Karunai Sabai-Salai Trust.
.“வினை” சுத்தசன்மார்க்கத்தில் உண்டா? APJ.ARUL
நாம் பலரிடம் பேசும்போது சொல்வார்கள்;

ஏன்பா! அது எல்லாம் கரும வினைப்பயன்.
அதை நாம் அனுபவித்துதான் ஆகணும்.
வினையை யாராலும் அறுக்க முடியாது என்பார்கள்.

அன்பர்களே,
இப்படி சொல்பவர்களிடமிருந்து விலகியிருப்பது நலம்.
வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்கத்தில் “வினை”க்கு இடமே இல்லை.

வினை எதுவென்றால் அவை;

- அறிவில்லாத எண்ணம்,
- அறிவில்லாத சொல்,
- அறிவில்லாத செயல் ஆகும்.

இவ்வினையானது நம்மிடமுள்ள மதியில் கலந்து நம்மை கலங்க வைத்து விடும்.

என் மார்க்கம் “அறிவு மார்க்கம்” என்கிறார் வள்ளலார்.
அறிவு உள்ள இடத்தில் வினைக்கு வேலையில்லை. இங்கு (சுத்த சன்மார்க்கத்தில்) மனம் வாக்கு தேகம் இவை மூன்றும் நேர் நிற்கும். இதற்கு ஒரே காரணம் இவர்கள் சுத்தசன்மார்க்கத்தார்கள் ஒழுக்கம் நிறைந்தவர்கள். கருணை ஒன்றையே சாதனமாகக் கொண்டியிருப்பவர்கள். ஒருவராகிய கடவுளையே தொழும் கடமை கொண்டவர்கள்.
விசேஷ நன்முயற்சியால் அறிவை வளர்த்து உண்மையை அறியக்கூடியவர்கள்.

ஆக, ஒழுக்கம் நிரப்புவர்களிடத்தில் ‘வினை’க்கு ஏது வேலை?
சுத்த சன்மார்க்கத்தார்கள் வேற்றுரைக்க மாட்டார்கள். மதியுடையாரை “வினை” ஒட்டாது.
கற்பனையான பொய்யான எதிலும் லட்சியம் வையாது உண்மை அறிய நல்ல விசாரணை செய்யும் சுத்த சன்மார்க்கத்தில் “வினை”க்கு இடமில்லை.
மொத்தத்தில்,
ழூ ஓர் உண்மைக் கடவுள் ஒருவரே என்று
எண்ணுபவர்களிடத்திலும்
- உண்மை அன்பால் வழிபாடு செய்பவர்களிடத்தும்
- சாதி, சமய, மத கட்டுப்பாட்டு ஆசாரங்களை
விட்டொழித்தவர்களிடத்தும்
- மெய்நெறியாம் சுத்த சன்மார்க்கத்தை மட்டுமே பின்பற்றுபவர்களிடம் வல்வினை அற்று போகும்
- கரும வினையும் (கடந்த காலம்)
 தொடர்பு வினையும் (நிகழ் காலம்)
 அனுபவ வினையும் (எதிர்காலம்)
 சுத்த சன்மார்க்கத்தில் (அறிவு மார்க்கத்தில்) கிடையாது என்பதை சத்தியமாக அறியவும்.

வள்ளலார் பாடல்கள்:

-- “மதிகலந்து கலங்க வைத்த விதியை நொந்தையோ
மனம் அலை பாய்வதுகாண் மன்றில் நடந்தரசே”

-- “விதியுடையார் ஏத்தநின்ற துதியுடையார் ஞான
விளக்கனைய மெய்யுடையார் வெய்யவினை அறுத்த
மதியுடையார் தமக்கருளும் வண்கை பெரிதுடையார்”

-- “கொள்கை வினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயம்”

--“முன்சொலும் ஆறொனறு பின் சொல்வதொன்றாய்
     மூட்டுகின் றீர்வினை மூட்டையைக் கட்டி”

-- “வேற்றுரைத்து வினைப்பெருக்கி மெலிகின்ற உலகீர்”

---- APJ.ARUL, MADURAI. 9487683114,

 

fact.jpg

fact.jpg

6 Comments
Nakinam Sivam
அன்பு சகோதரி வினை நம்மை பற்றுவதற்கு துணை கருவியாக மனம் உள்ளது. நமது மனதின் வழியாகவே கர்ம வினை ஊடுருவுகின்றது. மனம் அறிவு வயப்பட்டால் மனதின் சேட்டைகள் விலகும். வினையும் செயல் இழந்து நம்மை பற்ற முடியாமல் விலகி நிற்கும். அதற்கு முதலில் மனதை அறிவின் வழி செலுத்த வேண்டும். அறிவின் வழி செலுத்தும் பொது மனம் புற வழி போகாமல் அக வழி நாடும். புறத்தில் உள்ள பொருட்களின் மீது பற்றுகின்ற தன்மை போனால் மனம் தூய்மை பெரும். அகத்தில் உள்ள பெரும் பொருளை பற்றி போக்கும் வரவும் அற்று நித்தியம் அடையும்.
அன்பன்
நக்கினம் சிவம்
Saturday, December 27, 2014 at 03:57 am by Nakinam Sivam
Muthukumaaraswamy Balasubramanian
ஜீவகாருண்ய ஒழுக்கம் முதல் பிரிவில் வள்ளலார்எழுதி இருப்பது."ஜீவர்கள் முன் தேகத்தில் செய்த பாவ கர்மங்கள் இந்தத் தேகத்திலும் வரும் என்பது எப்படி என்னில் ஒரு சமுசாரி முன் குடித்தனம் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன் மார்கர்களை வரவழைத்து அவர்களோடு கூடிப் பழகி இருந்தானானால் , அந்தச் சமுசாரி அந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டில் குடி வந்த காலத்திலும் அந்தத் துன்மார்கர்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கம் செய்வார்கள்.அதுபோல் ஒரு ஜீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன் மார்க்கத்தால் பாவ கர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால் ,அந்தச் ஜீவன் வேறொரு தேகத்தில் வந்த போதும் அந்தப் பாவ கர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேரும் என்று அறியவேண்டும்.முன் பிறப்பில் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட்டுத் துன்மார்கத்தில் நடந்த ஜீவர்களை இந்தப் பிறப்பில் பசி,தாகம், பயம் முதலியவற்றால் துக்கப்படச் செய்வது கடவுள் அருளாக்கினை நியதி.(பக்கம் 55 ஜீவகாருண்ய ஒழுக்கம் முதற் பிரிவு ஊரன் அடிகள் பதிப்பு)வள்ளலாரின் வாக்குப்படி வினை உண்டு.
Saturday, December 27, 2014 at 11:18 am by Muthukumaaraswamy Balasubramanian
ramalakshmi karunai
Please refer the documents of His Holiness Vallalar after 1871. Don't refer earlier documents which are made on religion thoughts.
Wednesday, March 4, 2015 at 11:58 am by ramalakshmi karunai
venkatachalapathi baskar
நமது வள்ளல்பெருமான் 1871 ஆம் ஆண்டிற்குப் பிறகு தான் ஆன்மீக பக்குவம் அடைந்தார் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பது மிகப் பெரிய அறியாமையின் விளைவு. பிறக்கும்போது எல்லா ஞானத்துடன் பிறந்த நமது பெருமானார் காலத்தின் நிலையினை கண்டு தன்னை முதலில் ஒரு சிறந்த பக்தராக வெளிப்படுத்தி சமயதெய்வங்களைப் பாடி அதனுள் உள்ள் உண்மையான தத்துவங்களை உணர்த்திப் பின்னர் ஆன்மீக உண்மைகளை வெளிப்படையாக தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பியுள்ளார்.

நமது பெருமானாரால், 1871 ற்குப் பிறகு 18-4-1872 ல் எழுதப்பட்ட அருட்பெருஞ்ஜோதி அகவலில் இருவினைகள் உண்டென்றும் அவற்றை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அடக்க இயலும் என்பதை விளக்கியுள்ளார். அருட்பெருஞ்ஜோதி அகவலின் அந்த வரிகள்:

‘உயிருறும் இருவினை யுறுவிரிவு அனைத்தும்
அயர்வறஅடக்கும் அருட்பெருஞ்ஜோதி’ –வரிகள்:789-790.
Thursday, March 5, 2015 at 09:13 am by venkatachalapathi baskar
TMR RAMALINGAM
சன்மார்க்கிகளுக்கு வினை கிடையாது.

சாதாரண சமுசாரிகளுக்கே வினைப்பயன் பற்றும் என வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் உரைத்துள்ளார். இப்பிறப்பில் ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளுக்கு முற்பிறவியில் எவ்வினை செய்திருப்பினும் கவலையில்லை. அவைகள் இப்பிறப்பில் எதுவும் செய்யமுடியாது என்பதே வள்ளலாரின் தீர்வு. இப்படிப்பட்ட ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகள் இம்மை இன்பம், மறுமை இன்பம், பேரின்பம் என்ற இம்மூன்று இன்பத்தையும் இப்பிறப்பில் காணுவர். ஜீவகாருண்ய முள்ள சமுசாரிகளுக்கு சூலை, குன்மம், குஷ்டம் போன்ற நோய்களலெல்லாம் வராது. சந்ததி அபிவிருத்தியும், ஆயுள் விருத்தியும், கல்வி, அறிவு, செல்வம், போகம் போன்ற இம்மை இன்பங்கள் கிட்டும். எனவே இவற்றிற்கு தடையாக முன்பிறவி வினைகள் இருக்காது என்பதை அறியவேண்டும். மேலும் வெய்யில் வருத்தாது, மண்ணும் சூடு செய்யாது, பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய இயற்கை அழிவுகளும் ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளை அண்டாது என வள்ளலார் கூறுவதன் மூலம் சன்மார்க்கிகளை வினைகள் அண்டாது என்பதே உண்மை. எனவே நாம் தயவு சாதனத்துடன் சன்மார்க்கிகளாக விளங்க முயல்வோம்.

"ஜீகாருண்யமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது" என வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம் முதல் பிரிவில் (பக்கம்-130) கூறியிருப்பதை சன்மார்க்கிகள் கவனிக்க வேண்டும்.
Friday, March 6, 2015 at 05:58 am by TMR RAMALINGAM
venkatachalapathi baskar
உயிர்களுக்கு இருவினைகள் உண்டு. (அகவல் வரிகள்:789-790).


உயிர்கள் ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளாகவும், சுத்த சன்மார்க்கிகளாகவும் வாழ்ந்தால் அவ்வினைகளின் விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம். (ஆதாரம் திரு T.M.R. இராமலிங்கம் எடுத்துக்காட்டியுள்ள் ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் வரிகள்)

நம்முடைய பெருமான் 1871 ற்கு முன்னர் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கத்திலேயே இவ்வளவு கருத்துக்களையும் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார். ஆகவே, 1871 ற்குப் பிறகுதான் நம்முடைய பெருமானார் மதங்களையெல்லாம் விடுத்து பொதுமைக்கு வந்தார் என்று கூறுவது தவறு.
Friday, March 6, 2015 at 14:48 pm by venkatachalapathi baskar