<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

திண்டுக்கல் பொன்னகரம் மாத பூச விழா

Ramanujam
posted 43 months ago
12 Jun 2008 00:47:10 GMT 12:47:10 AM

1395 views


அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம், திண்டுக்கல்

 

ஸர்வதாரி ஆண்டு வைகாசி மாதப் பூச விழா.

 


நாள் – 08.06.2008. (ஞாயிற்றுக்கிழமை)

 


        திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். உபதேசப் பகுதியில் வள்ளல் பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டது “தயவு” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை, தயவுப் பெரு நெறி, தயவுக் குறள் -  என்ற பல  பாக்களும், உரை நடை நூல்களும் யாத்துள்ளார்கள். சுவாமி அவர்களுக்கு, மேட்டுக்குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி, அவர்களது இளம் வயதிலேயே கிடைத்துள்ளது.

            அவர்கள் தமது 96 வயதில் சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம்   என்ற   இடத்தில்,   “சுவாமி   சரவணானந்தா   அருட்பெருஞ்ஜோதி   தயவு   இல்லம்” கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

          மாதந் தோறும் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

          இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

            அந்த வகையில், மாதப் பூச நாளினை ஒட்டி, 08.06.2008ந் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த தயவு ஆலயத்தில் வைகாசி மாதப் பூச விழா நடைபெற்றது.

காலை 10.30 மணி – கொடி வணக்கம்.

            திருவருட்பாவில், சிற்சக்தி துதி (கொடி வணக்கம்) 10 பாடல்கள், அன்பர்களால் பாடப்பட்டு, தயவுக் கொடி ஏற்றப் பட்டது. தயவு நூல் அறக்கட்டளை அன்பர் திரு S.R. ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

            அதன் பின்னர், வந்திருந்த அன்பர்கள் அனைவரும், சத்திய ஞான தீபத்தின் முன் அமர்ந்து, திருவருட்பாவில் (1) திருவடிப் புகழ்ச்சி, (2) அருட்பெருஞ்ஜோதி அகவல், (3) அட்டகம் மற்றும் சுவாமி சரவணானந்தா அவர்களின், சற்குரு வாழ்த்துப் பாவினையும் பாடினர்.

            பின்னர், அகில உலக மக்களின் நல்வாழ்வுக்காக, தியானம் நடைபெற்றது.

            திண்டுக்கல், நாகல் நகர், அருட்பெருஞ்ஜோதி அறக் கட்டளை துணைத் தலைவர் திரு S.M. முருகதாஸ் அவர்கள் வள்ளற் பெருமான் அருளிய ‘பேருபதேசம்’ பகுதியைப் படித்து, அன்பர்களுக்கு விளக்கம் அளித்தார்.

            பிறகு, திண்டுக்கல் சுவாமிகளின் அணுக்கத் தொண்டர், தயவுத்திரு விசுவநாதன் அவர்கள், சன்மார்க்கச் சொற்பொழிவு ஆற்றினார்.

            அவர், தனது உரையில், கடந்த 6.4.2008ம் தேதியன்று, தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின், இரண்டாவது மகா குரு பூஜை விழா நடைபெற்றதிலிருந்து, தொடர்ந்து, உயர்ந்த, சிறந்த, சுத்த சன்மார்க்கப் பதி வருகை நூல் வெளிப்பாட்டிற்குத் தக, தயா ஆன்மிக அன்பர்களுக்கான ஊடக அனகப் பதிவுகள், சத் விசார பரோபகாரப் பணிகள் எல்லாமே அகமிருந்து அனகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும், அடுத்த ஆனிமாத பூச விழா 6.7.2008ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

சுவாமிகளின் தயா விளக்க மாலை அந்தாதி முறையில் தொகுக்கப்பட்ட 100 பாடல்களும் அவற்றின் உரையும், தற்போது, www.vallalarspace.com என்ற இணைய தளத்தில் உலகம் முழுவதும் உலா வந்து, சன்மார்க்க அன்பர்களின். உள்ளத்தில், வள்ளல் பெருமானின் தயவுக் கொள்கைகளைப் பரப்பி வருவதை நினைவு கூர்ந்தார்.

அவரது உரையின் முக்கிய கருத்துக்கள் வருமாறு –

            நம் அருட்பெருஞ்ஜோதி அதி அற்புதக் கடவுள் – எல்லாமானவர். எல்லாம் செய வல்லவர். எங்கும் நிறைந்தவர். சாதி சமய மத இனம் மொழி, நிறம், நாடு, தேசம் போன்ற பேதங்களை எல்லாம் கடந்து நிற்பவர். தத்துவம் கடந்தவர். கற்பனை கடந்தவர். காலம் கடந்தவர். அனாதி நித்திய பரம்பொருளானவர்.

            எல்லாவற்றிற்கும் தனிப் பெரும் தலைமை தாங்கி (One Supreme God) நடத்திக் கொண்டிருப்பவர். அகண்ட பெருவெளி முற்றும் நிறைந்த ஆன்மாக்கள் எனும் உயிர்த்திரள்களின் எல்லாம் நிரம்பி, தமது ஐந்தொழிற் காரியப் பாட்டினால், அனைத்து உயிர்களையும்  (ஆன்மாக்களையும்) பக்குவப்படுத்தி, சுத்த சன்மார்க்க நிலைக்கு மேலேற்றிக் கொண்டுள்ளார்.

