DAEIOU - தயவு

●2/244-1, Thandal Muthu Konar Street, ●Narayanapuram (East), , ●Reserve Lines (Post)
●MADURAI.14,●Tamil Nadu, ●India-625 014

வள்ளலார் ஒரு சமூகப் புரட்சியாளர்-திண்டுக்கல் கூட்டம்

Ramanujam
posted 43 months ago
02 Jul 2008 08:34:53 GMT 8:34:53 AM

2016 views


 

வள்ளலார் ஒரு சமூகப் புரட்சியாளர்.

 

 கலை இலக்கியப் பண்பாட்டுக் குழுக் கூட்டம், திண்டுக்கல்.

 

நாள் 29.6.2008 நேரம் காலை 10.30 மணி

 

இக் கூட்டம். காலை 10.30 மணியளவில் துவக்கப்பட்டது.

 

திரு இரா. விச்சலன்,   கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

 

திரு தா. கிறிஸ்டியான். எம்.ஏ, எம். ஏ, எம்.ஏ, எம்.ஏ, எம்.எஸ்.ஸி, எம்.எட்.,

 

           வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். பொதுவுடைமைக் கொள்கைக்கு வித்திட்டவர், வள்ளலார் என்றார். மதவாத சக்திகள் ஒடுக்கப்படுவதற்கும், ஆன்மநேயமும், சம தர்மமும், தழைக்கவும், சமத்துவ சமுதாயம் உருவாகவும், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தைப் படைக்கவும் வள்ளலார், அரும்பாடு பட்டார் என்றார்.

 

            வள்ளுவர் விட்டுச் சென்ற பணிகளை, வள்ளலார் தொடர்ந்து செய்தார் என்றார். மேலும், தற்போதைய கால கட்டத்தில், எங்கு பார்த்தாலும் சமூத விரோதச் செயல்கள் நடைபெறுவதைச் சுட்டிக்காட்டி, இவற்றைத் தடுப்பதற்கு, வள்ளலாரின் நெறியினை நன்குதெரிந்து கொண்டு, அதனைப் பின்பற்றி நடப்பது ஒன்றே வழி எனவும், இது போன்ற கூட்டங்கள், அரங்கங்களுக்குள் நடைபெறாமல், பொதுமக்கள் கூடும் தெருமுனைகள் தோறும் நடத்தப்பட்டால், வெகு விரைவில், மக்கள் அனைவரையும், எளிதாகவும், விரைவாகவும் சென்றடையும் எனவும், அதன்மூலம், சமூக விரோதச் செயல்கள், நடைபெறுவது, அறவே தடுக்கப்படும் எனவும், தெரிவித்தார்.

 

            கோல்டுரிச் என்ற ஆங்கிலேயர், கவிஞர்களை மிக உயர்ந்தவர்களாகச் சொன்னவர் என்றும், காரணம், கவிஞர்கள், உண்மை, உணர்ச்சி, உயர்வு, கற்பனை போன்றவற்றால் கருத்துக்களைப் பரப்பவல்லவர்கள் என்று கூறியுள்ளதை அவர் நினைவு கூர்ந்தார். இக் கவியரங்கத்தில் கலந்து கொள்ள வந்திருக்கும் கவிஞர்களை அவர் பாராட்டினார்.

 

திரு பேட்ரிக் சகாயநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர்.

 

            பொதுவாக, தமது கட்சியினைச் சார்ந்தவர்கள், சமயம் குறித்துப் பேசுவதில்லை என்ற ஆதங்கம் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளதென்றும், வள்ளலாரைப் பற்றிப் இந்த மன்றத்தில், பேசுவதன் மூலம், அந்தத் தவறான கருத்திற்கு ஒரு முற்றிப் புள்ளி வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

            சென்னை சாந்தோம் சர்ச், பல ஆண்டுகளுக்கு முன்பாக, திரு தாமஸ் என்ற. கிறிஸ்துவ தூதர் கல்லறையின் மேல் கட்டப்பட்டது என்றும், அவர்கள், எடுத்த திருவிழாவின் மையக் கருத்தாக, இந்திய அரசியல் ஒற்றுமை பற்றிப் பேசப்பட்டதை பத்திரிகைகளில் காண்கிறோம் என்றார்.

 

மேலும் திரைப்படத்துறையைச் சார்ந்த நடிகையான நக்மா என்பவர், தற்போது,  கிறிஸ்துவப் பிரச்சாரம் செய்கிறார் என்ற செய்தி 4 நாட்களுக்கு முன் செய்தித் தாட்களில்  வரப்பெற்றதென்றார். பின்னர் அவர் பற்றி,  28.6.2008ந் தேதி வந்த செய்தியில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலுமாவடி என்ற ஊரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு, நாட்டின் அமைதியையும், அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமையையும், தேசிய ஒற்றுமை குறித்தும் பேசி வருகிறார் எனவும் தெரிவித்தார்.

 

இப்படி, தமது நடிப்புத் தொழிலிருந்து,  அவர் மாறுபட்டு,  சமுதாயத்தின் நலனுக்காக குரல் கொடுக்க முன்வந்துள்ளார் என்றார்.

 

கடந்த கால வரலாறுகளையெல்லாம் பார்த்தால், சமூகத்தில் நிலவும் சீர்கேடுகளை மாற்ற நினைப்பவர்கள் அழிக்கப் படும் நிகழ்வுகள் நடைபெறுவதாகக் கூறி, அதற்கு எடுத்துக் காட்டாக, பிரான்ஸில், ஜோன் ஆஃப் ஆர்க் குறித்த செய்தியை அவர் நினைவு கூர்ந்தார்.

 

ஒருசிலர், வள்ளலாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல், அவரை ஒரு மதவாதியாக   முத்திரை குத்த முயற்சிப்பதாகவும் இது முற்றிலும் தவறு எனவும் அவர், தெரிவித்தார்.

 

வள்ளலார் சமூகத்தில் ஒரு மாபெரும் புரட்சியினை உருவாக்கியவர். சமூக மாற்றத்திற்காக அவரது சீரிய கொள்கைகள் பயன்பாடுள்ளவை என்றார். அவர் ஏழை பங்காளராக விளங்கியவர்.

 

தமது கொள்கை கோட்பாடுகளால், சமூக மாற்றத்திற்கு அடையாளமாக விளங்கியவர்.

அவர் ஒரு புரட்சியாளர். சீர்திருத்தவாதி. பொருளாதார மாற்றத்திற்கு வித்திட்டவர் என்றார். அவரது கொள்கைகள்,  வாழ்க்கையில் நலிந்து, கீழ்மட்ட நிலையில் வாழும், உழைக்கும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

பாப்புலர் கருடா – என்பவர், லத்தின் அமெரிக்காவில், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது போல, வல்ளலாரின் கொள்கைகள், கடைப்பிடிக்கப்பட்டால், வெகு விரைவில், அக் கொள்கைகள், சமூகத்திலும், சமுதாயத்திலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

 கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் அவர் வாழ்த்திப் பேசினார்.

 

திரு இரா. விச்சலன்- கம்யூனிஸ்டுகளுக்கு, வள்ளலார் கொள்கைகளைப் பற்றி என்ன ஒரு கரிசனை என்பது, பலருக்கும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 இரண்டாம் உலகப் போரின்போது, 2 கோடி மக்கள் இறந்தனர். இத்தாலி நாட்டில் ஜார்ஜ் டிமிடோ குறித்த தகவலை விவரித்தார்.

 

ஒவ்வொரு நாடும், தமது வழக்கமான, நடப்பு நிகழ்ச்சிகள் தவிர அதனைக் கடந்து, மரபுக் கருத்துக்களை, ஆக்க ரீதியான கருத்துக்களை விடுத்துச் செல்ல வேண்டும்.

 

 முற்போக்கு சிந்தனையாளர்களைச்  சுவீகரித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில், பாசிச வாதிகளும், மத வாதிகளும், அத்தகைய முற்போக்குச் சிந்தனையாளர்களை, தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வார்கள்.

 

இந்தக் கலை இலக்கிய மன்றம், அத்தகைய முற்போக்குவாதிகளில், முதலில், மகா கவி பாரதியாரையும், அவரது சீர்திருத்தக் கருத்துக்களையும் அலசி, அவரது கொள்கைகளை வெளிக் கொணர்ந்தது. 

 

தலைவர் ஜீவா அவர்கள், மகாகவி பாரதியாரின் தத்துவங்களையும், புரட்சிகரமான சிந்தனைகளையும், சமூக விடுதலைக்காகவும், தேசீய மாற்றத்திற்காகவும் பாரதியார். அரும் பாடுபட்டதையும், அவரது பன்முகங்களையும், வெளிச்சமிட்டுக் காட்டினார். அத்தகையோரை, மரபுரிமை வாரிசுகளாக நாம் சுவீகரித்துக் கொள்ள வேண்டும்.

