www.vallalarspace.com/durai
வாய்மையே உலகை வெல்லுமென்று அறிக!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்


அன்பு கெழுமிய அருள் உறவுவே,

நல்வரமெலாம் பெற்று தனித்த சிறப்புற்று
பல்வளமொடு இகத்தே பரத்தையும் பெற்று
நரையற்றுத் திரையற்று நோவற்றுச் சாவற்று
குறையெலாம் அற்று இன்புற்று வாழ்கவே! 

அருள் நிலையில் எம்மார்க்கமும் சன்மார்க்கமேயாம்
அருள் உடையார் எல்லோருமே சுத்த சன்மார்க்கிகளே
அருள் நாடும்நம் சன்மார்க்கிகள் ஒருசிலரேஆயினும்
அருள் இணைப்பால் பேரஅண்டமும் ஓரணுவேயாம்!

உயிர்வாழ்வது அளவுகடந்து உணவைச்சதா உண்பதற்காகஅல்ல
உயிர்நிலைத்து வாழ்வதற்கு அரைவயிற்றுணவும் அதிகமேஅறிக
உடல்நிலைக்க நம்வயிற்றில் காற்றோடுநீருக்கும் இடம்வேண்டும்
உடல்செழித்தே உயிர்களிக்கஉதவும் சத்துணவை அறிந்துண்ணுக.

சந்நியாசி ஆனவரில் மூடர் உண்டு
சம்சாரி ஆனவரில் ஞானிய ருண்டு
காட்டுக்குள் புகுந்த துறவும் காமம்
கடந்து நிற்கும் இல்லறமும் ஒற்றே!

இல்லறமே சீவகாருண்ய உயர்தவத்திற்கு நல்லாசிரமம்
இல்லாலோடு இன்புற மென்புணர்வே சாலச்சிறந்ததாம்
இல்லாலோடு இருவாரத்திற்கு ஒருஉடலுறவே உத்தமமாம்
இல்லாலோடு இன்புறுகையிலும் இமைநடுவே மனம்வை.

சொந்தபந்தமெலாம் மனஞ்சூழ் மாயையால் மலர்ந்துஉதிரும்
சொந்தபந்தமெலாம் முன்செய்த கர்மாவால் முளைத்ததுவே
சொந்தபந்தமெலாம் கர்மாமுடிவில் கானலின் அனுபவமாகும்
சொந்தபந்தமெலாம் அருளால் ஆகிடில் நிலைத்ததுநிற்குமே!

தூக்கம்நம் இறப்பிற்கு அன்றாட ஒத்திகையே
தூங்கியெழ இயலாதாரே இறப்பிடம் தோற்றவர்
தூங்காமல் தூங்கி மரணதூக்கத்தை வெல்கவே
தூங்குமுன் எழுமுன் திருவருளையே நினைமின்!

தன்னை ஒருபோதும் மதியாது இருந்திடில்
தனக்காக எதுவும் எப்போதும் கேளாதுஇருந்திடில்
தன்னை நட்டம்செய் வெட்டிப்பேச்சை விடுத்திடில்
தன்னகத்தில் அருட்சக்தி சுடர்பரப்பும் இன்பமே!

தானும் தன்சுற்றச்சூழலும் திருவருளே என்றறிந்திட்டால்
தனக்குறும் துன்பம்நம்மை நெறிபடுத்தவே புரிந்திட்டால்
தனக்கும் தம்பதிக்கும் பேதமில்லாததைத் தெரிந்திட்டால்
தன்னகத்தே ஒருவருக்கு ஒருபோதும்பயமிலே களிக்கவே!

தமக்கும் தம்தலைவனுக்கும் பேதம்காண்பது அறியாமையே
தமக்கும் தலைவனுக்கும் பேதம்காண்பது அனுபமின்மையே
தமக்குள் தலைவன் தலைவனுள்தாம் காண்பதேஅகவுண்மை
தமக்கும் தலைவனுக்கும் அபேதம்ஆகிட அகலுமேநம்சிறுமை!

தன்நலத்தால் மோசம்செய்தவன் நாசமாவது அருள்நீதியே
தன்சுற்றங்களின் குற்றங்களை விசாரியாது விரிந்துபரவுகவே
தன்போலப் பிறவுயிர்நேசத்தால் தன்பாவநாசம் அடைந்தவரே
தன்முன்வினையும் பின்வினையும் தீண்டாதே இன்புறுவார்!

தவங்களிலே சிறந்தது தானதவம்! இந்தத்தான
தவத்தினும் உயர்ந்தது ஞானதவம்! இதில்தான
தவம்என்பது சீவகாருண்யம்! உயர்மிகும் ஞான
தவம்என்பது நிராசை நல்கிடும் சத்துவிசாரமே!

தானதவமே உலகத்தவங்களிலே சிறந்தது செயல்படுவோமாக
தானதவமே உலகுயிர்களில் நம்மைக்காணும் ஐக்கியானுபவம்
தானதவமானது எவ்வுயிர்க்கும் இரங்கிச்செய் சீவகாருண்யமே
தானதவமாகிய சீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோலாம்.

தவமென்பது வாசியோகமென வாசித்துமதியிழந்தார் கோடிக்கோடி
தவமென்பது ஊனையுருக்கி உள்ளொளிபெருக்கலெனக் கோடிக்கோடி
தவமென்பது தன்னையறிவதெனக்கூவி ஆவிதளர்ந்தார் கோடிக்கோடி
தவமென்பது தன்னுயிர்போல எவ்வுயிர்க்கும்இரங்குதலே அறிகிலாரே!

“உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும் புற்றெழுந்தும்
ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
பயல்களினும் சிறியேற்குக் கிடைத்த பெரும்பதியே” - ஆ.தி - அருள்விளக்க மாலை - வள்ளலார்

“என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.” ஆ.தி - திருவருட் பேறு - வள்ளலார்

"கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்
புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக
நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
திருவாளர் உட்கலந்த தேவ தேவே." - மு.தி - மகாதேவ மாலை, வள்ளலார்

ஞானயோகமே தவங்களிலே உயர்ந்தது தெரிந்திடுவோம்
ஞானயோகம் மற்றதவம்போல் சாதனமல்ல சாத்தியமுகம்
ஞானயோகம் என்பது சத்துவிசாரமென்றே அறிந்திடுவோம்
ஞானயோகத்தின் முடிவானபலன் நிராசை அடைதலேயாம்

தனித்தோ தனக்கு ஒத்தகருத்து உடையவர்களிடமோ
தன்னிலைக்கும் மேம்பட்ட பெரியோர்களிடமோ சதாத்
தயவுநெகிழ்வில் தடையறாது சத்துவிசாரம் செய்பவர்
தமதுஅஞ்ஞானம் அகன்றுநிராசைபெற்று நிர்மலராவர்.

நிராசை வந்தவர்க்கே நிர்மலம் வாசிக்கும்
நிர்மலம் வாய்ப்பதே முத்திக்கு மூலமாகும்
முத்திநிலை கண்டும் முயன்றிடில் சித்தியே
முத்தேகசித்தி பெறில் ஞானசித்த நித்தனே!

ஒத்தகருத் துடையோர் உளமிகும் அன்போடு
ஒருமித்துப் புரிகின்ற நல்லசத்து விசாரத்தால்
சித்தசுத்தி சித்திக்கும் திடதேகமும் நீடிக்கும்
சுத்தநற்சூடு நம்முள்ளே ஊற்றெழு மதனாலே

புறம்விட்டு ஓடிஒதுங்கிடல் நம்சன்மார்க்கம் அல்லவே
புறத்திலே தண்ணீரில் தாமரைஇலைபோல ஆகனுமே!
அகத்திலே பற்றிய தம்பற்றையெலாம் பற்றறவிடுத்து
அருளம்பலம்பற்றி அனகமாய் ஓங்கலே சன்மார்க்கம்.

மெய்மை உரைப்பதன்றி நானிங்கு வேறுகருதியே
பொய்மை உரைக்க ஒருபோதும் நினைந்தறியேன்
வாய்மையே உலகை வெல்லுமென்று அறிந்தநற்
தூய்மை பொருந்திய சுத்தசன்மார்க்கர் வாழ்கவே!


நன்றி, வணக்கம், சுபம்!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Arutperunjyothi           Arutperunjyothi
Thanipperungarunai  Arutperunjyothi
Thiruchitrampalam

(Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum)

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

ஆன்மநேயன்,
அன்பன் துரை சாத்தணன்