அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
உயிர்கள் அனைத்தும் இறையின் அம்சமே என்று நினைந்து அதனை உணர்ந்து இறைநிலையும், தன்னிலையும் தெரிந்து, பக்குவ நிலையின் உச்சமான எல்லா உயிர்களிலும் இறையைக் காணும் நிலைக்கு வரும் போது, அவ்வான்மா தான் வேறு, பிற உயிர்கள் வேறு என்ற பேத நிலையையும் கடந்துச் செல்கிறது. அந்நிலையில் இறைவனான பரம்பொருளும் தன்னை உணர்ந்த அப்புண்ணியனின் உள்ளத்தில் அமர்ந்து அவனே தானாவான். -ஞானகுருசிதம்பரம் ராமலிங்கம்
பர ஞானம்- VI
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையினால் மனிதப்பிறவி எடுத்த ஆன்மா இம்மண்ணுலகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களிடத்திலும், மனிதர்களிடத்திலும் சாதி, சமய, இனம், மற்றும் மதத்தைக் கடந்து , தமது பகுத்தறிவால் அன்பு செலுத்தும் போது அவ்வான்மானது ஞானத்தில் ஞான வழியில் செல்லத் துவங்குகிறது. எனவே ஞானவழியில் செல்லத்துவங்கும் ஆன்மாவிற்கு அகத்தில் இருக்கும் குருவை நாடுவதற்கான உபாயமும் தானே அமைகிறதாம்.
இதனை திருமூலர் திருமந்திரத்தில் கீழ் வருமாறு காணலாம்:
அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவாலும் இல்லை
அவனும் அவனும் அவனை யறியில்
அவனும் அவனும் அவனிவனாமே
உயிர்கள் அனைத்தும் இறையின் அம்சமே என்று நினைந்து அதனை உணர்ந்து இறைநிலையும், தன்னிலையும் தெரிந்து, பக்குவ நிலையின் உச்சமான எல்லா உயிர்களிலும் இறையைக் காணும் நிலைக்கு வரும் போது, அவ்வான்மா தான் வேறு, பிற உயிர்கள் வேறு என்ற பேத நிலையையும் கடந்துச் செல்கிறது. அந்நிலையில் இறைவனான பரம்பொருளும் தன்னை உணர்ந்த அப்புண்ணியனின் உள்ளத்தில் அமர்ந்து அவனே தானாவான்.
இதனை வள்ளல் பெருமானார்:
உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
மலர்ந்தனன் சுத்த சன்மார்க்கப்
பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
பாடுகின்றேன் பொதுப்பாட்டே.
-திருவருட்பா
எனவே மனிதப் பிறவியின் நோக்கமே அருளின்ப வாழ்வைப்பெறுவதே. இதற்குச் சாதனமாக அமைவது அன்பு ஒன்றே என்பதை அறிந்து, எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் நேசித்து , பரம்பொருளை அனைத்து உயிர்களிடமும் காண முயற்சிச் செய்ய வேண்டும். ஆனால் இதையறியாத மனிதன் அறியாமை என்கிற இருளில் மூழ்கி உலக வாழ்வில் பல வழிகளில் இன்பம் காண முயல்கிறான், அதற்காக கிரியை முதலிய வழிபாடுகளையும் செய்து முடிவில் அழிவை எதிர் நோக்குகிறான்.
சிலர் உலக வாழ்வை வெறுத்துச் சென்று துறவு வாழ்வில் இன்பம் தேடி பரம் பொருளை உணரமுடியாமல் - அருள் இன்ப வாழ்வினைப் பெற முடியாமல் போகின்றனர். மேலும் சிலர் உலக வாழ்வில் தாக்கற்றவர்கள் போல் நடித்து, ஞான வழியில் செல்வது போல் பாவித்து முடிவில் தோல்வி அடைகின்றனர்.
ஞான வழியில் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறையிடம்- பிற உயிர்களுக்காக அர்ப்பணித்தவர்கள் தாமே சிவமாகிறார்கள்.
வள்ளல் பெருமானாரும் தன்னுடைய உடலை மாற்றிக்கொண்டார் .................அர்ப்பணித்தார்..........
-தொடரும்..,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தகவல் உதவி
ஞானகுரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள்
Write a comment