DAEIOU - தயவு
கடை விரித்தோம் - கொண்டார்கள்-சென்னையில் புத்தக கண்காட்சி.

கடை விரித்தோம் .. அன்பர்கள் கட்டிச் சென்றார்கள்.
சன்மார்க்க நெறியில் உள்ள பல சன்மார்க்க அன்பர்கள், வள்ளல் பெருமான் காலத்தில், அவர்கள் சுத்த சன்மார்க்க நெறியினை போதித்தும் ஒருவரும் கடைப்பிடிக்கவில்லை என்பது குறித்து பெருமான் “கடைவிரித்தேன் கொள்வாரில்லை – கட்டி விட்டேன்” என மிகவும் வருத்தப் பட்டு சொன்னதாகக் கூறுகின்றனர்.
ஆனால், அப்படிச் சொன்னதாக, வள்ளல் பெருமான் இயற்றி அருளிய எந்த நூலிலும் அது தென்படவில்லை.
அது ஒருபுறமிக்க, தூத்துக்குடி மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு கலியுக வரதன் அவர்கள் மற்றும் அவருடன் சேர்ந்த அன்பர்கள் திரு கணேசன் முதலானோர், கடந்த 1.8.2008 முதல் 3.8.2008 வரை 3 நாட்கள் பாபநாசத்தில் சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் நடத்தினர்.
அப்போது, 2009ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற விருக்கும் புத்தகக் கண்காட்சியில், திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் பாடிவைத்த திரு அருட்பாக்கள், உபதேசங்கள், திரு அருட்பா ஆடியோ சி.டி.கள், மற்றும், திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள் இயற்றிய தயவு நூல்கள் திரு அருட்பா விரிவுரை விளக்க நூல்கள் ஆகியவற்றை விற்பதற்கென்றே தனியே சென்னையில் நடைபெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் ஒரு ஸ்டால் ஏற்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என்பதை, அன்பர்கள் மத்தியில் அந்தக் கூட்டத்திலேயே அறிவித்தார்கள்.
அதே போன்று தென்னிந்திய புத்தக வெளியீட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு, ஸ்டால் போடுவதற்குரிய தொகையினைக் கட்டி ஒரு ஸ்டால் வைக்க முன் கூட்டியே அனுமதி பெற்றனர்.
2009ஆம் ஆண்டில் 8.1.2009 முதல் 18.1.2009 வரை புத்தகக் கண்காட்சி வைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
திரு அருட்பா 6 திருமுறைகள், உரைநடைப் பகுதி, திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் மற்றும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் இயற்றி அருளிய தயவு நூல்கள் முதலானவை, சென்னைக்கு 7.1.2009ந் தேதி, மதுரை அருள் ட்ரஸ்ட் நிறுவனர் திரு முரளீதரன் மற்றும் மேட்டுக் குப்பம் திரு சேதுராமன் ஆகியவர்களால் எடுத்துச் செல்லப்பட்டன.
சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வசித்து வரும் தயவு கோசலராமன் என்ற சன்மார்க்க அன்பர், புத்தகக் கண்காட்சியில், இந்த அன்பர்கள் சிரமமின்றி, ஸ்டால் போடுவதற்குரிய பல உதவிகளைச் செய்தனர்.
ஆயிற்று......... 8.1.2009 அன்று மாலை புத்தகக் கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது. ஸ்டால் எண்.273ல் அன்பர் திரு முரளீதரன் தலைமையில், புத்தக விற்பனை துவங்கியது.
சென்னை வில்லி வாக்கத்தைச் சேர்ந்த அன்பர் பால கிருஷ்ணன் (working in ICF, Chennai) தாமே முன் வந்து, புத்தக ஸ்டாலில் பணிபுரிய வந்தார். அவர், புத்தகங்கள் விற்பனை செய்ததற்குரிய தொகையினை, பில் போட்டு வசூல் செய்யும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
அதே போல், சென்னையை அடுத்த பம்மலில் தங்கி, சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் கோர்ஸில் பயின்று வரும் திரு நாகராஜன் என்ற அன்பர் வந்து ஆரம்பம் முதலே கலந்து கொண்டு, விற்பனை முதலான உதவிகளைச் செய்து வந்தார். அவர் 18.1.2009ந் தேதி வரை தமது தொண்டினைத் தொடர்ந்தார்.
13.1.2009 முதல் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு T.R. ஜவஹர்லால் அவர்கள் சென்னைக்குச் சென்று புத்தக ஸ்டாலில் புத்தக விற்பனைக்கு தக்க உதவிகளை அங்கேயே தங்கி இருந்து செய்தார்.
15.1.2009 முதல் மதுரை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ஏ. ராமானுஜம், சென்னைக்கு வந்து மேற்காணும் அன்பர்களுடன் கலந்து 18.1.2009 வரை புத்தக ஸ்டால் விற்பனைக்கு உதவி புரிந்தார்.
18.1.2009 அன்று வள்ளலார்ஸ்பேஸ் அன்பர் திரு சதீஷ் குமார் லேப் டாப் சகிதம் வந்து, வள்ளல் பெருமானை லேப் டாப்பில் காண்பித்து, அத்துடன் திரு அருட்பா சி.டி. இசையினை அந்த புத்தக ஸ்டாலுக்கு வரும் அன்பர்கள் நன்றாகக் கேட்கும் வண்ணம், பாட விட்டார். வந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தப் பாடல்களை லேப் டாப் மூலம் கேட்டனர்.
முக்கிய நபர்களாக அங்கு வருகை புரிந்தவர்கள்.
திரு சுப்புராமன்,. பன்னாட்டு வள்ளலார் சன்மார்க்க சங்கத் தலைவர், சென்னை.
திரு கே.ஆர். என்ற கோதண்டராமையா, பன்னாட்டு வள்ளலார் சன்மார்க்க சங்கத் துணைத் தலைவர்.
கவிக்கோ திரு அப்துல் ரஹ்மான். சென்னை.
திரு சத்திய மூர்த்தி, வள்ளலார் வருகை பத்திரிகை ஆசிரியர், திருமுல்லை வாயில், சென்னை.
திரு சரவணன், ஆசிரியர் மற்றும் அருட்பா மருட்பா புத்தகம் எழுதிய அன்பர், அயனாவரம் பள்ளி, சென்னை.
தவத்திரு ஊரன் அடிகள், வடலூர்.
திரு யுகேஷ் குமார், நிறுவனர், வள்ளலார் மாணவர் பள்ளி, மதனந்தபுரம். மற்றும் அன்னதான பணி பழவேற்காடு சன்மார்க்க சங்கம், சென்னை.
சேலம் திரு குப்புசாமி, சன்மார்க்க அன்பர்
கவிஞர் திரு மு. வலவன்.
திரு ஜெகநாதன், பாடிய நல்லூர் மற்றும் அவருடன் 2 அன்பர்கள்.
பல்வேறு சன்மார்க்க அன்பர்கள், திரு அருட்பா திருமறைகள் மற்றும் அது சார்ந்த புத்தகங்கள், ஆடியோ சி.டி.கள் விற்பனைக்கென்றே ஒரு தனி ஸ்டால் இந்த முறை வைக்கப்பட்டதும், மிகவும் களிப்படைந்தனர்.
அதன் பின் விளைவாக, தாம் சார்ந்திருக்கும் சன்மார்க்க சங்கங்களுக்கு என, திரு அருட்பாக்கள் (6 திரு முறைகளும்) போட்டோக்கள், ஆடியோ சி.டி.கள், மகா மந்திரம் ஒலிக்கும் கருவி, ஸ்டிக்கர்கள் என அனைத்தையும் வாங்கிச் சென்றனர்.
ஒரு சில பள்ளிகளிலும் இருந்து குழந்தைகளுக்கு பரிசாக வழங்குவதற்கென, திரு அருட்பா பாராயண அகவல் மற்றும் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி சார்ந்த நூல்கள், திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகளின் தயவு நெறி நூல்கள் முதலானவைப் பெற்றுச் சென்றனர்.
தனி நபர்களுக்கும் சன்மார்க்க சங்கங்களுக்கும், ஏற்கனவே வைத்திருந்த திரு அருட்பா கிழிந்து விட்டது, புதிய திரு அருட்பா வேண்டும் எனவும் வாங்கிச் சென்றனர். இந்த வாய்ப்பு, அவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். .
ஒரு புள்ளி விவரம் எடுக்க வேண்டும் என்ற முறையில். இந்த ஸ்டாலுக்கு வருகை புரிந்த அன்பர்களின் பெயர், விலாசம் தெரிவிக்கும்படி அனைத்து அன்பர்களைக் கேட்டு, அதற்கென ஒரு நோட்டுப் புத்தகம் துவக்கி, அவர்களது, கையெழுத்துடன் விலாசம் குறிக்கப்பட்டது.
மேற்கண்ட ஸ்டாலை பார்வையிட்டவர்கள் சுமார் 700 பேர் இருக்கலாம் என்றால், அவர்களில் 600 பேர்கள் திரு அருட்பா புத்தகங்கள், தயவு புத்தகங்கள், மற்றும் திரு அருட்பா ஆடியோ சி.டி. சேலம் திரு குப்புச்சாமி அவர்களின் பேச்சு அடங்கிய ஆடியோ சி.டி.என ஏதாவதொன்றினை வாங்கிச் சென்றனர்.
இந்த ஸ்டால் 18.1.2009 – டன் முடிவடைந்து விட்ட பின்னர், இதுபோன்று திரு அருட்பா மற்றும் தயவு நூல்களை, சென்னையில் எங்கு வாங்கலாம் என்று கேட்காத அன்பர்கள் இல்லை.
ஸ்டாலைப் பார்வையிட்டு புத்தகங்கள் வாங்கிச் சென்ற அன்பர்கள் அனைவரையும், வரும் 8.2.2009 (ஞாயிறு) வடலூரில் நடைபெறும் தைப் பூச நாள் விசேஷத்தில் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதியினை தரிசனம் செய்து வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியில் வாழ்க்கையினை நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
தங்குவதற்கு இடம் கேட்டவர்களுக்கு, தூத்துக்குடி சன்மார்க்க சங்கம் அருகே பள்ளிக் கூடத்தில் தங்குவதற்கு இடம் ஒதுக்கித் தருவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என அன்பர் திரு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களிலிருந்து விற்பனைக்காகப் பெற்றுச் செல்லப்பட்ட எல்லா திரு அருட்பா திருமுறைகளும் உரை நடைப் பகுதியும், 17.1.2009 அன்றே விற்றுத் தீர்ந்தன.
திரு அருட்பா 6-ந் திரு முறை கலைஞன் பதிப்பகம் மற்றும் 1 முதல் 6 திருமுறைகள் – ஆ.பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு (Reprint) ஸ்டாலில் விற்பனைக்குக் கிடைத்தன.
இலங்கை, பிரான்ஸ், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து அன்பர்கள் வந்திருந்த அன்பர்கள், இந்த ஸ்டாலுக்கு வருகை புரிந்து, திரு அருட்பா மற்றும் தயவு நெறி நூல்களைப் பெற்றுச் சென்றனர்.
8.1.2009 முதல் 18.1.2009ந் தேதி முடிய இந்தப் புத்தகக் கண்காட்சி மிகச் சிறப்புற நடந்தேறியது. அதிலும். ஸ்டால் நிர்.273 மிகச் சிறப்பாக நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இணைய தளத்தில், பல் வேறு நாட்களில், முன் கூட்டித் தகவல் தந்துங்கூட, இந்த அருமையான சன்மார்க்கப் பணியில், சென்னையிலிருந்தும், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலிருந்தும் எந்த ஒரு அன்பரும் ஸ்டாலில் பணி புரிவதற்கு வரவேயில்லை என்பது ஒரு வருந்தத்தக்க செய்தியாகும்.
மொத்தத்தில், திரு அருட்பாவிற்கெனக் கடை விரித்ததில், அனைவரும் – திரு அருட்பாவினைப் பெற்றுக் கொண்டனர் – உள மகிழ்வில் ஆனந்தம் கொண்டனர் – சுத்த சன்மார்க்க நெறி நின்றனர் - என்றுதான் சொல்ல வேண்டும்.