Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
பரஞானம்-VII

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

பரஞானம்-VII

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஞான வழியில் செல்லும் ஆன்மாவின் அகவளர்ச்சிக்கு ஏற்பவே அவர்களுக்கு ஞானபரிபூரணத்தை வழங்குகிறாராம். செயற்கையாக ஞானவழியில் செல்வதுப் போல் பாவனைச் செய்தாலும், எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார் என்பதை நினைப்பதாலும் மட்டும், ஞான மார்க்கத்தில் செல்ல முடியாதாம். பிற உயிர்களின் துன்பத்தை எவ்வாறு நீக்குகிறோம், மற்றும் பிற உயிர்களுக்காகத் தங்களுடைய சுதந்திரத்தை எவ்வாறு அர்ப்பணிக்கிறோம், என்பதைப் பொறுத்து தான், ஆன்மா ஞானத்தின் ஞான நிலையில் பிரவேசிக்கிறதாம்.

எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானார் இம்மண்ணுலகத்திற்கே குருவாக இருப்பதால் , சுத்த சன்மார்க்கத்தில்- பக்குவநிலையில் உள்ள ஆன்மாக்கள் அனைவரும் இறை ஞானத்தையும், அருள்ஜோதியையும் எங்கும் உணர்ந்துக்கொண்டு தயவு வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்றனர்.

ஆகவே, பக்குவ நிலையில் உள்ள ஆன்மாக்கள் மூலம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு சமுதாயத்தில் ஞானபுரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. ஆகவே மனித தேகம் எடுத்துள்ள இவ்வான்மா தன்னுடைய அகவளர்ச்சிக்காக பரோபகாரம் மூலம் மண்ணுலகத்தில் இருக்கும் பிற உயிர்களிடம் உயிர் பேதம், சாதிபேதம், மத பேதமின்றி தயவு வாழ்க்கை வாழ்ந்தால், அதுவே அகத்தில் இருக்கும் அருட்ஜோதியை உணரச் செய்யுமாம்.

இதனை எவ்வாறு தான் பெற்றுக்கொண்டார் என்பதையும், அனைத்து மக்களும் இதனை உணர வேண்டும் என்பதற்காகவும், திருவருள் சம்மதமாக எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானார் தன்னுடைய உடல் ஆவி பொருள் எல்லாம் பிற உயிர்களின் நலனுக்காக எவ்வாறு அர்ப்பணித்தார், என்பதை இப்பாடல் மூலம் உலகிற்கு உணர்த்துகிறார்.

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்

கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்

நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்க நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.

தன்னுடையச் சுதந்திரங்களை பிற உயிர்களின் நலனுக்காக அர்ப்பணித்ததால் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை அவர் வேறு பரம்பொருள் வேறு என்ற நிலையை மாற்றி அர்த்தநாரியாக இருக்கச் செய்தது.

வள்ளல் பெருமானார் உடல் ஆவி பொருளை இறையிடம் ஒப்படைத்தல்:

(விரிவஞ்சி ஒரு சில பாடல்கள் மட்டுமே இங்கே தரப்படுகின்றன.)

இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற் கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை அருட்சோதி இயற்கை என்னும்
துப்பாய உடலாதி தருவாயோ இன்னும்எனைச் சோதிப் பாயோ
அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ் வடியேனால் ஆவ தென்னே

சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித்
தந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே
உத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென்
உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
இத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும்
ஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர்
எத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே

மற்றும்

என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான்

தன் உடலும் தன்பொருளும் தன் உயிரும்-என்னிடத்தே

தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன்

வந்தான் வந்தான் உள் மகிழ்ந்து.

வள்ளல் பெருமானாரும் , பரம்பொருளும் ஒன்றான நிலை:

தங்கோல் அளவது தந்து அருட்ஜோதிச்

செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே

தன் பொருள் அனைத்தினையும் தன் அரசாட்சியில்

என் பொருள் ஆக்கிய என் தனித் தந்தையே

தன் வடிவனைத்தையும் தன் அரசாட்சியில்

என் வடிவாக்கிய என் தனித் தந்தையே

தன் சித்தனைத்தையும் தன் சமூகத்தினில்

என் சித்தாக்கிய என் தனித் தந்தையே

தன் வசமாகிய தத்துவ மனைத்தையும்

என் வசமாக்கிய என் உயிர்த் தந்தையே

தன்னையும் தன் அருள் சக்தியின் வடிவையும்

என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே

தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல்

என்ன இயற்றிய என் தனித் தந்தையே

தன் உரு என் உரு தன் உரை என் உரை

என்ன இயற்றிய என் தனித் தந்தையே

அகவல்

எனவே எல்லாம் வல்ல ஸ்ரீ சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள் இப்பொழுது இரண்டரை நிலையில் ½ + ½ அருட்ஜோதியாக இருந்துக்கொண்டிருக்கிறார். இப்பொழுது அவர் வேறு , பரம்பொருள் வேறு என்ற நிலை மாறி இருவரும் ஒன்றான நிலையில் இருந்துக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய நிலையில் இருந்துக்கொண்டிருக்கும் எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு சிதம்பரம் ராமலிங்கம் , மண்ணுலகத்தில் இருக்கும் ஆன்மாக்களைப் பக்குவப்படுத்தி, தன்னுடைய அருளரசாட்சியில் அவர்களுக்கும் பங்களிக்க விரும்பி, ஞான மார்க்கத்தில் அழைத்து செல்கிறார். இது உண்மை, இது சத்தியம்.

மேலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஞான வழியில் செல்லும் ஆன்மாவின் அகவளர்ச்சிக்கு ஏற்பவே அவர்களுக்கு ஞான பரிபூரணத்தை வழங்குகிறாராம். செயற்கையாக ஞானவழியில் செல்வது போல் பாவனைச் செய்தாலும், எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார் என்பதை நினைப்பதாலும் மட்டும், ஞானமார்க்கத்தில் செல்ல முடியாதாம். பிற உயிர்களின் துன்பத்தை எவ்வாறு நீக்குகிறோம், மற்றும் பிற உயிர்களுக்காகத் தங்களுடைய சுதந்திரத்தை எவ்வாறு அர்ப்பணிக்கிறோம், என்பதைப் பொறுத்து தான் ஆன்மா ஞானத்தின் ஞானநிலையில் பிரவேசிக்கிறதாம். அகவளர்ச்சிப் பக்குவத்தின் உச்ச நிலைக்கு செல்கிறதாம்.

தொடரும்....,

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

தகவல் உதவி

ஸ்ரீ ஞானகுரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள்