DAEIOU - தயவு
4.1.2009 மதுரை சம்மாட்டிபுரத்தில் சன்மார்க்க சங்க கூட்டம்.

4.1.2009 மதுரை சம்மாட்டிபுரத்தில் சன்மார்க்க சங்க கூட்டம்.
மதுரை காளவாசலை அடுத்து சம்மாட்டி புரம் அமைந்துள்ளது. அங்கு திரு கண்ணப்பன் மற்றும் அவரது மனைவியார் ஆகியோர், பிரதி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் சன்மார்க்க சத் சங்கம், திரு அருட்பா பாராயணம் போன்றவை நடத்தி, திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளைப் பலரும் அறியச் செய்வது முதலான நிகழ்ச்சிகளை நடத்தி சன்மார்க்கம் பரவ பெரிதும் துணை புரிந்து வருகின்றனர்.
அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அவர் நடத்தும் மாதாந்திர கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.
அந்த வகையில், இன்று 4.1.2009 ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணி அளவில் சம்மாட்டிபுரத்தில் திரு கண்ணப்பன் அவர்களின் இல்லத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் முன்னிலையில் சன்மார்க்க அன்பர்களும், சம்மாட்டிபுரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் இருந்து பல அன்பர்களும் கூடினர்.
முதலில் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் ஓதி அதன் பின்னர் திருவடிப் புகழ்ச்சியினை, ஊமச்சிகுளம் சன்மார்க்க அன்பர் திரு சந்திர மோஹன் அவர்கள் துவங்கி வவக்க அன்பர்கள் அனைவரும் பாடினர். அதன் பின்னர் அருட்பெருஞ் ஜோதி அகவலும் அட்டகமும் பாடி முடிக்கப்பட்டது.
அன்பர்கள் அனைவரும் அவரவர்கள் தேர்ந்தெடுத்த திரு அருட்பா பாடல்களைப் பாடிப் பரவினர். இந்த நிகழ்ச்சிகளால், அந்த (Sammattipuram area)பகுதி முழுவதுமே சன்மார்க்க மணம் கமழ்ந்தது.
செல்லூர் ரயில்வே காலனியிலிருந்து செல்வி லலிதா மணி அவர்களின் தாயார் வருகை புரிந்தார் அவருடன் - செல்லூர் வந்து - செல்வி லலிதா மணியின் தலைமையில் சன்மார்க்கம் பயிலும் மாணவர்கள் - சுமார் 10 பேர் வருகை புரிந்தனர். அவர்களும் திரு அருட்பா பாடல்களை மிகுந்த மனம் உருக்கத்துடன் பாடினர்.
மதுரை நாராயணபுரம் தயவு அன்பர் ராமானுஜம், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியின் உயர்வினையும், அதனை அன்பர்கள் தவறாமல் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார்.
நாராயண புரத்தில் திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் 11 வரை மிகச் சொற்ப விலையில் கிடைப்பதையும், அதேபோன்று திரு அருட்பா புத்தகங்கள், தயவு நூல்கள், திரு அருட்பாவிற்கு, திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள் எழுதிய உரை நூல்களும், நாராயணபுரம் டோர் நில்.2/244-1ல் அமைந்த VallalarOrg Foundation-ல் கிடைக்கும் விபரத்தை அனைவரும் அறியத் தெரிவித்தார்.
தேவைப்படும் அன்பர்கள், புத்தகங்களையோ அல்லது திரு அருட்பா ஆடியோ சி.டி.களையோ அங்கு பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். இது குறித்து, அனைத்து மாவட்ட சன்மார்க்க அன்பர்களுக்கும் கடிதம் மூலம் நேரடியாகவும், www.vallalarspace.com இணைய தளத்தின் மூலமும் தகவல்கள் அனைத்தும் அனைத்து அன்பர்களுக்கும், மற்றும் பல்வேறு நாடுகளில் வாழும் சன்மார்க்க அன்பர்கள் பார்க்கும் வண்ணம் செய்திகள் மேற்படி இணைய தளத்தின் மூலம் செல்கின்றன என்பதையும் அங்கு அவர் தெரிவித்தார்.
நாராயணபுரத்தில் வள்ளலார்ஆர்க் பெளண்டேஷன் (VallalarOrg Foundation) தனது நிறுவனத்தின் மூலம் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரவும் விதத்தில், வாராந்திர வழிபாடு முதலானவற்றைத் துவங்கியுள்ளதையும் இனிமேல் இங்கு உள்ள அன்பர்களும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் வந்து கலந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். இது குறித்த Flex banner ஐ அவர் கூட்டம் நடைபெற்ற கட்டிடத்தில் கட்டியிருந்தார். அன்பர்கள் அனைவ்ரும் (Functioning of VallalarOrg Foundation at Narayanapuram, Madurai) இது குறித்து அறிந்து கொள்ள அது துணை புரிந்தது.
கடந்த 31.12.2008 அன்று அங்கு நடைபெற்ற கூட்டத்தில், திரு அருட்பா ரெங்கநாதன். திண்டுக்கல் விஸ்வநாதன்,. மதுரை செளராஷ்டிரா பள்ளி ஆசிரியர் சந்திர சேகரன், அருள் அறக்கட்டளை நிறுவனர் திரு முரளீதரன், திரு APJ அருள், வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியதையும் அவர் அனைவருக்கும் தெரிவித்தார்.
மதுரை சன் டி.வி. ஆபீஸிற்கு வடக்கே திரு APJ அருள் அவர்கள், கருணை-சாலை-சபை கட்டி வருவதையும் வரவிருக்கும் 30.1.2009 அன்று அந்த சபை துவக்குவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருவதையும் அவர் கூறினார். அதற்கு வள்ளல் பெருமான் உறுதுணை புரிய வேண்டும் என அனைத்து அன்பர்களும் வேண்டிக் கொள்ளும் படியும் அவர் கேட்டுக் கொண்டார். அவ் வழக்குரைஞர், உயர்நீதி மன்ற மதுரை பெஞ்ச் மூலம் சன்மார்க்க அன்பர்களின் நெடு நாள் கோரிக்கைகள், வள்ளல் பெருமானின் அருட் பெருங்கருணையாலும் நிறைவேறி வருவதை அந்தக் கூட்டத்தில் பங்கேற்றபோது தெரிவித்தையும் அவர் கூறினார்.
அதேபோல் தமது சகோதரியார், திருமதி வள்ளி W/O ஜெயராம், மானாமதுரை வட்டத்தில் மூங்கில் கிணறு என்ற கிராமத்தில் ஞான சபை கட்டி வருவதையும் அவர் தெரிவித்தார்.
மேலும் வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர் என்ற ஊரில், திரு P. விஜயன் என்ற சன்மார்க்க அன்பர், வள்ளலாரின் ஞான சபை கட்டி வருவதையும், வரும் 1..2.2009 அன்று அச் சபை திறப்பு விழா காண இருப்பதையும் அனைவ்ருக்கும் தெரிவித்தார். விருப்பப் பட்ட அன்பர்கள் அந்த நிகழ்ச்சியில் எல்லாம் பங்கு பெறலாம் எனவும் அவ்ர் கேட்டுக் கொண்டார்.
வள்ளலாரைப் பற்றியும், திரு அருட்பா பாடல்கள் மற்றும் உபதேசப் பகுதிகள் எல்லாம், www.vallalar.org யில் உள்ளதையும், தேவைப்படும் அன்பர்கள், இலவசமாக download செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
அதைத் தவிர மற்றொரு இணைய தளமான www.vallalarspace.com-ல் சமீபத்திய நிகழ்வுகள் அனைத்தும் இடம் பெற்று வருவதையும் கூறி, அன்பர்களில் கணினி வசதி உள்ள்வர்கள், மேற்காணும் இணைய தளங்களைக் கண்டிப்பாகக் காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்..
சென்னையில், பல கான சபாக்கள் இருந்தும், இந்த இசை விழா சீசனில், யாரும் திரு அருட்பாவிற்கென இசை விழா எடுக்காத நிலையில், திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள். 2008 டிசம்பர் மாதம் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள், திரு அருட்பாவிற்கென இசை விழா எடுத்து அந்த இசை விழாவில், (பிரபல இசை அமைப்பாளர் (Late) T.R.பாப்பா அவர்கள் இசை அமைத்து - திரு ஆத்மநாதனே, பாடி) வெளி வந்த 25 திரு அருட்பா பாடல்கள் அடங்கிய ஆடியோ சி.டி. வெளியிடப்பட்டது பற்றிய செய்தியையும் அவ்ர் தெரிவித்தார்.
அந்த இசை விழாவில், நாட்டியாலயாவில் பயின்ற மாணவியர் 15 பேர்கள் திரு அருட்பாவிற்கு சுமார் 13 பாடல்களுக்கு நாட்டிய நிகழ்ச்சி நடத்தி, சிவபெருமானையும், வள்ளல் பெருமானையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியதையும் அவர் விவரித்தார்.
அடுத்ததாக, வள்ளல் பெருமான் சத்திய தருமச்சாலையில் அணையா அடுப்பினை ஏற்றி வைத்து, ஏழைகளின் பசிப் பிணியினை நீக்குவதற்குச் செய்து வைத்த ஏற்பாட்டினை மாற்றி, ஸ்டீமர் மூலம் உணவு சமைப்பதற்கு முயற்சி செய்வதாக மலேசியா அன்பர் ஒருவர் இணைய தளத்தில் செய்தி கொடுத்திருப்பதையும், அதன் பேரில் தமது ஏற்புக் கருத்துக்களையோ அன்றி ஆட்சேபணைகளையோ, வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என அவர் வந்திருந்த அன்பர்களைக் கேட்டுக் கொண்டார்.
வரவிருக்கும் 10.1.2009 அன்று சனிக்கிழமை, மதுரை ரிசர்வ் லயனை அடுத்து அமைந்துள்ள ஷ்ரீ ராமகிருஷ்ண மடத்தில்,. திரு அருட்பிரகாச வள்ளலார் குறித்து மாலை 5.45 மணி அளவில் முனைவர் ஜோதி ராமகிருஷ்ணா அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்துவதையும் தெரிவித்தார். விருப்பமுள்ள அன்பர்கள் அங்கு கலந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார்.
அதே போன்று, மதுரையில் 20.12.2008 மற்றும் 21.12.2008 ஆகிய நாட்களில், தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள ஷ்ரீ நடன கோபால நாயகி மந்திரில் நடைபெற்ற மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கக் கூட்டமைப்புக்களின் பயிற்சி முகாமினைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். யானை, குதிரை முதலானவை, சைவம் பரப்பும் பிராணிகளாக அந்த
ஊர்வலத்தில் மதுரையில் நான்கு மாசி வீதிகளையும் சுற்றி வந்ததை அவர் குறிப்பிட்டார். அதன் மூலம், பள்ளிக் குழந்தைகள், பல நபர்கள், வள்ளலாரையும், வள்ளல் பெருமானின் கொள்கைகளையும் அவர் போதித்த கொல்லா நெறியினையும் தெரிந்து கொண்டதையும் அவர் அங்கு அனைவருக்கும் கூறினார். இவ்விதம் சன்மார்க்கப் பெருவிழாவினை ஏற்பாடு செய்து மதுரை மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் சன்மார்க்க நெறி பரப்பிய மாவட்டத் தலைவர் திரு T.R. ஜவஹர்லாலுக்கு அவர் நன்றி கூறினார்.
இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த அன்பர்கள் அனைவரும் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை கடைப்பிடிக்கும் படியும், இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த திரு கண்ணப்பன் அவர்களுக்கும் அவர்களது துணைவியாருக்கும் அவர் நன்றி கூறினார்.
அங்கு வருகை தந்த அருள் டிரஸ்ட் நிறுவனர் திரு முரளீதரன், இந்த மாதம் மார்கழி ஆகும். Ozon படலத்திலிருந்து நல்ல காற்று அதிகாலை நேரத்தில் உலகத்தைச் சுற்றி வருவதால், எல்லோரும் அதி காலை எழுந்து திரு அருட்பிரகாச வள்ளலார் பாடி வைத்த திருப்பள்ளி எழுச்சி 10 பாடல்களையும் பாடி பயிற்சி செய்ய வேண்டும் எனவும், அதன் பின்னர், - வரப்போகும் தை மாதப் பூச விழாவிற்கு, இவ்விதமான வேண்டுகை பெரிதும் துணை புரியும் எனவும் குறிப்பிட்டார்.
மற்ற எல்லா ஞானிகளும் பாடியதைப்போல அல்லாமல், திருப்பள்ளி எழுச்சிய�%