அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
இறை நிலை- IV
ஓதி நின்று உணர்ந்து உணர்ந்து உணர்தற்கரிதாம்
ஆதி சிற்சபையில் அருட்பெருஞ்சோதி
அகவல் 84
சேக்கிழாரும் பெரிய புராணத்தில்:
உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
-பெரிய புராணம்
பரம்பொருளை எதனாலும் உணர முடியாது என்பதை மேற்கூறிய பாடல்கள் மூலமும், திருவருட்பா –திருவடிப்பெருமை மூலமும் உணரலாம். இத்தகைய இறையை தான் எவ்வாறு உணர்ந்தார் என்பதை கூறும் போது இது ஒரு மா தவம் என்றே குறிப்பிடுகிறார்.
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே
பெரிய தவம்புரிந்தேன் என் பெற்றி அதிசயமே
திருவருட்பா: 3044
மேலும் தான் பெற்ற கல்வியை பற்றி குறிப்பிடும் போது:
ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை
எடுத்து விடுத்து அறிவு சிறிதேய்ந்திடவும் புரிந்து
ஓதுமறை முதற் கலைகள் ஓதாமல் உணர
உணர்விலிருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டித்
தீதுநெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத் திருவருள்
மெய்ப்பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும்
போது மயங்கேல் மகனே என்று மயக்கெல்லாம் போக்கி
எனக்குள்ளிருந்த புனித பரம்பொருளே
திருவருட்பா : 3053
ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்சோதி
அகவல்: 24
ஆதி ஈறில்லா அருட்பெருஞ்சோதி
அகவல்: 128
மேலும் தான் பெற்ற காட்சியைப் பற்றி குறிப்பிடும் போது:
காட்சியும் காணாக் காட்சியும் அது தரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்சோதி
அகவல்: 154
அரிதாகி அரியதினும் அரியதாகி
அநாதியாய் ஆதியாய் அருளதாகிப்
பெரிதாகிப் பெரியதினும் பெரியதாகிப்
பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
கரிதாகி வெளிதாகிக் கலைகளாகிக்
கலை கடந்த பொருளாகிக் கரணாதீதத்
தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்
செழுங்கிரணச் சுடராகித் திகழும் தேவே
திருவருட்பா : 2083
மேலும் இது சன்மார்க்க காலம் என்பதால் உண்மையை உரைக்க ஆண்டவன் தனக்கு எல்லா வித சக்தியையும் அருளியதாகவும் கூறுகிறார்.
வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள்
ஐயறிவளித்த அருட்பெருஞ்சோதி
அகவல் 204
ஏறா நிலைமிசை ஏற்றி என்றனக்கே
ஆறாறு காட்டிய அருட்பெருஞ்சோதி -அகவல்: 18
எல்லாம் வல்ல சித்து எனக்கு அளித்து எனக்குனை
அல்லாதிலையெனும் அருட்பெருஞ்சோதி
-அகவல்: 298
சாஸ்திரங்கள் உண்மையை மறைத்து கூறியிருப்பதை மிக தெளிவாக எடுத்துரைக்கிறார்.
வேதகாமங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாகா மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை
திருவருட்பா- 5516
தோன்றிய வே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே
திருவருட்பா 4177
சாத்திரங்களெல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போல் காட்ட நேராவே- நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே
உற்றிங்கறிந்தேனுவந்து
திருவருட்பா- 5515
சாஸ்திரங்கள் உண்மையை உணர்த்தாது என்பதற்கான சில சித்தர்கள் பாடல்களும் இங்கு ஈண்டு ஒப்புதற்குரியது.
தேடுகின்ற புராண மெல்லாம் பொய்யே யென்றேன்
தேடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்தமென்றேன்
அகஸ்தியர் சூத்திரம் :30
சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம் பல
தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களேயென்றாடாய் பாம்பே
-பாம்பாட்டி சித்தர் பாடல்- 98
வியாசர்சொல்லும் பாரதத்தில் வெகுபொய் வீணாம்
மேதினியோர் மாய்கையினில் விரும்பச் சொன்னார்
ஆய்ந்துகவி பாடிவிட்டான் கம்பன் வம்பன்
அதீதரா மயானத்திலனேகம் பொய்தான்
சாயாம லதிவீர பாண்டியன் சொல்லுந்
தமயந்தி சரித்திர நைடதமுஞ் சொன்னார்
சுகமாகா திதுகவிகள் சுத்தப் பொய்தான்
தொடுகவிமாணிக்க வாசகர் சொன்னாரே.
ஞான வெட்டியான் : 580
தேவாரமான திருவாசகத்தைச்
செகத்தோர்கள் படித்துமெத்தத் தியங்கினார்கள்
பேயான ஆண்டிகட்குப் பிழைப்புக் காகப்
பேசிவைத்தார் மற்றொன்றும் பிசகோ இல்லை
சாவாதார் மாய்கை தனிலடிபட் டோர்க்குத்
தளர்ந்தபின்பு ஞானவிதி சாரா தென்னில்
துவாதசாந்த வெளியறிந்தோ ரல்ல
சுக்கிலமு மழிந்தபின்பு துலங்கார் தானே.
ஞான வெட்டியான் : 581
மதங்கள், சமயங்கள் மற்றும் வேறு எதன் மூலமும் உண்மை இறைநிலையை உணரமுடியாது என்பதை வள்ளலார்:
சமயங்கடந்த தனிப் பொருள் வெளியாய்
அமையும் திருச்சபை அருட்பெருஞ்சோதி
அகவல் 62
மேலும் சாதியும், சமயமும் தவிர்த்து- கடந்து உண்மை இறை நிலையை உணரலாம் என்பதை
ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே!
இவ்வாறு மக்களின் அறியாமையை- மாயா திரைகளை திருவருட்பா மூலம் நீக்கிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீ வள்ளல் பெருமானார்.
வள்ளல் பெருமானார் கொண்ட தவ வாழ்க்கையை வருணித்துக் கூறுவது என்பது ஒரு சிறு முயற்சியே! ஸ்ரீ வள்ளல் பெருமானை அளவிட்டு கூற இயலாது.
ஸ்ரீ வள்ளல் பெருமானை தொழுது அவர் மேற்கொண்ட தவ வாழ்க்கையைப் பார்ப்போம்.
தொடரும்..,
தகவல் உதவி
1. எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை.
*************
நீங்கள் இந்த கட்டுரை பகுதியில் ஓதுகின்ற மறைகள்,வேத ஆகமங்கள் உண்மையான இறை நிலையை உணர்த்தாது என்பதை சொல்ல நல்ல முயற்சி செய்து அதற்காக வள்ளலாரின் அகவல் வரிகளை,மேலும் பல பெரியோர்களின் பாடல் வரிகளை சிறந்த முறையில் கோடிட்டு காட்டி உள்ளீர்கள்.அடுத்து வள்ளலாரின் தவ வாழ்க்கையை பார்ப்போம் என முடித்து உள்ளீர்கள்.தவ வாழ்க்கை என்பது சுத்த சன்மார்க்க வழியில் கருணை வாழ்க்கை தான.அதை தான் சொல்லுவீர்கள் என உங்களின் அடுத்த கட்டுரை பகுதிக்காக காத்து இருக்கிறேன்.