Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
சித்த புருஷர்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

சித்த புருஷர்

உண்மையான மகான் எல்லா உயிர்களும் இன்புற வேண்டும், எல்லா மனிதர்களும் தங்களைப் போல் இறை அனுபவத்தை பெற வேண்டும் என்று தான் நினைப்பார்கள். தங்களை பூஜிக்க வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்.

மகான்கள் என்றாலே தன்னலம் காணா தனிப்பெருங்கருணை எல்லா உயிர்களிடத்தும் கண்டு இறைவனை எல்லா உயிர்களிடத்தும் காணுவது ஆகும். அதனால் தான் வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டத்தில் வாழ்ந்த மகான்கள் தங்களிடம் வரும் பக்தர்களுக்கு நல்ல கருத்துகளையும், உபதேசங்களையும் செய்து வந்திருக்கிறார்கள், அதற்கு உதாரணங்கள் பல இருக்கின்றன.

சித்த புருஷர்கள்-மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாம் தமிழ்நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய சித்தர்களின் சமுதாய பார்வை மிகவும் போற்றுதலுக்குரியது. அவர்களில் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளல் பெருமான் செய்த சமுதாய விழிப்புணர்வு, உண்மை இறைவழிபாடு முதலிய செயல்கள் இன்று சமுதாயம் முன்னேற வழிவகை செய்கிறது என்றால் அது மிகையாகாது.

மேலும் அவர் சாதி, மதம் பேதமில்லாமல் மக்கள் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும் என்பதற்காக இறைவன் தனக்கு எல்லா சக்தியையும் கொடுத்ததாக பல்வேறு இடங்களில் சொல்கிறார். அவ்வாறு எல்லா சக்திகளையும் ஐந்தொழில் செய்யும் ஆற்றலையும் பெற்றதற்கு பின்னும் அவர் மக்கள் மீது கொண்ட பற்றும் எல்லா உயிர்களிடத்தும் இறைவனை கண்ட பக்குவமும் அவருக்கு பின் வாழ்ந்து வருகிற அருளாளர்கள் பலரிடத்தும் காணமுடிவதில்லை.

இன்றைக்கு பிரபல அருளாளர்கள் தங்களை பத்தொன்பதாவது சித்தர் என்றும் இறைவனே அவர்கள் என்றும் பிரபல தொலைக்காட்சிகளில் அருளுரை வழங்கி வருகிறார்கள். இன்னும் சிலர் தங்களை அம்பாளின் ரூபமாக பாவிக்க வேண்டும் என்றும் நடை, உடை பாவனைகளில் பெண் ரூபம் கொள்கிறார்கள்.

மேலும் அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுடைய பாதங்களை பாத பூஜை என்ற பெயரால் சந்தனத்தால் அபிஷேகம் செய்து அதனை பருகியும் வருகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது வள்ளல் பெருமான் வாழ்ந்த கால கட்டத்தில் அவர் கொண்ட சமுதாய பார்வையும் எல்லா உயிர்களிடத்தும் இறைவனை கண்ட செம்மையான மனமும், ஏன் அவருக்கு பிறகு பலர் அவருடைய நிலையை அடைய முடியவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிய வருகிறது.

எல்லா உயிர்களிடத்தும் இறைவனை காணும் நிலை ஏற்படுமானால் அந்த சித்த மகா புருஷர்கள் தங்களை நாடி வரும் பக்தர்களை காலில் விழ செய்வார்களா? அல்லது பாத பூஜை செய்ய சம்மதம் தருவார்களா?

உண்மையான யோகி அல்லது உண்மையான மகான் மக்களின் பிணி நீங்க இறைவனை நாடுங்கள் என்று தான் சொல்வார்களே தவிர அவர்களை நாட சொல்ல மாட்டார்கள்.

