www.vallalarspace.com/durai
முக்தியின்பம்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

உண்மையே பேசி
உயர் வாழ்வு வாழ்வது போல்
புற வுலகில் வாழ்தல் பலருக்கும்
ஒரு கைவந்த கலையாக இருக்கிறது.

ஆனால், இதுபோன்றவர்கள் அருளனுபவம் என்பதை
ஒருபோதும் அறியாமலும் அனுபவிக்காமலும் முடிவில்
எல்லோரையும் போலவே இறந்து போகின்றார்கள்.

“வேடங்களை அகற்றி உண்மையே பேசி நாம் வாழ்தல் வேண்டும்” - என்று
முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை!

“உண்மையே பேசி உண்மையான
வாழ்க்கையையே வாழவேண்டும்” - என்று
உறுதிகொண்டு எப்பொழுது ஒருவர்
அப்படியே வாழத் துவங்குகிறாரோ,
அப்பொழுது மட்டுமே அப்புண்ணியர்
ஒரு சுத்த சன்மார்க்கியாக மலர்கிறார்.
அப்படி இல்லாதவர்கள் வீண் மதம்பிடித்த
வேடதாரிகளாகவே வாழ நேரிடக்கூடும்!

ஒருவர் ஒரு உண்மையான சுத்த சன்மார்க்கியாக மலரும்பொழுது மட்டுமே, அவருக்கு தனது மூன்றாம் கண்ணாகிய அகக்கண் திறக்கிறது. அந்த அகக் கண் திறந்தால் மட்டுமே ஒருவர் தனது ஆன்மாவைத் தொடர்புகொள்ள முடியும். வேறு வழியே இல்லை! மற்ற அனுபவங்கள் எல்லாம் பூரண அனுபவம் ஆகாது.

அப்படி, அகக்கண் திறந்து ஒருவர் தனது ஆன்மத் தொடர்பு பெறும் காலத்தில் இந்தப் புறவுலகின் பொய்யான வாழ்விலிருந்து ஒதுங்கி வாழவேண்டுமாய் அவருக்கு ஒரு தூண்டல் ஏற்படும். அந்தத்தூண்டல் புறவுலகத் தாக்கத்தின் செயற்கைப் பிரதிபலிப்பே அன்றி, உண்மையான இயற்கை அகத்தூண்டல் அல்ல. ஏனெனில், ஆன்மத் தொடர்பு பெறும் காலத்தில், அவர்களுக்கு மற்றவர்களின் மனம் அறியும் திறன் உண்டாகிறது. அதனால், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றவர்களின் பொய்மையும், அதன்பால் அப்பொய் வேடர்கள் மட்டுமல்லாது, அவர்களால் அவர்களைச் சார்ந்த மற்ற அப்பிராணிகளும் சாண் ஏறி முழும் சறுக்கி விழுந்து அவதிப்படுகின்ற பெருந் துன்பங்கள் இப்புண்ணியர்களுக்கு வெட்ட வெளிச்சமாவதால், தீயிலிட்ட புழுவானது பெறுகின்ற துன்பத்தை இப்புண்ணியர்களும் பெறுகின்றார்கள்.

ஆகவே, அந்த நிலையில் இத்தகைய சுத்த சன்மார்க்கிகள், பொய்யானவர்களின் உறவுகளைக் கோபமாகக்கூடக் கடிந்து கசந்து முறித்துக்கொள்ளக் கூடும். ஆனால், இந்த அனுபவத்தையும் ஒரு சன்மார்க்கியானவர் கடக்கவேண்டும். புறவுலகம் பொய்மையில் அகப்பட்டு அது அப்படித்தான் இருக்கும் அதற்காக, அப்படிப்பட்ட பொய்யான வீணர்களை அவர்களின் குற்றத்திற்காக, நல்ல சன்மார்க்கிகள் தேவையில்லாமல் கோபப்பட்டு, நம்முடைய அகஅனுபவப் பயணத்தைதிற்கு நாமே தடையாக இருத்தல் கூடாது. ஏனெனில், கோபம் என்பது பிறர் குற்றத்திற்கு நாம் தண்டனையை அனுபவிப்பது. அதாவது, கோபம் கொள்ளும் தேகம் சீக்கிரமாகப் பழுதாகக் கூடும். தெரிந்து தெளிந்த ஒரு நிலையில் சித்திரம்போல் இருக்க நாம் கொஞ்ச நாட்களுக்காவது பழகுதல் வேண்டும். இஃது அவசியம்.

