அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
சமயப்பற்றை விட மிக கொடியது சாதி பற்றே! சமயப்பற்றை எப்பொழுது வேண்டுமானாலும் மிக எளிதாக நீக்கிக்கொள்ளலாம். ஆனால் சாதிப்பற்று அவ்வாறு இல்லை, எனவே சாதிப்பற்றை நீக்க ஒவ்வொரு சன்மார்க்க குடும்பத்தினரும் தக்க முயற்சி எடுக்க வேண்டியுள்ளதாம். அப்பொழுது மட்டுமே எல்லாம் வல்ல ஸ்ரீராமலிங்க சுவாமிகளின் அன்புக்கு பாத்திரமாவோமாம்.
சன்மார்க்கியின் பணி
சன்மார்க்கம் என்றாலே மத சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம் என்று இரு பிரிவினை உருவாகி, ஒருவருக்கொருவர் வாத எதிர் வாத கருத்துகளைக் கூறிக்கொண்டும், ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டியும் வருகின்றனர்.
வேறு எந்த மார்க்கத்திலும் காணப்படாத ஒன்று இறைமார்க்கமான சன்மார்க்கத்திற்கு வர காரணம் என்ன? என்று ஆராயும் போது பக்குவமின்மை மற்றும் அறியாமையே இதற்கெல்லாம் மூல காரணம் என்று தெரிய வருகிறது.
சன்மார்க்கத்தில் எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு அகவிளக்கத்தை தேடுங்கள் என்று தெளிவாக பல பாடல்கள் மூலம் கூறுகிறார். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சிலர் ஒப்புமை மற்றும் புற விளக்கம் காரணமாக திருவருட்பாவை தவறாகவே போதிக்கின்றனர்.
திருவருட்பாவை அகவிளக்கத்தோடு பார்க்காமல் புற விளக்கத்தால் பார்ப்பதாலே அவர்களுக்கு பல வித வேறுபாடு தென்படுகிறது எனலாம். திருவருட்பா மனிதனை உயர்வடையும் நோக்கத்தோடு அதாவது சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக.. என்ற தலையாய பணியை மையப்படுத்தி திருவருளால் எல்லாம் வல்ல ஸ்ரீ ராமலிங்க அடிகள் மூலம் உணர்த்தியது ஆகும்.
திருவருட்பா சத்தியப் பெரு விண்ணப்பத்தில்:
“எல்லாமானவராயும் ஒன்றுமில்லாதவராயும், எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித் தலைமைக் கடவுளே! குமார பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளத்தேயிருந்து பயிற்றுவித்தருளினீர்.”...
இதன் உண்மை என்ன? அவர் அருட்பெருஞ்சோதியை சிறு வயதில் உணர்ந்தார், அவரருளாலே எல்லா கலைகளையும் கற்றார், பிறகு அருட்பெருஞ்சோதியில் கலந்து, அவராகவே ஆகிவிட்டார். எனவே அவர் எழுதிய பாடல்களை 11.4.1871க்கு பிறகும் அதற்கு முன்பும் என்று தரம் பிரிப்பது என்பது நமது பணி ஆகாது.
மேலும் புற ஆராய்ச்சியால் அவருடைய செம்மையான மனநிலையை யாராலும் புரிந்துக்கொள்ள முடியாது. அவரருளால் மட்டுமே அவரை புரிந்துக் கொள்ள முடியும், இதற்கு ஜீவ கருணை தயவு வாழ்க்கை மற்றும் குரு பக்தி மிகவும் அவசியம்.
ஜீவ கருணை மற்றும் தயவு இருக்குமிடத்தை தேடி அவரே வருவார், அன்பு செய்வாரை அவர் அறிவார்.
இன்றைக்கு புளு டூத்( Blue tooth) எப்படி வேலை செய்கிறதோ அது போல் வள்ளலாருடைய தனிப்பெருங்கருணை எங்கும் பரவியிருக்கிறது. நாம் அதனை பெறுவதற்கு நம்முடைய கருணையை -தயவை தூண்ட வேண்டும்( Switch on). அப்பொழுது அவரருளால் சாகாக்கல்வி மற்றும் சன்மார்க்கத்தின் உண்மை நமக்கு கிடைக்கப்பெறும். (இப்பொழுது இந்த உடம்பில் இருக்கிறேன், பிறகு எல்லா உடம்பிலும் புகுந்துக்கொள்வேன்.)
எனவே சன்மார்க்க அன்பர்கள் உலகியியல் தயவு வாழ்க்கையில் சத்விசாரத்தை தீபம் முன்பு செய்து வர வேண்டுமாம். அப்பொழுது மட்டுமே நிறைய உண்மைகள் தெரிய வருமாம். சாகாக் கலையில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வள்ளல் பெருமானை தரிசிக்கவும் இயலுமாம்.
எனவே அவர் துணையின்றி அவர் எழுதிய உரைநடையை வைத்துக்கொண்டு அவர் அடைந்த பேறுகளையும், மற்ற விவரங்களையும் செய்தி வாசிப்பது போல் கூறுவதால் நாம் அவற்றை எக்காலத்திலும் உணர இயலாதாம்.