மேலும் இன்று நாகரீக வாழ்வில் மிதக்கும் செல்வந்தர்கள், பணத்தின் மேல் தீரா மோகங் கொண்ட மனிதர்கள், குறைந்த காலத்தில் அதிக லாபம் பெற வேண்டும் என்ற பேராசைக்காரர்கள் கார், பங்களா வேண்டும் என்ற இடைப்பட்ட சமுதாயத்தினர் மட்டுமே இப்படிப் பட்ட போலி மகான்களை நாடி பெரும் செலவில் யாகம், வேள்வி செய்கிறார்கள். அதனால் பெரும் பொருளையும் செல்வத்தையும் இழக்கிறார்கள்.

எனக்கு தெரிந்த நண்பர் பிரபல சக்தி உபாசகரின் பக்தர், ஒரு நாள் அவரின் தங்கைக்கு மாப்பிள்ளை ஜாதகம் வந்திருப்பதாகவும் பொருத்தம் பார்க்க வேண்டும் என்றும் சொன்னார். பிறகு பொருத்தம் சரியாக இருந்ததால் அவ்வரனுக்கு-ஜாதகனுக்கு அருளாசி பெற வேண்டும் என்று அந்த மகானை தேடி சென்று ஆசியும் பெற்றார். அந்த மகான் இந்த மாப்பிள்ளை முடியும் என்று ஜாதகத்திற்கு ஆசி வழங்கினார். ஆனால் அது நடக்க வில்லை, வேறு மாப்பிள்ளை தான் முடிந்தது. எனவே இறைவனைத்தவிர வேறு யாரும் எதையும் நடக்கும் என்று அனுமானித்துக் கூற முடியாது.

மேலும் உண்மையான மகான் எல்லா உயிர்களும் இன்புற வேண்டும், எல்லா மனிதர்களும் தங்களைப் போல் இறை அனுபவத்தை பெற வேண்டும் என்று தான் நினைப்பார்கள். தங்களை பூஜிக்க வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்.

ஆனால் இன்று என்னை பூஜை செய்யுங்கள் என்று சுவாமியின் படத்தோடு தன்னையும் சேர்த்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் இவர்களுடைய புகழாசையும் மக்களின் பேராசையுமே காரணம். பேராசை இருக்கும் வரை பல போலி சித்த மகா புருஷர்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்.

வள்ளலார் “தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இந்த உலக மக்கள் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள் ஐயோ! நம் சகோதர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினால் தானே என்னைச் சுற்றுகிறார்கள் என்று அழுது கண்ணீர் விட்டிருக்கிறார்.

வள்ளல் பெருமான் பெற்ற நிலையை இந்த போலி சித்தர்கள் பெற முடியாமல் போனதிற்கான காரணம் இப்பொழுது புரிகிறது அல்லவா?

ஐந்தொழில் செய்யும் ஆற்றலை ஏன் இறைவன் வள்ளலாருக்கு அளித்தார் என்று இந்த கட்டுரை சிறு கோடிட்டு காட்டும். அவர் பெற்ற நிலையை வேறு யார் அடைந்தாலும் அவர்கள் உலக நன்மைக்காக அதை பயன்படுத்தாமல் வேறு வழிக்கு பயன்படுத்தி இருப்பார்கள்.

சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய்
பொருட்டிகழ்நின் பெருங்கருணைப் புனிதஅமு துவந்தளித்தாய்
தெருட்டிகழ்நின் அடியவர்தம் திருச்சபையின் நடுஇருத்தித்
தெருட்டிஎனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் !

-99.திருவருட் கொடை ,ஆறாம் திருமுறை

சிருட்டிமுதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே
செல்வப் பிள்ளை யாக்கி வளர்க்கின் றாய்இ தென்னை யே
தெருட்டித் திருப்பொற் பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டி யே
திகழ நடுவைத் தாய்சன் மார்க்க சங்கம்கூட்டி யே
எனக்கும் உனக்கும்

- 112.மெய்யருள் வியப்பு , ஆறாம் திருமுறை

-

மேலும் இறைவனே வள்ளலாருக்கு மணிமுடி சூட்டினார்.

ஆதியீறறியா அருளர சாட்சியில்

ஜோதிமா மகுடம் சூட்டிய தந்தையே! -அகவல்

உயிரையும் உடலையும் மாற்றிக்கொண்டார்.

என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான்

தன் உடலும் தன்பொருளும் தன் உயிரும்-என்னிடத்தே

தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன்

வந்தான் வந்தான் உள் மகிழ்ந்து.

- 6ம் திருமுறை 1518

இதெல்லாம் கிடைத்தற்கு காரணம்- தற்சுதந்திரமின்மையே யாகும். தேக சுதந்திரம், போக சுதந்திரம், ஜீவ சுதந்திரம் முதலிய அனைத்து சுதந்திரங்களையும் இறைவனிடமே ஒப்படைத்தார்.

இது எந்த அளவிற்கு பலரிடம் இல்லை என்பது யாவரும் அறிந்ததே! பொதுத்தொண்டு என்று வருகிற அருளாளர்கள் தங்களுடைய பெயர்களில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் தொடங்குகிறார்கள். கல்வியை வியாபார செய்கிறார்கள். பிறகு தங்களை யாவரும் புகழ வேண்டும் என்ற நோக்கில் பொதுத்தொண்டு செய்து அதன் மூலமும் புகழை தேடுகிறார்கள். இவர்களா அருளாளர்கள்?

எனவே தன்னலம் காணா உத்தம மகான் சித்த புருஷர் வாழ்ந்து இப்பொழுது நம்மோடு சூட்சும வடிவில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது வள்ளல் ஸ்ரீ ராமலிங்க அடிகள் தான்.

குறிப்பு:

இக்கட்டுரை யார் மனதையும் புண்படுத்துவதற்காகவோ குறை சொல்வதற்காகவோ எழுதப் பட வில்லை, மக்களின் அறியாமையை போக்க எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு ராமலிங்க சுவாமிகளிடம் வேண்டுகோள் வைத்து அதன் மூலம் எழுதப்பட்டது.


2 Comments
P Sujatha
கருணைமிகு குமரேசன் அய்யா,
இந்த கட்டுரையில் நீங்கள் குறிப்பிடும் கருத்துகள் உண்மையான செய்திகள் தான்.இதனை பலரும் மனதார எண்ணுகிறார்களோ என்னவோ வள்ளலாரை போன்ற சித்த புருஷர் இது வரை வாழ வில்லை என உறுதியாகஅனுபவபூர்வமாகஎன்னால்சொல்லலாம்.அவருடைய அருட்பாடல்கள் யாரும் எளிதில் அறிந்து கொள்ளும் படி உள்ளது.அனைத்து பெரியோர்களையும் மதிக்கும் குணத்தை எனக்கு சொல்லி கொடுத்தது வள்ளலார் தான்.அவருடைய சன்மார்க்க வாழ்வை தான் சொல்லுகிறேன்.வள்ளலாரின் அருட்பாடல்களை மருட்பா என பல சைவ பெரியோர்கள் குற்றம் சாட்டினார்கள்.பெருமானோ அந்த பெரியோர்களை
மதித்தார்.அவருடைய பெருமையை இன்றும் கூட அறியாதவர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்காக இதை சொல்லுகிறேன்.அவருடைய அருள் சன்மார்க்க வாழ்க்கை என்னை சுத்த சன்மார்க்க வழியில் இழுக்கிறது.காந்தியடிகளை அரிசந்திர நாடகம் சத்திய வாழ்கைக்கு இழுத்தது போல வள்ளலாரின் அருட்பாடல்கள் என்னை இழுக்கிறது.ஆனால் ஒன்று,நமக்காக நாம் சுத்தசன்மார்க்க வாழ்கைக்கு வருவது பெரிய கடமையாக ஆன்மநேய உரிமையாக உள்ளது.நன்றி குமரேசன் அய்யா.என்னை சிந்திக்க வைத்ததற்கு.கருணைமிகு குமரேசன் அய்யா,
இந்த கட்டுரையில் நீங்கள் குறிப்பிடும் கருத்துகள் உண்மையான செய்திகள் தான்.
இதனை பலரும் மனதார எண்ணுகிறார்களோ என்னவோ வள்ளலாரை போன்ற சித்த புருஷர் இது வரை வாழ வில்லை என உறுதியாக அனுபவ பூர்வமாக
என்னால் சொல்லலாம்.அவருடைய அருட்பாடல்கள் யாரும் எளிதில் அறிந்து கொள்ளும் படி உள்ளது.அனைத்து பெரியோர்களையும் மதிக்கும் குணத்தை எனக்கு சொல்லி கொடுத்தது வள்ளலார் தான்.அவருடைய சன்மார்க்க வாழ்வை தான் சொல்லுகிறேன்.வள்ளலாரின் அருட்பாடல்களை மருட்பா என பல சைவ பெரியோர்கள் குற்றம் சாட்டினார்கள்.பெருமானோ அந்த பெரியோர்களை
மதித்தார்.அவருடைய பெருமையை இன்றும் கூட அறியாதவர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்காக இதை சொல்லுகிறேன்.அவருடைய அருள் சன்மார்க்க வாழ்க்கை என்னை சுத்த சன்மார்க்க வழியில் இழுக்கிறது.காந்தியடிகளை அரிசந்திர நாடகம் சத்திய வாழ்கைக்கு இழுத்தது போல வள்ளலாரின் அருட்பாடல்கள் என்னை இழுக்கிறது.ஆனால் ஒன்று,நமக்காக நாம் சுத்தசன்மார்க்க வாழ்கைக்கு வருவது பெரிய கடமையாக ஆன்மநேய உரிமையாக உள்ளது.நன்றி குமரேசன் அய்யா.என்னை சிந்திக்க வைத்ததற்கு.
Tuesday, July 7, 2009 at 05:22 am by P Sujatha
KUMARESAN KRISHNAMURTHY
உண்மை தான் சகோதரி!
ஸ்ரீ வள்ளல் பெருமானை சரணடைந்தால் -குருவாக ஏற்றுக்கொண்டு நிச்சயம் அருள் புரிவார். என்னுடைய சமீப கால வாழ்வில் பல திருப்புமுனைகளை வள்ளலார் செய்திருக்கிறார். அவற்றை எல்லாம் நினைத்தாலே மனம் நடுங்குகிறது, வள்ளல் பெருமானிடம் நான் சரணடைந்திருக்காவிட்டால் இந்த சிறியேன் என்னவாயிருப்பேன் என்று சொல்ல முடியாது. எல்லா இடர்களையும் அவரே நீக்கினார், இது சத்தியம்.
இன்றைக்கு உண்மை உணராது சன்மார்க்கத்தில் பலர் தாங்கள் நிறைய சன்மார்க்க பணி செய்ததாக கூறுகிறார்கள். உண்மையில் எதை செய்தார்களோ அது அவருடைய அனுக்கிரகத்தால் தான் செய்யப்பட்டது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
மரணமில்லா பெருவாழ்வில் வள்ளல்பெருமான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூட்டத்தில் பேசுபவர்கள், அவர்கள் பேசுவதையும் அதே பெருமானார் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தார்களேயானால் அவர்கள் அகங்காரமாகவும், பிறரை தாழ்மைப் படுத்தியும், சன்மார்க்கத்தை தாங்கள் தான் நடத்துவதாகவும் பேசமாட்டார்கள்.
எனவே சன்மார்க்கிகளும் அகங்காரம் தவிர்த்து தங்களை தூய்மைப்படுத்தி உத்தமனாக ஓங்க வேண்டும்.
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை ’ என்கிறார் வள்ளல் பெருமானார். உத்தம மனிதனாக சுத்த சன்மார்க்கத்தில் வாழ்ந்தால் அவர் நம்மை தேடி வருவார், அருள் அமுது அளிப்பார் என்பதை சத்தியமாக உணர வேண்டும்.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
நன்றி
Wednesday, July 8, 2009 at 01:31 am by KUMARESAN KRISHNAMURTHY