 

அந்த வகையால், நாங்கள்,  சமூக மாற்றத்தினையும்,  சமுதாய மாற்றத்தினை ஏற்படுத்த வல்ல,  புரட்சிக் கொள்கைகளைக் கொண்ட வள்ளலாரின் கருத்துக்களை,  ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம் எனத் தெரிவித்தார்.

 

கவிஞர் திரு தமிழ்ப் பெரியசாமி-           கவியரங்கத்தின் தலைவர்.

 

அவர் தமது உரையில் -

 

அருங்கனியாக இனிக்கும் தமிழுக்கு வணக்கம். கவியரங்கத்தை அலங்கரிக்க வந்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கும் வணக்கம். எனத் தெரிவித்து,

 

“வள்ளலார் ஒரு சமூகப் புரட்சியாளர்” என்ற தலைப்பு, சிலருக்கு ஒரு தடுமாற்றத்தைத் தந்தது என்றார்.

 

அவர் சமூகத்தை ஒரு வித்தியாசமான கோணத்தில், பரிமாணத்தில் பார்த்தார். . அந்த வித்தியாசமான பார்வை ஒன்றே அவரை ஒரு புரட்சியாளராகக் காட்டும்.  

 

அவரது புதிய கோணங்களாவன –

 

1)     கண்ணாடிக் காட்சி

2)     கந்த கோட்டத்தில் வழிபாடு

3)     அகவை ஒன்பதில், திருவொற்றியூர் வழிபாடு.

4)     புராணப் பொழிவு.

 

என்று. 40 ஆண்டுக் காலம், வள்ளலார் பக்தியே பாதை என வாழ்ந்தார். 1865ல் சன்மார்க்கக் கொள்கைகளுக்கு வித்திட்டார்.

 

ஏழை எளிய மக்களின் பசியைப் போக்குவதற்கு, சத்திய தருமச் சாலையினைக் கட்டினார்.

அருள் விளக்கத்திற்கு, சத்திய ஞான சபையினைக் கட்டினார். அந்த வகையால், மானுடத்தின் உயர்வினை சதா காலமும் தனது மனதில் எண்ணினார்.

 

அவரது திரு அருட்பாக்கள், தேனாகக் கொட்டும் அருள் மழையாகும்.

சிறு தெய்வ வழிபாட்டை கடுமையாக எதிர்த்தார்.

 

தடுமாறிய பாமர மக்களுக்கு,

 

“ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

 நாடாதீர் பொய்உலகை நம்பாதீர்-வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்

கென்மார்க்க மும்ஒன்றா மே”

 


       என தமது அருட்பாடல்களால் எச்சரிக்கை ஒலியெழுப்பினார்.

 

ஆட்சி கடிதென்றால், அது ஒழிக என்றார்.

 

அருள் நயந்த நன்மார்க்கர் நல்லாட்சி செய்க என்று – வள்ளலார், மக்கள் வாழ்த்துப் பாடினார்.

 

            அந் நாளிலேயே, வள்ளலாரது புரட்சிக் கொள்கைகளும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களும், கம்யூனிஸ்டு கட்சியையும், திராவிடர் கட்சியையும், வெகுவாகக் கவர்ந்தன.

 

            அவரது, இத்தகைய சீர்திருத்தக் கருத்துக்கள், வடலூரிலிருந்து, ஈரோட்டினை (தந்தை பெரியார்) இணைத்தன.

 

           வடலூரும், ஈரோடும் இணையான நேர்க்கோடுகளாயின.

 

            சாதி ஒழிக,. சமத்துவம் ஓங்குக என்ற மந்திரக் கோல் வடலூரிலிருந்து, ஈரோடு வந்தது.

 

            நால்வருணம். ஆசிரமம், ஆச்சாரம் ஒழியென்றார்.

 

கோபத்தில், இருட் சாதிச் சாத்திரத் தத்துவங்களையெல்லாம் வெறும் குப்பையென்றார்.

 

            அவற்றையெல்லாம் தமது சீர்திருத்தக் கருத்துக்களால் மறைந்தொழியச் செய்த மாமனிதர், வள்ளலார். அவர் சிறந்த பண்பாளர்.

 

            மக்களை வாட்டுகின்ற நோய்க்கும், வறுமைக்கும், வருத்துகின்ற பசிக்கும், ஆசைக்கும், முற்பிறவியில் செய்த தீவினையே காரணம் என்று முன்பு சொல்லி வைத்தனர்.

 

            19ஆம் நூற்றாண்டில், பசிக்கும், பிணிக்கும்,  பக்குவமாய் மருந்து தந்து அருளினார், வள்ளலார்.

 

            அவர் வடலூர்ப் புரட்சியாளர்.

 

            அவர் ஒருவரே புரட்சியாளர்.

 

            மக்களின் பணி, மனதிற்கு இன்பமென, அனுபவித்துச் சொன்னவர், வள்ளலார்.

            மதிப்பற்ற பணி – மனிதப் பணி என்றார்.

 

தற்போது –

 

                    திக்கெல்லாம் கட்சிகள்

                     திசையெல்லாம் தலைவர்கள்

                    நான்கைந்து திரைப்படங்களில் நாயகனாய் நடித்து விட்டால்,. காலையில் எழும்போது, “முதல்வர் ஆகும்” கனவுடன் எழுகிறார்.

                    காசு கொடுத்துப் படம் பார்த்த நம்மவர்கள், அவரே முதல்வர் என்று வாய் முழக்கமிடுகின்றனர்.

            திரையிடும் நாளில், பாலாபிஷேகம், செய்து,  நடிகர்களை நம்மவர்கள், கடவுளராய், வழிபடுகின்றனர்.

 

            உண்மை மக்கள் தொண்டு என்ன ?

          அதனைத்தான் வள்ளலார் செய்தார்.

 

            வறட்சியினை மாற்றி, வளங்காண வைத்தார்.

 

சாவடிக் கூட்டம் முதல் சட்ட மன்றம் வரை நாவடித்துப் பிழைத்தவர்கள் இன்றளவும், அதனை அண்டியே உள்ளனர்.

 

            ஆனால், மக்கள் தொண்டே தூய தொண்டு என்பதை வள்ளலார் தமது பணியாக எடுத்துக் கொண்டார்.

 

            அவரது, இத்தகைய செயல், மானுடத்தின் சோகத்தை வெகுவாகவும், விரைவிலும் மாற்றியது.

            கோவில்கள் தோறும் வணங்குகின்றனர்.

 

            குடமுழுக்குக் காண்கின்றனர்.

 

            ஆயிரம் ரூபாய்க்கு அருள் வாக்கு தருகின்றனர் – இந்தக் காலத்தில்.

ஆனால் மருதூரில் பிறந்த மாமனிதர் வள்ளலார், ஒட்டிக் கிடந்த வயிற்றில் உறுபசிக்கு, பொதுமையிலே மானுடத்தை நிரப்பிக் காட்டிய நெறியாளராக விளங்கினார்.

 

இன்றைய சமுதாய முன்னேற்றத்திற்கு, சமூக மாறுதலுக்கு, வள்ளலாரின் கருத்துக்கள் மிகுந்த பயனளிப்பவை எனச் சொல்லி, அதனை அனைவரும் பின்பற்றவேண்டும் என, வள்ளலாரின் சீரிய கருத்துக்களை, கவியரங்கத் தலைவர் திரு தமிழ்ப் பெரியசாமி அவர்கள் விரித்துரைத்தார்.

 

கவிஞர் திரு பிரபாகரன்                 –“மதம் எனும் பேய்”

 

ஆசியாவில் மதத்தின் பெயரால் ஒரு காலத்தில் பெரிய புரட்சியே நடைபெற்றது என்றார்.

 

மதுரையில் ஒரு காலத்தில், சமணர்கள் மதமெனும் பேயினைத் தம் கையிலெடுத்துக் கொண்டு, மக்கள் சமுதாயத்திற்குத் தீங்கு செய்ததை கவிதையாக வடித்துரைத்தார்.

 

மதம் ஒரு அபினி – அது மானுடத்தைக் கொல்லும் என்றார்.

மதத்தின் பெயரால், கொள்ளை அடித்து, சொத்து சேர்க்கும் சாமிகளை அவர் சாடினார்.

 

இவையெல்லாம் ஒழிவதற்காக, வள்ளலார், சமரசம் என்னும் கொள்கையினை பரப்பியதை அவர் தமது கவிதை வாயிலாக வடித்துரைத்தார்.

இது அனைவரின் பாராட்டையும் பெற்றது.

 

கவிஞர்  திரு சிவா – “மருட்பா”வா ?

வள்ளலார், அன்பு செய்வதில் செம்மையானவர். எனவே அவர் தூய்மையையே பறைசாற்றும் தூய வெண்மை ஆடையினை அணிவதைக் வழக்கமாகக் கொண்டார்.

 

அறியாமை இருள் என்னும் பேயை விரட்டியவர் வள்ளலார்.

தூற்றியதில் தளிர்த்த தூய அருட்பா என்றார்.

 

அருட்பா – மருட்பாவா ? என்பது ஆச்சரியமா ? கேள்விக் குறியா ? எனவும், இன்று அது ஒரு ஆராய்ச்சிக் குறி ஆகியதையும் சொன்னார்.

 

வாடிய பயிரைக் கண்டு வாடிய உள்ளம் கண்டோம்.

அவரது அருட்பாக்கள், மண்ணின் மாட்சிமை, பெண்ணின் மகத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியவை என்றார்.

 

மானுடத்துக்கு, மரணமில்லாப் பெருவாழ்வையும், அன்பிலே தேனை ஊற்றுவதற்கு சமமாயும்,, பண்பிலே ஊனை உருக வைக்கும் சக்தி படைத்தவை அருட்பாக்கள் என்றார்.

 

சமய மதச் சாக்கடைகள் – கவர்ந்திழுக்கும் பூக்கடைகள் – என வள்ளலார் - எச்சரித்ததற்கா ஏகப்பட்ட வசவுகள் ?

 

வள்ளலார் வடித்தெடுத்ததையெல்லாம் எதிராளிகள், நீதிமன்றத்தில், சாட்டைகள் ஆக்கியதைப் பட்டியலிட்டார்.

 

(கீழே அவரது கவிதை கொடுக்கப்பட்டுள்ளது)

 

கதிரவேற்பிள்ளை என்னும் கடல் கடந்த தமிழராம் – அவரா, தமிழ் மண்ணில் முளைத்தெழுந்த மன்றம் ஏறிச் சொன்னது ? என்றார்.

 

இன்னல் முட்களுக்கும் இன்பம் ஈந்த அண்ணலே வள்ளலார்.

தன்னைத் தாக்கிய சாட்டைகளுக்கு எதிர் சாட்டை கொடுத்தார்.

 

பசித்த வயிறுகளின்மீது கருணை காட்ட உன்னால் மட்டுமே முடிந்தது.

எதிர்வாதிகள் வள்ளலார் வருகையால் நீதிமன்றத்தில் எழுந்தனர் என்பதால், அன்று, எழுதப்பட்ட தீர்ப்பல்ல அது.

 

ஏழைகளின் பசித்த வயிறுகளுக்கு நீ அளித்த அன்னமே நியாயத் தீர்ப்பாயிற்று.

அவர் அழகுத் தமிழை ஈந்தவர்.

அவர் அருளியது அருட்பா அல்ல.

 

அது – நாளும் அருளும் பா.

என்ற முறையில், திரு சிவா கவிதையினைத் தொகுத்து வழங்கினார்.

 

அவரது தொகுத்த கவிதை கீழே தரப்பட்டுள்ளது.

 

                        மருட்பாவா ?

 

உனக்கு எனக்கென்று

நாட்டைப் பிரிக்கும் போது

நயம் பாராட்டுவார் பலரிருக்க

தமிழ் ஏட்டைப் பிரிக்கும்

போதெல்லாம்-அதன்

நலமுரைக்கும் நற்பண்பாளர்

கலையை நிலையெனக் கொண்டாடும்

மக்கள் - கலையை

நிலையெனக் கொண்டாடும் – திண்டுக்கல்

கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர்

விச்சலன் தோழரை

மெச்சினேன் இப்போது… ..

 

யார் வேண்டும் – வேறு யார் வேண்டும்

அருந்தமிழுக்குச் செம்மொழியென்றே

செப்புப் பட்டயம் வழங்க -  நண்பா

எனக் கொதித்தெழுபவர்… ..

 

சாமிகளில் பெரியவராகி

தாங்கருந்தமிழைத் தம் முன்னே வைத்தவர்

அன்பு செய்வதில் மென்மை மென்மை

ஆடையெல்லாம் தூய வெண்மை வெண்மை

பள்ளிப் பாடத் திட்டம்

பாங்குற வடித்து

மாணவர் மதியை ஊக்கினார்

இஃது உண்மை உண்மை. … ..

 

கவியரங்கத் தலைவராகக்

கவிந்தமிழே அமர்ந்ததைப் போல்

வீற்றிருக்கும் விந்தையாளர்

தமிழ்ப் பெரியசாமி அய்யாவைப்

போற்றுகின்றேன் இந் நேரம்… .. …

 

விண்ணோடு விளையாடும் வியன்தமிழ்

நலம் கண்டு

அறியாமை இருளென்னும் நோய்விரட்டிப்

பேரறிவுப் பெருவெளியில்

ஒரு ஞானியாய்த் திகழ்ந்த

அருள்ஞானி அருட்பிரகாசரின்

கருத்துக்களம் கொண்டு

என்னோடு கவிபாட எழுந்திட்டார் யாவருக்கும்

ஒற்றைத் தனிமையிலே

அமர்ந்திருக்கும் அம்மாவே உங்களுக்கும்தான்

(உடன் வந்த பேராசிரியையை இவ்விதம் அழைத்தார்)

பொன்னான வணக்கஞ்சொல்லிப்

புகுகின்றேன் கவிபாட

கண்ணான என் தமிழே நீ காக்க .. ..

 

என் கையாகி, காலாகி,

மெய்யாகி, மெய்யுட்பொருட்களாகி

இக்கவியரங்கப் பொருளாகி

இமைப்பிலாது உழைத்திட்ட

எம் தோழர்கள் யாவருக்கும்

எழில் தமிழாலே வணக்கம் சொன்னேன்

எழுகின்றேன் கவிபாட – நாளும் நான்

தொழுகின்ற தமிழே நீ காக்க … …

 

தூற்றியதில் தளிர்த்த தூய அருட்பா

தோற்றிய விதம் சொல்லப் புகுகின்றேன்

 

மருட்பாவா … .. … ..

இஃது ஆச்சரியமா … ..

கேள்விக் குறியா … ..

என்று

ஆச்சரியத்தைக் கேள்வி கேட்ட ஒரு

ஆணவக் குறி

அநியாயக் குறி

வரலாற்றில் வரக்கூடாத

அல்ல குறி

 

இன்று

ஆராய்ச்சிக் குறி

தேவையின் உச்சத்தில்

வேதனையை மீட்டெடுத்து

வெளிச்சத்துக்கு

வரவேண்டிய நல்ல குறி

 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

வாடிய உள்ளம் கண்டோம்

தட்டிக் கொடுத்தே பழகிய

தடக் கரங்களைத்

தரணியில் கண்டோம்

மண்ணின் மாட்சிக்குப்

போராடும் புதுமையைக் கண்டோம்

பெண்ணின் மீட்சிக்கு

வழிகோலிய வளமையைக் கண்டோம்.

 

எல்லாக் காண்டலின்

ஒரே பதில்

அருட் பிரகாசர் – திரு

அருட் பிரகாசர்.

 

பொருள் நிரம்பி வழிந்த

அருட்பாவிற்கு

மறுப்பாய் விழுந்த

மருட்பா சாட்டைக்

கிழித்த கீறல்களை

மெல்லத் தடவி

உள்ள உண்மையை

உரைப்போம் வாரீர் … .. …

 

நேற்றின் இருட்டில் விளைந்ததை

இன்றின் வெளிச்சத்தில்

அறுவடை செய்வோம் வாரீர் … ..

 

காலம் இதைக்

கோரி நிற்கிறது பாரீர் … .. …

 

சிவனும் மாலவனும்

ஒன்றென்றே உணர்த்தும்

திருப்பெயர் தாங்கித்

தித்திக்கும் தென்றமிழ் மாநிலத்தின்

எத்திக்கும் ஒலிக்கச் செய்து

மரணமிலாப் பெருவாழ்வு

மக்கட்கு உண்டென்று உணர்த்திச்

சித்திக்குச் சினமயமாய்

வாழ்ந்தோங்கிய வள்ளல் பெரும !

 

வார்த்தைகளில் வலிமையையும்

வாழ்வினில் எளிமையையும்

அன்பிலே தேனையும்

பண்பிலே ஊனையும்

குழைத்துக் குழைத்துக் கொடுத்த

குணக்குன்றே !

 

மலிவாக மாத்தமிழைத் தந்ததற்கோ

இழிவாகப் பேசப்பட்டீர்

 

சாதிமதச் சாக்கடைகள்

கவர்ந்திழுக்கும் பூக்கடைகள்

வண்டுகளே போகாதீர்

வரவே மாட்டீரென்றீர் !

 

எச்சரிக்கை விடுத்ததற்கோ

ஏகப்பட்ட வசவுகள் ! ? … .. …

 

வார்த்தையால் வசம்பரைத்து

வண்டமிழின் கன்னத்தில்

வாசமிகு பொட்டு வைத்ததாலோ

ஏசல் வந்து சேர்ந்தது உம்மிடத்தில் ! ? … .. …

 

‘ஓதாது உணர்ந்தாரில்லை’ –

ஒரு சாட்டை பேசியது

 

‘ஒழிவிலொடுக்கம் ஒரு

பிழைமலிவுப் பதிப்பு’

இரண்டாம் சாட்டை

சுளீரேன இழுத்தது

 

‘நன்னீரால் விளக்கெரித்தாராம்

ஓ … ஓ …

நமி நந்தியடிகளோ ? … .. …

மூன்றாம் சாட்டை

முன்னேறி வந்தது.

