Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam and Vallalar Space Training Centre
மெய்யுணர்தல்-III
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மெய்யுணர்தல்-III
_________________________________
அவர் பெருமையை அவர் அறியார் யாரோ அவரே உண்மையான குரு, அவரே நம் தனித் தலைவன். விளம்பரப் படுத்திக் கொண்டு தங்களைத் தானே ஞானகுரு- சற்குரு என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் உண்மையான குருவாக மாட்டார்கள், அவர்களெல்லாம் சந்தை வியாபாரிகள், அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் தரும் தியான- யோக உபாயத்தால் இறையை உணர முடியாது.
___________________________________
வள்ளல் பெருமான் உரைத்த நான்கு நெறிகளான இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம் மற்றும் ஆன்ம ஒழுக்கம் சாகாக்கல்விக்கு மிகவும் இன்றியமையாதது. இந்த நான்கு ஒழுக்க நெறிகளில் இருந்தாலே இறைவன் நம்மை தடுத்தாட் கொள்வான். நாம் இறைவனைத் தேடி எங்கும் அலைய வேண்டாம்.

இதனை வள்ளல் பெருமானார்:

தானேவந் தென் உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
தானே எனக்குத் தருகின்றான் – தானே நான்
ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
மேகத்திற் குண்டோ விளம்பு.

நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் – ஊனே
புகுந்தான் என் உள்ளம் புகுந்தான் உயிரில்
புகுந்தான் கருணை புரிந்து.

தான் நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான் நான்
ஆனான் சிற்றம்பலவன் அந்தோநான் – வானாடர்
செய்தற் கரிய தவம் செய்தேன் மகிழ்கின்றேன்
எய்தற் கரிய சுகம் ஏய்த்து.
இங்கு தானே வந்து இறைவன் நம்மை ஆட்கொள்வார் என்றால், அவர் எங்கிருந்து வருவார்? அவர் வேறு உலகத்திலிருந்து வருவாரா? என்றால் அதற்கும் வள்ளல் பெருமானே விளக்கம் தருகிறார். நம் சிர நடு சிற்றம்பலத்தில் இருக்கும் பதியை ஏழு மாயாத்திரைகள் மறைத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் நம்முடைய ஞான அறிவு மூலமும், அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொள்வது மூலமாகவும் நீக்கிக்கொள்ளலாம். ஏனெனில் அவரே அவ்வித மாயாத் திரைகள் மூலம் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார்.
திரை மறைப்பெல்லாம் தீர்த்தாங்கே
அரசுறக்காட்டு அருட்பெருஞ்ஜோதி
-அகவல்
மேலும் நம்முடைய கரணங்களும், இந்திரியங்களும் புலன் இச்சையில் இருக்கும் வரையில் இறையனுபவம் உண்டாகாது. எனவே புலன் இச்சையை விடுத்து அருட்பெருஞ்ஜோதியாகிய இறைவனை நாடி மாயைத் திரைகளை நீக்குமாறு அவரிடமே முறையிட வேண்டும்.
இவ்வாறு நம்முடைய உலகியியல் வாழ்க்கையில் சாகாக்கல்வியை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மூலமாகவே கற்றுக்கொண்டால் நம் சிற்றம்பலத்தில் இருக்கும் பதியானவர் நமக்கு கிடைத்தற்கறிய பல அனுபவங்களையும், பரஞானம் என்கிற அருள் ஒளியையும், அருளமுதத்தையும் அளிப்பார்.

அருள் ஒளி அடைந்தனை அருளமுதுண்டனை
அருள் மதி வாழ்க என்றருளிய சிவமே
இவ்வித அனுபவங்களை தற்கால குருமார்களால் போதிக்க இயலாது. ஏனெனில் அவர்களும் மாயை வசத்தால் தான் – நான் – என்கிற மமங்காரம் மற்றும் அகங்காரம் நீங்காமல் தாங்களே எல்லாம் வல்ல இறைவன் என்ற போலி எண்ணத்தால் கட்டுண்டு இருக்கிறார்கள். தற்போதம் இல்லாத நிலை என்ற செயற்கை எண்ணத்தை உருவாக்கி, ஆனால் தற்போதத்தை நீக்க முடியாமல் குருடராய் இருக்கிறார்கள். இதனை அவர்களுடைய விளம்பரங்கள் மூலமாகவே அறியலாம்.
ஆகவே உண்மை குருவாகிய நம் பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை குருவாக ஏற்று அவரிடத்தில் தினமும் விசாரத்தில் ஈடுபட வேண்டும். இப்பொழுது நம்பெருமானாரும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் வேறில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இருவரும் ½ + ½ தேகத்தில் இருந்துக்கொண்டு அருளரசாட்சியை நடத்திக் கொண்டி ருக்கின்றனர்.

மேலும் அவர் பெருமையை அவர் அறியார் யாரோ அவரே உண்மையான குரு, அவரே நம் தனித் தலைவன்.
இதனை வள்ளல் பெருமானார்:

தன்பெருமை தானறியாத் தன்மையனே எனது
தனித்தலைவா என் உயிர்க்குள் இனித்த தனிச்சுவையே....
-என்கிறார்.
எனவே விளம்பரப் படுத்திக் கொண்டு தங்களைத் தானே ஞானகுரு- சற்குரு என்று சொல்லி, அவர்களை நம்பி வரும் அப்பாவி மக்களையும் ஏமாற்றி, துன்பக் கடலில் சிக்க வைத்துக் கொண்டிருக்கும் இன்றைய குருமார்கள் உண்மையான குருமார்கள் இல்லை, சந்தை வியாபாரிகள். இவர்கள் மாயை வசத்தால் புற்றீசல் போல் தோன்றி அவ்வப்போது காலத்தால் மறைகின்றனர். இவர்கள் தரும் தியான, யோக உபாயத்தால் இறையை உணர முடியாது. பிழைப்பிற்காக ஒரு சில யோக முத்திரைகளை விற்பனை செய்கின்றனர். இவர்களால் சாகாக்கல்வியை புகட்ட முடியாது. ஏனெனில் அவர்களுடைய வியாபாரம் பாதிக்கும்.
எனவே இத்தகைய போலி ஆசாமிகளை விட்டுவிடுங்கள், இவர்களால் நாம் தேடும் மரணமில்லாப் பெருவாழ்வும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தரிசனமும் கிட்டாது. ஆகவே உங்களுக்குள் இருக்கும் குருவைத் தேடுங்கள். அவர் உங்களை வழி நடத்த புருவ மத்தியில் காத்துக்கொண்டிருக்கிறார்.
தொடரும்..,

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தகவல் உதவி:
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப் பெருங்கருணை
2 Comments
Bhuvana Senthil
Article is very concise and Well said, I like all of your articles very much, please continue to do so, I am also seeing Senior Sanmargi Thiru MUPA also joined and started his conversation. I am really excited to see Thiru MuPa here as well. I heard about him but Can someone write about small introduction about Thiru MuPa also so that readers will know him better.
Wednesday, March 30, 2011 at 07:51 am by Bhuvana Senthil
M.BALASUBRAMANIAN mupa
அன்புள்ள என் சகோதரர்களே ,சகோதரிகளே உங்கள் அனைவரையும் வணங்குகிறேன் . பொது மக்கள் மட்டுமின்றி சன்மார்க்கர் என்போரும் வேஷதாரிகளையும் பணத்திற்கு அறிவை விற்கின்றவர்களையும் இன்றும் நம்பி குருவாக ஏற்றுக்கொண்டு ஏமாந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். யாரை குருவாக ஏற்பது. அருட்பெருஞ்சோதி அகவலில் 1039 ஆவது வரி தொடங்கி 1070 வரி வரையில் ஒரு குருவிற்கு இருக்கவேண்டிய தகுதிகளை வரையறை செய்துள்ளார் நம் பெருமானார்,அந்தத் தகுதி உள்ளவர்களை குருவாக ஏற்பது சிறந்தது. இது என்சிற்றவிற்கு எட்டியது. இது யாரையும் குறை காண எழுதியது l
அல்ல. நன்றி வணக்கம் முபா
Wednesday, April 6, 2011 at 08:33 am by M.BALASUBRAMANIAN mupa