<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

கூட்ட நடவடிக்கைகள்

Ramanujam
posted 44 months ago
12 May 2008 04:05:36 GMT 4:05:36 AM

1449 views


அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம்,

மலையடிவாரம்,


திண்டுக்கல்

மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவு.


76- வது நிகழ்வு.


நாள் – 4.5.2008 ஞாயிற்றுக் கிழமை


 

         திண்டுக்கல் நகரில் மலையடிவாரத்தில் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகள் ஆலயம் 1938ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இவ் ஆலயத்தின் அன்றைய நிர்வாகிகளான திரு க.வடிவேல். திரு பழனிவேல் ஆகியோர் 1938ம் ஆண்டில் திண்டுக்கல் தவத்திரு சத்திய ஞான சபாபதி சுவாமி அவர்களிடம் அருளாசி பெற்று சன்மார்க்க சங்கத்தினைத் துவக்கினர்.

            இச் சங்கம் 1948ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்டது. 10.02.1957ந் தேதியன்று சத்திய ஞான சபை குட முழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் “திருவடித் தாமரை” என்ற நூலினை இவ் விழாவின்போது வெளியிட்டுள்ளார்கள். கடந்த 1998ம் ஆண்டு இச் சங்கம், பொன்விழாக் கண்டது.

          பல சன்மார்க்க அன்பர்களின் உதவியுடன், சத்திய ஞான சபையும், சத்திய தருமச் சாலையும், சாலைக்கிணறு முதலான அமைப்புகளுடன் கட்டப்பட்டு, திண்டுக்கல் மலையடிவாரத்தில் இயற்கை எழிலுடன், இச் சங்கம் இயங்கி வருவது இதன் சிறப்பு. ஆன்மீக நாட்டங் கொண்டோற்கு இச் சங்கம் அமைந்துள்ள தனிமையான இடம் ஒரு வரப்பிரசாதமாகும். இச் சங்கத்திற்கு தயவுத்திரு சுத்தானந்த பாரதியார், தயாநிதி சரவணானந்த சுவாமிகள், தயவுத்திரு முத்துராமலிங்கத் தேவர் பெருமகனார், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆகியோர் பல்வேறு கால கட்டங்களில் இங்கு வந்து சன்மார்க்க அருளுரையினை நிகழ்த்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் எண்ணற்ற சங்கங்கள் இயங்கி வந்தாலும், அவற்றிற்கெல்லாம் மூத்த ஒரு சங்கமாக இயற்கை எழில் சூழ்ந்த ஓர் இடத்தில் இந்தச் சங்கம் அமைந்துள்ளது.  வள்ளல் பெருமானாரின் சீரிய கொள்கைகளான உயிரிரக்கம், ஏழைகளுக்கு தினசரி மூலிகைக் கஞ்சி வழங்கி பசியாற்றுவித்தல் முதலான பணிகளை பல ஆண்டுகளாக இச் சங்கம் தலையாய பணியாகக் கொண்டு செயலாற்றிவருகிறது. சமீபத்தில் இச் சங்கம், புதுப்பிக்கப்பட்டு, பொலிவுடன் திகழ்கிறது.

            இதன் தற்போதைய நிர்வாகிகளாக திண்டுக்கல் தயவுத்திரு S.S. கிருஷ்ணமூர்த்தி அவர்களும், திண்டுக்கல் தயவுத்திரு மேடா நித்தியானந்தம் அவர்களும் செயற்குழு உறுப்பினராக திண்டுக்கல் தயவுத்திரு விஸ்வநாதன் அவர்களும் மற்றும் பல உறுப்பினர்களும் இணைந்து இச் சங்கத்தினை திறம்பட நடத்தி வருகின்றனர். பிரதி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில்,  சிறப்புக் கூட்டங்களை நடத்தி, வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும், சரவணானந்த சுவாமி அவர்களின் தயவுக் கொள்கைகளையும் தக்க சன்மார்க்க சான்றோரின் துணையோடு இச் சங்கம் பரப்பி வருகிறது.

அந்த வகையில் 2008ஆம் ஆண்டின் மே மாதத்திற்கான கூட்டம்  4.5.2008 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது. அன்று முற்பகல் 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சத்விசாரம் நடைபெற்றது.  இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினரான தயவுத்திரு “உயிர் உறவு” சங்கரையா அவர்கள், குழுமியிருந்த அன்பர்களின் ஐயப்பாடுகளுக்கு வள்ளற் பெருமானின் கருத்துக்களை அடியொற்றி,  சன்மார்க்க விளக்கங்களை அளித்தார். அறிவு விளக்கம் பெற்ற சன்மார்க்க அன்பர்கள் தமது வாழ்க்கையில் வள்ளல் பெருமானாரின் கொள்கைகளைத் தீவிரமாகவும், எவ்வித ஐயப்பாட்டிற்கு இடமின்றியும் கடைப்பிடிப்பிடிப்பதற்கு, இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. பின்னர் அன்னதான நிகழ்வு நடைபெற்றது.

மாலையில், 6.30 மணியளவில் சன்மார்க்கச் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி துவங்கியது.

