www.vallalarspace.com/durai
அகிலம் ஓங்க, இந்த அகிலம் முழுவதும் சன்மார்க்க சங்கங்களும், மாநாடுகளும் சிறக்கட்டும்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை

'கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.' – வள்ளலார்

ஆறாம் திருமுறை / பிள்ளைச் சிறு விண்ணப்பம்

“மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.
ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்

வருமுயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான் ஒன்றதே இரண்டிலை இரக்கம்
ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் தொருவனே நின்பதத் தாணை.

இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம்
பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால் புலையனேன் பொருட்டல இதுநின்
மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய வகுத்தனன் அடியனேன் தனக்கே
எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் இடரும்மற் றிலைஇலை எந்தாய்.

ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்

“எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே
எல்லார்க்கும் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான்
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே.” – வள்ளலார்

ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்

“…உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி…” வள்ளலார்

ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல் / ஆன்மநேய ஒருமைப்பாடு

“உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என
நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
தானே எனக்குத் தனித்து.”

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ. – வள்ளலார்

ஆகவே, நாமெல்லோரும் முதலில்,
“நல்லார்க்கும், பொல்லார்க்கும், எல்லார்க்கும் பொதுவில் நடுநின்று நடம் இடுகின்ற அந்த ஒன்றாம் சிவமானவரே, தம் உச்சபட்ச உயிர்இரக்க உண்மையுணர்வின் வழிநின்று, எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவந்து வாழ்ந்த, நம் வள்ளற்பெருமானுடைய ஒப்பற்ற அந்த உத்தம வாழ்க்கையை நன்கு அறிந்துகொண்டு, அவருடைய ஆன்மநேயமிகும் உள்ளகத்தே சுத்த சித்துருவாய் எக்காலத்தும் எவ்விடத்தும் எள்ளளவும் குறைவுபடாத வண்ணம் ஓங்கி நடம்புரிந்து, நம் எல்லோருக்கும் அருள்பாலித்திடத் திருவுளம் கொண்டு, அந்த எல்லாம்வல்ல வித்தகராகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தம்முடைய அடிக்கேவல் புரிந்திட, நம் வள்ளற்பெருமானை உலகமெலாம் போற்ற ஒளிவடிவனாக்கி, இசைந்தே எல்லாம்செய்ய வல்ல சர்வமகா சித்தியாகிய ஐந்தொழில் வல்லபத்தை அவருக்கு இலக அருள்செய்து, நம்வள்ளற்பெருமானையே எக்காலத்தும் எவ்விடத்தும் தானே இருந்து சன்மார்க்கம் நடத்தும்படிப் பணித்து, நம் எல்லோருக்கும் துணையாக இருக்க வைத்துள்ளார்” – என்கின்ற, அந்த இயற்கை உண்மையை நாம் எப்போதும் எவ்விடத்தும் நம்முடைய கனவிலும்கூட நாம் மறந்துவிடக்கூடாது. அப்பொழுது மட்டுமே, நான் என்கின்ற அந்த வீணான நம்முடைய அகம்பாவத் தன்முனைப்பானது நம்முள்ளே எப்பொழுதும் எழும்பாவண்ணம், நம்மை அவர் எவ்விடத்தும் நல்வழியே நடத்துவார். இல்லையேல், நம் சிறுமைமிகும் பற்பல சிரமங்களில் நாம் சிக்குண்டு சின்னாபின்னமாகிச் சிதைந்து போக நேரிடும்.

அடுத்து, ஒரு சங்கம் அல்லது ஒரு மாநாட்டின் முக்கிய நோக்கம், செயல்திட்டம், இடம், காலம், ஆகும் பொருட்செலவு இவைகள் குறித்து நல்லதோர் முடிவைத் தீர ஆய்வுசெய்து, அத்தோடு தேவைப்படின் நன்நம்பிக்கையும், நாணயமும் உடைய நல்ல நண்பர்களுடன் நன்கு பரிசீலித்துத் தெள்ளத் தெளிவான ஒரு நல்ல தெளிவு பெறல் வேண்டும். இந்தத் தெருள் இருந்தால்தான் எல்லாம்வல்ல திருவருளானது நமக்குத் தொடர்ந்து காரியப்படும்.

இல்லையேல், அந்தத் திருவருளானது நம்முடைய எல்லாச் செயல்களுக்கும் சூக்குமமாய் நற்காரியப்பாட்டில் இருந்தாலும், அஃது நமக்கு அனுபவத்தில் சற்றேனும் புலப்படாமல் போய்விடுவதால், நாம் இருளிலும், மருளிலும் நம்மை அறியாமலே மாட்டிக்கொண்டு, பிறரைச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் வீணாகப் பழித்துப் பல்இளித்து இறுமாந்து பிதற்றிப் புலம்பித் தெரிகின்ற அந்த எதிர்மறைப் புறப்புற நிலைக்குத் தள்ளப்படக் கூடும். ஆகவே, சுத்த சன்மார்க்க நற்செயல்களைத் தொடங்குவதற்கு முன்பாக நல்லதோர் தெளிவு பெறுக.

