Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
இறை நிலை- VII

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

இறை நிலை- VII

இறை நிலையை உணர மிக முக்கிய பங்கு வகிப்பவர் குரு ஆவார். நல்ல குரு அமைந்து, நல்ல வழிகாட்டுதல் அமைந்தால் ஒருவன் உண்மை இறை நிலையை மிக எளிதாக உணரலாம். எனவே குரு உபதேசத்தைப் பற்றியும், குருவானவர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் திருமூலர் திருமந்திரம் மூலம் பார்ப்போம்.

குரு உபதேசம்

இறை மார்க்கம் செல்ல ஆர்வம் கொண்டுள்ள ஒருவனுக்கு அவனுடைய ஊழின் காரணமாகவும், இறைவன் அவனுக்குத் தந்த வரத்தின் காரணமாகவும், அவனைத் தீய வழியில் செல்லவிடாமல் தடுத்து, தான் படைத்த அந்த உயிர் தன் பாதாரவிந்தத்தில் சேர வேண்டும் என்றெண்ணிய இறைவன் குருவாய் உருத்தாங்கிவந்து, அவனுக்குக் கூறும் அறிவுரையே உபதேசம் ஆகும்.

குரு என்பவர் மட்டுமே இறை உபதேசம் பண்ண இயலும். குரு இறைநிலையை உணர்ந்தால் மட்டுமே தன்னுடைய சிஷ்யனுக்கு உண்மையை உபதேசிக்க இயலும். அதனால் தான் திருமூலர்:

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்வார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடுங் குழிவிழுமாறே 1680 , திருமந்திரம்

வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்கிறார் திருமூலர்.

மேலும் குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று திருமந்திரம் முதல் தந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை இப்பொழுது பார்ப்போம்.

திருமந்திரம்: முதல் தந்திரம்

உபதேசம்

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக் காவல் முன்வைத்து

உண்ணின் றுக்கியொ ரொப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத்தானே.

- திருமந்திரம்: முதல் தந்திரம் :113

விளக்கம்:

எல்லா உலகங்களுக்கும் அப்பாலாய் உள்ளவன் சிவன். அவனே முழுமுதற் கடவுள். அவனை அடைய மனிதனுக்குப் பாலம் தேவைப்படுகிறது. அப்படிப் பாலமாக அமைபவனே குரு. சிவபரம்பொருளின் ஒரு அங்கமே குரு, அங்கமிருக்கும் உடலாகி, அந்த “உடலுக்குள் இருக்கும் உயிராகிய சிவனை அடையப் பாலமாக அமைகிறான்”.

குருவானவன் உபதேசம் செய்யுங்கால் தன்னைத் தனி அங்கமாகவும் சிவனை முழு முதலாகவும் கொண்டு, அந்தச் சிவனை அடைய உதவும் பாலமாக அமைகின்றான். குரு நிலையில் இருக்கும்போது தன்னைச் சிவனென்று பறைசாற்றிக் கொள்ளமாட்டான்.

சீடன் தான் இதனை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். அல்லது அருள் பெற்ற பெரியோர் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் குருவைச் சீடனானவன் அவனைக் குருவாக மட்டுமன்றி தான் வணங்கும் தெய்வமாக முழு முதற் கடவுளாக, முத்தி தரும் சித்தனாக எண்ண முடியும். அப்பொழுது தான் மனதில் அவனைப் பற்றிய உயர்ந்த எண்ணங்கள் உண்டாகும்.

பழுத்த முனிவர்கள் குருவை வணங்குங்கால் சிவன் மறைவர்; சிவனை நோக்குங்கால் குரு மறைந்துவிடுவார். மரத்தை மறைத்த யானை மரத்துள் மறைந்தது போல.

ஆதவன் தோன்றும்போது தடாகத்தில் உள்ள அத்தனை தாமரைகளையும் மலர்த்துவதில்லை. உரிய வளர்ச்சி பெற்று மலரத் தாயாராக உள்ளவற்றை மட்டுமே இதழ் விரிக்கச் செய்கின்றான், மொட்டுகள் மேல் கதிரவனின் பொன்னொளி பட்டும் அவை மலர்வதில்லை.

உயிர்களும் வினைக்கேற்பப் பிறவி எடுக்கின்றன. எனவே குணங்களும் செயல்களும் வேறுபட்டிருக்கின்றன.

விண்ணின்று மண்ணுலகு வரும் இறைவன், தான் படைத்த மானுடர் அனைவருக்கும் குருவருள் சித்திக்கச் செய்வதில்லை. முற் பிறவிகளில் புண்ணியங்கள் மிகச் செய்து, அதன் காரணமாக இறைவனிடம் வரம் பெற்று மானிடப் பிறப்பெடுத்துள்ள சிலருக்கு மட்டுமே இப்பிறவியில் இறைவனாம் சிவனின் நினைவை மலரச்செய்து, உள்ளத்தைக் குளிர வைக்கும் திருவைந்தெழுத்தை ஓதச் செய்து அதனால் அவர்கள் உள்ளத்துள் நின்று அன்பால் உருகச் செய்து, மாயைக்குக் காரணமான மண், பொன், பெண், ஆசைகளாகிய களிம்பினை அகற்றி அவர்களை ஆனந்தத்துள் ஆழ்த்தும் இறைவன் இறுதியில் தன்னடி சேர அருளும் வழங்குவான்.

மேலும் திருமந்திரம் ஆறாம் தந்திரத்தில் உண்மை குருவானவர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறார்.

திருமந்திரம்: ஆறாம் தந்திரம்

14. பக்குவன்

தொழிலறி வாளர் சுருதிகண்ணாகப்

பழுதறி யாத பரம குருவை

வழியறி வார்நல் வழியறிவாளர்

அழிவறி வார்மற்றை யல்லாதவரே.

: 1690 -திருமந்திரம் 6ம் தந்திரம்

விளக்கம்:

செய்கின்ற தொழிலை வெகு நேர்த்தியாகச் செய்யும் திறமை படைத்தவன், அதே தொழிலை இன்னொருவன் செய்து முடித்திருக்குங் காலை, அத்தொழில் நன்கு அமைந்திருப்பின் அதனைப் பாராட்டுவான்; அமையாவிடத்துப் பழுதையும் எளிதில் கண்டுக் கொள்வான். அங்ஙனம் குற்றமற்ற பெருமானை எளிதில் கண்டுக் கொண்டவன், அதனைப் புரிந்து கொள்ளும் தன்மை படைத்த நல்ல அறிவுடையவனாய் அமைவான். நல்லறிவு படைத்திருப்பவனே சிவனை அறிந்துக் கொண்டு, அவனைத் தன் குருவாகக் கொண்டு போதனை பெறுவான்.

நல்லறிவு இல்லாத தீ மதியாளர்கள் அவனைக் கண்டு கொள்ளாமல் அழிவென்னும் இழிந்த பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருப்பர்.

தொழிலாவது சிவம். நல்லறிவு படைத்தவன் தேர்ந்த தொழிலாளன். தீயறிவு படைத்தவன் தேர்ச்சியில்லாத தொழிலாளன். எப்படி தேர்ச்சி இல்லாத தொழிலாளன் செய்யப்பட்ட தொழிலிலுள்ள நிறைகுறைகளை அறிந்துகொள்ள முடியாதவனாய் இருக்கின்றானோ அதைப் போலவே தீ மதி படைத்தோன் இறைவனைப் பற்றி அறிந்து கொள்ளாதவனாய் இருக்கின்றான். இது மறை பொருள்.

மேலும் குருவைப் பற்றி சொல்லும் போது:

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக

உள்ள பொருளுடல் ஆவியுடன் ஈக

எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று

தெள்ளி யறியச் சிவபதந்தானே.

1693 : -திருமந்திரம் 6ம் தந்திரம்

விளக்கம்:

குருவாக ஒருவனை அவசரப்பட்டுத் தேர்ந்தெடுக்கலாகாது. மிக நன்றாக யோசித்துத் தெளிந்த பின்னரே ஒருவனைக் குருவாகக் அடைதல் வேண்டும். அப்படிப் பெறப்படும் குருவானவன் நல்லவனாய், நாம் அறியாதவற்றை அறிந்தவனாய், நமக்கு அவற்றை எடுத்துச் சொல்பவனாய், நம்மை நன்னெறிப்படுத்துவனாய், குற்றமில்லாதவனாய், நமக்குப் பிறவிப் பயன் கொடுப்பவனாய் அமைதல் வேண்டும்.

அப்படிப் பெற்ப்பட்ட குருவானவனிடம் நமது உள்ளம், உடல், பொருள், ஆவி இவற்றிற்கு மூல காரணமாக உள்ள நம்பிக்கையைச் செலுத்தி மாறா அன்புடன் இருத்தல் வேண்டும். அசைக்க முடியாத நம்பிக்கையை அவன் மேல் வைத்தல் அவசியம். ஒரு சிறிது கூட அவனிடம் சஞ்சலம் பாராட்டாது, அவன் கூறும் வழிப்படி நடந்து, அவனைப் பின்பற்றி நிற்றல் அவசியம். அவன் கூறும் உபதேசங்களை மீண்டும் மீண்டும் வாசித்து நல்ல கருத்துகள் பெற்று உயர்ந்திருப்பின் இம்மை நீங்கி மறுமையில் முத்தி பெறலாம்.

மெய்க் குருவானவன் நிச்சயம் முத்தியடையும் வழியைச் சொல்லித் தருவான். அவன் கூறும் உபதேசங்களே அப்பாதையைக் காட்டிடும் வழிகாட்டியாய் அமையும். இட்டுச் செல்லும் பொறுப்பு குருவையே சாரும்.

கடைசிப் பாடலில்:

சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை

சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே

சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்

அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே!


1703
: -திருமந்திரம் 6ம் தந்திரம்

விளக்கம்:

நல்ல குணம், உண்மை பொழிமை, ஏழைகளுக்கு உதவி செய்யும் தயவு, மற்றவரையும் தன் போல் மதிக்கும் குணம், இவையெல்லாம் இறைவனது அருளைப் போல் என்றும் நம்மைவிட்டு அகலாது இருத்தல் வேண்டும்.

ஞான மார்க்கம் சிறப்புப் பொருந்திய இறைவனைக் காட்டும் நல்ல மார்க்கமாகும். அம்மார்க்கம் தெளிந்து தெளிவு படுங்காலத்தில் நீ நினைக்க முடியாத அளவிற்கு பெரிய அற்புதங்கள் தோன்றுவதைக் காண்பாய்.

தொடரும்..,

குறிப்பு:

விரிவஞ்சி சில பாடல்கள் மட்டுமே இங்கே தரப்பட்டுள்ளது. காலம் வரும் போது திருமந்திரம் அனைத்து தந்திரங்களுக்கும் எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு வள்ளல்பெருமானார் உதவியால் பொழிப்புரை அளிக்கப் படும்.

தகவல் உதவி:

1. எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு- வள்ளல் பெருமானார்.

2. திருவாரூர் மடப்புரம் ஸ்ரீ குரு தெட்சிணா மூர்த்தி சுவாமிகள்.

3. கருணைமிகு கி.நாகராஜன், நாகப்பட்டினம். ( குரு தெட்சிணா மூர்த்தி சுவாமிகளின் ஆசி பெற்றவர்)

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி