தீட்சை-VI
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்தார். இளமை காலத்தில் போகத்தில் மூழ்கி தொழுநோய் வந்தது. தன்னுடைய சகோதரி மூலம் அருள் நெறி வாழ்க்கை எவ்வளவு சிறந்தது என உணர்த்தப் பட, தான் அவ்வாழ்க்கையை தொலைத்து விட்டதாக எண்ணி திருவண்ணாமலை கிளி கோபுரத்திலிருந்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பினார்.
திருவருள் அவர் மூலம் தமிழையும், அருள் நெறி வாழ்க்கையையும் உணர்த்த விரும்பினால் காலன் என்ன செய்ய முடியும். எல்லாம் வல்ல ஸ்ரீமுருகபெருமான் அவர் முன் தோன்றி தன் அருளால் அவர் நெற்றிக்கண்ணை திறந்தார். சும்மாயிறு சொல்லற என்று திருவாய் மலர்ந்தருளினார். இறைவன் உணர்த்தியதால் இறைவனை நோக்கி தவமிருந்தார். காலம் கனிந்தது. ஸ்ரீமுருகப்பெருமான் அவர் மூலம் தமிழை வளர்க்க எண்ணினார். அருணகிரி நம் திருப்புகழைப்பாடு என்று கூற அவர் எங்ஙனம் பாடுவேன் என்று தயங்கியப் போது முருகக்கடவுள் அவருடைய நாவில் பிரணவம் எழுதி முத்தி என்று பாடு என்று பணித்தருளி சகலகலா ஞானங்களையும் வழங்கியருளினார்.
அறிவுமறி தத்துவமும் அபரிமித வித்தைகளும் அறியென இமைப்பொழுதில் வாழ்வித்த வேதியனும்”-திருவகுப்பு
(வள்ளலாரும் ஒரு நாழிகையில் இறைவன் தனக்கு அனைத்தையும் உணர்த்தியதாக ஒரு பாடலில் கூறியுள்ளார்.
ஒரு நாழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலையே
யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலையே
திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையுமே
சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையுமே”.)
அருணகிரியார் திருவாக்கில் ஞான அருவிபோல் தமிழ் வெள்ளம் பெருக்கெடுத்தது. ’முத்தைத்தரு” என்று தொடங்கும் திருப்புகழைப் பாடினார். பின்னர் திருப்புகழை தொடர்ந்து பாடு என்று அதற்குரிய அருளாற்றலைச் சிறப்பாக வழங்கியருளினார் ஸ்ரீமுருக பெருமான். பின்னர் முருகன் மீது ஏராளமான பாடல்களை பாடினார்.
பழநியில் அவருக்குப் பரமன் செப மாலை தந்தருளினார். தமிழ் தொண்டு ஆற்றிய இவர் சனியூரில் வில்லிபுத்தூர் ஆழ்வாரை வாதில் வென்று அவரை திருத்தி அருள் புரிந்தார்.
எதிரும்புலவன் வில்லிதொழ எந்தையுனக்கந் தாதிசொல்லி ஏழைப் புலவர் செவிக்குருத்தோடு எறியுங்கருவி பறித்தெறிந்தே’-திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
இவர் இறையருளால் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றார். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.
முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் பெற்றவர்கள் மூவர். சிவமூர்த்தி, அகஸ்தியர், அருணகிரி நாதர்.
வேலா சரணம் சரணம் என்மேல் வெகுளாமல் இனி மேலாயினும் கடைக் கண்பார் பருப்பத வேந்தன்மகள் பாலா குறுமுனியார்க்கும் திருப்புகழ்ப் பண்ணவர்க்கும் ஆலாலம் உண்டவர்க்கும் உபதேசித்தஎன் ஆண்டவனே”.என்று முருகர் அந்தாதி கூறுகின்றது. (பின்னாளில் வள்ளலாருக்கும் , ஸ்ரீபாம்பன் சுவாமிகளுக்கும் ஸ்ரீமுருக பெருமான் அருளாற்றலை வழங்கியுள்ளதாக அவர்களது பாடல்கள் மூலம் தெரிய வருகிறது).
எனவே இவருக்கு குரு எல்லாம் வல்ல ஸ்ரீமுருகபெருமான். திருப்புகழை பரம்பொருளின் அருளில்லாமல் இயற்றிருக்க முடியாது என்று பார்த்தாலே புரியும். இறைவனை சரணாகதி அடைந்ததன் மூலம் இறைவனே அவருக்கு எல்லாவித ஞானமும் அளித்ததாக அறிய முடிகிறது. பரம்பொருளின் நெற்றிக்கண்ணிலிருந்து ஸ்ரீமுருகபெருமான் தோற்றுவிக்கப் பட்டதாக புராணம் கூறுகிறது. எனவே முருகன் வேறு பரம்பொருள் வேறு இல்லை. எனவே இவருக்கு குரு பரம்பொருள். அனைத்தும் தெய்வங்களும் பரம்பொருளின் சொரூபமே ஆகும்.
இதனை திருவருட்பா மூலம் காணலாம்.
பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே!
ஆறாம் திருமுறை திருவருட்பா-5801
இறைவனை முழுமையாக உணர்ந்தவர்கள் யாரும் சாதி, மதம், சமய சடங்கு மற்றும் சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைக்கவில்லை. இடைக்காலத்தில் அதை வைத்து வியாபார நோக்கில் பார்த்தவர்கள் மட்டுமே மக்களை மத நம்பிக்கையில் முழ்க வைத்துவிட்டனர்.
அதனால் தான் சைவ, வைணவத்தில் நம்பிக்கை வைக்கவேண்டாம் என்று வள்ளலார் கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியிருப்பதற்கு வேறு காரணமும் உள்ளது. அதனை வள்ளலார் பற்றிய கட்டுரையில் பார்ப்போம்.
அருணகிரிநாதர் இயற்றிய நூல்கள்
- கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
- கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
- கந்தர் அனுபூதி (52 பாடல்கள்)
- திருப்புகழ் (1307 பாடல்கள்)
- திருவகுப்பு
- சேவல் விருத்தம்
- மயில் விருத்தம்
- வேல் விருத்தம்
- திருவெழு கூற்றிருக்கை
தகவல் உதவி
1. அபிதான சிந்தாமணி
2. திருப்புகழ்
3. திருவருட்பா
***********