திருக்குறள் 466:
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.
Meaning: He who will perish, if done either an unseemly act or even if not done a seemly act.

திருக்குறள் 467:
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
Meaning: Dare a deed after knowing of it with clear thoughts! To think after daring a deed will be disgraceful.

இரண்டாவதாக, ஒரு சன்மார்க்க சங்கத்தையோ அல்லது ஒரு மாநாட்டையோ, 'நான் நடத்துகிறேன்' - என்கின்ற, அந்த ஒரு அற்பத்தனமான சிறுமைமிகும் ஆனவச் செருக்கையும், அறியாமைமிகும் மாயா மலத்தையும், முதற்கண் நம்முடைய மனம் முதலிய கரணேந்திரிய சுத்தத்தினால் நாம் நிக்கிரகம் செய்துகொண்டு, அதாவது அம்மலங்களையெலாம் முற்றாக வென்று, அவற்றைக் கடந்த நிலையாகிய, எவ்வித 'விருப்பும் - வெறுப்பும்' அற்ற, எந்தவொரு 'அவலமும் - கேவலமும்' அற்ற, அந்த ஒரு உயர்ந்த பற்றற்ற நிலைக்குத் நம்மைத் தயார் செய்துகொண்டு, எல்லாம்வல்ல எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உள்ளன்போடு, "நாங்கள் யாதொரு சுயநலமும் எங்களுக்காகக் கொள்ளாது, ஆன்மநேயப் பொதுவுணர்விலும், ஜீவகாருண்யப் பொதுநோக்கிலும் இந்த உலக நண்மைக்காக நடத்த முற்படுகின்ற, எங்களுக்குத் தெரிந்த அளவில், எந்தவொரு குற்றமும் இல்லாத, எங்களுடைய சங்கத்தைக் / மாநாட்டைக் கூடவே இருந்து, எவ்விதக் குற்றமும், குறையும், எக்காலத்தும், எவ்விதத்தும் வராதபடி, எங்களுடைய இந்தச் சிறு விண்ணப்பத்தை திருச்செவி ஏற்று, எல்லாம்வல்ல தேவரீர் திருவுளம் கொண்டு, எங்கள் சங்கத்தை / மாநாட்டை வெற்றிகரமாக நடத்தித் தருதல் வேண்டும்!" - என்று, தனித்தோ அல்லது ஒருமித்த கருத்துடைய சுத்த சன்மார்க்க அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் கூடியோ பிரார்த்தனை செய்து கொண்டு, எல்லாம் செய்யவல்ல திருவருட்சமூகத்துப் பரிபூரண சம்மதத்தைப் பெற்றுக்கொண்ட, அந்த நம் உண்மையான உள்ளுணர்வின் அகமுக அருட்குறிப்பை நாம் முதற்கண் நன்கு உறுதிசெய்து கொள்ளல் வேண்டும்.

இந்தப் பரிசுத்தமான உள்ளுணர்வை உண்மையாகவே வரவழைத்து விட்டுத் துவங்குகின்ற எந்தவொரு சங்கமும் அல்லது மாநாடும் எந்தவொரு வில்லங்கமுமின்றி, கூச்சல் குழப்பமின்றித் தானாகவே தங்கு தடையின்றிச் சீரோடும் சிறப்போடும் நடந்தேறுவதை நாம் கண்ணாரக் கண்டு களிக்கலாம். இஃது, ஒன்றுக்குப் பன்முறை இச்சிறுவனும் கண்கண்ட அனுபவமே அன்றி வெறும் கற்பனை அல்ல.

ஒரு சங்கம் நடத்துவதற்கு அந்தச் சங்கத்து அங்கத்தினர்கள் அல்லாமல், பிறருடைய பொருள் உதவியை எக்காரணத்தைக் கொண்டும் எதிர்பார்த்து நடத்தவே கூடாது. இது சத்தியம்! அப்படிப் பிறருடைய பொருள் உதவியை எதிர்பார்த்து நடத்தினால், அந்தச் சங்கத்தில் அருள் விளக்கமானது இயற்கையி்லேயே ஓங்காமல், அச்சங்கம் இடையிலேயே செயல் இழந்து தடைபட்டுவிடும். இஃது, பல இடங்களில் நாம் கண்ட, காண்கின்ற உண்மை அனுபவமாகும்.