இந்த விழிப்பான அகப்பழக்கமானது முதிரும் காலத்தில், இந்தப் பொய்யான புறவுலகமானது நமக்குப் பாதிப்புத் தரவல்ல சக்தியை இழந்து போகின்றது. அதாவது, நாம் புறத்தை நிக்கிரகம் செய்துவிட்ட நன்நிலையை அடைகின்றோம். இதுதான், நாம் நமது முதல் இருபத்து நான்கு தத்துவங்களையும் மிக இயற்கை இயல்பாய் வெற்றிகண்ட நிலையாகும். இந்த நிலையைத்தான் அருளாளர்கள் முக்தியடைந்த நிலையாகக் குறிப்பிடும் மர்மமாகும். பெரிய அனுபவங்களுக்கான முதற்படியாகும். இதன்பிறகுதான், நாம் நமது ஆன்மா அனுபவம் பெறத் துவங்குகிறோம். இந்நிலையை அடைந்தவர்களை இவ்வுலகியலார் அனைவரும் ஒன்று சேர்ந்து அசைத்தாலும், அவர்களை ஒரு அணுவளவும்கூட அசைக்கவே முடியாமல் மிகப் பரிதாபமாய்த் தோற்றுப்போவார்கள். இவர்களுக்குத் தேகம் வலுவடையும். மனம் புத்தி சித்தம் மிகச்சிறப்பாகச் செயல்படும். பிணிகள் நீங்கும். ஆயுள் அதிகரிக்கும். இந்த ஆன்மீக விஞ்ஞானத்தைப் புண்ணியர்கள் மட்டுமே புரிந்துகொள்வர்.

“உண்மையே பேசி புறத்தால் பாதிப்பு அடையாமல் தெரிந்து தெளிந்த ஒருநிலையில் சலனமின்றி வாழ்தல் வேண்டும்” – என்ற, அகப்பயிற்சியால் இந்த உயர் முக்திநிலையானது ஒருவருக்கு மிக எளிதாகச் சாத்திய மாகின்றது. கற்பகோடி காலம் யோகம் பயின்றாலும் இந்த மெய்அனுபவத்தை ஒருவர் எக்காலத்தும் பெற்றுக்கொள்ளவே முடியாது. இந்த முக்தியனுபவமானது ஒருவருக்குச் சிற்றின்பத்திற்கும் மேலான ஒரு இன்பத்தைத் தரும். ஆனால், இஃது ஒரு பேரின்ப நிலை அல்ல. ஆகவே, இந்த நிலையிலேயே நாம் நிரந்தரமாகத் தங்கி விடவும் கூடாது. பெரும்பாலும், மேல் முயற்சியின்றி இந்த முக்தியின்பானுபவ நிலையே போதுமென்று அங்கேயே எல்லோரும் தங்கிவிடுகிறார்கள். வள்ளலார் போன்று மிகமிகச் சிலரே அதற்கும் மேலான உயர்நிலை அனுபவங்களை அடைய அருள்விழிப்பை அடைந்திருக்கின்றார்கள். அஃது அரிதினும் அரிது. அதுவே, இம்மனித தேகம் பெற்றதின் அருமையும் பெருமையும் ஆகும்.


அப்படி மேல்முயற்சியின்றி, அகக்கண் திறந்தும் அக்கண்ணின் மெய்த்திறனாகிய அருள்விழிப்பை அடையாமல், முக்தி நிலையிலேயே நிரந்தரமாய்த் தங்கி விடுதல் என்பது, ஒரு கூட்டுப்புழுவானது அக்கூட்டிற்குள்ளேயே இறுதிவரை இருந்து இறந்து போகின்ற நிலையாகும்!


ஏனெனில், இந்த முக்தி நிலையிலும் பூரண இயற்கைத் தனியின்ப மெய்யருள் அனுவபமானது புலனாகாது. ஒரு இறந்த சடலைத்தைவிடச் சற்று மேலாகச் சுழுப்தி இன்பானுபவத்தில் வாழலாம். அவ்வளவுதான். அதனால் யாருக்கும் பலன் இல்லை.

இப்படித்தான் உலக ஆன்மீக வாதிகள் பெரும்பாலும் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்!

அப்படியானல், முக்திக்கும் மேலான பெருவாழ்வில் எப்படி வாழ்வது?


அந்த முக்திக்கும் மேலான பேரின்பச் சித்திப் பெருவாழ்வைக் காட்டுவதுதான் நம் சுத்த சன்மார்க்கத்தின் சாகாக்கல்வி அனுபவம்.

அதை அடுத்த பதிவுகளில் அருளால் ஆய்வு செய்வோமாக!

அனைத்து உயிர்களுக்கும்
அருட்சுகம் உண்டாகட்டும்
அருள்வள்ளல் மலரடிக்கே
அருளாட்சி உண்டாகட்டும்

நன்றி, வணக்கம்!
அன்பன் ஆன்மநேயன்,
துரை சாத்தணன்