயா போதித்த தத்துவங்கள் தம்மை ஈர்த்துள்ளதாகத் தெரிவித்த அவர்கள், மேட்டுக் குப்பம் அருள்திரு ஞான சம்பந்தம் அவர்கள் மூலம் தமக்கிருந்த சந்தேக நிவர்த்தி செய்து கொண்டனர். கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
இந்தியாவில், 14.1.2009ந் தேதி முதல் கர்நாடகா மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தி சாயி பாபா ஆஸ்ரமம், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவண்ணாமலையில் ரமணாஷ்ரமம், பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தாஷ்ரமம், ஆரோவில் ஆகிய இடங்களைப் பார்த்துவிட்டு, 29.1.2009 அன்று வடலூர் வந்துள்ளதையும் தெரிவித்தனர்.
இங்கு வந்த வகையிலும், வள்ளற் பெருமான் மனித குலத்துக்குக் கற்றுத் தந்த சுத்த சன்மார்க்க நெறியின் உயர்வினைத் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி எனத் தெரிவித்தனர்.
அதற்கும் மற்ற உதவிகளைப் புரிந்ததற்கும் மீண்டும் தமது நன்றியினைத் தெரிவித்தனர்.
அடுத்த ஆண்டில், ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் பர்கில் நடைபெற உள்ள வருடாந்திர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படி திருவாளர்கள் அருள்திரு ஞான சம்பந்தத்தையும், ராமானுஜத்தையும் கேட்டுக் கொண்டனர்.
அவர்களை சந்தித்து விட்டு, அவர்கள் வந்தது பற்றி இந்த www.vallalarspace.com இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுவிட்டு ஒரு அதிசயம் காத்திருந்தது. என்னவென்றால்,வள்ளல் பெருமானுக்கு, ரஷ்யாவில், உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் என்ற இடத்தில் 8 மீட்டர் (சுமார் 26 அடி) உயரத்துக்கு சிலை வைக்கப்பட்டது என்ற ஒரு தகவல் அவர்களது Space Directory மூலம் இதே இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
ரஷ்ய நாட்டின் மக்கள் எந்த அளவிற்கு, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியின் பால் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தால் இது போன்று, அவர் குறித்த தகவல்கள் எங்கிருந்தாலும் தெரிய வேண்டும் என்ற விதத்தில், 8 மீட்டர் சிலை வைக்கும் அளவிற்குச் சென்றிருக்க வேண்டும் என்பதனை இதனைக் கண்ணுறும் சன்மார்க்க அன்பர்கள் யூகித்துக் கொள்ள வேண்டும். .
இதனை ஏற்படுத்திய செயிண்ட் பீட்டர்ஸ் பெர்க் மானஸ்ட்ரியின் தலைமை குருமார்களுக்கு சன்மார்க்க உலகம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
உலகிலேயே அதிகமான பரப்பளவினைக் கொண்ட நாடுதான் சோவியத் ரஷ்யா. அங்கெல்லாம் வள்ளற் பெருமானின் நெறி பரவுவது, மிகவும் போற்றுதற்குரிய ஒரு நிகழ்ச்சி ஆகும். வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொடியாகிய ஒரே வெண் கொற்றக் கொடியின்கீழ் இது போன்று அனைத்து நாடுகளும் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அப்போது, நாடுகளுக்கிடையே போர் என்பதே இருக்காது,.அகராதியிலிருந்து அந்த (deleted from the dictionary) வார்த்தை அகற்றப்பட்டு விடும். அனைவரும், தேசம், மொழி. நிறம், மதம் என்ற பாகுபாடு அற்று, அகில உலக ஆன்ம உரிமைச் சகோதரர்களாக (universal brotherhood)- வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்வார்கள். ஆண்டவர்,. அனைவரையும் ஒரு சேர ஏறா நிலைமேல் ஏற்றுவது திண்ணம்.
வள்ளற் பெருமான். சொன்ன கருத்து
நான் இதுவரை சொல்லியதை நீங்கள் ஒருவரும் கேட்கவில்லை. ருஷ்யாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் இதே கருத்தைச் சொல்வதற்கு அன்பர்கள் வரும்போது இதனை நம்புவீர்கள் போலும் எனச் சொல்லிச் சென்றார்.
இது சுத்த சன்மார்க்கம் விளங்கும் காலம். பெருமானார் சொன்ன வார்த்தைகள் பலிதமாகி வருகின்றன .. என்பதற்கு இதெல்லாம் ஒரு சான்று ஆகும்.
KUMARESAN KRISHNAMURTHY
சாதி மதம் கடந்து வள்ளலார் அனைவராலும் போற்றப்படுகிறார். ஒரு சிலர் வெகுசனம்(கிறித்துவம்) தழுவினார் என்றும், வாழையடி வாழை என்றால் சைவம் தான் என்றும், பேருபதேசத்தில் சைவம் , வைணவம் இலட்சியம் வேண்டாம் என்றார் என்றும் பல விதமாக திரும்பவும் மதத்தை இழுத்து ஒரு குறுகிய வட்டத்தில் தன்னை சிக்க வைத்துக்கொள்கின்றனர்.
வள்ளலார் கூறுகிற இறை உண்மையை புரியாமல் மதத்தின் மேலேயே நம்பிக்கை வைத்து கிடைப்பதற்கு அரிய இந்த மனிதப்பிறவியின் பொன்னான காலத்தை உண்மை அறியாது விரயம் செய்கின்றவர்களின் குறுகிய கண்களை இந்த நிகழ்ச்சி திறக்கும்
மேலும்,இந்த கட்டுரை நான் கடையை மூடவில்லை , உலகம் முழுவதும் திறந்து வைத்திருக்கிறேன் என்பதை மிக தெளிவாக கூறுகிறது.
Wednesday, February 4, 2009 at 20:14 pm by KUMARESAN KRISHNAMURTHY