அதேசமயத்தில், ஒரு நற்சங்கத்தில் நடக்க வேண்டிய நற்செயல்கள் அனைத்தும் மென்மேலும் ஓங்கித் திகழ்ந்திட, நல்ல புண்ணியர்களை எல்லாம்வல்ல திருவருளானது தேவைப்படின் அது தானே கூட்டிவைக்கும். அத்தோடு, நாமும் ஆண்டவரிடத்து, 'நாமெல்லோருமே அவருடைய பிள்ளைகளே!' - என்கின்ற, அந்த இயற்கை உரிமையிலே, அந்த ஒப்பற்ற உடையவரிடத்து மட்டுமே தாராளமாக வேண்டி விண்ணப்பித்தும் முறையிடலாம். அப்படிச் செய்வதை விடுத்துவிட்டு, நம்முடைய உத்தமமான சுத்த சன்மார்க்க உயர்மரபை மீறி, முறைதவறிச் சன்மார்க்கம் இன்னவென்று எதுவுமே அறியாத அந்த அப்பிராணிப் புறவினத்தார்களிம் போய், நாம் பொருளுக்காக அவர்கள் முன் வாய்பொத்திக் கைகட்டி நின்று யாசித்தல் செய்வது, நம்முடைய சன்மார்க்கமென்பது என்னவென்று எதுவுமே அறியாத அந்த ஏனையப் புறவினத்தார்களையும், நமது சன்மார்க்கத்தை மிகத்தாழ்வாக நினைக்கச் செய்விக்கின்ற ஒரு அவத்தை நிலமைக்கு அஃது அவர்களைத் தள்ளிவிடுவதோடு மட்டுமன்றி, நம்முடைய கையேந்தி யாசிக்கின்ற அந்த அநாகரிகமான அற்பத் தண்மையினால், வருகின்ற காலங்களில் நற்சார்பால் இயற்கை இயல்பாகத் தானாகவே நம்முடைய சன்மார்க்கத் தயவினர்களாக அவர்கள் ஆகாமல் போவதற்கும், நாமே ஒரு முக்கியக் காரணமாகவோ அல்லது ஒரு பெருந்தடைக் கல்லாகவோ ஆகிவிடுகின்ற அந்த ஒரு பெரிய துர்ப்பாக்கிய நிலைக்கும் நாம் ஆளாகி விடுகின்றோம். காணற்கும், கிடைத்தற்கும் அரிய அன்புகெழுமிய நம் அருள் உறவுகளே, இந்தப் பேருண்மையைக் கொஞ்சமேனும் கவணத்திற் கொள்க!

இயற்கையுண்மையானது இவ்வாறு இருக்கின்ற காரணத்தினால், அதற்குத் தனியொரு நபரானவரே, தானே தனித்துத் தன்னைத் ஒரு நற்சங்கமாகத் தயார் செய்துகொண்டு, வேறு எந்த ஒரு பொய்யர், பொறாமையர், போலியர்கள் போன்றோர்களுடன் எக்காரணம் கொண்டும் சேராமல், தனக்குக் கொடுக்கப்பட்ட கருவி கரணங்களைக் கொண்டு, தான் அறவழியில் உழைத்துச் சம்பாதித்த அந்த அறப்பொருட்களால் மட்டுமே, தன்னால் முடிந்தமட்டும் அந்த நம் சுத்த சன்மார்க்க அருட்பணியைத் தனித்துத் செய்வதே உத்தமம். அது ஒரு மிகச் சிறிய செயலாக இருந்தாலும்கூட, இந்த உலகம் போற்றும் பெருமைக்குரியதே. அதற்குத்தான் நம் ஆண்டவருடைய அருள்பாலிப்பானது மிக அதிகமாகவும் இருக்கும்.பிறருடைய உழைப்பிலிருந்து நாம் தானம் பெற்று அந்தப் பொருளை நாம் பிறருக்குத் தானம் செய்வதில் நமக்கென்ன மிகப்பெரியதாக ஆன்மலாபம் வரப்போகின்றது. அது, உண்மையிலேயே உழைத்துத் தந்த அந்தப் புண்ணியருக்கே போய்ச்சேரும்.

அடுத்து, ஒரு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் எத்தனை நபர்கள் இருக்கின்றார்கள் என்ற எண்ணிக்கை முக்கியம் அல்ல. “அதில் அங்கம் வகிப்பவர்கள் உண்மையான சுத்த சன்மார்க்கிகளா?” - என்பதுதான் முக்கியம். ஆகாயத்தில், எத்தனையோ விண்மீன்கள் இருந்தாலும், ஒரே ஒரு சூரியன்தான் நம்முடைய உலக உயிர்களுக்கு உபகாரமாய் இருக்கின்றது. ஒரு சங்கத்து அங்கத்தினர்களின் எண்ணிக்கையை மட்டுமே கருத்தில் கொள்கின்றவர்கள், கண்டதெல்லாம் அநித்தியமே, கேட்டதெல்லாம் பழுதே, உட்கொண்டதெல்லாம் மலமே என்கின்ற உண்மையை அறியாது, எந்தவொரு நல்ல அனுபவமும் இல்லாது, அங்குமிங்கும் நுனிப்புல் மட்டுமே மேய்ந்துகொண்டு, அதன்நிமித்தமாக வெறும் கானலாய்த் தோன்றுகின்றதையே மெய்யென்று தவறாகக் கருதி உழல்கின்ற நூற்தவளைகளே.

இவர்கள் எத்தனை நூல்களைக் கற்றாலும் அவைகள் அத்தனையும் சாலமென்று அறியாத அப்பிராணிகளே. இந்த மண்டூகங்கள் எத்தனை நாட்கள் ஒரு தண்டாமரையுடன் ஓரே தடாகத்தில் வசித்தாலும், அம்மண்டூகங்களால் அத்தாமரையிலுள்ள தேனை ஒருக்காலும் புசிக்கவே முடியாது. இவர்களைப் போன்றவர்கள் பெரும் பொறாமையும் அறியாமையும் மிகுந்தவர்களாயும் இருப்பார்கள். இவர்களைப் போன்றவர்களையும் நம்மைச் சுற்றிலும் நமக்கு ஒரு நல்ல பக்குவம் வருவிக்கும் காரணத்திற்காகவே இயற்கை உற்பத்தி செய்துகொண்டேதான் இருக்கும். குப்பைக்குப் போகும் தேங்காய்க் குடும்பிக்குக் கொடுக்கும் மரியாதையைக்கூட இவர்களின் குடும்பத்தார்கள்கூட அவர்களுக்குக் கொடுக்க மாட்டார்கள். அதுதான் அவர்களின் உண்மை நிலமை. இந்த அற்பப் பதர்களால், பசிபோக்கும் நெல்மணிகளாக ஒருக்காலும் ஆகவே முடியாது. ஆகவே, அவர்களின் பித்தம் பிடித்த அறியாப் பிதற்றல்களை நாம் ஒருபோதும் பொருட்படுத்தவே தேவையில்லை. இருந்தாலும், இந்தப் பதர்கள்களும் அதனுடைய தண்மைக்கேற்ப மாட்டுக்கு ஊறலாகவோ, மண்ணுக்கு உரமாகவோ ஒருவாறு அவர்களையும் பயனுள்ளதாக ஆக்குவதும் ஆண்டவருடைய திருவிளையாடலே. ஒவ்வோர் வினைக்கும் ஒரு எதிர்வினை உள்ளது இயற்கையே. அதுபோல, நல்வினையானது மேலோங்கும் போது, இதுபோன்ற எதிர்வினைகள் இருந்த - இருக்கும் இடம் இல்லாது தாழ்ந்து போய்விடும். எல்லாவற்றையும் எல்லார்க்கும் பொதுவாகிய அந்த எல்லாம் வல்லானே மிக நல்லவிதமாகப் பார்த்துக்கொள்வார். ஆகவே, இதுபோன்ற எதிர்வினைகள் குறித்து, அச்சமோ, அவலமோ எவ்விடத்தும் எள்ளளவும் படாமல், ஆசையற்ற, அவதியற்ற, ஆனந்தம் மிகும் அந்தக் கையறவு இல்லாத நடுக்கண் புருவப் பூட்டைகத்தே நாம் எக்காலத்தும் களித்திருக்க மிக விரைந்து கருதுவோமாக!

ஒரு உண்மையான சுத்த சன்மார்க்கியின் சித்தி வல்லப அருட்திறத்தை வேதங்களாலும், தேவர்களாலும், ஐவர்களாலும், சத்தி சத்தர்களாலும் அறிந்துணரல் அரிது. இந்த இயற்கை உண்மையைச் சமரச சுத்த சன்மார்க்க ஞான விண்ணப்பத்தில் கண்டு கொள்க. அந்த ஒரு உண்மையான சுத்த சன்மார்க்கியின் திருவுளப்படிதான் அனைத்து அண்ட சராச்சரங்களும் இயங்குகின்றது. அதற்கு எதிர்மாறாகச் செயல்படுகின்றோர்கள் எப்பேர்ப்பட்ட வரம் பெற்றவர்களாக இருந்தாலும், அவர்களின் இகபர சிறு சுதந்திரங்கள் இலகுவாகப் பறிக்கப்பட்டு அவரவர்களின் பக்குவத்திற்கேற்ப அறக்கருணையாலோ, அறமறக் கருணையாலோ அல்லது மறக்கருணயாலோ வார்க்கப்படுகின்றார்கள்.

ஆகவே, கொடுப்பவனே சன்மார்க்கி என்று அறிக. பிறர் பொருளை எடுக்க நினைப்பன் துன்மார்க்கியே. அருள்நிலையில் நற்காரியங்களை நடத்துகின்ற நல்லோர்கள் எல்லோருமே சன்மார்க்கிகளே. சுத்த சன்மார்க்க அனுபவத்திற்கு, சாதி, சமயம், மதம், இனம், தொழில், மொழி போன்ற உலகியல் ஏற்பாட்டுப் பிரிவினைச் சத்திகள் ஒருக்காலும் தடைகளாக இருக்கவே முடியாது. ஏனெனில், ஒரு சுத்த சன்மார்க்கியானவர், இயற்கை இயல்பாகவே இவற்றையெல்லாம் மிகமிக எளிதாகக் கடந்து, ஒப்பற்ற தனித்த அருள்நிலையில் இனித்த பெருவாழ்விலே எக்காலத்தும் அவரது எண்ணம் ஆண்டவரது எண்ணமாகவும், அவரது செய்கை ஆண்டவரது செய்கையாகவும் பேதாபேதமின்றி அமையும் வண்ணமாக அமைந்து, அதுவே தானாகவும், தானே அதுவாகவும் அம்மயத்தில் நீக்கம் இல்லாது எவ்விடத்தும் எக்காலத்தும் அருட்பூரண நித்தியராய் நிறைந்திருப்பார்.

