பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தி
முதற்முதற் கடவுளாகிய பரம்பொருளின் மூலம் நான்குவித சக்திகள் இணைந்து இவ்வுலகத்தையே படைத்துள்ளது. இச்சக்திகளுள் முன்னோடியாக விளங்குவதுஆதிபராசக்திதான்.ஆதிபராசக்தியின்மூலமேபிரம்மதேவன்,மகாவிஷ்ணு,மகேஸ்வரன், சக்தி உட்பட நான்கு மகாசக்திகளாயினார். இந்த நால்வர்களையே சதுர்வேதங்கள் என்றும் குறிப்பிடலாம்.
பராசக்தி - பிரம்மதேவன் - மகாவிஷ்ணு - மகேஸ்வரன் இவர்களின் சக்திகளைக் கொண்டு நிபுணர்கள் அறிவியல் நிபுணர்கள் விஞ்ஞான ரீதியில் வாயுக்களாகச் சுட்டியுள்ளனர்.
பராசக்தி - கார்பன் டையாக்சிடு [Carbon Dioxide]
மகாவிஷ்ணு - ஆக்சிஜென் [Oxygen]
பிரம்மதேவன் - நைட்ரஜன் [Nitrogen]
மகேஸ்வரன் - ஹைட்ரஜன் [Hydrogen]
வள்ளளாரும் “காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும்
ஆற்றுற வகுத்த அருட்பெறுஞ்ஜோதி” என கூறுகிறார். ( அகவல்)
Astro Physic என்ற விஞ்ஞான ஆய்வுவின் மூலம் இந்த நான்கு சக்திகளை அறிந்துக் கொள்ளலாம்.திரிமூர்த்திகள் என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும் ''எலக்ரோன்'' [Electron], ''நியூட்ரோன்''[Neutron],''புரோட்டன்''[Proton] என்ற மூன்று சக்திகளுக்குட்பட்டவையே. எனவேதான் மகாசக்தியும் இம்மூன்று சக்திகளையும் தன்னையே வலம் வரவைத்துவிட்ட நியூக்லேயஸ் ஆகிறார். புராண காலத்தில் ஆதிபராசக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் பிரம்மதேவன் சிருஷ்டிப்பதிலும், மகாவிஷ்ணு காக்கும் கடவுளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்வதற்கும் பொறுப்பாளர்களாகின்றார்கள்.
நவீன சாஸ்திரப்படி கண்ணோட்டமிடுகையில் ஓர் அணுவின் (பரம்பொருளின்) நடுநாயகமாக அதிபாரசக்தியாகயே திகழ்கின்றாள். அவளுக்குத் துணையாக எலக்ட்ரோன[Electron] பிரம்மதேவனும், 'நியூட்ரோனாக [Neutron] விஷ்ணுவாகவும், ''புரோட்டோனாக''[Proton] மகேஸ்வரனும் விளங்குகின்றனர். இதைக் கண்ணுறும் பொழுது இந்தச் சக்தியே பிரபஞ்சத்தில் ஆதியிலே வெளியான அரும்பெரும் தத்துவங்களைக் கொண்ட ஒரு பெரிய பொருளாக விளங்குகின்றாள்.
மகாசக்தி என்றாலே இரும்புச் சக்தி என்பது பொருள். ''கார்பன்''தான் உலகில் சக்தி பெற்ற உலோகம்.இந்த உலோகமே காந்த சக்தி பெற்று உலகையே ஈர்க்கிறது. இச்சக்தி சூரியனில்அதிகமாக இருப்பதால் மற்ற கிரகங்களையும் அதை சுற்றி வரச் செய்கிறது.
“அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால் அருள் நலம் பரவுகென்று அறைந்த மெய்ச் சிவமே”- என்கிறார் வள்ளளார். ( அகவல்)
இதனால்தான் சங்க இலக்கியம் அம்மையைப் பழையோள் எனவும் குறிக்கிறது. அம்மையின் உருவம் வெறும் பெண் உரு மட்டும் அன்று. முதற் பொருள் ஞாயிறும் அதன் ஒளியும் போலவும்,மலரும் அதன் மணமும் போலவும்,தானும் தன் இயற்கை அருள் ஒளியும் என்று இரு திறப்பட்டு இயைந்து நிற்பது.
இதனால் பரம்பொருளின் தொன்மைக் கோலம் அம்மையப்பர் உருவாகவும்,நீலச்செம்மேனிஉடையதாகவும் மறைகளிற் கூறப்படுகிறது.
அவ்விறைவனது அருள் ஒளியே பெண்ணுரு எனவும் கூறப்படுகிறது.
எனவே வள்ளளாருக்கு உணவு அளித்ததும் பரம்பொருளின் அருள் ஆற்றலே என நினைக்க தூண்டுகிறது.
தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே -579 ஆறாம் திருமுறை
இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே- -584 ஆறாம் திருமுறை
நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி
நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய
உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்............ 585 ஆறாம் திருமுறை
இவ்வருட்சக்தியையே பெண்ணாக உருவகப்படுத்தி, நமது முன்னோர்களும், அருளாளர்களும்,''அம்மை அப்பா'' எனவும்,''தாயிற் சிறந்த தயாவானத்தத்துவனே'' எனவும்,''தாயாயெனக்குத் தானெழுந்தருளி'' எனவும்,''பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து'' எனவும் அழைக்கலாயினர்.
தாயுமான அடிகள்,''பொல்லாத சேயெனில் தாய் தள்ளல் நீதமோ, புகலிடம் பிறிது முண்டோ'' எனவும்,''அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னியென் மறை பேசும் ஆனந்த ரூப மயிலே'' எனவும் பாடியிருப்பது நினைவிற் கொள்ளத்தக்கது.
தந்தையின் அன்பைவிட தாயன்பே தலை சிறந்தது என்பதை உலகியலறிவால் உணர்ந்த நமது முன்னோர்கள்,இறைவனின் அருளாற்றலை உலக நாயகியாக அகிலாண்டகோடி ஈன்ற அன்னையாக வழிபாடு செய்யலாயினர். பொல்லாத சேய்களின் பிழைகளைத் திருத்தி, ஜீவான்மாக்களைப் பரிபக்குவப்படுத்தி, இறைவன் திருவடிப் பேற்றுக்கு ஆளாக்குவதே அம்மை செய்யும் அருட்பணியென்று பணியென்று சித்தாந்த சாத்திரம் நமக்கு உணர்த்தும் உண்மையாகும். இந்த நிலையைத திருமூலர் தமது திருமந்திரத்தில்:-
‘’வாயும் மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவுங் கடந்த அரனுக்குத்
தாயும் மகளுத் தாரமு மாமே...’’
-- என்கின்றார்.
எனவே முதற்முதற் கடவுளாகிய பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தியெனலாம்.
*******************
அன்பன்
ஜோதிமைந்தன்