www.vallalarspace.com/durai
வளமொடு இன்புற்று நீடூழிவாழ்க இத்தைதிங்கள்முதலாக!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

இயற்கையுண்மை வடிவினரை வணங்கிவந்த ஆதித்தமிழன்தன்
இயற்கையுண்மையை மறந்தான் பாதியில்வந்த ஆதிக்கங்களின்
செயற்கைத்தன்மையால் பிறந்த பற்பலதெய்வ வழிபாடுகளாலும்
மயற்கைமிகும் விகற்பச் சாதிப்பிரிவினைகளாலும் சதியானான்!

சிலநூறு ஆண்டுகள் நம்தமிழன் அடிமைஆனதில்
பலஆயிரம் ஆண்டுகள் ஆண்டதை மறந்துபோனான்
மூவாயிரம் ஆண்டுகள் மூலன் வாழ்ந்துள்ளான்எனில்
பாவம்கதை என்கிறான் அன்னியனோ ஆம்என்கிறான்!

அன்னியன் செய்யும் தமிழ்மொழி ஆய்வைநம்
மண்ணின் மைந்தன் மறந்தான் ஏனோஅந்தோ
விண்ணும் இமயமுதல் கடலெலாம் இவன்கோற்
கண்ணுள் இருந்ததைக் கண்ணுறாத மூடம்ஏனோ?

ஆயிரமாயிரம் ஆண்டுகள் சாகாவாழ்வுதரும் காலாதி
அமிர்தத்தை இலேசிலே காட்டவல்ல அருந்தமிழ்ஏடுகளின்
அறிவியல் பேருண்மைகளை அவரவர் தாய்மொழிகளில்
அறைகுறையாய் மாற்றிப்பின் அழித்தனர் ஆதிஏடுகளை!

எண்ணற்ற நம்முடைய விஞ்ஞானமெஞ்ஞான ஏடுகளை
எத்தனையோ திட்டமிட்டு அவைகள் அழிக்கப்பட்டாலும்
மண்ணிலே புதையலாய் குளிர்நீரிலே பொற்தாமரையாய்
வன்தீயிலும் செங்கரும்பாய்த் திகழ்ந்தனவே தமிழ்ஏடுகள்!

தண்ணீரில் தாமரையாய் மலர்ந்தது திருக்குறள்
மண்ணில் மீண்டுவந்த புதையலே நம்திருமந்திரம்
நெருப்புக்கும் இரையாகாத இறையேடுகள் பற்பல
வெருப்புக்கும் விருப்புக்கும் இரையாகான் நற்தமிழன்.

தமிழை அறிந்திட முனைந்தவர் வாழ்ந்தனர்
தமிழே மொழிகளின் ஆதிஅதை மறைக்கத்
தமிழை அழிக்க முயன்றவர்கள் அழிந்தனர்
தமிழ்அணங்கே நீவாழ்க என்றாலே வாழ்வரே!

தமிழ்ப் பெருந்தடாகத்தில் பூத்தநம் அருட்தாமரையாம்
அமிழ்தத் திருஅருட்பாவை எங்கிருந்தோவந்த எண்ணற்ற
மொழியரும் இங்குவந்து அதன்தேனுண்டு திகழ்வார்நாம்
விழியிருந்தும் மண்டூகமாய் அருட்தேன்பருக அறியலையே!

அதனால்,

ஈழத்தை நாமிழந்தோம் அதுமட்டுமா சிறிய
கேரளத்தில் ஐய்யப்பா என்கின்றோம் மாறிய
ஆந்திரத்தில் நீள்நாமமிட்டு மதியிழந்தே தினம்
அந்தரத்தில் தொங்குகிறோம் ஆண்ட தமிழகத்தில்!


எழுமின் தமிழா ஏறுமின் அறிவுடன்
விழிமின் தமிழா வீருடன் அறவழியில்
களிமின் தமிழா நீயேநற் செங்கோலன்
செழிமின் தமிழா உலகெலாம் இன்புறவே!

என்பும் பிறர்க்குஎன்று அருள்வழிநின்று வாழ்கின்ற
அன்பறிவு ஒழுக்கம் உடையபெருமக்காள் வணக்கம்பல
நலமொடு நற்செல்வங்கள் எலாம்மிகும் நல்வாழ்விலே
வளமொடு இன்புற்று நீடூழிவாழ்க இத்தைதிங்கள்முதலாக!

அருளால் மண்ணகமும் விண்ணகமும் மற்றகமும்
நிறைந்து அன்பொடுஅறமும் விரைந்து செழிக்கும்
கயவர்களெலாம் காணாது கானலாய்ப் போவார்கள்
தயவுடன் அருள்நயந்த நன்மார்க்கரே இனிஆள்வர்!

எல்லாம் செயல்கூடும் இனிதாக இனிமேல்
எல்லாம் வல்லான் திருக்கூற்றே இதுவாகும்
எல்லாப் புகழும் எல்லாம் வல்லானுக்கேநம்
எல்லா நிலையிலும் அவன் துணையிருக்கு!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்