ஆறாம் திருமுறை / பிரிவாற்றாமை

“எம்மத நிலையும் நின்னருள் நிலையில்
இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்
தனித்துவே றெண்ணிய துண்டோ
செம்மலுன் பாதம் அறியநான் அறியேன்
சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன்
இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள
தியற்றுவ துன்கடன் எந்தாய்.” – வள்ளலார்

அடுத்து, சன்மார்க்க மாநாடுகளை நடத்து கின்றவர்கள் மிக முக்கியமாகக் கவணிக்க வேண்டியது யாதெனில், முதற்கண் மாநாட்டுக் குழு ஒன்றை ஒத்த கருத்துடைய சுத்த சன்மார்க்கிளைக் கொண்டு உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் நோக்கம், ஆக்கம், பொருட்செலவு குறித்து அமைதியான முறையில் நன்கு விவாதித்து பரிசீலனை செய்துகொள்ளுங்கள். குழுவில் உள்ள அங்கத்தினர்களும், அவர்களைச் சார்ந்த சன்மார்க்க நேயர்களும் மாநாட்டுச் செலவுக்கு எவ்வளவு பொருட்பங்கீடு செய்யமுடியும் என்று கணக்குப் பாருங்கள். எந்த வகையிலும் குழுவிலுள்ள முக்கிய அங்கத்தினர்களை நட்பாகவோ, உறவாகவோ சாராத மற்ற அன்பர்களிடம், அவர்கள் சன்மார்க்கிகளாக இருந்தாலும்கூடச் சரி அவர்களிடமும்கூட எந்தவொரு பொருள் உதவியும் எதிர்பார்க்காதீர்கள். ஆனால், மற்றவர்கள் - அது யாராக இருந்தாலும் அவர்களையும் மாநாட்டிற்கு வருகை தாருங்கள் என்று அன்போடு அழையுங்கள். ஏனெனில், அவர்களின் வருகையால் ஒருவேளை அவர்களுக்கு சன்மார்க்கம் நன்குவிளங்கி, இந்த இகத்தும், பரத்தும் அவர்களுக்கு பல நண்மைகள் ஏற்படுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பும் உள்ளது.

யாரெல்லாம் மாநாட்டிற்கு வருகைதர முடியும் என்று ஆண்டர் அனுமதிப்பாரோ அவர்கள் மட்டும்தான் மாநாட்டில் கலக்க முடியும். ஆகையால், “யாரும் வரவில்லை என்றோ, அல்லது எதிர்பார்த்த அன்பர்களில் பலரும் பொருள் உதவி செய்யவில்லையே!” – என்றோ, ஆத்திரத்தில் கோபப்பட்டுத் தடித்த மொழிகளால் திட்டாதீர்கள். அப்படித் திட்டினால் அல்லது ஏதாவது ஒருவகையில் ஒருவரை மிரட்டினால், நடத்தும் மாநாடானது, சுயநலத்திற்கும் பொருள் சம்பாதிப்பதற்கும் என்கின்ற பொருளில் பிறரால் பேசப்படுமே அன்றி, மாநாட்டின் முக்கிய நோக்கம் சிந்திக்கப்படாது. அதுமட்டுமல்ல, சன்மார்க்கர்களிடையே ஒற்றுமையின்மையும், பற்பல சர்ச்சைகளும் அவசியமில்லாமல் தலைதூக்கி நம்முடைய முக்கிய நோக்கமும் பால்படும்.

ஆகவே, ஆண்டவரை மட்டுமே கேளுங்கள். அவருடைய அருள் இருப்பின் தக்க செல்வந்தர்களை அவரே கொண்டு வந்து மாநாட்டுக் குழுவில் சேர்ப்பார். குறித்த பொருளுதவியானது குழுவில் உள்ளவர்கள் மூலமாகவோ அல்லது குழுவிலுள்ள உறவுகள், நெருங்கிய நட்புகள் மூலமாகவோ வந்து சேராதபோது, மாநாட்டை நடத்தவேண்டும் என்று விரும்பியவர்களே மாநாட்டுக்கு ஆகும் மொத்தச் செலவையும், தங்களுடைய சொந்தப் பணத்திலிருந்து கொடுப்பதற்கு உளம் மகிழ்ந்து முன்வர வேண்டும். அதற்கு ஆண்டவர் நிச்சயம் துணை நிற்பார். அப்படிச் செய்ய முடியாதவர்கள், யாரையும் கேளாது ஆர்வக்கோளாறு காரணமாக மாநாடு நடத்தல் வேண்டும் என்று முடிவுசெய்த அந்த அவசரத் திட்டத்தை தற்காலிகமாகக் கைவிடுவதே உத்தமமாகும். மாநாடு ஒன்று தேவையிருப்பின் பொருளுடைய அருளாளர்களை ஆண்டவரே உணர்த்தித் தக்க நேரத்தில் பணிக்கச் செய்வார். ஆகையால், “எவனும் எனக்கு உதவத் தேவையில்லே. நானே மாநாட்டை நடத்திக் காட்டுகிறேன் பார்!” – என்கின்ற, ஏக வசனங்கள் நமக்குத் தேவையற்றது. அப்படி வாய்க்கு வந்தபடி அன்பர்களை வசைபாடிவிட்டுப் பின்பு அவர்களிடமே சென்று ஒத்துழைப்பு செய்யுங்கள் என்றும் கேட்பது நம்முடைய மாண்பாகாது. ஆகையால், இவைபோன்ற விஞ்சலும் கெஞ்சலுமாகிய நம்முடைய சஞ்சலம் விடுத்து, நாம் எப்பொழுதும் நடுவு நிலையையே நாடி நின்று வாழ்வோமாக!

