சென்னை பாடிய நல்லூர் சன்மார்க்க சங்கம்.
Ramanujam
posted 38 months ago
14 Nov 2008 06:17:39 GMT 6:17:39 AM
1426 views
பாடிய நல்லூர் சமரச சன்மார்க்க சத்திய சங்கம்,
சென்னை.52.
சிறப்புக்கள்
சென்னையின் பல்வேறு இடங்களில் சன்மார்க்க சங்கங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், பொன்னேரி செல்லும் வழியில் சுமார் 18 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது பாடிய நல்லூர் சன்மார்க்க சங்கம். இதன் தலைவர் திருமதி புனித வல்லி அம்மையார். செயலாளர் திரு ஜெயராமன். பொருளாளர் திரு ஜெகநாதன்.

1981ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட சத்திய ஞான சபை இங்கு உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில், இச் சங்கம் அமைந்துள்ளது. காம்பவுண்டுடன் கூடிய பாதுகாப்பு உள்ளது. தருமச் சாலை சங்கம், முதியோர் இல்லம் என தனித்தனி கட்டிடங்கள், இங்கு உள்ளன.
அருகில் முருகன் ஆலயம், பர்மா புத்தர் ஆலயம் முதலானவை என்பன பல இயங்கி வந்தாலும், பாடிய நல்லூர் சன்மார்க்க சங்கம் தனது முத்திரையினை பதித்து சிறப்புற விளங்கி வருகிறது. இச் சங்கத்தின் அங்கத்தினர்களாக இளைஞர்கள் பலர் (சுமார் 40 பேர்) உள்ளனர். சிறப்பான செயல்களை இவர்கள் இத் தலைமுறையில் செய்து வருகின்றனர்.
வள்ளல் பெருமானின் கருத்துக்களை எடுத்துக் கொண்டு சத் விசாரம் செய்து, உண்மை நெறியினை தெரிவதில் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
தினசரி மதியம் ஏழை எளிய மக்களுக்குப் பசியாற்றுவித்தல் பணி இங்கு நடைபெறுகிறது. மாதந் தோறும் பூச நாட்களில், மூத்த சன்மார்க்க சான்றோரின் சொற்பொழிவினை ஏற்பாடு செய்து, அனைவரும் கேட்டு, சுத்த சன்மார்க்க நெறியினைத் தீவிரமாக கடைப்பிடிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
மூத்த சன்மார்க்கச் சான்றோர் யாரும் இறந்தால், அவர்களது மனைவியிடம் இருந்து தாலியை வாங்க வேண்டியதில்லை என்ற கொள்கையைச் செயலாற்றி வருகின்றனர். வள்ளல் பெருமான் கணவன் இறந்தால், மனைவியின் தாலியை வாங்க வேண்டியதில்லை என்ற அடிப்படையில், இதனைச் செய்து ஒரு புரட்சி செய்து வருகின்றனர். முதலில் இளைஞர்களின் கருத்துக்களுக்கு ஆட்சேபம் செய்த சிலர், அவர்கள் வள்ளல் நெறியில் தீவிரமாக இருப்பதைப் பார்த்து, அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து பர்மா காலனி உள்ளது. (Indo Burma Buddha Temple) பர்மா புத்தர் ஆலயம் என்ற ஒன்றும் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதில் புத்தர் பிரானின் பெரிய சிலையும் உள்ளது. தியான நிலையம் உள்ளது. அருகே ஒரு சிறார் பள்ளியும் உள்ளது.
அங்கு இருந்த பர்மா இளந்துறவி (வயது சுமார் 18) ஒருவர் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, இந்த பாடிய நல்லூர் சன்மார்க்க சங்கத்துடன் இணைந்து, வெள்ளாடை உடுத்தி பல பணிகளை இந்தச் சங்கத்தில் செய்து வருகிறார். மதியம் அன்னதானத்திற்கு உரிய பணிகளை மற்ற அன்பர்களுடன் இணைந்து, இவர் மனமுவந்து செய்கின்றார். அருகில் தான் சார்ந்த புத்த மத ஆலயம் இருந்தும் இங்கு வந்து வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியில் ஈடுபட்டிருப்பது ஒரு சிறப்பு அம்சம்.
For more photos : http://www.vallalarspace.com/Ramanujam/Album/526