உதாரணத்திற்கு வள்ளல் பெருமானார் கூறிய சொப்பனம், சுழுத்தி, ஜாக்ரத், துரியம், துரியாதீதம், சிவதுரியம், குரு துரியம், மற்றும் பரதுரியத்தை எடுத்துக்கொள்வோம், இவையெல்லாம் தியானம் மூலமே உணர வேண்டியிருக்கிறதாம். எனவே அவர் அருள் நிச்சயம் தேவையாம்.
மேலும் சன்மார்க்கத்தை அவரே நடத்துகிறார் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டியுள்ளதாம். எனவே நம்முடையீர் அறியாமை மற்றும் மாயையின் காரணமாக நானே சன்மார்க்கத்தை நடத்துகிறேன் என்று பெருமை பாராட்டியும், புகழைத்தேடியும் செல்ல கூடாதாம். அவரருளால் மட்டுமே அனைத்தும் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை எவ்விடத்தும் எப்பொழுதும் மறக்கக்கூடாதாம், அப்பொழுது மட்டுமே உண்மை விளக்கம் நமக்கும் கிடைக்கப்பெறுமாம்.
மேலும் சன்மார்க்கத்திற்காக எல்லாம் வல்ல பரம்பொருள் 647 கோடி மகா ஞான சித்திகளை வள்ளலாருக்கு அளித்திருக்கிறார். எனவே அவரை ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு அவர் நம்மிடையே சாகாநிலையில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் என்பதை சத்தியமாக உணர்ந்து அவர் சொன்ன மார்க்கத்தை உலகியியலில் கடைப்பிடிக்கும் போது நமக்கு உண்மை பட்டப்பகல் வெளிச்சமாக தெரிய வருமாம். அதனை விடுத்து புகழுக்காக புற ஆராய்ச்சி கண்ணோடு திருவருட்பாவை தரம் பிரிப்பது மற்றும் 11.4.1871 முன்பும் பின்பும் என்பதெல்லாம் சன்மார்க்கியின் பணியாகாதாம்.
ஆகவே சன்மார்க்கியின் பணி என்பது எழுத்தளவில் அல்லாது செயலளவில் சாதி, மத, சமயப்பற்று இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டுமாம். அதற்கு நம்முடைய வீட்டையும், உற்றார் உறவினரையும் சாதி, மத பற்று இல்லாமல் இருக்க வேண்டி நம்முடைய பணியை தக்கவாறு செய்து பழக வேண்டுமாம். அப்பொழுது மட்டுமே நாம் உண்மையான சன்மார்க்கியாம், இதனையே குரு ராமலிங்கம் தன்னுடைய கடைசி காலத்தில் சொல்லி வந்தாராம். என்னிடத்தில் இவ்வளவு பழகியும் மக்கள் என்னை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்பது இதுவேயாம்.
ஆகவே தீண்டாமை கொடுமை மற்றும் சாதி, மத நம்பிக்கை அற்று ஒவ்வொரு குடும்பத்தாரும் வாழ தக்க முயற்சி செய்வோமேயானால் நாம் அவர் கூறிய அக இனத்தவர் ஆவோம். அவர் அன்புக்கு பாத்திரமாவோம்.
பேருற்ற வுலகிலுறு சமயமத நெறியெலாம்
பேய்பிடிப் புற்ற பிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென வுணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற்றங்கு மிங்கும்
போருற்றிறந்து வீண் போயினா ரின்னும் வீண்
போகாத படி விரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
பொருளினை உணர்த்தி யெல்லாம்
ஏறுற்ற சுகநிலை யடைந்திடப் புரிதிநீ
யென்பிள்ளை யாதலாலே
இவ்வேலை புரிகவென் றிட்டனம் மனத்தில் வே
றெண்ணற்க வென்ற குருவே..........
விளக்கம்:
இவ்வுலகில் மக்கள் ஜாதி, மதம், இனம் முதலிய பேயால் பிடிப்பட்டு இருக்கின்றனர். நீ என் பிள்ளை ஆதலாலே விரைந்து சென்று மக்களுடைய குழப்பத்தைப் போக்க வேண்டும். மதத்தின் பெயராலே மக்கள் வேற்றுமை காண முற்படுகின்றனர். மதங்கள் பொய் என்று உரை என்று ஆதி பரம்பொருள் –ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவர் உரைக்கிறார்.
எனவே சமயப்பற்றை விட மிக கொடியது சாதி பற்றே! சமயப்பற்றை எப்பொழுது வேண்டுமானாலும் மிக எளிதாக நீக்கிக்கொள்ளலாம். ஆனால் சாதிப்பற்று அவ்வாறு இல்லை, எனவே சாதிப்பற்றை நீக்க ஒவ்வொரு சன்மார்க்க குடும்பத்தினரும் தக்க முயற்சி எடுக்க வேண்டியுள்ளதாம். இதுவே சன்மார்க்கியின் பணியாம். இதனை விடுத்து திருவருட்பாவை வருடம் 1871க்கு முன்பும், பிறகும் என்று தரம் பிரிப்பது என்பது நம்முடைய பணியே இல்லையாம்.
தகவல் உதவி:
1. எல்லாம் வல்ல ஸ்ரீஞானகுரு வள்ளல் பெருமானார்.
2. தயா ஒளி சரவணானந்தா சுவாமிகள்.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
*************