ஒரு மாநாட்டிற்கோ அல்லது ஒரு சன்மார்க்க நிகழ்விற்கோ பொருள் உதவி அளித்த ஒவ்வொரு அருள் உள்ளங்களுக்கும் உண்மையான வரவு-செலவுக் கணக்கை ஆதார ரசீதுகளின் உண்மை நகல்களுடன் ஒருமாதத்திற்குள் இமெயில் மூலமாகவோ, தபால் மூலமாகவோ, வாட்ஸ்ஆப் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு நல்ல வழிமுறை மூலமாகக் காண்பிக்கத் தவறிவிடாதீர்கள். அப்படிச் செய்யாவிடில், நீங்கள் உண்மையானவர்களாக உத்தமர்களாக இருந்தாலும், இவ்வுலகம் உங்களை அற்பமாகப் பழிப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் உங்கள் அறப்பணிகளுக்கு அன்பர்களின் உதவிகள் கிடைக்காமலும் போய்விடும்.

மாநாடு குறித்து ஒரு விளம்பரம் வெளிவருவதற்கு முன்னரே அந்த மாநாடு குறித்து எல்லா ஏற்பாடுகளையும் செவ்வனே செய்திடல் வேண்டும். பத்திரிக்கைகளில் ஒரு மாநாடு குறித்து நற்செய்தி வருவதற்கு முன்னரே, அந்த மாநாடு குறித்துப் பணவசூல் செய்வதையும் முற்றாக நிறுத்திவிட்டு, மாநாட்டிற்குரிய வேலைகளை நிதானமாகவும், கவணமாகவும், சந்தோசமாகவும் செய்திடல் வேண்டும். ஒரு நபரையோ அல்லது ஒரு சங்கத்தையோ கேட்காமல், அவர்களைப் பத்திரிக்கைகளில் பிரசுரிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் என்போன்றவர்கள் அதற்குச் சம்மதிக்காமல் மாற்றுக் கருத்துகளை வெளியிட நேரிடும். அது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும். அப்படி ஒரு சம்பவம் நேரிடும் போது, சம்பந்தப்பட்டவர்களை உடன் தொடர்பு கொண்டு நட்பு பாராட்டலாமே அன்றி, அல்லது தவறுகள் மீண்டும் மீண்டும் தலை தூக்காத வண்ணம் சரிசெய்து கொள்ளலாமே அன்றி, சில போலி நபர்களின் சுயநலத் தூண்டல்களாலோ அல்லது வேறோர் தவறான புரிதல்களாலோ நாவினால் சுடுவது சன்மார்க்க நன் முறையல்ல, மாறாக அதுவும் ஒரு வன்முறையே!

நாம் சரியாக இருக்கும் பட்சத்தில், ஏதாவது தேவையற்ற இடர்பாடுகள் வந்தால், “நானே இருந்து எக்காலத்தும் சன்மார்க்கம் நடத்துகின்றேன்!” – என்று, அன்றும் இன்றும் வாழ்ந்து காட்டிய, வாழ்ந்து காட்டுகின்ற நம் வள்ளற்பெருமான் மீது நன்நம்பிக்கை இருந்தால், அவரிடமே விண்ணப்பித்து ஒப்படைத்துவிட்டுத் தொடர்ந்து எப்போதும் போலவே சலனமில்லாமலும், யாரையும் சபிக்காமலும் வேலையைப் பாருங்கள். அப்போது, பெருமான் தடைகள் அனைத்தையும் எப்படிக் காரியப்படுத்துகிறார் என்பதைக் கண்டு களிக்கலாம். ஒரு சோதனையாகக் கூட இதைச் செய்து பாருங்கள். நமது பக்கம் நீதியும், நேர்மையும், உண்மையும், கருணையும் இருந்தால், சாதனை புரிய வைப்பார். இல்லையேல், சாண் ஏறி முழம் சருக்கி விழுந்திட நேரிடும். சன்மார்க்க சங்கங்கள் அல்லது மாநாடுகள் நடத்துகின்றவர்கள், உங்கள் சொந்தச் செலவகளுக்கு மாநாட்டுக்கு வசூலித்த அல்லது சங்கப் பணத்தினில் கையை வைத்து விடாதீர்கள். அது கிளியைப் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதை ஆகிவிடும்.

