Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
இறை நிலை- IX

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

இறை நிலை- X

சிவஞானம்

சாஸ்திர வித்தைகள் மூலம் இறைஞானம் வெளிப்படாது. அன்பு செய்தால் மட்டுமே இறைஞானம் வெளிப்படுமாம், அதனால் தான் வள்ளலார் தன்னை ஏறாத நிலைமிசை ஏற்றி வைத்தது தயவு என்கிறார், திருமூலரும் அன்பு செய்வாரை சிவன் அறிவன் என்கிறார். வள்ளலாரும் இதனை மிக எளிதாக எவ்வுயிரையும் தம்முயிராக பார்த்தலே இறை ஞானத்தின் முதல் வெளிப்பாடு” என்கிறார்.

சன்மார்க்க ஒழுக்க நெறியில் நின்று ஆணவம், கன்மம் மற்றும் மாயையை விட்டொழித்தால் அருள் ஒளியை- ஞான ஒளியை -சிவஒளியை திருசிற்றம்பலம் என்கிற புருவ மத்தியில் கண்டு தரிசிக்கலாம், என்பதை இறைநிலை ஒன்பதாவது பகுதியில் பார்த்தோம். இப்பொழுது எவ்வாறு சிவ ஞானத்தை இறைவனிடமிருந்து பெறலாம்.

எல்லாம் வல்ல ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் அருள் ஒளியைக் கண்டு அவ்வொளியிடமே திருவருள் ஞானத்தை அருளுமாறு வேண்டுகிறார்.

கண்ணே கண்மணியே- கருத்-தேகருத் தின் கனி வே

விண்ணே விண்ணிறைவே- சிவ-மேதனி மெய்ப்பொருளே

தண்ணேர் ஒண்மதியே- எனைத் -தந்த தயாநிதியே

உண்ணேர் உள்ளொளியே-எனக் குண்மை உரைத்தருளே.

திருவருட்பா : 4253.

மேலும்

வளியே வெண்ணெருப் பே- குளிர்-மாமதி யேகனலே

வெளியே மெய்ப்பொருளே-பொருள்-மேவிய மேனிலையே

அளியே அற்புதமே-அமுதே அறிவே அரசே

ஒளியே உத்தமனே-எனக்-குண்மை உரைத்தருளே

திருவருட்பா : 4254.

இவ்வாறு வள்ளல் பெருமானார் ஞான ஒளியை தன்னுள் தரிசித்து , அவ்வொளியை (- பரம்பொருளை-அருட்பெருஞ்சோதியை) வேண்டி தொழுது தனக்கு திருவருள் ஞானத்தை வழங்குமாறு பிரார்த்தனை செய்கிறார்.

திருவருள் ஞானம் கிடைக்கப்பெற்றால் ஒருவன் இவ்வுலகத்தில் இருக்கும் அனைத்து நூல்களையும் ஒரு நொடியில் கற்றுக்கொள்வான். வள்ளல் பெருமானின் வரலாறு அனைவருக்கும் தெரியும், ஓதாமலே அனைத்தையும் கற்றார், பிற நூல்களுக்கும் பொழிப்புரை வழங்கினார். இவையெல்லாம் திருவருள் ஞானத்தால் மட்டுமே சாத்திய மாயிற்று.

இறை திருக்காட்சி

அருள் ஒளியை-சிவஒளியை-ஞானஒளியைக் கண்டு தரிசித்த அனுபவத்தை வள்ளலார் கீழ்வருமாறு பாடுகிறார்.

அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை

அருட்பெருஞ் ஜோதியை அரசை

மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை

வள்ளலை மாணிக்க மணியைப்

பொருளெலாம் கொடுத்தேன் புந்தியில் கலந்த

புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்

தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான

தீபத்தைக் கண்டுகொண்டேனே.

திருவருட்பா-3954

உரை

அனைத்து பேறுகளையும் அளித்த- அருளெலாம் அளித்த அருட்பெருஞ்சோதியை அரசே, மருளெலாம் தவிர்த்து உலகியியல் தருகிற மயக்கத்தை தவிர்த்து வாழ்வளித்த பெருமானே.

பொருளெலாம் கொடுத்தேன் புந்தியில் கலந்த- ஆன்மாக்கள் பெறும் அனைத்து நலங்களையும் கொடுத்த புண்ணிய நிதியே, தெருளெலாம்- பரந்த ஞான நிலையில் ஆன்மாவிற்கு மெய்ஞ்ஞான தீபத்தை விளங்கச் செய்யும் பெருமானை கண்டுக்கொண்டேன்.

இவ்வாறு ஆறாம் திருமுறையில் பல பாடல்கள் மூலம் இறை திருக்காட்சியை விவரிக்கிறார். விரிவஞ்சி ஒரு சில பாடல்கள் மட்டுமே இங்கே தரப்பட்டுள்ளது.

மேலும்

அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை

அருட்பெருஞ் ஜோதியை அடியேன்

என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த

எந்தையைக் கண்டு கொண்டேனே.

திருவருட்பா- 3955



இப்பாடலில் என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த பெருமான் என்று கூறுவது சிறப்பு. அதாவது உடம்பிலுள்ள எலும்பினை உருக்கி இன்பெலாம் அளித்த எந்தையைக் கண்டு கொண்டேனே. அன்பு பெருக பெருக ஊண் உருகி இறை அனுபவம் ஏற்படுமாம். இவ்வாறு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையெல்லாம் ஆறாம் திருமுறையில் அள்ளி வழங்குகிறார்.

எனவே எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானையே குருவாக ஏற்று சுத்த சன்மார்க்க நன்னெறியில் வாழ்க்கை நடத்தினால் அருள் ஒளியையும் தரிசிக்கலாம் திருவருள் ஞானத்தையும் பெறலாம். இது சத்தியம்.

திருவருள் ஞானம் கிடைக்கப்பெற்றால் அனைத்தும் கூடும். திருவருள் ஞானம் பெறுவதற்காகவே நான்கு வித ஒழுக்கநெறிகளையும் வள்ளலார் வகுத்தார். இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம் மற்றும் ஆன்ம ஒழுக்கம். இந்த நான்கு வித நெறிகளையும் கடைப்பிடித்தால் சிவஞானம் தானே வெளிப்படுமாம். இவ்விதமாக நான்கு நெறிகளையும் எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதியின் தனிப்பெருங்கருணையினால் கடைப்பிடிக்கும் போது தான் யார் என்பதும் சிவம் யார் என்பதும் தெரிய வரும்.

இப்பொழுது மீண்டும் திருமந்திட பாடலை கவனிக்கவும், உண்மை விளங்கும்.

தன்னை அறிந்து சிவனுடன் தானாக

மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்

பின் அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி

நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே

-திருமந்திரம் 8ம்தந்திரம்: 2331

விளக்கம்:

திருவருளால் ஒருவன் தன் உண்மை நிலையினை அறிந்து , பிற உயிர்களின் மேல் அன்பு பூண்டு வாடிய பயிரை கண்ட போது வாடுகிற நெஞ்சத்தை உடையவர்களுக்கு ஆணவம், கன்மம், மற்றும் மாயையாகிய மலங்குணம் அற்று பிறப்பறும் .மேலும் அவர்களுக்கு எல்லாம் வல்ல பரம்பொருள் சன்மார்க்க பேரொளியை திருவடி யுணர்வை உணரச்செய்வார், ஞானத்தையும் தந்தருள்வார்.

திருவருட்பாவிற்கு உரை எழுதினாலும், இக்கட்டுரையை எழுதுவதாலும் கூட இறைஞானம் வெளிப்படாது. அன்பு செய்தால் மட்டுமே இறைஞானம் வெளிப்படுமாம், அதனால் தான் திருமூலரும் அன்பு செய்வாரை சிவன் அறிவன் என்கிறார். எனவே தயவு -அன்பு-கருணை- இருந்தால் இறைஞானத்தை -(வாலறிவு)எளிதில் பெறலாம். இதனையே எளிதாக எவ்வுயிரையும் தம்முயிராக பார்த்தலே இறை ஞானத்தின் முதல் வெளிப்பாடு என்று வள்ளல் பெருமானார் கூறுகிறார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிர்

தம் உயிர் போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்

இடம் என நான் தெரிந்தேன்..

எனவே இப்பக்குவ நிலைக்கு ஒருமையுடன் வரும் வரை இறைஞானம் வெளிவராது , எனவே காலம் தாழ்த்தாது எவ்வுயிரையும் தம்முயிராக பாவித்தீர்களானால் நீங்கள் இறைக்கு அருகாமையில் இருப்பதை உணருவீர்கள்.


இறைநிலையை உணர இதைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை, இது சத்தியம்.

**************************

தகவல் உதவி:

1. எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதியின் தனிப்பெருங்கருணை.

குறிப்பு:

இறைநிலையை பணத்தாலோ, ஒரிரு நாட்கள் தியானத்தினாலோ உணர்த்த முடியாது, உடனே அனைத்தையும் பார்க்க வேண்டும், இறை அனுபவத்தை உணர வேண்டும் என்ற பேராசையினால் பலர் இன்றும் ஏமாறுகின்றனர். எனவே உண்மை குருவை உங்களிடம் தேடுங்கள், அவரையே பார்ப்பீர்கள், இது அனுபவ உண்மை.

**********************


P Sujatha
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு,
ஒருவர் சாத்திர நூல்களை படிப்பதாலோ,அதற்கு விளக்கம் சொல்லுவதாலோ இறை நிலையை நிச்சயம் அடைய முடியாது.சாத்திரம் எல்லாம் தடுமாற்றம் சொல்லுவது அன்றி அதனால் எந்த பயனும் இல்லை.இறைநிலையை அடைய எண்ணுகிற நமக்கு வள்ளலார் தயவு மார்க்கத்தை காட்டுகிறார்.அதனை அடைய காலம் இன்னும்இல்லைஎனவள்ளலார்சொல்லுகிறார்.இறைநிலை என்பது தயவு,கருணை,அன்பில் இறை நிலை தன்மையை நினைந்து,அறிந்து,உணர்ந்து அந்த இறை நிலையை நாம் அடைவது ஆகும்.நம்மால் முடிந்த சீவகாருணிய பணிகளை செய்து அருள்ஜோதி வள்ளலார் அருளிய அருட்பா,அகவல்,உபதேசங்களை குற்றமற குரு துணை கொண்டு படிப்போம்.அருள்ஜோதி வள்ளலார் தான் நமக்கு குரு.
ஜீவர்களுக்கு கருணையால் கருணை செய்து வாழ்வது தான் நாம் செய்யும் தானமும்,தவமும் ஆகும்.கருணை,தயவு ஒன்று தான் நாம் பெற வேண்டியது.நாமும் வள்ளலார் போல "அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்,ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என வேண்டுவோம்.வள்ளலார் கருணையுடன்,அருள்ஜோதிசுஜாதா.
Friday, October 9, 2009 at 23:57 pm by P Sujatha