 

‘அண்ணியார் வடிவில்

அன்னை அமுது கொடுத்தாளாம்’

‘ஆரிடம் அளக்கிறார்’

அடுத்த சாட்டை அறைந்தது

 

‘இரசவாதம் தெரிந்திருந்தால்

பிச்சையெடுக்காமல் இலட்சங்களைப்

படைத்திருக்கலாமே’

ஐந்தாம் சாட்டை அலறியது

 

கதிரைவேற்பிள்ளை என்னும்

கடல்கடந்த தமிழரால்

தமிழ் மண்ணில் முளைத்தெழுந்த

தென்றல்

மன்றம் ஏறிச் சொன்னது

மருட்பா தான் என்று –

விந்தைதான் … .. …

 

இன்னல் முட்களுக்கும்

இன்பம் வழங்கிய அண்ணலே !

 

வார்த்தைச் சிலுவைகள்

வதைத்த போதும்

உன் நேய நெஞ்சம்

தூயதாகவே திகழ்ந்தது அய்யா !

 

தன்னைத் தாக்கிய கற்களுக்குத்

தக்க பாதுகாப்பு வழங்கினீர் .. !

சாட்டைகளுக்கு எதிர்சாட்டை தொடுத்தீர்

காக்கும் தமிழால்

எதிர்சாட்டை தொடுத்தீர் … !

 

எல்லாவற்றையும் கடந்து

பசித்த வயிறுகளின்மீது

பார்வை செலுத்த

உம்மால் மட்டுமே முடிந்தது …

 

அறமன்றத்தில் முறையிட்ட

அந்த நாளில்

எதிர்வாதி எழுந்தார் என்றதாலே

எழுதிய தீர்ப்பல்ல அருட்பா … … …

 

உலகத்து உயிர்கட்காக

உண்மையாய் வருந்தி வருந்தி

ஊனுயிரெல்லாம் சோதியிலே பொருந்தியதாலே

அஃது அருட்பா – அது

நாளும் அருளும் பா.

 

வினாக்குறிகள் ஒவ்வொன்றையும்

உங்கள் உள்ளங்களில் தொங்கவிட்டு

விடைபெறுகிறேன்

தொலைக் காட்சித் தொடர்களைச்

சற்றே தள்ளிவிட்டு

யோசித்துச் சொல்லுங்கள்

காத்திருக்கிறேன்

நன்றி … நன்றி …

 

முனைவர் காந்திமதி, பேராசிரியை,. எம்.வி.எம்.கல்லூரி,-“தனக்குத்தான் சொல்லியவை”

 

வள்ளலார், தனக்கென ஒரு வாழ்க்கை முறையினை வகுத்துக் கொண்டவர்.

 


தன்னை அந்த வாழ்க்கையில் முன்னோடியாக்கி, நம்மைப் பின்னோடியாக்கியவர்

அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்திருந்த உலகரனைவரையும் சகத்தே திருத்த வருவிக்க உற்றவர்.

 

மதமெனும் பேயை விரட்டி அடித்தவர்.

யாரையும் வெறுத்துப் பேசாதவர்.

 

சமயக் கோட்பாடுகளை வெறுத்தவர்.

சமயப் பிணக்குகளை சாக்கடைக்குள் வீசியவர்

பக்தி அடுப்பினை ஊட்டியவர்.

 

கலைக்கு வீண் போகும் வீணர்களைச் சாடியவர்

அக் கண்மூடி வழக்கத்தை மண்மூடிப் போக பாடிவைத்தவர்.

 

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ என பாவங்களைப் பட்டியலிட்டவர். நம்மையெல்லாம் தமது சிந்தனையால், உசுப்பி விட்டவர்

 

அவர் வெறும் வார்த்தைகளால் சொல்லிச் செல்லவில்லை. வாழ்ந்த முறைகளால் உண்மை வாழ்க்கை எது என எல்லோருக்கும் புரிய வைத்தவர்.

 

மரண வாதனையைக் கண்டுரைத்தவர். அதனைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளைப் பாடி பாமரர்களும் அறியச் செய்தவர். மனித குலத்தின் மீது கொண்ட இரக்கத்தால் இதனை எடுத்துரைத்தேன் என்றார்.

 

தாம் ஆருயிர்களின்பால் கொண்ட உயிர் இரக்கத்தால், ஈரம் வரவழைத்தவர். உளுத்துப்போன உள்ளங்களை உயிரிரக்கத்தால் உயிர்ப்பித்தவர்.

 

கடுணை இல்லா ஆட்சியை கடுகி ஒழிக எனச் சாடியவர். இலக்கிய முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

 

திருமண உறவினைத் தீண்டத் தயங்கியவர்.

 

சிந்தனைத் தெளிவால், உலகியலாரோடு ஒட்டி வாழ்ந்து அவர்களும் அறியச் செய்த ஞானி.

மரணமிலாப் பெருவாழ்வின் மாண்பினை பார் அறியச் செய்தவர். இறைவனை உண்மையான பக்தியுடன் நாடினால் கருணை மடை திறப்பான் என்றவர்.

 

அவர் –

தனக்குத்தான் சொல்லியவை எல்லாம் –

தனக்குத்தான் சொல்லியவையா ?    அல்ல .. ..

எனக்குத்தான் .. ..

நமக்கும்தான்.

என கவிதை வடிவில் தனது எண்ணங்களை இப் பேராசிரியை எடுத்துரைத்தார்.

 

கவிஞர் திரு தமிழ் மன்னன் – “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்”

 

வள்ளலார் தனது சீரிய கருத்துக்களாலும், கொள்கைகளாலும், மனு தர்மத்தை அழித்தொழித்தார்.

வள்ளலார் பாடிய அருட்பாவினைப் பாடினாலும் அதனைக் கவிதையில் வழங்கினாலும், உதடு மணக்கின்றது. உள்ளம் இனிக்கின்றது. அத்தகைய தன்மை வாய்ந்தவை அவை என்றார்.

 

வள்ளலார், தன்னில் பயணித்து, தரணியை உயர்த்தியவர் என்றார்.

தனது சமுதாய சீர் திருத்தக் கருத்துக்களை, கவின்மொழியால் உணர்த்தித் திருப்பியவர்.

வள்ளலார், ஊருக்காகத் தன்னை உடைத்தவர்.

 

சாக்கடை மரபுகளைக் கொட்டிக் கவிழ்த்தவர் என்றார்.

 

உயிர் நேசமே – இறைநேசம் என்பதனை வள்ளலார் வாழ்ந்து காட்டியதைச் சொன்னார்.

பசியென்னும் யானைப் பெருந்தீயை அசைக்க, அணைக்க, அடுப்பினை ஏற்றியவர்

 

அவர். உயிர்க்கொலை கண்டு நடுங்கியவர்.

 

இரக்கம் – உயிர் – இயற்கை என்ற கருத்துக்களில் அவர், உலகியலாரோடு ஒன்றி நின்றவர் என்றார்.

மரணக் கனவும், நனவும் அவரை தீவிர கவனப் படுத்தின.

 

அவர் ஒரு சாதனைச் சிற்பி என்று தனது கவிதையினை எடுத்துரைத்தார்.

 

திரு மாசித்துரை – சீர்திருத்தச் சிந்தனைகள்.

 

இறைவன் யார் என வள்ளலார், தமது கருத்துக்களின் மூலம் எளிமையுடன் புகன்றார். சாதி சமயச் சீர்கேட்டைச் சரிசெய்ய அரும்பாடு பட்டார். சமத்துவமான கொள்கைகளைப் பரப்பினார்.

 

ஆன்மீகம் சார்ந்தோரில், காவியுடை அணிந்தவர்களின் நடுவிலே, வெண்மை உடை அணிந்து, தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினார்.

 

காடுகளில் ஏகி, கடுந் தவம் புரியும் யோகிகளால், எந்த விதமான பயனும் இல்லை என்றார்.

 


ஆன்ம நேய ஒருமைப்பாட்டின் அவசியத்தை சத்திய சன்மார்க்க சங்கத்தின் மூலம் எடுத்துரைத்தார்.

 

வருணாசிரமத்தை வன்மையாக எதிர்த்தார்.

 

சாதி வெறியை ஒழிக்கப் பாடுபட்டார்.

 

உருவ வழிபாட்டை வெறுத்தார்

 

உயிர்ப்பலியை மறுத்தார்.

 

எங்கும் நிறைந்த இறைவனை, ஒளியின் வடிவில் கண்டார்.

 

நோய்கள் தீர்ப்பதற்கு சிறந்த வழிமுறைகளைச் சொன்னார்.

 

நகைகள் அணியும் வழக்கத்தை நாளும், நாளும் எதிர்த்தார்.

 

பாரதிக்கும், பாரதி தாசனுக்கும் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

 

பாரில் சன்மார்க்கம் உரைத்தார்.

 

ஒன்றே தேவன் என்று கூறி, மக்களிடையே, ஒருமைப்பாட்டினை வளர்த்தார்.

நல்லதொரு எதிர்காலச் சமூகத்திற்கு வித்திட்டவர் வள்ளலார் என்றார்.

 

கவிஞர் அருள்மதி “ அன்பெனும் பிடியுள்”

 

அன்பு – இல்லறம் மறுத்த துறவிகளாலும் மறக்க முடியாது.

 

அது ஜீவராசிகளின் ஜீவநாடி.

 

மனித குலம் இறை நிலை அடைய இறைவன் தந்த துருப்புச் சீட்டு.

 

தாயன்பு பேரன்பாய்ப் பிரவாகமெடுக்கின்றது வள்ளலார் மூலம்.

 

தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளைகள், தன் உறவினர் என்ற குறுகிய வட்டத்திற்குள் காண்பிக்கப்படுவது என்பது சிற்றன்பு ஆகும்.

 

அச் சிற்றன்பால் கிடைக்கும் சுகம், சிற்றின்பமே ஆகும்.

 

ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்வதுதான் பேரன்பு என்றார் வள்ளலார்.

பேரன்பின் பிரசவமே, பேரின்பம்.

 

சமயங்களைக் கடந்து, சடங்குகளைக் களைந்த ஆன்ம நேய ஒருமைப்பாடு என்ற ஒரு கோட்பாட்டினைப் பரப்பியவர், வள்ளலார் ஆவார்.

 

அவர், ஜீவகாருண்யமே ஜீவனுக்கு முக்தி என பரணிக்குப் பறை சாற்றியது, பேரன்பால்தான் என்றார்.

 

மேலும், ஆருயிர்களுக்கெல்லாம் அருந்தொண்டாற்றிய வள்ளலார் - அன்பெனும் அருமருந்தின் மூலம்தான் - என்றார்.

 

மதங்கள் எல்லாம் தரமுடியாத ஒரு நிலையை, ஆருயிர்கட்கெல்லாம் அன்பு செய்தல் என்ற தனது கோட்பாட்டின் மூலம் நிறைவேற்றிய வள்ளலார், ஒரு நெறியாளர்.

 

அன்பு நிலையை, இறைநிலையாகும் பேரன்புத்தத்துவம் தந்தவர், வள்ளலார்.

மீறுதல் என்பது, வளர்ச்சிக்கு அடையாளம்.

மூளைப் பள்ளத்தை நிறைவு செய்வது – நூல்கள்.

வயிற்றுப் பள்ளத்தை நிறைவு செய்வது – உணவு.

இதயப் பள்ளத்தை நிறைவு செய்வது – அன்பெனும் அமுது.

அந்த வகையில்,. பசித்த பாமர ஏழைகளின் துயர்களையெல்லாம்,  அன்பெனும் அமுது கொண்டு நிரப்பியவர் வள்ளலார்.

 

இத்தகைய ஒரு சமூக சீர்திருத்தப் புரட்சியாளரை, மதவாதிகள், மந்திரக் குப்பிக்குள் அடைக்கப் பார்க்கின்றனர் என்றார்.

 

திரு தமிழ்ப் பெரியசாமி, கவியரங்கத் தலைவர்.

 

வள்ளலார், 1874ல் இயற்கை நிலை அடையாதிருந்தால், அவர், கண்டிப்பாக, ஒரு தொழிலாளி வர்க்கத்தின் தோழராய் வாழ்ந்திருப்பார் என்பதே உண்மை.

 

பசியைப் போக்கி, பாவத்தைப் போக்கியவர், வள்ளலார்.

 

அவர் ஒருவர்தான், வறுமைக்கு எதிராளியாக, போராளியாக பாமர மக்களுக்கு ஆதரவாளராக, களமிறங்கிச் செயல்பட்டவர். ஏனையோரெல்லாம் வெறும் சொல் அளவிலே நின்றவர்கள்.

 

எனவே, இந்தக் கூட்டத்தின் மூலம், வள்ளலாரின் புரட்சிக் கருத்துக்களை, பூமியில் ஊன்றி வைப்போம்.

 

அதன் பலனை இந்தச் சமுதாயமும், சமூகமும் வெகு விரைவில் அனுபவிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்துவோம். இதுவே அதற்கு ஒரு நிலைக் களமாக அமையட்டும் என்றார்.

 

இத்துடன், கவியரங்கம் நிறைவடைந்தது.

 

                        அடுத்ததாக, கருத்தரங்கம் துவங்கியது.

 

கலை இலக்கியப் பெருமன்றத்தின் துணைத்தலைவரான. திரு எம். கோபால் தலைமை தாங்கினார்.

 

அவர் முதலில் ஒரு நடிகராக இருந்தவர் என்றும், “தனம்” என்னும் தொலைக் காட்சியில், செய்தி வாசிப்பவராகப் பணியாற்றினார் என்றும், அவ்விதம் தொலைக் காட்சியில் செய்திகள் படிக்கும் போது, தாம் வள்ளல் பெருமான் திருவுருவப் படம் பதித்த “டாலர்” அணிந்துதான் செய்தி படிப்பேன் என உறுதியுடன் இருந்தார். அவரது வள்ளல் பெருமானின் கொள்கைகளின்பால் கொண்ட இத்தகைய உறுதியான நிலைப்பாட்டிற்கு, அத் தொலைக் காட்சி நிர்வாகம்,  அனுமதி வழங்கியது என்பது, இவர் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவம்.

 

திரு எம். கருப்பையா பாரதி- கலை இலக்கியப் பெருமன்றத்தின் துணணச் செயலாளர்.

 

 உலகம் முழுவதும், இந் நாள் (ஞாயிற்றுக் கிழமை) ஒரு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தும், சமூக மாற்றத்திற்காக, நடைபெறும் இக் கருத்தரங்கிற்கு வெகு ஆர்வத்துடன், கலந்து கொள்ள,  வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார்.

 

திரு எம். கோபால்.

 

அவர், தனது உரையில், வள்ளலார், ஒரு அக்கினிக் குஞ்சு என்றார்.

 சமய இலக்கியத்தில் பூத்த புரட்சிப் பூக்களில் வள்ளலாருக்கு என ஒரு தனி இடம் உண்டு

அவர் “பசித்திரு – விழித்திரு – தனித்திரு” என்றார்.

 

பசித்திருத்தல் என்றால், ஆன்மீகப் பசியுடன் இருத்தல். அதாவது ஞானப் பசியுடன் இருத்தல்.  .

 

விழித்திருத்தல் என்றால், உள்ளார்ந்த விழிப்பு நிலையுடனேயே எப்போதும் இருத்தல் – அதாவது, அக விழிப்பு நிலையில் இருத்தல்.

 

தனித்திரு என்றால், தன்னிலிருந்தும் தனித்திருத்தல் என்றார்.

 

சச்சிதானந்தம் என்பதற்கு சத்+சித்+ஆனந்தம் என பதம் பிரித்துப் பொருளுரைத்தார். ஆனந்தம் என்பதுதான் பேரின்பம் என்றார்.

 

 

திரு பொன் சங்கர் – ஜீவகாருண்ய ஒழுக்கம்.

 

வள்ளலார் சமுதாய சீர்திருத்தம் பெற எப்படிப்பட்ட அறிவுரைகளையெல்லாம் வழங்கியுள்ளார் என்பதை விளக்கினார்.

 

தான் பெற்ற அனுபவத்தை இந்த பேச்சாளர் சொன்னார்.

 

ஒவ்வொருவர் காலத்திலும் ஒவ்வொரு புரட்சி நடைபெற்றுள்ளது. மணிமேகலை காலத்தில் பசியை அட்சய பாத்திரத்தால் போக்கினார்.

 

பசி என்பது உடல் கூறுகளின் தத்துவமனைத்தையும் கேடு செய்து அடக்கி விடும் என வள்ளலார் சொல்லியுள்ளார்.

 

செல்வந்தர்கள் வட்டி மேல் வட்டி வசூல் செய்து பிழைக்கின்றனர்.

ஆனால் ஏழைகளுக்குக் கொடுக்கும் கருணை உள்ளம் அவர்களுக்கு வரவில்லை.

 

திருமணப் பந்திகளிலே தேவைக்கு அதிகமாக விருந்து படைக்கப் படுகிறது. அங்கு உண்ணும் நபர்கள், தாம் உண்பது போக அதிகமாக வைக்கப்பட்ட உணவினை வீண் விரயம் செய்கின்றனர்.

 

ஆனால் அதே சமயம் ஏழை எளியவர்களுக்கு கொடுக்கும் நிலை அங்கு இல்லை. அவர்களின் பசிப் பிணியைப் போக்கும், நோக்கமும் அங்கெல்லாம் இல்லை.

 

வள்ளலார் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதிமுறையினை அமைத்தார்.

 அதில் உணவுப் பழக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் –

 

பொதுமக்கள் ஜீவ காருண்ய ஒழுக்க நிலையை எவ்வளவு கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வள்ளலார் கோட்பாடுகளை வகுத்துள்ளார்.

 

ஜீவகாருண்யச் செயல் விளங்காவிடில், அன்பும் அறிவும் உடன் நிற்காது மறையும். ஜீவகாருண்யம் இல்லாததால்தான் சமூகத்தில் எல்லாக் கொடுமையான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

 

ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கு இலகுவாக வள்ளலார், வினா விடை முறையில் பாமரரும் அறியும் வண்ணம், அறிவுரை பகர்ந்துள்ளார்.

 

ஜீவகாருண்யம் கடைப்பிடிக்காததால், ஜீவர்களுக்கு 7 வகையான துன்பங்கள் வரும் என்று வள்ளலார் சொன்னார்.

 

பிறவி எனும் நோய் தீர்ப்பதுவே ஜீவகாருண்யம்.

 

தான் வேறு – பிறன் வேறு என்று கருதுவதாக திருமந்திரம் சொல்கிறது.

 

திருவள்ளுவர்,

 

 “தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிதூனுன்பான்

 எங்ஙனம் ஆளும் அருள்”                         எனக் குறிப்பிட்டார்.

 

அருள் எப்போது விளங்கும் ? ஜீவகாருண்யச் செயல் செய்யச் செய்யத்தான் அருள் விளங்கும்.

 

அந்த ஜீவகாருண்யத்திலும்,, பர ஜீவ காருண்யம் என்றும் அபர ஜீவ காருண்யம் என இரு வகை உள்ளதை வள்ளலார் விளக்கியுள்ளார்.

 

மனித குலம் கடைத்தேற வேண்டுமெனில் ஜீவகாருண்ய ஒழுக்கம் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

 

அதனால் என்ன லாபம் ?

இம்மையின்பம் என்றால் என்ன ?

மறுமையின்பம் என்றால் என்ன ?

அருள் சுதந்திரத்தை எவ்வாறு அடைவது ?

 

திருவருட் பூரணத்தை ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைப்பிடித்தால் மட்டுமே அடைய முடியும் என்றார் வள்ளலார்.

ஜீவ காருண்யம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் என்ன ?

 

குழந்தையின்மை, தீராத நோய்கள் வருதல் முதலிவற்றிற்கு அடிப்படைக் காரணமே, ஜீவகாருண்ய ஒழுக்கம்,  கடைப்பிடிக்காததுதான் என்றார்.

 

அதனைத் தவறாமல் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், அறிவுள்ள குழந்தைச் செல்வம், கல்வி, வாழ்க்கையில் உயர்வு, செல்வம் எல்லாம் கிடைக்கும் என்றார்.

 

பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்-என அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளலார் சொல்லியுள்ளார்.

 

ஜீவகாருண்யம் பண்ணும் போது அறிவு விளங்கும். நன்மைகள் விளையும்.

வள்ளலார் சொல்லிய மிகச் சிறந்த கருத்து “இறவா நிலை அடைதல்” அதனை எவ்வாறு பெறுவது ?

 

அனைவருமே ஜீவ காருண்ய ஒழுக்கத்தைக்  கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் அருட் பூரணம் விளங்கும்.

 

வள்ளலார் வடலூரில், புறத்தே “சத்திய ஞான சபை” யினைத் தோற்றுவித்தார். அதன் உண்மைப் பொருள், நமது உடலில், தலையின் மூளைப்பகுதியில், அருட்பெருஞ்ஜோதியாக இறைவன்,  விளங்குவதே ஆகும்.

 

சத்திய தர்மச் சாலை அமைத்தது, ஏழைகளின் பசிப்பிணியினைப் போக்குவதற்குத்தான்.

சண்ட மாருதம் என்ற ஒரு பெரும் சூரைக் காற்று வரும். அது வந்து தாக்கினால், ஒரு நாட்டையே தூக்கி, வேறு இடத்தில் போட்டு விடும். இயற்கையிடம், இதுபோன்ற குணங்களும் இருக்கின்றன என வள்ளலார் விவரித்துள்ளதை எடுத்துச் சொன்னார்.

 

வள்ளலாரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு என்றோ, ஒரு மதத்திற்கு என்றோ சுருக்கி விடக் கூடாது.

 

திரு அருட்பாவில், அவர் –

 

அருட்ஜோதி ஆனேனென் றறையப்பா முரசு

மரண வாதனை தவிர்த்தேன் என்றறையப்பா முரசு

 

என்றெல்லாம் தான் அடைந்த நிலையை அறைகூவலாக மக்களினத்திற்குச் சொல்லிச் சென்றுள்ளார்.

 


மரணமில்லா வாழ்வினை ஒவ்வொருவரும் பெற வேண்டுமெனில், ஜீவகாருண்ய ஒழுக்கத்தைத் தவறாமல் கடைப்பிடிப்பதே மனித குலத்தின் தலையாய கடமை என்று அறுதியிட்டுச் சொல்லி, தனது உரையினை அவர் முடித்தார்.

 

திருமதி மேரி சாந்தி ராணி, “மணிமேகலையாய் வள்ளலார்”

 

இவ்வுலகத்தில் பிறந்துள்ள இனங்களில், மனிதப் பிறப்பே உயர் பிறப்பு ஆகும்.

 

மிருகம் மனிதனாகியது பரிணாம வளர்ச்சி

மனிதன் மிருகமாகியது, பரிணாமத் தளர்ச்சி.

 

மனிதன் சுய நல மிக்கவன். பொதுவுடைமை பாராட்டாமல், சுய நல மிக்குடையவனாக மனிதன் விளங்குவதால், ஆழிப் பேரலை தோன்றுகிறது.

 

நாம் அன்பு மயமானால், உலகமே அன்பு மயமாகிவிடும்

அன்பின்மையும், அறிவியல் வளர்ச்சியும், இறைநிலை உண்மை நிலையினை,  விளக்கப் பயன்படவில்லை.

 

எனவே, மனித நேயம் விளங்கவில்லை.

 

பிறர்க்காக வாழ்பவனே மனிதன்.

 

ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு வாழ்ந்து காட்டியவர், வள்ளலார்.

 

மணிமேகலை, அறமெனப்படுவதாகச் சொன்னது (1)உண்டி, (2) உறையுள் (3) உடை தருவது ஆகியவையே ஆகும்.

 

வள்ளலாரும் அதே கருத்தைத்தான் அழுத்தந் திருத்தமாகச் சொன்னார். அவற்றிலும் சிறப்பாக அவர்சொன்னது, பசி போக்கும் அறச் செயலாகும்.

 

பசி என்பது அனைவருக்கும் பொதுவானதாகும்.

 

பாவங்கள் செய்தல், கள் உண்ணல், பிற உயிரைக் கொல்லுதல் போன்றவை மிகக் கொடியவை.

 

வள்ளலார், ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டுமென்றார்.

 

கொல்லா நெறியே குருவருள் நெறி எனப்

பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்த் துணையே         என்றார்.

 

அவர் அருளிய உபதேசப் பகுதியில், தம்மை ஏறா நிலைக்கு ஏற்றியது, தயவு ஒன்றுதான் என்று சூளுரைத்து, வாழ்க்கையில், அனைவரும் அவரது அறிவுரைகளைக் கடைப்பிடித்து, அந் நிலைக்கு மேலேறுவதற்கு முயற்சிக்க வேண்டுமென்றார்.

 

அந்தப் பணியையே தமது வாழ்நாளில் செய்து வந்து, சமுதாய சீர்திருத்தத்திற்கு வித்திட்டார். நானில்லையேல் நீயில்லை என்றார்.

 

அட்சய பாத்திரமாக அவர் துவக்கி வைத்த சத்திய தருமச் சாலை, இன்றும், விளங்குகிறது.

 

திரு விஸ்வநாதன் – கலை இலக்கியப் பெருமன்றப் பொருளாளர், “ஏழை பங்காளர்”

உலகெலாம் பரவ என் உள்ளத்திருந்தே

அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ் ஜோதி - என வள்ளலார் பாடினார்.

 

திண்டுக்கல்லில் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம் 76 மாதங்களாகத் தொடர்ந்து, ஜீவகாருண்யப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 

இங்கு வந்திருக்கும் அனைத்து சன்மார்க்கிகளும், மற்றையோரும், அறிஞர் பெருமக்களும்,  தமிழ் நாடு இலக்கியப் பெருமன்றத்தின் தொண்டினை இதுகாறும், கண்டு கொண்டுள்ளீர்கள்.

