Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam and Vallalar Space Training Centre
அருட்ஜோதி தந்தை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்ஜோதி தந்தை

****************************************************************************************
ஒரு குழந்தை அழும் பொழுது அக்குழந்தையைச் சமாதானம் செய்வதற்கு ஒரு சில விளையாட்டுப் பொருட்களை அந்தக் குழந்தையின் தாய் தருவது போல, நாம் உலகியியல் சுகத்திற்காகப் பிரார்த்தனைச் செய்யும் பொழுது ஒரு சில பொருட்களைத் தந்து விட்டு பிரபஞ்ச மூர்த்தியானவர் மறைந்துவிடுகிறார்.
***************************************************************************************
அன்புடையீர்!
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லா உயிர்களிலும் இருக்கின்றார். ஆனால் எல்லா உயிர்களும் இதனைத் தெரிந்து கொள்வதில்லை. பகுத்தறிவு பெற்றுள்ள மானிடர்களும் தம் உள்ளத்தில் உள்ள இறைவனை அறிகிறார்களா எனில், இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது. காரணம், மனித நிலையில் இருக்கும் ஆன்மாக்கள் மாயைவயப்படுவதால் சத்தியத்தை உணர முடிவதில்லையாம்.
ஒரு சில ஆன்மாக்கள் பல யுகங்கள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்து சத்தியத்தை சத்தியத்தின் சாயல் வழியாக உணருகின்றதாம். தனிப்பெருங்கருணை உளம் படைத்த இறைவன் இவ்வான்மாக்களின் துயரங்களைப் போக்குவதற்காக யுகங்கள் தோறும் தானே மானிட உருவம் கொண்டு சத்தியத்தை மானிடர்களுக்கு உபதேசம் செய்திருக்கின்றாராம்.
ஆனால் மாயை வயப்பட்ட ஆன்மாக்கள் சத்தியத்தைத் தவிர்த்து அசத்திய வாழ்வில் நாட்டம் கொண்டு இவ்வுண்மையை உணர்ந்துகொள்ளாமலே பிறவிப்பிணியில் சிக்கித் தவித்துக் கொள்கிறார்களாம்.
சரி! மாயை வலையில் சிக்காமல் இறைவனை தரிசிக்க முடியுமா, எனில் நிச்சயமாக முடியும். இவ்வுலகில் கிடைக்கும் சுகங்கள் அனைத்தும் மாயையின் சாயலே என்பதை சத்தியமாக உணர்ந்து உண்மையான சுகத்தை அடைய நம் பிதாவாகிய அருட்ஜோதியை நாட வேண்டும்.

களித்ததெலாம் வீணே! ...........
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந்திலிரே!......
-திருவருட்பா

இது எப்படிச் சாத்தியமாகும்? உதாரணத்திற்கு ஒரு குழந்தை அழுகிறது. தாய் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறாள், குழந்தையின் சப்தத்தைக் கேட்டத் தாய் அக்குழந்தையைச் சமாதானம் செய்ய வேண்டி விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து விட்டு மீண்டும் தன்னுடைய வேலையைப் பார்ப்பாள். அதுபோல நாம் ஒரு சில உலகியியல் பணிகளுக்காக இறைவனைத் தேடுகின்றோம். “குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும், மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், சொகுசு ஊர்தி வாங்க வேண்டும்” என்று ஒரு பட்டியலை வைத்துக்கொண்டு மட்டுமே இறைவனை வேண்டுகின்றோம். இறைவனும் கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு பட்டியல்களில் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்.

நிரந்தரமில்லா இவ்வுலகில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் பேரின்பத்தை அளிக்காது என்பதை உணர்ந்த ஒரு ஆன்மா என்ன செய்ய வேண்டும்? பரமாதிபதியான இறைவனை மட்டுமே விரும்ப வேண்டும். இவ்வுலகில் கிடைக்கும் பொருட்களை விரும்பக் கூடாது.

மதி வேண்டும், நின் கருணை நிதி வேண்டும்.....
-திருவருட்பா
மெய்ப்பொருள் எது என்பதை உணர்ந்து, மெய்ப்பொருளைத் தவிர வேறு எந்த சிந்தனையும், ஆசையும் இல்லாமல் இருக்க வேண்டும்.

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து, மெய்ப்பொருள் நன்குணர்ந்தே
எண் தகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்
-திருவருட்பா
எனவே ஒரு சாதாரண குழந்தையைப் போல் இல்லாமல் அசாதாரணக் குழந்தையாக நாம் மாற வேண்டும். நம்முடைய கண்ணீர் ஒரு சில உலகியியல் சுகத்திற்காக மட்டும் அல்லாமல் நம்முடைய தாய்/தந்தை எப்பொழுதும் நம் அருகில் இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். இல்லையெனில், தாயானவள் ஒரு சில விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து விட்டுச் சென்று விடுவதைப் போல இறைவனும் சென்றுவிடுவார்.
எனவே நம்முடைய நினைவெல்லாம் தாயான பிரபஞ்சத்தினிடத்தும் (தனிப்பெருங்கருணை) தந்தையான அருட்பெருஞ்ஜோதியினடத்தும் லயித்து நிற்றல் வேண்டும். வேறு எந்த பொருட்களையும்/ சக்திகளையும்/ ஆற்றல்களையும் அவர் கொடுத்தாலும் அதில் சந்தோஷப்பட்டு இறை நினைப்பை நாம் இழந்து விடக்கூடாது.
நாம் அழுகின்ற கண்ணீர்த் துளிகள் அனைத்தும் அவரருளைப் பெறுவதற்காக மட்டுமே என்பதைக் கணப்பொழுதும் மறந்துவிடக்கூடாது.

நிறைந்து நிறைந்து ஊற்றெழுங்
கண்ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே
நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை
நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின், உலகியலீர்!
மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்.
-திருவருட்பா
ஆகவே நம்முடைய கண்ணீரும், கோரிக்கையும் பிதாவாகிய நம்முடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்குத் தெரியாமல் இருக்காது அல்லவா! எனவே ஒரு சாதாரணக் குழந்தையைப் போல் ஏன் அழ வேண்டும்? ஒரு அசாதாரணக் குழந்தையாக அழுது, அழுது, நெகிழ்ந்து, நெகிழ்ந்து பிதாவின் அன்பைப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளலாம் அல்லவா? எதற்கும் திருப்தி அடையாத குழந்தையினைத் திருப்தி செய்வதற்குத் தாயானவள் அருகில் வர வேண்டும் அல்லவா? எனவே ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய பரமபிதாவைக் காண முயற்சி மேற்கொண்டால் ஒரு நாள் அந்தப் பரமபிதாவின் மடியில் அமர்ந்து மரணமில்லாப் பெருவாழ்வை அடைவோம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்பது தானே உண்மை.....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


தகவல் உதவி:
எல்லா வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை
agasthiarnamaga
அன்பார்ந்த அய்யா அவர்கள்
தங்களின் கருத்து மற்றும் அருட்பாவின் விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது ,தங்களின் இந்த பணி மேலும் வளர வள்ளல் பெருமானின் திருவடியை பணிகிறேன் .
கிருஷ்ணமூர்த்தி
கள்ளகுறிச்சி
9698797190
Friday, August 3, 2012 at 09:54 am by agasthiarnamaga