அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருவடி நிழல்
அசைவற்று இருப்பதாலும், அமைதியாக இருப்பதாலும், ஓரிரு நாட்கள் தியானம் பயில்வதாலும் இறை அனுபவம் கிட்டாது.அறிவு நிலைகள் உயர்ந்து இந்திரியங்கள், கரணங்களின் சேட்டைகள் நின்றால் துரிய அனுபவ நிலை நம்மை சூழ்ந்துக் கலந்திடும். இதுவே வள்ளல் பெருமானார் கூறிய துரிய அனுபவமாகும். ஒரிரு நாட்களில் தியானம் கற்று அதன் மூலம் துரிய அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன் என்பது துரிய அனுபவமாகாது.
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் சுத்த சன்மார்க்க வாழ்வில் ஈடுபட்டு அதன் பயனால் இறைவனை எல்லா உயிர்களிலும் காணும் பக்குவம் பெற்றவர்கள், இறையருளால் “காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம், அகங்காரம்/மமங்காரம் நீங்கி சுத்த சன்மார்க்க சிவானுபவம் பெறுவார்கள்” என்பது வள்ளல் பெருமானின் வாக்கு. ஆனால் இவ்வனுபவத்தை உணர ’வள்ளல் பெருமானார் ’காட்டிய அருள்நெறியில் நின்று உலகியியல் வாழ்வைத் தொடர வேண்டும். அருள் நெறியுடன் கூடிய அருளியியல் வாழ்வில் இயற்கை உண்மையாக விளங்கும் இறைவனை இயற்கை உண்மையாகவே உணர முடியும். மேலும் சர்வ வல்லமைப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை, ’தியானம், ’யோகம்’ மற்றும் ’தவம்’ செய்தால் மிக எளிதாக உணர்ந்துக்கொள்ளலாம் என்பது கூட ஒரு வித அறியாமையே. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தியானத்தின் மூலம் இறையை உணரலாம் என்று கூறி அவர்களுடைய அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு வித போலி எண்ணத்தை உருவாக்கிக் கொண்டுவருபவர்கள் நிறைய உண்டு. அசைவற்று இருப்பதாலும், அமைதியாக இருப்பதாலும், ஒரிரு நாட்கள் தியானம் பயில்வதாலும் இறை அனுபவம் கிட்டாது. அறிவு நிலைகள் உயர்ந்து இந்திரியங்கள், கரணங்களின் சேட்டைகள் நின்று துரிய அனுபவ நிலை தாமே ஏற்பட வேண்டும். இதனை வள்ளல் பெருமானார்: சேட்டையற்றுக் கருவியெலாம் என் வசம் நின்றிடவே சித்தியெலாம் பெற்றே நான் திருச்சிற்றம்பல மேல்.. தனுகரணாதிகள் தாம் கடந்து அறியுமோர் அனுபவமாகிய அருட்பெருஞ்ஜோதி மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக் கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை விட்டகன்று கருமமல போதம் யாவும் விடுத்து ஒழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச் கட்டகன்று நிற்க அவர் தம்மை முற்றும் சூழ்ந்து கலந்திடும் சிவமே துரியத்தேவே
என்று கூறுகிறார்.
ஆகவே அருள்நெறி என்றால் என்ன? என்பதை ஆன்மீகத் தேடுதலில் இருக்கும் ஆன்மாக்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். அருள்நெறி என்றால் என்ன? என்பதைப் பக்குவப்பட்ட ஆன்மாக்களுடன் கலந்து, உரையாடி, பிறகு வள்ளல் பெருமானார் காட்டிய ஞானநெறியை முழுமையாக உணர்ந்தால் இயற்கையாகவே துரிய முதல் சிவ துரியம், குரு துரியம், பர துரியம் முதலிய அனுபவ நிலைகளெல்லாம் கடந்து இவற்றின் உச்ச நிலையான“ நிராசை” ஏற்படும். இந்நிலையில் இருப்பவர்களுக்கு “அறக்கட்டளைகள் வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. தான் மட்டுமே இறை ஞானத்தை முற்றும் உணர்ந்தவன் – சற்குரு – ஞான குரு - என்று எண்ணி தங்களை தானே அவ்வாறு அழைத்துக்கொள்ள மாட்டார்கள். தனக்கு எந்த ஒரு சுயவிளம்பரம் வைத்துக்கொள்ளவும் ஆசைப்பட மாட்டார்கள்”. “நிராசை” நிலை இல்லாததால் தான் இன்றைக்கு எது மாயை? எது மாயை இல்லை என்று தெரியாமல் எத்தனை எத்தனையோ தற்கால குருமார்கள் மாயையின் வலையில் எளிதாக வீழ்கிறார்கள், அவர்கள் வீழ்வதும் மட்டுமல்லாமல் தங்களை நாடி வந்த பக்தர்களுக்கும் இறை ஞானத்தை அளிக்க முடியாமல் “அத்தனைக்கும் ஆசைப்பட்டு” முடிவில் விளக்கை நோக்கி ஓடும் விட்டில் பூச்சிப்போல் மாய்ந்துவிடுகின்றனர். இதனை அன்றே வள்ள பெருமானார்: ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர்-வாடாதீர் சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங்கு என் மார்க்கமும் ஒன்றாமே. என்று கூறுகிறார் ஆகவே மனித வாழ்வில் சிவானுபவம் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். ஜீவகாருண்ய ஒழுக்கம் மூலம் மனித தேகம் எடுத்தவர்கள் அனைவரும் சிவானுபவத்தைப் பெறலாம், நித்தியமாக வாழலாம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்ற வள்ளவர் வாக்கிற்கிணங்க ஜீவகாருண்ய நெறியில் நாம் பழக ஆரம்பித்தால் மனித நிலையில் இருக்கும் அனைவரும் புல்லறிவு நிலையில் இருந்து மாறி தெய்வ நிலையான அருளறிவு நிலைக்குச் செல்லலாம். “ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது பசிப்பிணியை நீக்குவது மட்டுமல்ல, எந்த ஒரு உயிருக்கும் துன்பம் தராமலும், துன்பத்தில் இருக்கும் உயிர்களுக்கு தக்க சமயத்தில் அந்த துன்பத்தை போக்குவதிலும், சர்வ காலமும் இறை சிந்தனையுடன் யாதொரு இச்சையும் இல்லாமல் உலக உயிர்களின் நன்மையைப் பொருட்டு இறைச் சிந்தனையுடன் இருப்பதாம்”. சர்வ காலமும் இறைச்சிந்தனையுடன் அகப்பற்று இல்லாமல் இருந்தால் தியானம், யோகம், ஞானம் முதலியவற்றில் கிடைக்கும் பலனான “நிராசை” மிக எளிதாகக் கிட்டும். இதனையே வள்ளல் பெருமானார் “ஞானவிசாரம்” என்று கூறுகிறார். இந்நிலையில் இருப்பவர்களுக்கு பசி, வியர்வை, துன்பம், மலம், ஜலம் முதலிய அனைத்தும் சிறிது சிறிதாக நீங்கும். முடிவில் சிவானுபவம் கிடைக்கும். இந்நிலையில் இருப்பவர்களுக்கு கீழ் காணும் அனுபவம் வாய்க்கும் என்கிறார் வள்ளல் பெருமானார்: தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும் மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம் உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட மடலெலா மூளை மலர்ந்திட வமுதம் உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக் கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற் கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக் கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட இனம்பெறு சித்த மியைந்து களித்திட அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச் சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட அறிவுரு வனைத்து மானந்த மாயிடப் பொறியுறு மான்மதற் போதமும் போயிடத் தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச் சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட உலகெலாம் விடய முளவெலா மறைந்திட அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட என்னுளத் தோங்கிய என்றனி யன்பே எனவே ஜீவகாருண்ய அருள்நெறியில் நின்று உலகியியல் வாழ்வை அருளியியல் வாழ்வாக மாற்றுவது மட்டுமே உண்மையான ஆன்மீக வாழ்வாகும். ஜீவகாருண்ய நெறிக்கு பிறரை அழைத்து ஆட்கொண்டு அவர்களை அந்நெறியில் முழுமையாக ஈடுபட வைப்பதே ஆச்சாரியனைக் கொண்டு அகக்கண்ணைத் திறப்பது என்பதாகும். இந்நிலையில் பழக பழக மாயைத்திரைகள் தானே விலகும். மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டும். இதனை உணர வைப்பதற்கே வள்ளல் பெருமானார் உலக மக்களை இவ்வாறு அழைக்கிறார். வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின்!....
மேலும் தாம் கண்ட இறைநிலை அனுபவத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதை:
உள்ளுண்ட உண்மைஎலாம் நான் அறிவேன் என்னை உடைய பெருந்தகை அறிவார் உலகிடத்தே மாயைக் கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார்.....
என்றும்,
என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டறிவார் உன்னல் அற உண்ணுதற்கும் உறங்குவதற்கும் அறிவார்...
என்றும்
ஐயர் எனக்குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை யார் அறிவார் நான் அறிவேன் அவர் அறிவார் அல்லால் பொய் உலகர் அறிவாரோ புல்லறிவால்....
ஆனால் ஒரு சிலரோ, குருவின்றி எந்த வித்தையும் பலன் தராது, ”வள்ளல் பெருமானே குருவின் மூலம் அகக்கண்ணைத் திறந்துக்கொள் என்கிறார் ” என்று தங்களைத் தானே குருவாக பாவித்து மாயை வலையில் வீழ்கிறார்கள். நிராசையின் ஒரு நிலையே “தற்சுதந்திரமின்மை”. தற்சுதந்திரமின்மை இருந்தால் அவர்கள் தங்களைத் தானே குருவாக எண்ணமாட்டார்கள். மேலும் தலைவன் ஒருவன் தானே அனைவருக்கும் குருவும் இறையும். எனவே அவன் அருள் இருந்தால் ஒரு சிறு துரும்பு கூட ஐந்தொழில் ஆற்றல் புரியும் என்பதைச் சத்தியமாக உணருவார்கள்.
மேலும் சன்மார்க்கத்தின் சாதனம் இறையருளை பெறுவதில் மட்டுமே இருக்கிறது. அன்பு செய்வாரை அறிவன் சிவன். அவருக்கு மட்டுமே தெரியும் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று. எனவே புல்லறிவு நிலையில் இருந்து அருளறிவு நிலைக்கு உயர அவரிடம் பிரார்த்தனைச் செய்து திருவடி ஞாபகமாக ஒவ்வொரு இறை நொடியும் இருக்க வேண்டும். இறை நொடி என்பதைக் காலத்தால் வரையறுக்க முடியாது. காலத்தைக் கடந்த நிலை. இந்நிலையில் மட்டுமே உண்மை சாதனம் மாயையின் பிடியில்லாமல் நமக்கு உள் உணர்வாகப் புலப்படும். அவ்வாறு இல்லாமல் மனித நிலையில் நாம் தேடும் ஒவ்வொரு சாதனமும் நிச்சயம் மாயையின் பிடியில் மட்டுமே இருக்கும். மனித நிலை கடந்தால் மட்டுமே உண்மையான நிலையைக் கண்டுக்கொள்ள முடியும் . வாழ்வனோ நின்பொன் அடி நிழல் கிடைத்தே
வயங்கும்ஆ னந்தவெள் ளத்துள்
ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்
அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே
தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே
சஞ்சரித் துழன்றுவெந் நரகில்
வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை
வெற்பினுள் ஒளிர்அருள் விளக்கே.
மானமிலார் நின்தாள் வழுத்தாத வன்மனத்தார்
ஈனர்அவர் பால்போய் இளைத்தேன் இளைப்பாற
ஊனமிலார் போற்றுகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
ஞான அடியின் நிழல் நண்ணி மகிழேனோ.
குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே!
எனவே மனித நிலையில் இருக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் பிறவிப்பயனையும், மரணப்பிணியையும் ஒழித்து எல்லாம் வல்ல வள்ளல் பெருமான் கூறிய அருள்நெறியில் நின்று, உலகியியல் வாழ்வை அருளியியல் வாழ்வாக மாற்ற, ஒவ்வொரு ஆன்மாவும் சர்வ வல்லமை படைத்த இறைவனை அனுதினமும் துதித்து எல்லா உயிர்களிலும் இறையை- “ஞானத்திருவடியைக் காண வேண்டும்’. சிந்தனையிலும், செயலிலும், எண்ணத்தினாலும் அகப்பற்றைத் தவிர்த்து எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மனதில் கொண்டு, உலகியியலில் நிலையாமையை எண்ணி, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையை விசாரம் செய்துக்கொண்டு இருக்க வேண்டும். இந்நிலையில் இருக்கும் பொழுது நாம் தேடும் குரு நம் அருகாமையில் நமக்காக காத்திருப்பதை உணரலாம்.
தருவளர் நிழலே நிழல் வளர் சுகமே
தடம்வளர் புனலே புனல்வளர் நலனே
திருவளர் உருவே உருவளர் உயிரே
திருநட மணியே திருநட மணியே! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
*********************
குறிப்பு :
சர்வ வல்லமைப் பொருந்திய குரு நம்முடன் இருக்கிறார், அவரை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இதில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை. ஆட்டுவித்தால் ஆடுகிறேன், என்னால் ஆவதொன்றுமில்லை.
தகவல் உதவி:எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியின் ஆண்டவரின் தனிப்பெருங்கருணை
Write a comment