தலைமையேற்றுப் பேசிய திண்டுக்கல் அன்பர் தயவுத்திரு துரை சந்திர மோஹன் (இந்திய கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர், திண்டுக்கல்) தமது வாழ்வில். எவ்வாறு வள்ளற் பெருமானாரிடம், ஈடுபாடு எவ்வாறு ஏற்பட்டது என்பதனை தாம் திண்டுக்கல் நகரில், வாடகைக்கு வீடு பிடித்தபோதே தமக்கு தயவுத்திரு அன்பர் மேடா நித்தியானந்தம் அவர்கள் மூலம் உணர்த்தியதை நினைவு கூர்ந்தார். தாம் உடனே சைவ நெறிக்கு வந்து புலால் மறுத்ததையும் சுத்த சன்மார்க்கத்தை வாழ்வில் கடைப்பிடித்ததையும் அவர் தெரிவித்தார். வாழையடி வாழையடி என வந்த திருக்கூட்ட மரபில் வந்த ஏனைய அருளாளர்களிடமிருந்து வள்ளல் பெருமானார் வேறுபட்டு தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டு, பசி தவிர்த்தல் என்னும் புரட்சிக்கு வித்திட்டு அதனை தாமே சத்திய தர்மச்சாலை மூலம் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்ததை சிறப்பாக எடுத்துக் கூறினார். அதே போல் ஏனைய அருளாளர்கள் இயற்றிய பாக்களுக்கும், வள்ளற் பெருமான் இயற்றிய திரு அருட்பாவின் எளிமையும். திரு அருட்பாக்களை ஊன்றிப் படிக்கும்போது உள்ளத்தில் எவ்விதம் ஆழமாக பதிவாகிறது என்பதையும் விவரித்தார். வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகள், தற்போது உலகளாவிய அளவில் பரவி வருவதையும் அதுவே உலகம் தழுவிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்கு (Universal brotherhood)  வழிகோலிக் கொண்டிருக்கிறது என்பதையும் சொல்லி, ஜீவர்கள் அனைவரும் வள்ளல் பெருமானின் கொள்கைகளைத் தமது வாழ்வில் தவறாமல் கடைப்பிடிக்கும்படியும் வலியுறுத்தினார்.

அடுத்ததாக சிறப்புச் சொற்பொழிவினை தயவுத்திரு “உயிர் உறவு” சங்கரையா அவர்கள் நிகழ்த்தினார். தாம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருவதையும், வாழ்வில் அதனை ஒவ்வொருவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் தெளிவு படுத்தினார். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் வள்ளல் பெருமான் உயிர்த்துணையாக தொடர்ந்து கொண்டிருப்பதை விவரித்தார்.

            வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளின் பால் தீவிரமாக ஈர்க்கப்பட்ட   தாம், பெருமானின் வாழ்க்கையினை நாடகமாக வெளிக்கொணர புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முதலாக முயற்சி மேற்கொண்டு பெருமான் சம்புபக்ஷ வாக்கின் மூலம் அவதரித்தது முதல் அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளை, அனைவரும் அறியும் வண்ணம் நாடக வடிவில், புத்தகமாக வெளியிட்டிருப்பதையும் தெரிவித்தார். வள்ளற் பெருமான் பெற்ற பேறு, மனித உயிர்க்குலத்துக்கு ஒரு முன் உதாரணமாகும் என்றும், வள்ளற் பெருமானும், அருட்பெருஞ்ஜோதியும், ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவையாகும் என்றும், அரசியல் தலைவர்களும் வள்ளற் பெருமானின் கொள்கைகளைப் பின்பற்றும் நிகழ்வுகள் கடந்த காலமாக நாளிதழ்களில் செய்திகளாக வெளிவந்து கொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டிப் பேசினார். சுத்த சன்மார்க்கம் துலங்கும் இக் காலத்தில்,  அகிலமனைத்தும் வள்ளற் பெருமானின் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றி, உலக நாடுகள், தமக்குள் சண்டை சச்சரவற்ற அகில உலக சகோதரத்துவத்தை வெகு விரைவில் கொண்டு வருவதற்கான சூழ்நிலலகள் உருவாகியுள்ளதை அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து அன்பர்களும், தத்தமது வாழ்க்கையிலும், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும், சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவுக் கொள்கைகளையும் தவறாமல் கடைப்பிடித்து, இம் மானிடப் பிறப்பின் உண்மையினை நன்கு உணர்ந்து, ஆன்மீக வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும் அவரவர்கள் தம்மால் இயன்ற தயவுச் செயல்களை இடையறாது செய்து கொண்டே இருக்க வேண்டும் எனவும்,  அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

            இக் கூட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர், அருட்பெருஞ்ஜோதி தயவு ட்ரஸ்டின் நிறுவனரும் S.S. கிருஷ்ணமூர்த்தி அவர்களும், செயலாளர் தயவுத்திரு மேடா நித்தியானந்தம் அவர்களும், திண்டுக்கல் நகர் வறுகடலை ஆர். ஷண்முகம் பிள்ளை அண்டு சன்ஸ் மற்றும் ஆர்.எஸ். சந்திர சேகரன் மற்றும் திண்டுக்கல் தயவுத்திரு விஸ்வநாதன் அவர்களும் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் சுமார் 200 பேர்களும் கலந்து கொண்டனர்.

         இறுதியில் நன்றி கூற, கூட்டம் இரவு 9.30 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.

 

 

        
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums
Events & Meetings

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace