Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
மெய்யுணர்தல்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

மெய்யுணர்தல்

______________________________________________________________________

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லா உயிர்களிலும் இருப்பது போல், பல மார்க்கங்களில் காணும் சமயத்தேவர்களிடத்தும் இருக்கின்றார் என்பதே உண்மையான மெய்யுணர்வு. எனவே உயிர்களிடத்து எப்படி பேதம் காணக்கூடாதோ அதுபோல் பிற மார்க்கங்களிலும் பேதம் கொள்ளாமல், மெய்யை நாம் நன்குணர்ந்து மெய்ப்பொருளை அடைய வேண்டும்.

______________________________________________________________________


எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையினால் மனிதப்பிறவி எடுத்து இம்மண்ணுலகில் வாழப் பிறந்திருக்கிறோம் என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். உலகியியல் வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று ஒரு சாராரும், இப்படித் தான் வாழ வேண்டும் என்று ஒரு சாராரும் யுகங்கள் தோறும் யுக புருஷர்களாகத் தோன்றி மக்களை நல்வழிப்படுத்துகின்றனர். எனினும் மாயை என்னும் காலச் சக்கரத்தில் மதங்கள், மார்க்கங்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் நாகரீக வளர்ச்சிகள் மனிதனை மனிதத் தன்மையில் இருந்து விலக வைத்து மாயையின் பிடியில் சிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

மதங்கள் மற்றும் மார்க்கங்களின் போதனைகளால் மக்கள் ஒருவருக் கொருவர் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையை இழந்து பரஸ்பர வசைப்பாடுவதும், சண்டையிடுவதும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் போது, எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் சுத்த சிவம் மனித ரூபம் கொண்டு தன்னை அடையும் வழியையும், தான் யார் என்பதையும், உயிர்களுக்கும், தனக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், அருளியியல் வாழ்வு என்றால் மதம் சார்ந்த கொள்கைகள் அல்ல அது அருள் சார்ந்த – கருணை- தயவு மயமான வாழ்வு என்பதையும் உலகிற்கு உணர்த்த எண்ணம் கொண்டது.

அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகரனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்கவுற்றேன் அருளைப் பெற்றேனே.

மாயையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மெய்யாகிய ஆண்டவரை காணும் சூழ்நிலையை ஏற்படுத்தவே எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள் மூலமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மெய்ந்நெறியாகிய அருள்நெறியை எல்லா மக்களுக்கும் போதித்தார், மெய்ந்நெறியை கடைப்பிடித்து தன்னை எளிதாக அடைய முடியும் என்பதையும் உணரச்செய்தார்.

அருள்நெறியில்லாது மற்ற வழிகளில் இறையை உணர முடியுமா? என்றால் அது சற்று கடினம், இதற்கு சுவாமியே விளக்கம் தருகிறார்.

மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி
மீதேறித் தெளிந்திச்சை விடுதல் ஏறி
அஞ்ஞான மற்றபடி ஏறி உண்மை
அறிந்தபடி நிலைஏறி அது நான் என்னும்
கைஞ்ஞானங் கழன்றேறி மற்ற எல்லாம்
கடந்தேறி மவுனவியற் கதியில் ஏறி
எஞ்ஞானம் அறத் தொளிந்தோர் கண்டுங் காணோம்
என்கின்ற அநுபவமே இன்பத் தேவே.

அஞ்ஞானத்திற்கு காரணமாகிய இச்சை விடுத்து, மெய்ப்பொருளை காணும் பொருட்டு ஆணவம், கன்மம், மாயை, திரோதனம் மற்றும் மாயையேம் நீக்கி, மவுன நிலையில் யோகம் கொண்டும் காண்பதற்கறியவர் அந்த ஜோதி வடிவான இறைவன். ஆதலால் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர வேண்டும் என்றால், அனைத்தும் உயிர்களிலும் அன்புக்கொண்டு, ஜோதி வடிவாக இருக்கும் இறையை உணரலாம், இதற்கு அவருடையே பாடலே சான்று.

எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே
எண்ணி நல் இன்புறச் செயவும்
அவ்வுயிர் களுக்கு வரும் இடையூற்றை
அகற்றியே அச்ச நீக்கிடவும்
செவ்வையுற்றுனது திருப்பதம் பாடிச்
சிவ சிவ என்று கூத்தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே
ஓங்கவும் இச்சை காண் எந்தாய்.

கருநெறியாகிய பல வித உயிர்பலி பூஜைகள் மற்றும் அதனைச் சார்ந்த நெறிகளால் இறையை உணர முடியாது, எமக்கு எல்லா வல்லபமும் வழங்கிய வள்ளல் கருநெறியால் காண முடியாதவர். பெருநெறியாகிய அருள்நெறியில் மட்டுமே அவர் திருநடனம் புரிவார் எனவே என்னைப்போல் நீங்களும் திருநெறியாகிய சமரச சன்மார்க்கத்தை சார்வீர், இது நான் கண்ட உண்மை நிலை என்று அனைத்து மக்களுக்கு ஏற்றுக்கொள்ளத் தக்க ஒரு உண்மையை எடுத்துரைக்கிறார்.

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச்
சிவநெறி என்றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனையாட் கொண்டருளமுதம் அளித்து
வல்லப சத்திகளெல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்
பெருநெறியி சித்தாடத் திருவுளங்கொண்டருளிப்
பெருங்கருணை வடிவினொடு வரு தருணம் இதுவே
கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடையாதீர்
கண்மையினால் கருத்தொருமித்துண்மை உரைத்தேனே!

எனவே நம்முடைய மெய்யுணர்வு கடவுள் ஒருவரே என்றும் அவரைக் காண்பதற்கு சாதி, மதம், சமயம் தடையில்லை என்பதையும் உணர வேண்டும். மேலும் எல்லா மார்க்கங்களும் கண்ட உண்மை நெறி மதத் தீவிரத்தாலும், அவர்களுக்குப் பிறகு வந்த வழித் தொண்டர்களாலும் திசை மாறி, உண்மை இறைநிலையை உலகிற்கு உணர்த்த தவறிவிட்டன, இதனை:

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர்- வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங்கு
என் மார்க்கமும் ஒன்றாமே.

எனவே நாம் இங்கு உணர வேண்டியது யாதெனில் சன்மார்க்கம் என்பது சமயத்தை மறுப்பதில் இல்லை. சமயத்தில் காணும் மூட பழக்க வழக்கங்களை விடுத்து, மெய்யுணர்வு கொண்டு, மெய்யைக் காண்பதில் இருக்கிறது. இதனை வள்ளல் பெருமானார் இறைநிலை அறிந்து இறைநிலை அடைதல் வேண்டும் என்கிறார்.

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்!

எனவே எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லா உயிர்களிலும் இருப்பது போல், பல மார்க்கங்களில் காணும் சமயத்தேவர்களிடத்தும் இருக்கின்றார் என்பதே உண்மையான மெய்யுணர்வு. இதனை:

பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே

எனவே உயிர்களிடத்து எப்படி பேதம் காணக்கூடாதோ அதுபோல் பிற மார்க்கங்களிலும் பேதம் கொள்ளாமல், உண்மையை நாம் நன்குணர்ந்து மெய்ப்பொருளை அடைய வேண்டும். புத்தர் என்றாலும், அருகர் என்றாலும், நாராயணன் என்றாலும், ஆதிசிவன் என்றாலும், பரபிரம்மம் என்றாலும், அல்லாஹ் என்றாலும், கர்த்தர் என்றாலும் அதனால் நாம் வேற்றுமை உணர்வு கொள்ளக்கூடாது. எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சாயலே.

இதுவே அருளியியல் வாழ்வில் நாம் கற்றுணரும் முதற்பாடம். அடுத்து நாம் செய்ய வேண்டியது யாதெனில்..........

மெய்யுணர்தல் தொடரும்...,

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

தகவல் உதவி

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை