Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam and Vallalar Space Training Centre
சன்மார்க்க தீட்சை- முடிவுரை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

சன்மார்க்க தீட்சை- முடிவுரை

மக்கள் எப்பொழுதெல்லாம் அஞ்ஞானம் கொண்டு இருக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இறைவனால் நெற்றிக்கண் திறக்கப்பட்டவர்களே சித்தர்கள்-மகான்கள். அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய பணி பெரும் மகத்தானது. அதுபோல் ஞானமார்க்கத்திற்கும் அவர்கள் வழிகாட்டியுள்ளனர். திருவள்ளுவர், திருமூலர், சிவவாக்கியர், இடைக்காடர் மற்றும் குதம்பைசித்தர், முதலியோர்களின் பாடல்களில் சாதி, மத, இன வேறுபாடுகளை களைந்தும், ஆசார விகற்பங்களைத் தவிர்த்தும், ஞானம் என்றால் என்ன? என்பதை விளக்குவதற்காக அவர்கள் நிறைய பாடல்களை இயற்றி அதன் மூலம் மக்களை நல்வழி படுத்தினர், ஆனால் மாயைவசப்பட்ட மக்கள் அவர்கள் காட்டிய வழியை பின்பற்ற தவறினர். எனவே மீண்டும் மக்களை நல்வழிப்படுத்த வாழையடி வாழையில் வருவிக்க உற்றார் ஸ்ரீ ராமலிங்க அடிகள்.

ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் ஆற்றியப் பணி யாவரும் அறிந்ததே! அவருடைய கொள்கைகளே போதும் அவர் அஞ்ஞானம் கொண்ட மக்களுக்கு எவ்வாறு நல்வழிப் படுத்தினார் என்று.

எனவே அவர் காட்டிய வழியில் செல்வோமேயானால் நாமும் நிச்சயமாக அருட்பெருஞ்சோதி ஆண்டவரைக் காண முடியும்.

எனவே நாம் காலத்தை வீணடிக்காமல் எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு ஸ்ரீ ராமலிங்க அடிகளை குருவாக மானசீகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பின் அவர் கூறிய கொள்கைகளை எக்காலத்தும், எவ்விடத்தும் எவ்வளவும் விலகாமல் கடைப்பிடிப்பேன் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

· இவ்வாறு அவர் கூறிய கொள்கைகளை நம்மால் இயன்ற வரை கடைப்பிடிக்க வேண்டும், பெயரளவில் சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் தீவிர மாக முயற்சி செய்ய வேண்டும்.

· நமது முயற்சிக்கு ஏற்பவும், நம்முடைய அன்பிற்கு ஏற்பவும்-பிற உயிர்களிடத்து காண்பிக்கும் கருணைக்கு ஏற்பவும் (தயவு-அன்பு-விசுவாசம் எல்லாம் ஒன்றே) எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு காட்சியளிப்பார்.

மேலும் தீவிர முயற்சி யாதெனில்,

· எந்த நோக்கத்திற்காக நாம் பரம்பொருளை ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவரை தரிசிக்க விரும்புகிறோம் என்பதாம்.

· பரம்பொருளை தவிர வேறு எவ்வித பற்றுதலும் இல்லை, பரம்பொருளை பேரானந்தத்தைக் காணும் பொருட்டே இந்த ஆத்மா விழைகிறது. வேறு எவ்வித நோக்கமும் இல்லை என்ற சத்திய பிரமாணமும் எடுத்துக்கொள்ள வேண்டுமாம், ஏனெனில் பரம்பொருளை உணர்வதற்கு முன் சில சித்திகள் எல்லாம் கைக்கூடும். அவ்வாறு அவ்வித சித்திகளிடம் ஏமாந்தால் நமது இலட்சியமாகிய பரம்பொருளை உணரும் நோக்கம் மற்றும் சாகாக் கலை நிறைவேறாது.

மேலும் நாம் எல்லா வல்ல ஸ்ரீ ஞான குரு ராமலிங்க அடிகளை குருவாக ஏற்று அவரிடமே தீட்சை பெற விரும்பினால்:

· சமய, மத, மார்க்கங்கள் முதலிய ஆசார சங்கற்ப விகற்பங்களில் மனம் பற்றாமலும், வருணம், ஆசிரம உலகாசார சங்கற்ப விகற்பங்களில் மனம் பற்றாமல் சுத்த சன்மார்க்கத்தைக் கடைப்பிடித்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையை கடைப்பிடிக்க வேண்டும்.

· சன்மார்க்கிகளும் ஆன்மீக சாதகர்களும் தடம் புரளுவது இதில் மட்டுமே, சமய நம்பிக்கை, மார்க்கங்கள், ஆசார நம்பிக்கை முதலிய மாயைகளில் இருந்து அவர்களால் வெளிவர முடிவதில்லை.

· இதனால் தான் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளுக்குப் பிறகு அவர் போல் யாரும் அந்நிலையை அடைய முடிய வில்லையாம்.

· “ இறைவன் ஒருவரே ’’ என்பதை உணர்த்துவதற்காக அனைத்து தேசத்திலும் சித்தர்கள்-மகான்கள் இறைவனால் நெற்றிக்கண் திறக்கப் பெற்றார்களாம். (மேலும் விவரங்களுக்கு மதங்கள் என்ற கட்டுரையை இதே இணைய தளத்தில் பார்க்கவும்).

மேலும் மதத்தின் மேல் நம்பிக்கை வைத்தால் ஆன்ம நேய ஒருமைப்பாடு வராது, மாறாக தங்களுடைய மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற குறுகிய மனப்பாங்கு வளர ஆரம்பிக்கும். அதனால் எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பார்க்கும் பக்குவம் வராது.

எனவே எல்லா உயிர்களிடத்தும் இறைவன் இருக்கிறார் என்ற பக்குவத்தை வளர்த்துக்கொண்டு எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற மகா பிரார்த்தனைச் செய்து- எல்லா உயிர்களுக்கும் தொண்டாற்றி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளை குருவாக ஏற்று வணங்குவோமானால் நாம் புற குருமார்களிடம் சென்று கால விரயம் செய்ய தேவையில்லை.

அவர் அருளால் எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தரிசனம் கிடைக்கப் பெற்று பிறவிப் பெருங்கடல் நீந்த பெறுவோம்.

அப்பொழுது மட்டுமே அவருளால் நாம் அவரிடமே தீட்சைப் பெற்று அருளியியல் வாழ்க்கையை உணர முடியும். பல நூல்களை படிப்பதாலோ, கற்றதாலோ , கற்றுக்கொண்டிருப்பதாலோ இறையை உணர முடியாது.

உயிர்குலத்துக்கு தொண்டு செய்வதால் மட்டுமே கடவுள் அருள் தீட்சை கிடைக்கப்பெறும். இதற்கு சில நாட்களோ, சில மாதங்களோ, சில வருடங்களோ ஆகலாம். உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணமும் கூடாது. மேற்படிப்புக்கு எப்படி தகுதி தேவையோ அது போல் நம்முடைய தகுதி உயரும் போது அதாவது எல்லா உயிர்களிடத்தும் இறைவனைக் கண்டு பிரதி பலன் காணாது நாம் உயிர்குலத்துக்கு தொண்டு செய்யும் போது இறை வெளிப்படுமாம். இதுவே - ஞானத்தில் ஞானம், இந்நிலையே செம்மையான மன நிலை.

மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்

மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்

மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்

மனமது செம்மையானால் மந்திரமும் செம்மையாமே!

-அகஸ்தியர் ஞானம்

சன்மார்க்க தீட்சை என்பது ஞானத்தில் ஞானம் -எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் நிலையில் தான் உள்ளது. அதனால் தான் ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம்,ஜெபம், தியானம் முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுளருளுக்கு சிறிதும் பாத்திரமாகார்கள் என்று சுவாமிகள் குறிப்பிடுகிறார்கள்.

எனவே நாம் கால விரயம் செய்யாது அருட்பெருஞ்சோதி ஆண்டவரைத் தொழுது எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து, தொண்டு செய்து, மகா மந்திரத்தை கூறி நினைந்து நினைந்து என்று 28 பாசுரங்கள் அடங்கிய பாடலையும் அகவல் மற்றும் அட்டகத்தையும் பாராயணம் செய்து ஜோதி பாடலுடன் நிறைவு செய்து, சுத்த சன்மார்க்க விண்ணப்பத்தையும் கூறி பூஜையை நிறைவு செய்யவும். இவ்வாறாக பிரதி பலன் பாராது (எல்லாம் வல்ல பரம்பொருள்- அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அருளை தவிர ) பூஜை செய்ய நிச்சயம் அவர் வருவார், தீட்சை தருவார். இது அவர் தரும் ஞான தீட்சையாகும், மற்ற தீட்சைகள் எல்லாம் புற குருமார்கள்-அபக்குவர்கள் தரும் தீட்சையேயாகும்.

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்வார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடுங் குழிவிழுமாறே – 1680 , திருமந்திரம்

வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்று திருமூலர் சொல்வது இங்கு நோக்கத்தக்கது.

எனவே வள்ளலாரை ஞானகுருவாக ஏற்று அவரிடமே தீட்சை பெருங்கள். அவரிடம் தீட்சை கிடைக்கும் வகையில் பசித்து, தனித்து,விழித்திருங்கள்.

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர்-வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங்கு

என் மார்க்கமும் ஒன்றாமே. -திருவருட்பா

குறிப்பு:

தீட்சை கட்டுரையில் மதத்தை சார்ந்தவர்கள் மற்றும் சாராமல் நின்றவர்களின் தீட்சை பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் பெற்ற தீட்சையை ஆராயுமிடத்து அவர்கள் பெற்ற தீட்சைகள் கர்த்தாக்களிடம் பெற்றது என தெரிய வருகிறது.

உருத்திரர்கள் ஒரு கோடி நாரணர் பல் கோடி

உறுபிரமர் பல கோடி யிந்திரர் பல் கோடி

பெருத்த மற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்

பேசிலநந்தங்கோடி யாங்காங்கே கூடித்

திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று

தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராயந்தோ

வருத்தமொன்றுங் காணாதே நானொருத்தியேறி

மாநடங் காண்கின்றேனென் மாதவந்தான் பெரிதே!

-திருவருட்பா-5776

இந்த ஒரு பாடல் போதும் வள்ளலார் கண்ட இறைவன்- ஏக இறைவன் என்றும், அவரைப் போல் நாமும் ஏக இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்பதே எல்லாம் வல்ல ஸ்ரீராமலிங்க சுவாமிகளின் விருப்பமாம். எனவே வள்ளல் வழியில் வாழ்ந்து அவர் அருளைப் பெறுவோம்.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

valliammai ramanathan
Fantastic sir. It is answers lot of my questions. Thank you. Valli. ( This kind of article is the boost, peoples like me. Thank you once again. )
Friday, May 15, 2009 at 18:36 pm by valliammai ramanathan
taniperumkarunai
Thank you for this article. I confer with valli ram. this is the kind of article we need in this space. it strengthens our faith in what vallalars departing message. forget what he said in the first five thirumurais. the 6th thirumurai tells us what was the extend of his intellect which spanned across all the space. i truely belive that he saw what no other has seen before him. in fact that was his life destiny. now its up to us to follow him.
Saturday, May 16, 2009 at 08:33 am by taniperumkarunai
ravichandrank1983
good
Wednesday, March 27, 2013 at 13:50 pm by ravichandrank1983