 

திண்டுக்கல் நகரின் மாவட்டச் சன்மார்க்க சங்கத்தில்,  முக்கிய பொறுப்பு வகிக்கும் திரு மேடா நித்தியானந்தம், திரு சமயபுரத்தான், கவியரங்கத்தை அலங்கரிக்க வந்த கவிஞர் பெருமக்கள், கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள வந்துள்ள பெருமக்கள் ஞான தீபம் ஆசிரியரிடம் உள்ள சன்மார்க்க அன்பர்கள், ஆகியோரை அவர் வரவேற்றார்.

 

வள்ளல் பெருமான், தான் இறை நிலை அடையும்போது, இந்த உடம்பிலிருக்கிறேன். இனி எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வேன் எனக் கூறிச் சென்றார்.

 

 தத்துவம், கற்பனை கடந்த ஜோதி வழிபாட்டினை அனைவரும் மேற்கொள்ள வள்ளலார், உபதேசித்தார்.

 

உலகத்தில் அனைவரும் ஒளி நெறி கடைப்பிடித்து வாழ வேண்டும் என்றார்.

 

கிட்டத் தட்ட, 6.000 அருட்பாடல்களை அவர், மனித குலத்தின் மேம்பாட்டிற்காக, பாடி வைத்துள்ளார்.

 

“தெருப்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்” என்றார் வள்ளலார்.

 

அதேபோல், தெருக்கள் தோறும், வள்ளலாரின் சீரிய கொள்கைகளும், கோட்பாடுகளும், பரப்பப்பட வேண்டுமென்றார்.

 

திண்டுக்கல்லில் வள்ளலாரது கொள்கைகள் நன்கு உணர்ந்து கொள்ளப்பட்டு, அது மேலும் விரிந்து, இந்தக் கலைப் பண்பாட்டுக் குழுவின் மூலம் உலகெலாம் பரவுகின்றது என்றார்.

 

அதற்கு. கலைப் பண்பாட்டுக் குழு மிகவும் உறுதுணையாக உள்ளது என்றார்.

 

வள்ளலாரின் சீரிய கருத்துக்களை நகர் முழுவதும் பரப்புவதற்கு வாய்ப்பாக, எங்கெல்லாம் சத் விசாரக் கூட்டம் நடைபெறுகிறதோ அங்கங்கெல்லாம், தாம் கலந்து கொண்டு, வள்ளலாரின் அருந் தொண்டினையும், அவர் நலிந்த நிலையில் வாழும் ஏழைகளின்பால் கொண்ட உயிர் இரக்கத்தையும், அவர்கள் வாழ்வில் மேம்பாடடைவதற்கு, சொல்லிய கருத்துக்களையும், எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.

 

இதற்கு முன்னர், வள்ளலாரின் சமுதாயப் பார்வை என்ற தலைப்பில் தம்மை முன்னர் ஒரு முறை, ஒரு மணி நேரம்,  தலைவர் திரு விச்சலன் அவர்கள்,  பேச வைத்ததையும், நினைவு கூர்ந்தார்.

 

அருட்பெருஞ்ஜோதி வடிவில் இறைவன், ஒவ்வொருவரின் சிரநடுச் சிற்றம்பலத்திலே இயங்கி வருகிறார்.

 

வாழையடி வாழை என வந்ததிருக் கூட்ட

         மரபினில்யான் ஒருவன்அன்றோ வகையறியேன் இந்த

ஏழைபடும் பாடுனக்குத் திருவுளச்சம் மதமோ

          இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ

 

எனத் தம்மை வள்ளலார், ஏழை பங்காளராக இறைவனிடம் இறைஞ்சும் நிலையினையும், அவர்கள் கடைத்தேறுவதற்கேற்ற வகையினை அவர் தெரிவித்த ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் உயர் மாண்பினையும் கூறினார்.

 

 பசி, பிணி,. மூப்பு, துன்பம் துயரம் முதலியவற்றால், ஏழை எளியவர்கள் படும் கடுந்துயர்களைக் கண்டும், கேட்டும், அவர் உள்ளம் படுகின்ற பாட்டை எவ்வளவு என்று சொல்ல முடியாது.

 

தமது மனம் வெம்பியது எனவும், கருகி இளைத்தேன் எனவும், உளம் பகீர் என்றது எனவும், அதனைக் கண்டு தாம் நடுங்கிய நடுக்கம் இவ்வளவு அவ்வளவு என அளவிட முடியாது எனத் தெரிவித்ததையும் நினைவு கூர்ந்தார்.

 

என்னை நம்பிய இந்த ஏழை மக்கள், என்புதோல் போர்த்திய உடம்பினராக உள்ளனரே என அவர்கள் நேர் உறக் கண்டதோறும் மனம் மிக வெதும்பினார்.

 

இவர்கள் வாழ்வில், வறுமை என்னும் சங்கடப்பாவி எப்படிப் புகுந்தான் ? அதனைக் கண்டு என்னுள்ளம் உடைந்தது அதனை உன்னுளம் அறியாதோ என இறைவனிடம் போராடி அவர்களின் உயர்வுக்காக இறைஞ்சி நிற்கிறார்.

 

புலால் மறுத்தலை வலியுறுத்திய வள்ளலார்,

வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு

என்பெலாம் கருக இளைத்தனன் –

 

என்று   பாடுவதை கோடிட்டுக் காட்டினார்.

 

எளியாரை வலியார் அடித்த போது என் மனம் கலங்கியதென வள்ளலார் பாடியுள்ளார்.

 

எனைப்பெற்ற தாய் தந்தையரோ, நேயரோ, மற்றவரோ, இங்கே தனித்தனியே பிரிந்து செல்லும் போது (மறைந்த போது) அந்தப் பிரிவைத் தாம் கண்டும், கேட்டும், மிக வேதனை அடைந்ததை அவர் தமது பாக்களில் தெரிவித்துள்ளார்.

 

எனவே, மரணமிலாப் பெருவாழ்வினை மனித குலம் அனனவரும் பெற, அவர் வகுத்த கொள்கை கோட்பாடுகளையும், ஜீவ காருண்ய ஒழுக்கத்தையும், வாழ்வில், தவறாமல் கடைப்பிடிக்கும்படி, அவர் கேட்டுக் கொண்டார்.

 

வள்ளலார் ஏழைகளுக்காகவே இரங்கியவர். அவரது கொள்கைகளை அடியொற்றி, திண்டுக்கல் தயாநிதி சரவணானந்த சுவாமிகள், தயவின் அனுபவத்தை பரப்பியவர் என்றும், ஆண்டவர், மனித குலத்தை தன்னிலைக்கு மேலேற்றிக் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

 

திரு ராமானுஜம், மதுரை.

 

தனது உரையில், திண்டுக்கல் நகரின் மாண்பினை எடுத்துரைத்தார். இந் நகர் ஈன்ற ஞானிகள் (1) சத்திய ஞான சபாபதி சுவாமிகள் மற்றும் (2) தயாநிதி சரவணானந்தா என்றார்.

 

 சத்திய ஞான சபாபதி சுவாமிகளுக்கு பழனி ரோட்டில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதைத் தெரிவித்தார்.

 

அவர்களிடம் ஆன்மிகம் பயின்ற தயாநிதி சரவணானந்த சுவாமியவர்கள், திரு அருட்பாவுக்கு பல உரை விளக்கங்கள் எழுதியதை விரித்துரைத்தார். வள்ளல் பெருமான் தம்மை இறை நிலைக்கு, மேலேற்றியதே “தயவு” என்று கூறியதையே, தமது வாழ்க்கையில் கொள்கையாகக் கொண்டு, சரவணானந்த சுவாமிகள் வாழ்ந்ததைச் சுட்டிக் காட்டினார்.

 

வள்ளலாரைப்பற்றிய செய்திகள், www.vallalar.org என்ற இணைய தளம் மூலம் இதுவரை வெளிவந்து, வெளி நாடுகள் எங்கும், சுத்த சன்மார்க்கக் கொள்கைகள் பரப்பப்பட்டு வருவதை விவரித்தார்.   

 

 ராமநாதபுரம் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்ட் பொறுப்பாளராக இருந்த, திரு ஜோதி முருகன் அய்யாவும், கோயம்புத்தூரைச் சேர்ந்த, சிங்கப்பூரில் வசிக்கும் அன்பர், திரு சிவக்குமாரும், அமெரிக்காவில், வசிக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த அன்பர் திரு செந்தில் மருதையப்பனும் இணைந்து, பெருமுயற்சியில் இந்தப் பணியினைச் செய்து வருவதைத் தெரிவித்தார்.

 

அதனை அடுத்து, www.vallalarspace.com என்னும் புதிய இணைய தளம் 2 மாதங்களுக்கு முன், அன்பர் திரு செந்தில் மருதையப்பன் அவர்களின் பெருமுயற்சியால், துவக்கப்பட்டுள்ளதையும், பல்வேறு தலைப்புக்களில் அது இயங்கினாலும், வள்ளல் பெருமானின் திரு அருட்பா பாடல்கள், மேற்கண்ட இணைய தளத்தின் மூலம் ஒலி பரப்பப் படுவதையும், இந்த இணைய தளத்தில், சன்மார்க்க சங்கங்கள் நடத்துவோருக்கு இடமளிக்கப் படுவதையும் அவர் விவரித்தார்.

 

சமீபத்திய நிகழ்வாக, , சோவியத் ரஷ்யாவின் வடக்குப் பகுதியில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற இடத்தில் வசிக்கும் ஸ்வேதா என்ற அன்பர் மேற்குறிப்பிட்ட இணைய தளங்கள் மூலம், வள்ளல் பெருமான் குறித்த தகவல்களைப் பெற்றதாகவும் தெரிவித்ததை விவரித்தார்.

 

ரஷ்யாவில், ஏற்கெனவே www.advatya.org என்னும் இணைய தளத்தின் மூலம் ஆன்மீகச் செய்திகள் யோகா போன்றவையும், இணைய தளத்தில் வெளியிடப்பட்டு வருவதை ஸ்வேதா கூறியுள்ளதையும் அவர் தெரிவித்தார்.

 

www.ramalingaswamigal.org என்ற இணைய தளத்தின் மூலம் ராமலிங்க அடிகளின் கொள்கைகளை ரஷ்யாவில் பரப்பப் பட்டு வருவதை அவர் தெரிவித்ததையும் கூறினார்.

 

இதுவரை ஆன்மீகம் பரப்பிய ஞானிகளின் கருத்துக்களில், வள்ளல் பெருமான் கூறிய கொள்கைகளும், கருத்துக்களும், மிக உயர்ந்த கருத்துக்கள் எனவும், அவற்றை, அங்குள்ள மடத்தில் வாழும் துறவிகள் கற்று வருவதாகவும் ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

 

 ரஷ்யத் துறவிகள், ராமலிங்க அடிகளின் கொள்கைகளில் பெரும்பற்றுக் கொண்டு, தமிழகம் வந்து, அதனைப் பற்றிய முழுமையான செய்திகளைத் தெரிந்து கொண்டு,  ரஷ்யா சென்றுள்ளனர் என்று ஸ்வேதா கூறியுள்ளார்.

 

சுமார் 40 குருமார்கள், மாஸ்கோவிலிருந்து, ரஷ்ய நாட்டின் பல்வேறு இடங்களுக்கு, குழுக்களாக,  வள்ளல் பெருமானின் சீரிய நெறிகளைப் பரப்பத் திட்டமிட்டு உள்ளதாக ஸ்வேதா தெரிவித்ததை அவர் கூட்டத்தில் விவரித்தார்.  

 

ஸ்வேதா எனும் அந்தப் பெண்மணி வசிக்கும் இடத்திலிருந்து13 மணி நேரப் பயணத் தூரத்தில் உள்ள நிழ்நி நொவ்கொரொடு (Nizhnyi Novgorod Manestery) என்ற துறவியர் மடாலயத்தில், என்கிருந்து பார்த்தாலும்,, தெரிவதற்கு வசதியாக, 8 மீட்டர் உயரத்தில், ராமலிங்க வள்ளலாரின் சிலை அமைக்கப்பட உள்ளதாகவும், இதுவரை, ஒளி நெறி பற்றிய ஒரு சில பாடல்கள் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், வள்ளல் பெருமான் இயற்றிய, சத்தியப் பெரு விண்ணப்பம், கூடிய விரைவில் ரஷ்ய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், ஸ்வேதா கூறியுள்ளதை, அவர் விவரித்தார்.

 

www.vallalarspace.com ல் தாமும் இணைவதற்கு, அழைப்பு வரப்பெற்றுள்ளதையும், கூடிய விரைவில், இந்த இணைய தளத்தில், தம்மை, இணைத்துக் கொள்ள உள்ளதாகவும், ஸ்வேதா கூறியுள்ளதை அவர், விளக்கினார்.

 

கம்யூனிஸ்டு நாடான ரஷ்யாவில், வள்ளல் பெருமானின் மூலம், அருள் ஆட்சி துவங்கியுள்ளதையும், அது, வெகு வேகமாகப் பரவுவதையும், இந்த சூழ்நிலையில், இணைய தளம் மூலம் ஸ்வேதா தெரிவித்த தகவல்கள், இக் கூட்டம், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களால் திண்டுக்கல்லில் இன்று (29.6.2008), நடத்தப் பட்டு வருவதால், முக்கியத்துவம் பெருகிறது என்றார்.

 

திரு விச்சலன், தலைவர்.

 

தாம் சில காலத்துக்கு முன், தயாநிதி சரவணானந்த சுவாமியைக் காணச் சென்றிருந்த போது, வள்ளலாரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல், சிறப்பாக,  கம்யூனிஸ்டு மற்றும் திராவிடர் கட்சியினருக்கு உண்டென்றார்.

 

ஷேக்ஸ்பியர் நாடகத்தில்,

 

 யாகூ – நீ கொடியவன்

இயற்கைச் சீற்றத்தைக் காட்டிலும் கொடியவன்.

பசியைக் காட்டிலும் கொடியவன் என்கிறார்.

 

இதிலிருந்து, பசியின் கொடுமையை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.  அதனைப் போக்கவே,  வள்ளலார் அருந்தொண்டாற்றினார்.

 

ஒருமுறை மகா கவி தாகூர் அவர்கள், தேசத் தந்தை மகாத்மா காந்தியிடம், கவிதையைப் பற்றி நீங்கள் அறிவீர்களா ? எனக் கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு மகாத்மா காந்தி அவர்கள், எனக்குத் தெரிந்த ஒரே கவிதை ஏழைகளில் பசிதான் என்றுள்ளார்.

 

பசி நீக்கப்படாவிட்டால் என்ன நடக்கும் ?

 

பிரஞ்சு புரட்சியே அதற்கு நிதர்சனமான சாட்சியாகும்.

 

கார்ல் மார்க்ஸ் அவர்கள், சமூகத்தில், வேலையின்மை, வறுமை, கற்பழிப்பு சம்பவங்கள் எல்லாம் நடைபெறுவதற்கு மூல காரணமே, பசியின் கொடுமைதான் என்று கூறியுள்ளார்.

 

ஆக, கவிஞர் பெருமக்களும், கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் தெரிவிப்பது என்னவெனில், சமுதாயத்தில், தோன்றும், பிரச்னைகள் எல்லாவற்றிற்கும், அடிப்படைக் காரணம், பசியே.

 

ஆங்கிலக் கவிஞர் கோல்டுஸ்மித் பசியின் கொடுமையை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

 

மணிமேகலை சங்க காலத்தில், பசியின் கொடுமையை அறிந்து அதனைப் போக்குவதற்கு அரும்பாடு பட்டார்.

 

அக் காப்பியத்தில், ராஜமாதேவி, அறமெனப்படுவது யாது ? எனின், மன்னுயிர்க்கெல்லாம் அன்பு செய்வதே என்கிறார்.

 

மணிமேகலையின் மறு பதிப்பாக வள்ளலாரைப் பார்க்கிறோம். எனவே, அவரது தன்மையை விரிவாக விளக்குவதற்காகவே, “மணிமேகலையாய் வள்ளலார்” என்று ஒரு தலைப்பும் கொடுத்தோம்.

 

எந்த ஒரு பொருள், தனக்குத்தான் மாறுபட்டு விளங்குகிறதோ, அதுதான் வளர்ச்சி.

 

அது இயற்கைக்கும் பொருந்தும், சமுதாயத்துக்கும் பொருந்தும்.  உதாரணமாக, இயற்கைத் தாவரங்கள், முதலில் தளிராகவும், பின்னர், பூவாகவும், அதற்குப் பிறகு காய் நிலையிலும், பின்னர் கனியாகவும், அதற்குப்பின் மறுசுழற்சியாக, மீண்டும்,  விதையாகவும் ஒவ்வொன்றிலிருந்து மற்றொன்று மாற்றமடைகின்ற நிலையினை எடுத்துரைத்தார்.

 

 இது ஒரு நீண்ட தொடர் நிகழ்ச்சியாகும்.

 

வள்ளலார், தனக்குத் தானே மாறுபட்டு விளங்கினார்.

 

அவர், சமரசம் பேசுபவரல்லர். சமூகத்தில், சமுதாயத்தில்,  நிகழும் ஒழுக்கக் கேடுகளை, சாடுபவர். நிலை மறுப்பின் நிலை மறுப்பு. என்று தமது கருத்துரையினை நிறைவு செய்தார்.

 

திரு சோமசுந்தரம்.

 

இந்தக் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறியதும், கூட்டம் இனிதே நிறைவுற்றது.

 

           இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகரில் இருந்தும், மதுரை மற்றும், திண்டுக்கல்லின் சுற்று வட்டாரங்களிலிருந்தும், பொதுமக்களும், சன்மார்க்க அன்பர்களும், சுமார் 80 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     

 

 

Tags: