Re: சிற்சபை பொற்சபை விளக்கம்
on 5/14/2008 7:53:42 AM by Ramanujam
அருட்பெருஞ்ஜோதி தயவு அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
=============================================================================
சிற்சபை பொற்சபை குறித்த விளக்கம்
இந்த விளக்கம் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளியதாகும்.
(சிற்சபை மற்றும் பொற்சபை ஆகியவை குறித்த விளக்கத்திற்கு திரு அருட்பாவில் - அட்டகத்தின் எட்டாவது செய்யுளை எடுத்துக் கொள்ளலாம்.)
எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
இதுஅது எனஉரைப் பரிதாய்
தங்குமோர் இயற்கைத்தனி அனுபவத்தைத்
தந்துஎனைத் தன்மயம் ஆக்கிப்
பொங்கும் ஆனந்த போக போக்கியனாய்ப்
புத்தமுத ருத்திஎன் உளத்தே
அங்கையிற் கனிபோன்று அமர்ந்தருள் புரிந்த
அருட்பெருஞ் ஜோதிஎன் அரசே ! (அட்டகம் பாடல் எண்.8)
வள்ளலார் அருட்பெருஞ் ஜோதி அரசை உள்ளங்கை நெல்லிக்கனி போல் மிகத் தெளிவாக உணர்ந்து அனுபவித்து வருகிறார். அதை இந்தப் பாடலில் விளக்கிச் சொல்கிறார்.
நம் சிரநடுவே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் எழுந்தருளி இருக்கிறார். அவர் வடிவம் இயற்கை உண்மை. அவர் செயல் இயற்கை விளக்கத் திருநடனம். இந்த திருநடனம் மூலமாக இறைவன் நமக்கு இயற்கை இன்பத்தை அளித்து வருகிறார்.
வள்ளலாரின் அருள் அனுபவ வாழ்க்கை இந்த உண்மையை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
சிரநடுவில் கடவுள் விளங்கும் சிற்சபை எல்லா உயிர்களிலும் இருக்கிறது. இவ்வாறு சொன்னால் எல்லாரும் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?
சின்னஞ்சிறு அணுக் கருவில் கூட கடவுள் இருக்கிறார். இதை யாரும் மறுக்க முடியாது. இப்படி அணுக்கருவிலும் இருக்கும் ஆண்டவர் அந்தக் கருவையே உருவாக்கியவர்.
தாயின் வயிற்றில் உருவாகும் கருவின் நடுவிலும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கிறார். இந்த அருட்பெருஞ் ஜோதியைச் சுற்றித்தான் முதலில் குழந்தையின் தலைப்பகுதியும், பிறகு மற்ற உடல் பகுதிகளும் உருவாகின்றன.
தாய் வயிற்றில் இருந்து வெளிவந்த குழந்தைக்கு அதன் சிரநடுவில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதிதான் அதற்கு வேண்டிய உண்மைகளையும் உணர்த்துகிறது.
இதுதான் எங்கும் எப்பொரூளிலும் நிறைந்துள்ள எல்லையற்ற கடவுள் இயற்கையின் விளக்கமாகும்.
கருவளர்ச்சியில் முதற் பகுதிகளாக உண்டான அருள் சுடர் அணுவே ஆன்ம சிற்சபை ஆகும். இதில்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருநடம் புரிந்து கொண்டு இருக்கிறார். அவர் நம் சிர நடுவில் இருந்து எல்லா விளக்கங்களையும் நமக்குத் தந்து கொண்டிருக்கிறார்.
நம் சிரநடுவில் இருப்பதுபோலவே, மற்ற பொருள்களிலும் இறைவன் இருக்கிறார். மற்ற பொருள்களில் இறைவன் இருக்குமிடம் பொற்சபையாகும். பொற்சபையில் ஆண்டவன் இருப்பது நமக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.
ஆனால் அருள் அறிவின் மூலமாக பொற்சபையில் இறைவன் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம்.
நம் ஆன்ம சிற்சபையில் இறைவன் வெளிப்பட்டு இருப்பதையோ, நம் அனுபவ பூர்வமாகவேதான் அறிந்து கொள்ள முடியும்.
நம் சிரநடுவில் இருக்கின்ற சிற்சபையில் விளங்கும் இறைவனை நாம் தான் அனுபவிக்கலாம்.
மற்றவர்களுக்கு இதுதான் இறைவன் என்று நேரடியாக நம்மால் சுட்டிக் காட்ட முடியாது.
மற்றவர்கள் தங்கள் தங்கள் சிற்சபையில் விளங்கும் இறைவனை தாங்களேதான் அனுபவித்து உணர வேண்டும்.
மற்றவர்களுக்கு சுட்டிக்காட்ட முடியாத இறைவனை எப்படி உணர்ந்து தெளிந்து அனுபவிப்பது ?
நம் சிரநடுவில் இருக்கும் சிற்சபையில் சிற்றொளிப் பிழம்பாக விளங்குகிறான் இறைவன்.
சிற்றொளிப் பிழம்பாக விளங்கும் இறைவனை நம் புறக் கண்களால் பார்க்க முடிவதில்லை. என்றாலும் இறைவனை நம் சிற்சபையில் சிற்றொளிப் பிழம்பாகக் காண்பதாகவே பாவித்து அதையே நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து பழகி வர வேண்டும்.
இந்தப் பழக்கம் முடிவில் அந்தச் சிற்றொளிப் பிழம்புடன் நம்மை அசைவறத் தங்கும்படிச் செய்துவிடும்.
அந்த ஒளிச் சுடரே நாமாக ஆகிவிடுகிறோம். நாமே அதுவாகவும் ஆகிவிடுகிறோம்.
அது எங்கும் நிறைந்து இருப்பதால் நாமே அதுவாய் எங்கும் இருப்பதாக நினனத்துக் கொள்ள வேண்டும். இந்த நினைவுடன் விருப்பு வெறுப்பின்றி, தயா உணர்வுடன் வாழ்ந்து வர வேண்டும்.
நம்மைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்கு உயிர் விளக்கப் பணியும், அறிவு விளக்கப் பணியும் ஆற்றி வர வேண்டும்.
இவ்வாறு உயிர்ப்பணி செய்து வந்தால் நம் சிரநடுவில் இருக்கும் ஞானச் சுடரே அமுத ஜோதியாக ஆற்றலுடன் பெருகும். நம் உயிரிலும், உடம்பிலும் நிரம்பித் ததும்பும். அப்போதுதான் கடவுளின் தன்மய ஆனந்தத்தை நாம் உணர்ந்து அனுபவிக்க முடியும்.
இந்த பேரின்ப அனுபவத்தைத்தான், மரணமிலாப் பெரு வாழ்வைத்தான். முத்தேக சித்தியைத்தான், வள்ளலார் அடைந்து அனுபவித்து வருகிறார்.
வள்ளலார் சிற்சபை முன் நிற்கிறார். அவர் மனம் அருள் உணர்வாகவும். சித்தம் அருள் விளக்கமாகவும், புத்தி அருள் அறிவாகவும். அகங்காரம் அருள் செயலாகவும் விளங்குகின்றன.
அவர் உள் இருக்கும் உள் ஒளியான அருட்பெருஞ் ஜோதியை அருளாட்சி செய்யும் அருட்பெருஞ் ஜோதி அரசே என்கிறார் வள்ளலார்.
தம் சிரநடுவில் இருக்கும் சிற்சபையே எங்குமாய் விளங்குவது என்கிறார். எங்கும் நிறைந்துள்ள இறைவனே தம் முழு இயல்போடு தன் சிர நடு சிற்சபையில் எழுந்தருளி தம்மை ஆட்கொண்டுள்ளார் என்கிறார்.
வள்ளலார் பெற்ற இந்த இறை அனுபவம், வள்ளலாரைப் போன்ற பரிபூரண பக்குவியின் ஆன்ம சிற்சபையில் மட்டுமே வெளிப்படும். மற்றவர்களிடம் வெளிப்படுவதில்லை.
சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
இச்சமய வாழ்விலெனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு. (திருவருட்பா - 6ம் திருமுறை கண்புருவப் பூட்டு)