Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam and Vallalar Space Training Centre
உலகியியல்-அருளியியலில் ஏழு சக்கரங்களின் பங்கு -II

அனாகதம்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

உலகியியல்

உயர்ந்த சான்றோர் தன்னுடைய அனுபவத்தை விட மூத்தோர் வழியை பின்பற்றி வாழ்பவர்களுக்கு மனதில் கவலைகள் தோன்றாது.

அருளியியல்

மனம் செயல்பட்டால் இறை அனுபவம் கிட்டாது. மனம் நின்றால் கவலை என்றாலும் ஆனந்தம் என்றாலும் தெரியாது. சூன்யம் உண்டாகும். அவ்விடத்தில் இறையனுபவம் கிட்டும். இது ஒரு பெரு நிலையாகும் . சொப்னம், சுழுத்தி, ஜாக்ரத், துரியம் என்ற நிலைகளில் மனம் செயல்படாமல் இருப்பது.

இதில் சொப்னம்-தூக்க நிலையில் மனம் செயல் படுவது. சுழுத்தி- அந்த நிலையில் மனம் செயல்படாது இருப்பது.

ஜாக்ரத்- விழிப்பு நிலையில் மனம் செயல்படுவது. துரியம் அந்த நிலையிலும் செயல்படாமல் இருப்பது. அதாவது சும்மா இருப்பது.சும்மா இருக்கும் சுகம் இன்று வருமோ ..என்று சுவாமிகள் பாடுவது நினைவில் கொள்ளலாம். நான்கும் கடந்து வரும் நிலை-துரியாதீதம் இந்த சுகத்தை தான் வள்ளலார் எப்போது வரும் என்று பாடினார்.

மற்ற இரண்டு குறட்களும் இதை சார்ந்து இருப்பவைகளே.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

விசுக்தி

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

உலகியியல்

அற வாழி நேர்மையான மூத்தோர் வழியை பின்பற்றி அவர்கள் வழியில் வாழ்பவர்களுக்கு பொருள், இன்பமாகிய கடல்களை கடப்பது எளிது. அவர்கள் மிக சுலபமாக துன்பங்களுக்கு ஆளாகாமல் சிக்காமல் மீள்வார்கள்.

அருளியியல்

அறம் வாழி அருள் தயவோடு வாழ்பவர்களுக்கு பிற துன்ப கடல்களை கடப்பது எளிது. இறையின் தனிப்பெருங்கருணையால் மற்ற ஆசை கடல்களில் மூழ்கிவிடாமல் இறையை உணரலாம். இல்லையெனில் காண்பதரிது.

ஆக்ஞை

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

உலகியியல்

கேட்காத செவி, பார்க்காத கண் முதலியன போல் நல்ல வழிகாட்டிகளை பின்பற்றாதவர்களுக்கு வாழ்க்கை பயனற்றதாகவே இருக்கும்.

அருளியியல்

கரணங்களும், பொறிகளும் நின்று இறையை காணும் நிலை. மனம், செயல்கள் நின்று மௌனமாகிய கடலில் ஜோதி தோன்றும் நிலை. அவ்வாறு இறை திருவடிகளை காணாதவர்களின் வாழ்க்கை கேட்காத செவி, பார்க்காத கண் முதலியன போல் பயனற்றதாம்.

குறிப்பு:

சகஸ்த்ரானம் பற்றியும் வள்ளலார் காட்டிய வழியையும் மற்றும் முடிவுரை -ஆய்வு முதலியவற்றை வருகிற நாட்களில் பார்ப்போம். வள்ளல் பெருமான் இறையை தெரிந்துகொள்வது வேறு, இறையை அடைவது வேறு என்று அட்டகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். யோகம், தியானம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். ஆனால் அடையமுடியாது. பக்குவம்-அபக்குவம் என்ற நோக்கில் மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த சக்கரங்களின் பங்கு தேவையில்லை -பக்குவிகளுக்கு. மேலும் மேலே கூறிய சக்கரங்களுக்கு யோக முறையில் விளக்கங்கள் தரப்பட வில்லை. எல்லா சக்கரங்களுக்கும் தயவு மூலமே விளக்கங்கள் தரப்பட்டிருக்கிறது.

தகுந்த ஆசிரியர் எல்லாம் விளித்து அபக்குவம் நீக்குவார் என்பதால் வள்ளலார் அவ்வாறு கூறுகிறார்.வள்ளலார் பக்குவிகளுக்கு நிறைய திருவருட்பாவில் தெரிவித்துள்ளார்கள். எனவே மூத்த சன்மார்க்கிகள் -பக்குவிகள் இதனை தவறாக எண்ண வேண்டாம். குறளில் முன்னுரை திருவருட்பாவில் நிறைய விளக்கவுரை.

பிறவி பெருங்கடல் எதற்காக................,

தொடரும்..,