            இப்படிப்பட்ட உண்மைகளை எல்லாம் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்தை பொருளுணர்ந்து, ஓதி வருவதின் மூலம் பெற்றுக் கொண்டுள்ளோம்.

           திருவருட் பிரகாச வள்ளற் பெருமான் அவர்கள், இந்த சன்மார்க்க உலகிற்கு, அருட்பெருஞ் ஜோதி அகவலை, அருளியுள்ளார். அதேபோல், தயாநிதி சரவணானந்த சுவாமி அவர்களும் இந்த அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு முதன்முதலாக உரை விளக்கம் வழங்கி சன்மார்க்க உலகம் உயர் பயன் அடைய உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

            நம் திருவருட் பிரகாச வள்ளற்பெருமான், அகவலில் தாம் அடைந்த பேறுகளைப் பற்றி,

     “உலகுயிர்த் திரளெல்லாம் ஒளிநெறி பெற்றிட

       இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை” – என்கிறார்.

            அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளற் பெருமானார்க்கு, தமது, ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலையும் வழங்கி விட்டார்.

     மேலும் வள்ளலார், ‘மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்

                                 யாவரும் பெற்றிடா இயல் எனக்களித்தனை – என்கிறார்.

            அதாவது, கன்ம சித்தி, யோக சித்தி, ஞான சித்தி, அட்டமா சித்தி, வாத சித்தி, காய சித்தி என எத்தனையோ சித்திகள் – அவைகளைப் பற்றிய ரகசியங்கள், நன்கு தெளிவித்து விட்டதாம் அந்த அருட்பெருஞ்ஜோதி என்கிறார். ஆனால் வள்ளற் பெருமான் மேற்படி அற்புத சித்திகளிலே நாட்டங் கொள்ளாது – தயவினில், தயவினால், தயவாகவே – அந்த அருட்பெருஞ்ஜோதியையே கண்டு கலந்து ஒன்றி வாழும் சத்திய நிலையையும் பெற்றுக் கொண்டு விட்டார்.

            இந்தப் பேறுதான் மரணமில்லாப் பெருவாழ்வு, அருட்பெருஞ்சித்திப் பேறு, மூவா இன்ப முத்தி தேக சித்தி நிலைப்பேறு. ஞான, பிரணவ, சுத்த “தயவு என்னும் சத்திய நிலை” நித்தியானந்தப் பேறு என்பதாம்.

            இதனால் இப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும். அருட்பிரகாச வள்ளலாரும் இரண்டற்ற ஒன்றாகி, நம் ஒவ்வொருவரின் சிரநடு சித்தி வளர் அகமாம் -  ஆன்மாவில் சத்திய ஞான தீபமாய், சதா ஒளி வீசிக்கொண்டு, அகமிருந்து அனகமாக, நம்மை எல்லாம் சுத்த சன்மார்க்க சுக நிலைக்கு மேலேற்றிக் கொண்டே உள்ளார்.

            சுத்த சன்மார்க்கப் பெரு நெறி – என்பது உலகப் பொது ஒளி நெறியாகும்.

            இந்த நிகழ்ச்சிக்கு, தயவு நூல் அறக்கட்டளை – சின்னாளப்பட்டி தயவுத்திரு எஸ். ராமராஜ் தம்பதிகள், தயவுத்திரு பத்மனாபன் தம்பதிகள், சன்மார்க்கத் தயவுத் தொண்டர் ஷண்முகவேல், தயவுத்திரு பொன்.சங்கரலிங்கம். தயவுத்திரு ஆர்.கோபால், தயவுத்திரு ராம் சங்கர், தயவுத்திரு K.R. கார்த்திக் – பொன்னகரம் மற்றும் மலையடி வார சன்மார்க்கப் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் தொண்டாற்றிவரும் தயவுத்திரு M. இராமலிங்கம் மற்றும் நாகல் நகர், திண்டுக்கல் சன்மார்க்க தயவு அன்பர்கள், தாய்மார்கள், மாணவ, மாணவிகள் ஆக மொத்தம் 150 அன்பர்கள் வருகை புரிந்தனர்.

             பின்னர் அருட்பெருஞ்ஜோதி தயவுப் பிரார்த்தனை அனைத்து அன்பர்களாலும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, ஜோதி வழிபாடு நடைபெற்றது.

            இதன் பின். தயவு அன்பர் திரு வே. அருணகிரி அவர்களால் ‘விண்ணப்பம்’ முன்மொழியப்பட்டு, அனைத்து தயவு அன்பர்களும் இதனை பின்பற்றி மொழிய பிரார்த்தனை நிறைவு செய்யப்பட்டது.

            அடுத்து, திண்டுக்கல் சிவன் காபி ஒர்க்ஸ் தயவுத்திரு P. மோகன் அவர்களின் குடும்பத்தினரால் பசியாற்றும் அன்னதான உபய நிகழ்ச்சி நடைபெற்றது.

            இதனை அடுத்து, சின்னாளப்பட்டி டாக்டர் தயவுத்திரு வி.பி.சண்முகம், அணுக்கத்தொண்டர் தயவு விசுவநாதன் அவர்களின் முன்னிலையில் மதியம் 2.00 மணிக்கு கூடி, சத் சங்கம் 3.30 மணி வரை அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் நடைபெற்றது.

            இறுதியில்,  அனைவருக்கும் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.

 

 

           

                       

 
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums
Events & Meetings

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace