Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam and Vallalar Space Training Centre
வருவிக்கவுற்ற வள்ளல் பெருமானின் இறைப்பணி - ஓர் ஆய்வு
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
**************
வள்ளல் பெருமானின் ஆன்மீகப் பணி மனிதனின் அறிவு நிலைக்கு அப்பாற்பட்டது. மனிதனின் குறுகியப் பார்வையால் அவர் பெற்ற நிலையினையும் அவருடைய செயல்களையும் ஊடுருவி பார்க்க முடியாது. வள்ளல் பெருமானின் ஏக இறைக்கொள்கையும், சாகாக்கல்வியும், மரணமில்லா பெருவாழ்வைவும் கற்பனைகளாலும், சாதாரண ஆய்வுகளாலும் ஊகிக்க முடியாதவை. அவருடைய இறைப்பணி கற்பனைக்கும் புலனறிவு நிலைகளுக்கும், சமயநெறிகளுக்கும் அப்பாற்பட்டது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அவதார புருஷரின் இறைப்பணியை அவருடைய ஆசியுடன் இங்கு காணுவோம்.
*************

வருவிக்கவுற்ற வள்ளல் பெருமானின் இறைப்பணி - ஓர் ஆய்வு

இன்றைய உலகில் காணப்படும் ஒவ்வொரு மார்க்கமும் ஒரு காலத்தில் மக்களிடையே ஒற்றுமையையும் நேசவுணர்வையும் சகோதரத்துவதையும், சமத்துவத்தையும் வளர்க்கவே தோற்றுவிக்கப் பட்டது. ஒவ்வொரு மார்க்கத்தையும் நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால் வெவ்வேறு காலக்கட்டங்களில் பல நாடுகளில் பல்வேறு சமுதாயங்களில் இறையருளால் வருவிக்கவுற்ற பல அவதார புருஷர்கள் தோன்றியிருப்பதை நாம் உணர்ந்துக் கொள்ள முடியும்.

இதைத்தான் வள்ளலார் ‘வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபினர்’ என்கிறார். மக்கள் அஞ்ஞானம் கொண்டு எப்பொழுதெல்லாம் துன்பத்தில் இருக்கிறார்களோ அப்பொழுது அவர்களுக்கு வழிகாட்டியாக இறைவனால் வருவிக்கவுற்றவர்கள் தான் அவதார புருஷர்கள். அத்தகைய அவதார புருஷர்கள் இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் ஒரு பெரும் இறைப் பணியை மேற்கொண்டார்கள். அத்தகைய அவதார புருஷர்களில் ஒருவர் தான் சமீப காலத்தில் நம் மூதாதையர்களுடன் வாழ்ந்த வள்ளல் பெருமானார் என்கிற சிதம்பரம் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள். இவர் அருட்ஜோதியரின் மானிட அம்சம். வள்ளல் பெருமானாருக்கு முன்பும் சமுதாய வளர்ச்சிக்கு நிறைய சித்தர்கள் பாடுப்பட்டிருக்கிறார்கள், உதாரணத்திற்கு மகான் திருமூலர், மகான் திருவள்ளுவர், மகான் காலங்கிநாதர், மகான் போகர், மகான் சிவவாக்கியர் போன்ற ஆயிரக்கணக்கான சித்தர்களைக் கூறலாம்.

ஆனாலும் இதுவரை உணர்த்தாத ஒரு வித புதுநெறியை உலகத்திற்கு உணர்த்த வேண்டிய காலமும் அவசியமும் 18-ம் நூற்றாண்டில் வள்ளல் பெருமானார் மூலம் உணர்த்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவருள் கொண்டார் . அக்காலக்கட்டத்தில் மக்கள் அறியாமையாலும் வெவ்வெறு மார்க்கத்தாலும் ஒருமையை உணராமல் அஞ்ஞானத்தில் அவதியுற்றதால் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியர் சிதம்பரம் ராமலிங்க சுவாமிகளின் உருவில் ஜீவகாருண்யநெறி என்கிற அருள்நெறியை உலகிற்கு உணர்த்தினார்.

அவர் வருவிக்கவுற்றதிற்கான காரணங்களை அவரருளால் உணரலாம்.

1. அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்திடுதற் கென்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே!

2. சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவே
தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே
தனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டு கொண்டெப்பொருளும்
விளையவிளை வித்த தொழிலே
மெய்த்தொழில தாகும் இந்நான்கையும் ஒருங்கே
வியந்தடைந்துலகம் எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்ல சித்தாகி நிறை
வானவரமே இன்பமாம்
மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்
மரபென்றுரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்தெனைத்
தேற்றி அருள் செய்த சிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நட ராஜபதியே.

3. ஒன்றே சிவன் என்றுணர்த்திவ் வுலகமெலாம்
நன்றே ஒருமையுற்று நண்ணியே- மன்றே
நடம்புரியும் பாத நளின மலர்க்குள்ளம்
இடம்புரிக வாழ்க இசைந்து

4. துண்ணெனக்கொடியோர் பிறவுயிர் கொல்லத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்
கண்டகா லத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தைநின் திருவுளம் அறியும்

5. இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே!

வள்ளல் பெருமானார் வருவிக்கவுற்றத்திற்கானக் காரணங்களை மேலேக் கூறிய பாடல்கள் மூலம் மிகத் தெளிவாக உணரலாம். மேற்கூறிய பாடல்களில் உள்ள பொருள்:

  1. உலகத்தில் மத பேதம், சமய பேதம், சாதி பேதம் மற்றும் மொழி பேதத்தை நீக்கி மெய்ஞ்ஞானத்தை உணரச் செய்வதற்காக:
  2. சாகாக்கல்வியை அனைவருக்கும் போதிப்பதற்காக:
  3. ஒன்றே சிவம் என்று எடுத்துரைப்பதற்காக:
  4. இறைவனின் பெயரால் உயிர்களை வதம் செய்வதை தடுத்து நிறுத்துவதற்காக:
  5. மரணமில்லா பெருவாழ்வை ஜீவகாருண்ய நெறி மூலம் அனைவருக்கும் எடுத்துரைப்பதற்காக:

1. சாதி பேதம், மத பேதம், சமய பேதத்தை நீக்குதல்:

சாதியும் மதமும், சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி என்றும் சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே திருச்சிற்றம்பலத்தில் நடனம் புரியும் நடராஜபதியென்றும் உணர்த்தி மக்களின் அஞ்ஞானத்தை போக்குகிறார்.

உதாரணத்திற்கு:

ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே!

2. சாகாக்கல்வியை அனைவருக்கும் போதித்தல்:

சாகாக்கல்வி கற்க வேண்டிய அவசியத்தை இப்பாடலில் விளக்குகிறார்.

சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
விதுநெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீதான்
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ்ஜோதி கண்டாடேடி பந்து.
3. ஒன்றே சிவம் என்றுரைத்தல்:

உருவராகியும் அருவினராகியும் உருஅருவினராயும்
ஒருவரே உளார் கடவுள் கண்டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும் ஐவர்கள் என்றும்
எருவராய் உரைத்துழல்வதென் உடற்குயிர் இரண்டு மூன்றெனலாமே!
தெரிந்தேன் அருளால் சிவம் ஒன்றே என்று
புரிந்தேன் சிவம் பலிக்கும் பூசை- விரிந்தமனச்
சேட்டை எலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்ல அருள்
நாட்டை எலாம் கைக்கொண்டேன் நான்.
சிவமயமே வேறிலை எல்லாம் என நீதானே
தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்.......
ஒளி ஒன்றே அண்ட பகிரண்டமெலாம் விளங்கி
ஓங்குகின்ற தன்றி அண்ட பகிரண்டங்களிலும்
வெளி நின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும்
விளம்பும் அகப்புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே.......
ஒன்றே சிவம் என்றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு
நின்றே மெய்ஞ்ஞான நிலைப்பெற்றேன் – நன்றே மெய்ச்
சித்தியெலாம் பெற்றேன் திரு அம்பலத்தாடி
பத்தி எலாம் பெற்ற பலன்.
.......வள்ளல் உன் தன்னையே மதித்துண் சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால் தலைவ வேறெண்ணிய துண்டோ....
வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும் மன்னிய உண்மை ஒன்றென்றே..........
தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரும்
சேர்கதி பல பல செப்புகின்றாரும்
பொய்வந்த கலை பல புகன்றிடுவாரும்
பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய் வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்
மேல்விளை வறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பி மெய் இன்பந்தந்தீரே.
4. இறைவன் பெயரால் உயிர் வதம் செய்வதைத் தடுத்து நிறுத்துதல்:
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணிலால் ஐயோ பிற உயிர் பதைக்கக்
கண்டகாலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தைநின் திருவுளம் அறியும்
மருவாணைப் பெண்ணாக்கி ஒரு கணத்தில்
கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை
எழுப்புகின்ற உறுவனேனும்
கருவாணை யுற இரங்காதுயிருடம்பைக்
கடிந்துண்ணுங் கருத்த னேல் எங்
குருவாணை எமது சிவக்கொழுந்தாணை
ஞானி எனக் கூறொணாதே.

5. மரணமில்லாப் பெருவாழ்வை போதித்தல்

வருவிக்கவுற்ற வள்ளல் பெருமானார் தான் உரைக்கும் வார்த்தைகள் எல்லாம் இறைவனுடைய வார்த்தைகள் என்றும் அவற்றினை உணர்ந்து உலகியியல் வாழ்க்கையைத் தொடர்ந்தால் ‘யானடையும் சுகத்தினை மரணமில்லா பெருவாழ்வை நீவீர் அடையலாம்’ என்றும் உலக மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே!

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே
( நிறைய பாடல்கள் உள்ளன விரிவஞ்சி கொடுக்கப்படவில்லை)

இவ்வாறு தான் செய்ய வேண்டிய பணிகளை வள்ளல் பெருமானார் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் மூலம் (1865 வருடம்) செய்தார். மேலும் மக்களின் பசிப்பிணியை சத்திய தருமச்சாலை (1867 வருடம்) மூலம் நிவர்த்தி செய்தார். அஞ்ஞானத்தை போக்குவதற்காக புறத்தில் சத்திய ஞானசபையை (1872வருடம்) காண்பித்து இவற்றை அகத்தில் உணருமாறும் போதித்தார். 30.1.1874- நாளன்று தன்னுடைய தேகத்தை அருட்பெருஞ்ஜோதியருடன் கலந்து மறைந்துக்கொண்டார்- மரணமில்லா பெருவாழ்வில் இன்றும் வாழ்கிறார்.

இத்தகைய அவதார புருஷராகிய வள்ளல் பெருமானின் ஏக இறைக்கொள்கையையும், அருள்நெறியையும், சாகாக்கல்வியையும், மரணமில்லா பெருவாழ்வையும் மனிதனின் குறுகிய பார்வையால் ஊடுருவி பார்க்க முடியாது. வள்ளல் பெருமானின் ஏக இறைக்கொள்கையும், சாகாக்கல்வியும், மரணமில்லா பெருவாழ்வும் கற்பனைகளாலும், சாதாரண ஆய்வுகளாலும் ஊகிக்க முடியாதவை. அவை கற்பனைக்கும் புலனறிவு நிலைகளுக்கும், சமயநெறிகளுக்கும் அப்பாற்பட்டது.

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்!
என்ற வாக்கிற்கிணங்க அவருடைய ஞானதேகத்தைப் பற்றிய ஆய்வும் அவருடைய நெறிகளில் நின்று அவரை உணர்ந்து மேற்க்கொள்ள வேண்டிய பணியாம்.

ஆகவே வள்ளல் பெருமானாரின் வருவிக்கவுற்றதன் காரணத்தை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து அதற்கேற்ப நம்முடைய உலகியியல் வாழ்வை மாற்றி அமைத்துக்கொண்டால் அவர் நமக்கு குருவாகவும், இறையாகவும் இருந்து நம்முடைய துன்பத்தை நீக்குவார். சிற்றம்பலமாகிய புருவமத்தியில் தினமும் அவரை துதித்தால் அவரருளால் அருட்ஜோதியை உணர்ந்து அதன் மூலம் அருளமுதம் உண்டு மரணமில்லா பெருவாழ்வும் பெறலாம்.

தகவல் உதவி

  1. எல்லாம் வல்ல சிதம்பரம் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

*******************