சன்மார்க்க சங்கங்கள் நடத்துகின்றவர்கள், ஏதாவது ஒரு தொழிலைச் செய்து கொண்டு ஒத்த கருத்து உள்ளவர்களுடன் கூடியோ அல்லது தனித்தோ உங்கள் சங்கங்களை நடத்துங்கள். நாம் ஏதாவது ஒரு நல்ல அறவழியில் பொருள் ஈட்டி, உலகவரோடு உலகவராய் வாழ்ந்தாலும், நம்முடைய சன்மார்க்க மாண்பு மாறாமல் சந்ததிகள் சிறக்க வாழலாம். உங்களுடைய தனிப்பட்ட வருமானத்தில் உங்கள் வாழ்க்கையைச் செழிப்பாகவும் சிறப்பாகவும் அமைத்துக்கொள்ள ஆண்டவர் நிச்சயம் அருள் செய்வார். “தன்னுடைய சங்கத்தைப் பொருள் வளர்ச்சிக்காகவே உருவாக்கி, அந்தச் சங்கத்தையோ அல்லது ஒரு மாநாட்டையோ இலாபகரமாக இயக்கி, அதன் பொருள் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வது” – என்பது, குளிக்கச் சென்றவர்கள் சேற்றைப் பூசிக்கொண்ட நிலமைக்கு ஆளாகின்றார்கள்.
சன்மார்க்க மாநாடு அல்லது சங்கம் நடத்துகின்றவர்கள், தயவுசெய்து கடன்வாங்கி அல்லது வட்டிக்கு வாங்கிச் செலவு செய்யாதீர்கள். அது சுயநலத்தில் முடியும் அல்லது அதனால் உங்களின் விருப்பு-வெறுப்பு விருத்தியாகி சன்மார்க்க அருட்பணிகள் தடைபடும். இதுபோன்ற சன்மார்க்க நோக்கமின்மையும், ஒழுக்கமின்மையும் நிலவியதால்தான், ஞானசபையை நிறுவிய வள்ளற்பெருமானே, மீண்டும் அதைப் பூட்டச்செய்தார். அதுமட்டுமல்ல முதற்ஜோதி தரிசனத்தின் போதும்கூட, அவர் வடலூர் சத்திய ஞானசபைக்கு வரவும் இல்லை.

பொருள் வசதி இல்லாதவர்கள், சன்மார்க்கப் பிரார்த்தனைகளைச் செய்து வந்தாலே போதும். உங்கள் வாழ்விலும், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்விலும் நல்ல வசந்தம் நிலவத் துவங்கும். நல்ல நல்ல சுத்த சன்மார்க்கப் பணிகளுக்கு முடிந்தமட்டும் சந்தோசமாகப் பொருட்செலவு செய்கின்றவர்களுக்கு, பெருமான் அவர்களுக்குத் தன்பெரும் பெட்டகத்தைத் திறந்து அள்ளி அள்ளித் தருகின்றார். இஃது, கண்கண்ட பலன். அனுபவித்து இன்புறுக! ஞானசித்தர் காலத்தில் துன்மார்க்கர் பெட்டகங்கள் மூடப்படுகிறது. இந்த அருள் நியதியை யாராலும் தடுக்க முடியாது.

மற்றும் ஒரு முக்கியக் குறிப்பு; வள்ளலாருக்குப் பிறகு நாம் கேள்விப்பட்ட மற்றும் நேரில் கண்டவர்கள் - இவர்களில் யாருமே இதுவரையில் நம்முடைய சுத்த சன்மார்க்கச் சாத்தியா அனுபவம் அடையவில்லை. அதற்கு, அவர்கள் கதைத்துள்ள நூல்களிலுள்ள அனுபவமற்ற கானற் கற்பனைகளும், அதன் பொருட்டாய்ப் பல்கிப்போய் விளைந்த பொருட் குற்றங்களும் மட்டும் சாட்சியல்ல! அவர்கள் புறப்புறத்தில் பற்றுக்கொண்டு வாழ்ந்த விதமும், அவர்கள் போலவே இன்னும், இன்றும் பலர் அப்பற்றுகளில் மூழ்கித் திகைக்கின்ற விதமும், அதன் நிமித்தமாக அவர்களெல்லாம் அடைந்த, அடைகின்ற மூப்பும், பிணிப்பும், முடிவிலே அவர்கள் ஆஸ்பத்திரிகளிலே அடைந்த - அடைகின்ற, சகலவிதமான அவல-கேவல முடிவுகளுமே சாட்சியாய் நின்று காட்சிப்படுத்தி விடுகின்றது. இருப்பினும், இவர்கள் பயின்று முயன்ற பற்பல நல்லொழுக்கங்களும், நன்முயற்சிகளும் பாராட்டுதலுக்கு உரியவையே. அதற்குரிய அரும்பெரும் வரமாகிய நம்முடைய சுத்த சன்மார்க்க சாத்தியானுபவ நித்திய தேகத்தை, இவர்கள் நிச்சயமாக தங்களின் வரும் பிறவிகளிலே, அருளால் பெற்று, எக்காலத்தும் அம்மயத்திலே இன்புற்று வாழ்வார்கள் என்பது நமது பெருமானின் திருவாக்கு. அஃது அருமையிலும் அருமேயே!

அடுத்து, இன்னும் - இன்றும், அந்த நன்முயற்சிகளிலே இருக்கின்ற பல புண்ணியர்கள் நிறைய உண்டு. ஆனால், இவர்களும், இவர்களுக்கு முந்தி தேகசித்தி பெறாமல் தன்தேகத்தை இழந்தவர்களும், சுத்த சன்மார்க்க மாணவ நிலையில்தான் இருந்தார்களே யன்றி, முழுமையான தேர்ச்சி பெற்றுத் தேகசித்தியைக் காலமுள்ளபோதே பெற்றுக்கொண்டு என்றென்றும் சாகாது ஓங்கும் சத்குரு நிலையினை அடைந்தவர்கள் அல்லர்.

இயற்கையுண்மை இவ்வாறு இருப்பினும், இவர்களைச் சார்ந்தவர்கள், அவர்களைப் போன்றவர்களைச் “சித்தர்கள் என்றும், குருமார்கள் என்றும், வேதாந்திகள் என்றும், வள்ளலாருக்குப் பின் சுத்த சன்மார்க்க உண்மையை உள்ளபடி உபதேசித்தவர்கள் என்றும், உபதேசிக்கின்றவர்கள் என்றும், வள்ளலாரின் மறு அவதாரம் என்றும்!” - இன்னும் பற்பல விசித்திரத் தகவல்கள் நிறைந்த அற்பத் தவறுகளை, தங்கள் தங்கள் தரத்திற்கேற்பச் சுயநலத்தாலும், மாயையாலும் சனிக்கின்ற அறியாமையினால் பற்பல நாபரூபங்களில் கதைபுனைந்து வருவார்கள். அவர்களின் வாசகா கைங்கரியத்தின் நியாயமானது ஒரு மிகச் சிரிய சகாய உபாயமேயன்றி உண்மையல்ல. அஃது, இயற்கை உண்மையை அது இருகின்ற வண்ணம் ஒருக்காலும் காட்டவே காட்டாது. காட்ட முடியாது!

எல்லாம்வல்ல எல்லாமுடைய இயற்கை உண்மை வடிவினர், உங்களுக்குள்ளேயே தனிப்பெருங்கருணையின் தனி அம்சமாகிய அந்த இயற்கைத் தனிஒளியாய், எக்காலத்தும், எவ்விடத்தும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். அந்த ஆதி-அந்தமற்ற அநாதியான இயற்கை அருட்பூரணத்தை, திருஅருட்பா மூலமாகவும், உண்மைச் சத்துவிசாரத்தின் மூலமாகவும், சீவகாருண்ய நல்லுணர்வுகளாலும் நீங்களாகவே வெகு சீக்கிரத்தில் அவன் அருளால் விளக்கம் பெற்று அறிவீர்கள். அப்பேரொளியின் இயற்கைத் தனி உண்மையை விரைவில் நீங்களாகவே அவன் அருளால் அடையாளம் கண்டு, உங்கள் அகத்திலும் புறத்திலும் உண்மை அனுபவம் பெற்றுப் பயமற்ற, துன்பமற்ற, அவாவற்ற அந்தப் பேரானந்தப் பெருவாழ்விலே எக்காலத்தும் எவ்விடத்தும் நித்தியராய்த் திகழ்வீர்கள். கொஞ்சம் பள்ளிப்படிப்பும், உயர் நன்முயற்சியும் இதற்கு இருந்தாலே போதுமானது. மீதியை ஆண்டவரே நம்கூட இருந்து நன்கு வழிநடத்துவார்!

ஆகையினால், யாரிடத்தும், எதுகுறித்தும் உள்மயங்கி ஏமாந்து மோசம் போக வேண்டாம். இதை, எனது விருப்பு-வெறுப்பு கடந்த நிலையில், வேண்டுதல்-வேண்டாமை இல்லா இடம் நின்று, உண்மை அன்பால் உரைத்தனன். அதற்கு அவரே சாட்சியும் காட்சியும் ஆவார். இந்தப் பேருண்மையைக் கண்டுகொண்டு, தன்னையறிந்து, என்றென்றும் இன்புற்று வாழ்வீர்களாகுக!

அகிலமெங்கும் நடைபெறும் நம் சுத்த சன்மார்க்க சங்கங்கள் மற்றும் மாநாடுகளின் நன்நோக்கங்கள் நிறைவேறிட எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நற்துணை செய்வாராகுக!

ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்

"...உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க
சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி" – வள்ளலார்

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நேயமுடன்,
அன்பன் துரை சாத்தணன்
அமெரிக்கா