Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
பரஞானம்-VIII
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

பரஞானம்-VIII


எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்று மண்ணுலகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களிடத்தும் வள்ளலார் காட்டிய அருள் நெறி, எல்லாச் சத்திகளும், எல்லாச் சத்தர்களும், எல்லாத் தலைவர்களும் அறிந்துக் கொள்ளுவதற்கு மிகவும் அரியதாய், எல்லாத் தத்துவங்களுக்கும் எல்லாத் தத்துவிகளுக்கும் அப்பால் அப்பாலாய் விளங்கும் ஓர் சுத்தஞான வெளியில் தமக்கு ஒரு விதத்தாலும் ஒப்புயர்வு சிறிதும் குறிக்கப்படாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தரிசிக்கச் செய்து, சுத்த சிவ நிலையான ஏறாநிலைக்கு ஏற்றிவிட்டது. ஆகவே இப்போது வள்ளலாரும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ஒன்றாகிவிட்டனர். எனவே இப்பொழுது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னில் பாதியாக வள்ளல் பெருமானாரை கொண்டுள்ளார்- ½ + ½ நிலை.


மண்ணுலகத்தில் மனிதப்பிறப்பின் நோக்கமே எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியிடத்தில் தன்னை இணைத்துக்கொண்டு என்றும் மரணமில்லாத நித்திய தேகத்தோடு இருப்பதாம், எனவே தன்னைப்போல் அனைவரும் மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ வேண்டும் என்பதே வள்ளல் பெருமானின் அவா.

எனவே வள்ளல் பெருமானார் விருப்பம் போல் “துஞ்சிய மாந்தரையெல்லாம் சன்மார்க்கத்திற்கு அழைத்து” அவர்களுக்கு தயவு நெறியை அருள் நெறியைப் போதிப்பதற்காக, இறைவனே அருட்பெருஞ்ஜோதியை வள்ளல்பெருமானாருக்கு அளித்தார்.

அஞ்சலை நீ ஒரு சிறிதும் என்மகனே
அருட்பெருஞ்ஜோதியை அளித்தனம் உனக்கே
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே
சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே.....

இதுவரை வந்த மார்க்கங்கள் எல்லாம் போதிக்காத புது நெறியே சுத்த சன்மார்க்க நெறி என்றும், தான் கண்ட மார்க்கம் அன்பு-கருணை-தயவு வழியில் எல்லா உயிர்களிடத்தும் இறைவனைக் காணும் அருள் நெறி என்றும், அன்பு என்ற சாதனம் மூலம் பேரொளியைக் காணும் புதுநெறி என்றும் கூறுகிறார்:

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்

சென்னெறி அறிந்திலர் இறந்திறந்துலகோர்

செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமுதருள் கின்ற சுத்த சன்மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்ற என் அரசே

தனிநடராஜ என் சற்குரு மணியே

மேலும், பல்வேறு மார்க்கங்களில் உழன்று பேரொளியைத் தரிசிக்காமல் எத்தனையோ ஆத்மாக்கள் உள்ளனவாம். அவர்களெல்லாம் இதுவரை உண்மையை உணரவில்லையாம். கிடைத்தற்கரிய இம்மானுட பிறவியில் உண்மை அறியாது தங்களுடைய காலத்தை வீணடித்திருக்கின்ற ஏதாவது ஒரு சாதனங்கள் வழியாக இறைவனைக் காண முயன்று, தோல்வியுற்று சில அற்பச் சித்திகளை மட்டும் பெற்றனராம். இதனை ஞானசரியையில்:

கண்ட தெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்தெலாம் வீணே

உண்டதெலாம் மலமே உட்கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந்திலிரே

விண்டதனால் என் இனிநீர் சமரச சன்மார்க்க

மெய்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருநன் குணர்ந்தே

எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்

இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே

நான் உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன் தன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான் உரைத்த மணிமன்றில் நடம்புரி எம்பெருமான்

வரவெதிர் கொண்டவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே

தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவிர்

தெரிந்தடைந்தென் உடன் எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

யானடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே

“வள்ளல் பெருமானார் அடைந்த சுகம் யாதெனில் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, தேகத்தையே நித்தியத் தேகமாக்கி, எக்காலத்தும் அழியாதப் பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெறுவதையே இங்கு கூறுகிறார்.

மேலும் மேற்குறித்த பாடலில் உள்ள ஏனுரைத்தேன்,“ இரக்கத்தால் எடுத்துரைத்தேன் என்பதும், யானடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே என்று தன்னைப்போல் யாவரும் இச்சுகத்தினை அடைய வேண்டும்” என்று மண்ணுலகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களிடத்தும் வள்ளலார் காட்டியத் தயவு நெறி, எல்லாச் சத்திகளும், எல்லாச் சத்தர்களும், எல்லாத் தலைவர்களும் அறிந்துக் கொள்ளுவதற்கு மிகவும் அரியதாய், எல்லாத் தத்துவங்களுக்கும், எல்லாத் தத்துவிகளுக்கும் அப்பால் அப்பாலாய் விளங்கும் ஓர் சுத்தஞான வெளியில் தமக்கு ஒரு விதத்தாலும் ஒப்புயர்வு சிறிதும் குறிக்கப்படாதத் தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தரிசிக்கச் செய்து, சுத்த சிவ நிலையான ஏறாநிலைக்கு ஏற்றிவிட்டது. ஆகவே இப்போது வள்ளலாரும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ஒன்றாகிவிட்டனர். எனவே இப்பொழுது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னில் பாதியாக வள்ளல் பெருமானாரைக் கொண்டுள்ளார்- ½ + ½ நிலை.

ஆகவே இப்பொழுது எல்லாம் வல்ல சிதம்பரம் ராமலிங்கம், மண்ணுலகத்தில் இருக்கும் ஆன்மாக்களைப் பக்குவப் படுத்தி, தன்னுடைய அருளரசாட்சியில் அவர்களையும் கருவிகளாகப் பயன்படுத்தி, சுத்த சன்மார்க்க கருத்துகளையும், சன்மார்க்க ஞானத்தையும் வழங்கி அவர்களுக்கும் மரணமில்லாப் பெருவாழ்வையும், ஆன்ம லாபத்தையும் வழங்கி வருகிறார் என்றால் அது மிகையாகாது. இது உண்மை மற்றும் சத்தியமாகும்.

தொடரும்....,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

தகவல் உதவி

ஸ்ரீ ஞானகுரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள்