Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam and Vallalar Space Training Centre
பர ஞானம்-V

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஆன்மநேய ஒருமைப்பாட்டை சன்மார்க்கத்தில் ஈடுபடும் அன்பர்களிடம் மட்டும் காண்பித்தால் போதாது. இம்மண்ணுலகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களிடத்தும் சாதி, சமய, இனம், மதத்தைக் கடந்து, அன்புச் செலுத்துதல் வேண்டும். அப்பொழுது மட்டுமே ஆன்மா ஞானத்தில் ஞான வழியில் செல்லத் துவங்கும்.

பரஞானம்- V

எல்லா வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எல்லா உயிரிகளிடத்தும் இருந்துக்கொண்டு தனது தனிப்பெருங்கருணையினால் அருளரசாட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். எனவே மண்ணுலகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களிடத்தும் அன்புக் கொண்டு வேற்றுமை உணர்வு இல்லாதப் பக்குவ ஆன்மாவிற்கு தான் வேறு, அவர்கள் வேறு என்ற மல உணர்வை நீக்கி ஒருமையை ஏற்படுத்துகிறார்.

ஆனால் இப்பொழுதோ சிலர் செயற்கை வழியில் தியானம் அல்லது யோகம் மூலம் தன்னையே பரபிரம்மம் என்று எண்ணிக்கொண்டு, உயிர்களிடத்து அன்பு செலுத்தாது தன்னுள்ளே மட்டும் இறைவனைக் காணும் முயற்சியில் ஈடுபடும் போது, மேலும் மல உணர்வு உண்டாகி அவர்கள் பக்குவமற்றச் சூழ்நிலைக்கு ஆளாகின்றனர்.

எனவே ஞானமார்க்கத்தில் செல்லும் நம்முடையீர் தன்னுள் மட்டுமே இறைவன் இருப்பதாக ஒரு போதும் நினைக்கப்படாது. எல்லா உயிர்களிடத்தும் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்ந்து சாதி, சமயம், மத உணர்வு இல்லாது ஆன்மநேய ஒருமைப்பாட்டுடன் உலகியியல் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

மேலும் சாதி குலம் சமயம் தவிர்த்து அனைத்து உயிர்களிடத்தும் இறைவன் அகம், புறம், அகப்புறம், புறப்புறம் எங்கும் நிரம்பியுள்ளதை உணர்ந்து உலகியியல் வாழ்க்கையை தவ வாழ்க்கையாக , கருணை வாழ்க்கையாக வாழும் போது, ஓதி உணர்ந்தவர்கள் கிடைக்கப்பெறாத பரஞானத்தை இறைவனே வழங்குவார்.

இதனை அருள் மாலையில் கீழ் வருமாறு சொல்கிறார்.

சாதிகுலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேலேற்றி

தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப்பொருளே

ஆதிநடுக் கடை காட்டாது அண்டபகிர் அண்டம்

ஆருயிர்கள் அகம்புறம்மற்று அனைத்துநிறை ஒளியே

ஓதியுணர்ந்தவர் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்

ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே

சோதிமயமாய் விளங்கித் தனிபொதுவில் நடிக்கும்

தூயநடத்த அரசே என் சொல்லுமணிந்தருளே.

-திருவருட்பா

திருமூலர் திருமந்திரமும் இதனையே

சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை

சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே

சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்

அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே!

-திருமந்திரம் 6ம் தந்திரம்

விளக்கம்:

நல்ல குணம், உண்மை பொழிமை, ஏழைகளுக்கு உதவி செய்யும் தயவு, மற்றவரையும் தன் போல் மதிக்கும் குணம், இவையெல்லாம் இறைவனது அருளைப் போல் என்றும் நம்மைவிட்டு அகலாது இருத்தல் வேண்டும்.

ஞான மார்க்கம் சிறப்புப் பொருந்திய இறைவனைக் காட்டும் நல்ல மார்க்கமாகும். அம்மார்க்கம் தெளிந்து தெளிவு படுங்காலத்தில் நீ நினைக்க முடியாத அளவிற்கு பெரிய அற்புதங்கள் தோன்றுவதைக் காண்பாய் சீடனே என்று சொல்கிறார்.

இதில் மிகப்பெரிய உண்மையும் அடங்கியுள்ளது. எவ்வுயிரையும் தம்முயிர் போல் பார்க்கும் பக்குவமே சிறந்த பக்குவம். ஆகவே ஞான மார்க்கமான சன்மார்க்கத்தில் ஈடுபடும் நம்மவர்களுக்கு பொறுமை, சற்குணம், தயவு மிகவும் அவசியம். சுத்த சன்மார்க்கத்தில் ஈடுபடும் நம்முடையீர் பிற மார்க்கங்களை விட சன்மார்க்கம் எவ்விதம் சிறந்தது என சுட்டிக்காட்டலாம். ஆனால் பிறர் மனம் புண்படும் படி எவ்வித வார்த்தைகளாலும், செயல்களாலும் நடந்துக்கொள்ளக்கூடாது . ஆன்ம நேய ஒருமைப்பாட்டை சன்மார்க்கத்தில் ஈடுபடும் அன்பர்களிடம் மட்டும் காண்பித்தால் போதாது. இம்மண்ணுலகத்தில் இருக்கும் அனைத்து சாதி, சமய, இனம், மதத்தை கடந்து , அனைவரிடத்தும் அன்பு செலுத்துதல் வேண்டும். அப்பொழுது மட்டுமே ஆன்மா ஞானத்தில் ஞான வழியில் செல்லத் துவங்கும்.....

தொடரும்..,

தகவல் உதவி:

எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

**************